தமிழக முதல்வர் மு. கருணாநிதி இன்று மாலை புதுடெல்லி வந்தார். சிறிது நேரத்தில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்ததாகத் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் மீண்டும் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுமாறு பிரதமர் யோசனை தெரிவித்தாக கருணாநிதி தெரிவி்த்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பேச்சு நடத்தி அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியபோது, மீண்டும் பேசுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அவரது யோசனையை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார். அதனால் பயன் ஏற்படுமா என்று கேட்டபோது, பயன் இருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் பிரதமர் பேசச் சொல்லியிருக்கிறார் என்றார் கருணாநிதி. இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று கொழும்பு சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறித்தும், மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்தும் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை, மலேசிய பிரச்சினைகளை மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கு ஆவன செய்து வருகிறது. மத்திய அரசு விவகாரங்களில் குறுக்கிட விரும்பவில்லை என்றார் முதல்வர். மலேசியாவைப் பொருத்தவரை அது அவர்களது உள்விவகாரம் அதைப்பற்றி நான் பேச விரும்பிவில்லை என்றும், அவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வதையும் கெடுக்க விரும்பவில்லை என்றும் முதல்வர் கருத்துத் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி தர வேண்டும் என்று பிரதமரிடம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்