July 16, 2010

இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் - தமிழக அரசு சின்னத்திற்கு அவமரியாதை

இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் - தமிழக அரசு சின்னத்திற்கு அவமரியாதை

எனது பையன் தனது ஆங்கிலச் சிறுகதையில் ஒரு வரி சொல்லிப் போனான். அதன் பொருள் ‘நாம செய்கின்ற தவறை எல்லாரும் சரின்னு சொல்லனும்னா அந்த தவறை அனைவரையும் செய்ய வைத்து விடனும்’. ஊரெல்லாம், தமிழ் நாடெல்லாம் சேர்ந்து கொண்டாடி முடித்துவிட்ட செம்மொழி மாநாடு ஒரு ஆயிரம் பக்க நாவல் போல. எத்தனைதான் குறை சொன்னாலும் எவ்வளவு மோசமான எதிர் கருத்தியல் உடையவரும் கூட ஆயிரம் பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை, பக்கத்து எழுத்தை வாசித்து சிலாகிக்க நேர்ந்து விடும். அப்படியிருக்க வாசிப்பவர்கள் ஆயிரம் பேராய் இருக்கின்ற பட்சத்தில் ஒட்டு மொத்த நாவலும் பாராட்டப்பட்டது என்று சொல்வதற்கான சாத்தியங்களும் எல்லாரும் பாராட்டினார்கள் என்று சொல்லி விடக் கூடிய அபாயமும் எப்படி அந்நாவலுக்கு நேருமோ அப்படித்தான் செம்மொழி மாநாட்டு விசயத்திலும் நிகழ்ந்து போனது.

நிகழ்ந்து முடிந்த மிகப்பெரும் விழாவில் ஏதாவது ஒரு விசயத்தையாவது பாராட்ட எல்லாருக்கும் நிறையவே இருந்தது என்பதற்கு அப்பால் அதன் இலக்கின்மை, தன் முனைப்பு, மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டு, தன் அடையாளமாய் நிறுவிக்கொண்டது, கோவை நகரமே ஒரு வார உற்பத்தி அற்றுப் போனது, ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி, துணைவிமார்களின் கையே, இத்யாதி, இத்யாதி என்பதெல்லாம் அடிபட்டுப் போனது கூட வருத்தமில்லை. ஆனால் ஒரு அரசாங்கப் பேருந்தில் தனியார் விளம்பரம் ஒட்டுவதற்கு அனுமதி கிடையாது என்றிருக்கின்ற ஒரு அரசாங்கத்தின் சொத்தின் மேல் அந்த அரசாங்க சொத்தை விட பெருமதிப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் அரசாங்கச் சின்னத்தின் மேல் கூசாமல் ஒரு மாநாட்டு விளம்பரப் பதாகையை, லோகோவை எப்படி ஒட்ட முடியும்?

சாதாரண ஒரு குடிமகன்கூட தன் வீட்டுச் சுவற்றில் விளம்பரம் ஒட்டினால் சண்டைக்கு வருகின்றான். ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ஒரு அரசியல் தலைவரின் பேரின் மேல் அல்லது படத்தின் மேல் இன்னொரு எழுத்தோ போஸ்டரோ ஒட்டப் பட்டால் நஸ்டஈடு கேட்கிறார்கள். எனது மருத்துவமனை திறப்புவிழா போஸ்டரை சுவற்றில் எழுதப்பட்ட தொல்.திருமாவளவன் பேரின் மேல் ஒட்டி விட்டார்கள் (ஒட்டியவர்கள் எழுதப் படிக்கத் தெரியதவர்கள் என்பது வேறு விசயம்) என்பதற்கு மருத்துவமனையில் வந்து தகராறும் நஸ்டஈடும் பெற்றுச் சென்றார்கள். ஒரு மத அடையாளத்தின் மேல் இன்னொரு அடையாளம் விழுந்து விட்டால் குத்துப் பலி கொலைப் பழி ஆகி விடுகிறது. அப்படியிருக்க அரசே தம் சின்னத்தின் பெருமை உணராது ஒட்டி விட முடியுமா? பேருந்தில் இருக்கின்ற தமிழக அரசின் சின்னத்தை படமெடுத்து தரவேண்டுமென்ற என் கோரிக்கையைத் தொடர்ந்து புகைப்படக்காரர் கேட்டார் ‘திருவள்ளுவர் சிலையிருக்கின்ற படத்தையா?” என்று. அதிர்ந்து போனேன் மனங்கள் எப்படி மாற்றப்பட்டு விட்டது என்று.

ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு விட்டதாலேயே அல்லது அரசாங்க சின்னத்தின் மீது மறைத்து ஒட்டப்பட்டு விட்டதாலேயே சனங்களின் கவனமும் அதில் கேள்வி எழுப்ப மறந்து போனதா?

சில மாதங்களுக்கு முன் தேசியக்கொடியை கேக்கில் போட்டு வெட்டியபோது எழுந்த சமூகக் கோபங்கள் சின்னத்தின் மேல் பசையிட்டு மறைத்து ஒட்டப்பட்டு விட்ட பதாகைகளின் மேல் எழுந்திருக்க வேண்டாமா?

பேருந்தில் மாநாட்டுப் பதாகைகள் சரி, அரசாங்கமே மொழியின் சார்பில் முன்னின்று நடத்துகின்ற பெருமைமிகு விழாவின் பதாகைகள் தமிழக மூலை முடுக்கெல்லாம் சென்று சேர சரியான இடம், வழி, பேருந்துகளில் ஒட்டுதல் என்பது சரிதான். அதைச் சரியாக தமிழக சின்னத்தின் மேலே அடித்து ஒட்டுவது என்பது அதீதமான தவறானது அல்லவா?

தவற்றை காண்கின்ற இடமெல்லாம் செய்து விட்டதால் சரியென்று ஆகி விடுமா என்ன?

தனியார்கள் இதைச் செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசே செய்ததால் இது சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டதா?

பொதுமக்களின் முணுமுணுப்பாய் இருந்து கொண்டிருக்கிற கேள்வி, ஏன் அரசியல் சமூகத் தலைவர்களிடம் எழும்பாமல் போயிற்று?

ஆயிரம் பக்க நாவலில் ஏதாவது ஒரு சம்பவத்தை அல்லது எழுத்தை வாசகன் பாராட்டி விட்டுப் போக வேண்டியிருப்பது போல மக்களுக்கு ஒரு நிர்பந்தமா?

செம்மொழி மாநாட்டை பிரபலப்படுத்தும் “ஆர்வக் கோளாறில்” நேர்ந்து விட்ட பிழையா?” அல்லது

ஆளுக்கொரு பக்கத்தைப் பாராட்டிவிட்டுப் போக அதைக் கண்டு மிரண்டு நிற்கின்ற வியப்பில் தவறுகள் அடிபட்டுப் போவது போல அரசின் தப்பித்தல் மனோபாவமா?

ஒரு அரசாங்கச் சின்னம் அதற்கு நடந்திருக்கின்ற அவமரியாதையை மக்கள், சமூக விமர்சகர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் பார்த்திருந்து இயல்பென கடந்து போனது சுயமரியாதை, பகுத்தறிவு இவ்வார்த்தைகளால் உருவாகிய கட்சிகள் அதை மறந்து விட்டு நடத்தும் ஆட்சி என்பதாலா?

"மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி"

பின் குறிப்பு : தமிழக அரசின் சின்னம் இந்து மத அடையாளத்தை தாங்கியிருக்கத்தான் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப் பட்டதன் விளைவாக சப்தமில்லாது, அரசு சின்னத்தை மாற்றி விடுவதற்காக பார்க்கும் ஒத்திகையா இது என்று சந்தேகத்தை கிளப்பியிருப்பதுவும் மறுப்பதற்கில்லை.

- திலகபாமா