September 26, 2007

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.

தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.

தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம். கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.

'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?

இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.

இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.

மறக்க முடியாத இன்று எது?

இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.

கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?

ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?

இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.

உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?

அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!

அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?

அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:

"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"

கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"

அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"

உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?

"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!

உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?

இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?

நாகேஷ்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?

ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.

உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?

திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.

அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!

உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!

உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?

படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!

இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ்

இன்றைய குறள்

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

"சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு"

- சுவாமி விவேகானந்தர்

  • 'உலக நாடுகளைப் பழிவாங்கும் கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படக் கூடாது' - ஐ.நா பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த உரை : மனித உரிமைகள் என்ற விடயத்தை உலக நாடுகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஒரு கருவியாக பயன் படுத்தக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபையின், 62 வது வருடாந்த சந்திப்புக்கான தனது உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்
  • பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் கருத்து : பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியா முதன் முறையாக இன்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், பர்மாவின் அரசியல் சீர்திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக, பரந்துபட்ட நடைமுறையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் விரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பர்மாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது : பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
  • நேபாளத்தை குடியரசாக்குவதற்கு நேபாளி காங்கிரஸ் ஆதரவு : நேபாளத்தை குடியரசாக அறிவிப்பதற்கு, தனது ஆதரவை அந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான நேபாளி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    இந்த ஆண்டு நவமபர் மாதம் தேர்தெடுக்கப்படவுள்ள அரசியல் சாசன சபை, இந்த மாற்றத்ததை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளனர்
  • இலங்கையின் வடபகுதி மோதலில் 13 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தைக்கு மேற்கில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் எறிகணை வீச்சு மற்றும் நேரடி மோதல்களில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 9 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது

இராமர் பால ஆராய்ச்சியில் ஈடுபடும் அதிமேதாவிகளுக்கு எனது பணிவான வேண்டுகோள்!!

"சேது சமுத்திரத் திட்டத்தை வரவேற்பது ஒவ்வொரு தமிழனும்? ஏன் இந்தியனும் வரவேற்கத்தக்க ஒரு விசயம். நாமெல்லாம் அந்த இராமர் பாலத்திற்கு வரிந்து கட்டிக்கொண்டு விளக்கம் கொடுப்பதும், விதண்டாவாதம் பேசுவதையும் நிறுத்தினால் நலமாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். அதில் செலவழிக்கும் நேரத்தை, சேது சமுத்திரத்திட்டத்தின் மூலம் நாம் அடையப்போகும் பலன் என்ன? நன்மைகள் என்னென்ன? என்பதை விளக்கினால் உபயோகமாகவும், என்னைப்போன்ற பாமரர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைத்த பாக்கியமும் உங்களைப்போன்ற, இன்னும் இந்த இராமர் பால ஆராய்ச்சியில் இறங்கி நோண்டிக் களைபறிக்கும் அதிமேதாவிகளுக்கும் புண்ணியமாகும். எனவே மேற்கொண்டு மண்டபத்திலிருந்து வானர சேனைகள் பாலமில்லாமல் இராமேஸ்வரத்திற்கு எப்படிப் போனார்கள், தனுஷ்கோடி இருந்தது உண்மையா? போன்றைவகளுக்கு விளக்கம் கேட்கப்படும் கேள்விகளும், அம்மாவுடன் கூடப்பிறந்த ஆண்களை ஏன் சின்னம்மா, பெரியம்மா என்று அழைக்காமல் மாமா என்று அழைக்கிறோம் என்று கேட்கப்படும் கேள்விகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முடிந்தால் புரியாதவர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைக்க நாமெல்லாம் சேர்ந்து முயற்சிப்போம்"
- நன்றி மனுநீதி