December 25, 2007

இன்றைய குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்லமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் துகளில் முழு பைபிளையும் எழுதி சாதனை

பூர்வ மொழியான ஹீப்ருவில் மூன்று இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட நூல் கிறிஸ்துவர்களின் திருமறையான பைபிள். உலகின் மிகச் சிறிய பைபிள் என்ற சாதனையை இதற்கு முன் தக்கவைத்திருந்த நூல் 2.8 செண்டிமீட்டர் அகலமும் 3.4 செண்டிமீட்டர் நீலமும் 1 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது, இதில் 1514 பக்கங்கள் இருந்தன. தற்போது பைபிளின் மூன்று லட்சம் வார்த்தைகளை ஒரு குண்டூசி முனையில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிலில் உள்ள ஹைஃபா தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள். அரை மில்லிமீட்டர் அளவேகொண்ட ஒரு சதுரங்கத்தில் முழு பைபிளும் மெல்லிய மின்-கதிர் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது

பொன்மொழிகள்

  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்


  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்


  • படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு

ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. உண்மையில் ஒற்றை இனமல்ல அது பல்வேறு இனங்களின் தொகுப்பு என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. தற்போது ஒட்டகச்சிவிங்கிகள் ஓர் இனமாகவும் அவற்றுக்குள் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும் கருதப்பட்டுவருகிறது. ஆனால் சஹாரா பாலைவனத்துக்கு தென்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கியின் ரோம நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுவது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனம் என்பதைக் காட்டுகிறது. இனப்பெருக்க ரீதியில் - அதாவது ஓரினத்தோடு மற்றொரு இனம் சேர்ந்து பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத - ஒட்டகச்சிவிங்கிகள் ஆறு பிரிவுகள் இருப்பது மரபணு மூலக்கூறுகள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மரபணுக் கல்வி நிபுணர் டேவிட் பிரவுன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்