ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று என் கிராமத்துக்குச் சென்றேன், காளையார்கோவிலிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தென்கிழக்கில் இருக்கும் என் கிராமத்தின் பெயர் சூரகுடி. என் கிராமமே நிராயுதபாணியாக நின்றது. இன்றுபோய் நாளை வா! என்று என்னால் சொல்லமுடியாது! ஏனெனில் அது என் தாய்க்கு இணையான என் கிராமம். எனை வளர்த்த மண்! நான் தவழ்ந்த மடி! நான் அமிலக்கண்ணீர் வடித்தேன்! தன் கருவுக்குள் சுமந்து பிரசவித்த ஒவ்வொரு குழந்தையும் பக்கத்திலில்லாது துடித்துக்கொண்டிருந்தது என் கிராமம்.
நான் உள்பட அனைவருமே வெளியூர் சென்றுவிட்ட வருத்தத்தில் என் கிராமம் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருந்தது. நான் துள்ளித்திரிந்த அந்த ஈரவயல்கள் வெடிப்போடிக்கிடக்கிறது. நான் நீச்சலடித்த என் குளங்கள் கொக்குகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தி சாயும் நேரத்தில் கேட்ட பறவைகளில் குரல்கள் நிறைந்த அந்த ஆலமரம் எங்கே போயிற்று? கலகலப்பான என் கிராமத்துக்குள் ஏன் இந்த மயான அமைதி? கண்மாய் நிறைந்து காணப்பட்ட என் கிராமம் எப்போதாவது வரும் குழாய்த் தண்ணீருக்குக் காத்துக்கிடக்கிறது.
போர்க்களத்தில் கணவனை இழந்த கற்புக்கரசி தன் கைக்குழந்தையோடு போர்க்களம் நோக்கி புழுதி கிளம்பக் கதறி ஓடும்போது எதிரியின் அம்பால் மாண்டுபோய்க் கைதவறிய குழந்தை செய்வதறியாது அலறித்துடிக்கும் அந்த கொடூரச்சூழல் என் கிராமத்துக்கு ஏன் வந்தது? இதற்கு நானும் ஒரு காரணமா? நிழலும் நிஜமும் மட்டுமே நிறைந்து கிடந்த என் கிராமத்திற்கு, மரங்களே இல்லாமல் உயிரற்று, வறண்டுபோகுமளவிற்கு வந்த துயர்தான் என்ன? என் கிராமத்தின் மொத்த வேதனையும் ஒரு மாமனிதனின் மரணத்தினால்தானா?
என் தாய்க்கும் என் கிராமத்துக்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை. என் கிராமத்தை பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப்போன ஒரு கிராமம் போல எனக்குத் தோன்றுகிறது. நான் வளர்ந்த அந்த மண், அந்த என் தாய் மடி எதற்காகவோ ஏங்குகிறது! என் மண் என் கண் முன்னே காணாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்துவிட்டது. நாம் நேசிப்பதற்கு வேண்டாம் அங்கு சுவாசிப்பதற்குக் கூட மனிதர்கள் இல்லை. எப்போதுமே கூட்டம் நிறைந்து கலகலப்பாக கலைகட்டும் என் கிராமம் ஆள் அரவமின்றி அடங்கிப்போனதே! மழை பெய்து ஓய்ந்ததும் தலை காட்டும் காளான்கள் போல் அவ்வப்போது தலை காட்டும் ஒரு சில மனிதர்கள். என் மக்கள்! என்ன ஆயிற்று என் கிராமத்திற்கு? “ஐயோ! புன்னகை புரியும் தமிழ் மண்ணே! உன்னை விட்டுப் பிரிவது ஒன்றுதான் எனக்கு வருத்தம்!” என்று கதறிய அந்த மாவீரன் கட்டப்பொம்மனின் வேதனை இன்றல்லவா எனக்குப் புரிகிறது. மண்ணை நேசிக்கும் எவனும் தன் மண்ணின் அருமையை உணர்கிறானோ இல்லையோ! வெறுமையை உணரவேண்டும்! துள்ளிக்குதித்த என் கிராமம், மாதம் ஒரு குழந்தையைப் பிரசவித்த என் கிராமம் மாபெரும் மனிதர்களை உருவாக்கிய என் கிராமம் இன்று நிற்கதியாய் நிற்கிறது. என் கிராமத்துக்கு எல்லாம் இருக்கிறது ஆனால் உயிர் மட்டும் இல்லை. என் கிராமம் நாளுக்கு நாள் ஒவ்வொரு உறுப்பாய் இழந்து கொண்டிருக்கிறது. என் கிராமத்தின் கிழக்கு எல்லையில் கம்பீரமாய் நிற்கும் ‘மருதநாயகி’ அம்மன் கோயில்கூட செயலிழந்து, வழிபட யாருமின்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மக்களன்றி ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வசதிகள் எல்லாம் பெருகி இருக்கிறது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வள்ளல் மட்டும் இன்று உயிரோடு இல்லை. அதனால்தான் என் கிராமத்துக்கும் உயிர் இல்லை. வாழ்க்கை நடத்த வாரிசுகள் இல்லை. மேற்கு எல்லையில் ‘வீரபத்திரர்’ கோயில் வெட்ட வெளியில் வெறுங்கையோடு நிரந்தர அமைதியாய் நிற்கிறது. கோயில் இருக்கிறது, கும்பிட மக்கள் இல்லை. உடல் இருக்கிறது என் அழகான கிராமத்திற்கு! ஆனால் உயிர்? எப்போது என்ன திட்டம் வகுத்தாலும் வீண் வம்பு பேசும் மனிதர்கள் போய் இப்போது திட்டமிட மட்டுமில்லை வம்புக்குக்கூட வாய்கள் இல்லை. எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றெடுத்து இன்று உயிரற்ற ஒரு அஃறிணையாய் காட்சியளிக்கும் என் கிராமத்தை உயர்ப்பிக்க எனக்கு ஆயிரம் கைகள் வேண்டாம். ஒரே ஒரு மாமனிதன் போதும்! அவன் மட்டும் என்னை ஆசீர்வதிக்கட்டும். சமீபத்தில்கூட இரண்டு மூன்று மரணம். ஆனால் அவை தற்கொலைக்குத் தள்ளப்பட்டவை. மரணத்தின் விளிம்பில்கூட கடைசியாகக் கதறிப் புலம்பியது அந்தக் கல்லறையில்தானாம்... ஆம் வேறு யாரிடம் சொல்வது? கேட்பதற்கு எந்தச் செவிகளும் தயாராயில்லை. அந்த ஒரு மனிதனின் மறைவு மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இத்தனை உயிர்களின் மரணத்ததை என் கிராமம் பார்த்திருக்காது. என் கிராமமே இன்று வெறுங்கையோடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இவையனைத்தையும் பொறுமையோடு பார்த்துக்கொண்டு, சிவப்புக்கொடி பறக்க, அந்த மாமனிதன் அமைதியாகத் உறங்குகிறான். தொண்டால் துயிலிழந்த அந்த தூயவனை இழந்து துடிக்கும் என் கிராமத்தின் துயர் துடைப்பார் யாரோ?
ஆம்!
நான் இழந்தது
என் தந்தையை மட்டுமல்ல!
மகனை இழந்து தவிப்பது
என் கிராமமும்தான்!
விதவையானது
என் தாய் மட்டுமல்ல!
என் கிராமமே! நீயும்தான்!!
சூரகுடி பாலா