சர்வதேச அளவில் புலிகளின் ஆயுத கடத்தல் `நெட்வொர்க்' - அமெரிக்காவில் இருந்து எல்லா நாடுகளிலும் ஆட்கள் நடமாட்டம் : அவர் முழுப்பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. கே.பி., என்று கூப்பிடுகின்றனர். பார்த்தால் சாப்ட்வேர் நிபுணர் போல இருக்கிறார்; குறுந்தாடி, சிறிய அளவில் திருத்திய மீசை, அதிகம் பேசுவதில்லை.அமெரிக்காவில் இருந்து பல நாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு; மொத்தத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் போல இவர் இருப்பார்!விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து வாங்கி, அனுப்பி வந்தவர் அவர் தான். அவர் இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த, `புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் நெட் வொர்க்'கை, அமெரிக்கா துணையுடன் முதன் முறையாக இலங்கை அரசு தகர்த்து உள்ளது. ஆனால், முழுமையாக தகர்த்து விட்டதா என்பதே கேள்விக்குறி.புலிகளுக்கு ஆயுதங்கள் வந்த வண்ணம் தான் இருக் கின்றன. எங்கிருந்து வருகிறது... யார் அனுப்புகின்றனர்... எப்படி புலிகள் கைக்கு சேருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. சில மாதங்களாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடாவில் சிலர் கைது செய்யப்பட் டாலும், புலிகளின் முக்கிய ஆட்களோ, இடைத்தரகர் களோ சிக்கவில்லை. விழுந்தது முதல் அடி:
அமெரிக்காவில், சில மாதங்களாக, ஏ.டி.எம்., மிஷின்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வந்தது. அவர் களை கண்டுபிடித்து போலீஸ் கைது செய்தது. அதுபோல, சில அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக சிலரை கைது செய்தனர். இவர்கள் எல்லாம், இலங்கையை சேர்ந்தவர்கள், புலிகளுக்கு உதவுபவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். விடுதலைப்புலிகள் இயக் கத்தை, பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு அமெ ரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் `நெட்வொர்க்' பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்: இலங்கையில் இருந்து தமிழ்ப்பகுதிகளை பிரித்து, தனி ஈழம் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று, விடுதலைப்புலிகள் 24 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க இலங்கை அரசால் முடியவில்லை. வெளிநாடுகளில் உதவி: புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளின் அபிமானிகள் ஆகியோர் உதவியுடன், சர்வதேச அளவில் `ஆயுத கடத்தல் நெட்வொர்க்' ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதில், புலிகளுக்கு சில இடைத்தரகர்கள் உதவுகின்றனர். பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில், சிலர் பைனான்ஸ் செய்தும் வருகின்றனர். லண்டன் வால் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த ஒரு பிரபல பைனான்சியர் மீது அமெரிக்க அதிகாரிகள் கண் வைத்தனர். அவரை கைது செய்ய தயாரான போது, அவர் தலைமறைவாகி விட்டார். புலிகளுக்கு, அவர் ஆயுதம் வாங்க பைனான்ஸ் செய்துள்ளார். இவரை போன்று பல நாடுகளிலும், புலிகளுக்கு ஆட்கள் உள்ளனர். யார் அந்த `பி?' அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியாவில், புலிகளுக்கு ஆதரவாக பல துறைகளின் நிறுவனங்கள், பல கலை, கலாசார அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் உள்ளன. வெளியில் பார்த் தால், புலிகளின் ஆதரவில் தான் இயங்குகின்றன என் பது தெரியாது. ஆனால், புலிகளுக்கு ஆயுத, போதை கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளையடிப்பு போன்ற விஷயங்களில் துல்லியமாக செயல்படும் அளவுக்கு, இந்த அமைப்புகளில் ரகசியமாக சிலர் இருக்கின்றனர். இப்படித்தான், நியூயார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பெயர், `பி' என்று மட்டும் தரப்பட்டுள்ளது. அவர் பெயரை முழுமையாக சொல்ல போலீஸ் தயாரில் லை. இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால், அவர் பெயர் மறைக் கப்படுகிறது. இன்னொருவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத் தில், `லேப்-டாப்' கம்ப்யூட்டர் சகிதம் அவர் கைது செய்யப்பட்டபோது, சாப்ட் வேர் இன்ஜினியர் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால், அவர் புலிகளின் நேரடி ஏஜென்ட் என்று விசாரணையில் தெரிந்தபோது, அதிகாரிகளே அதிர்ந்துவிட்டனர். ஆயுத நிறுவனத்திடம் ஆர்டர் தர தயார் செய்யப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் கைப்பற்றினர். சீனா, கென்யா, கொழும் புக்கு கடந்த ஐந்தாண்டில், 100 முறை போய் வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
மூன்று ஆர்டர்கள்: இப்படி பல நாடுகளில், பல ஏஜென்ட் கள், இடைத்தரகர்கள் மூலம் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு அனுப்பியிருந்தவர் தான் கே.பி.,! அவர் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கவே இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை, பணம் பறிப்பு, ஆள் கடத்தல் மூலம் கோடிகளை குவிக்கும் விடுதலைப்புலிகள், சட்டப்படி ஆயுதங்கள் வாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத யார் பெயரிலோ பணத்தை, சர்வதேச ஆயுத நிறுவனத்துக்கு செலுத்தும். அதற்கான ஆவணங்களையும் தயார் செய்யும். இப்படித்தான், சமீபத்தில், ஆயுதங்கள் வாங்குவதற்காக, மூன்று ஆர்டர்களை புலிகள் அமைப்பு அளித்திருந்தது. அதற்கான, ஆவணங்களை சட்டப்படி தயார் செய்தனர் ஏஜென்ட்கள். இடைத்தரகர்கள், ஆயுத நிறுவனத்தில் பேசி, அந்த ஆர்டர்களில் இரண்டை முதலில் செயல்படுத்த வைத்தனர்.
சீன துறைமுகத்தில்: ஆயுத நிறுவனத்தில் இருந்து இரண்டு கப்பல் முழுக்க ஆயுதங்கள், சீனாவில் உள்ள டியான்ஜின் என்ற துறைமுகத்தில் ஏற்றப்பட்டன. அந்த கப்பல்கள், அங்கிருந்து, நேரடியாக, இந்தோனேசியாவுக்கு போயின. அங்கு, ஏற்கனவே புலிகளின் இடைத்தரகர்கள் இருப்பதால், அவர்கள் தலையிட்டு, போலி ஆவணங்களை காட்டி, அதிகாரிகளை சம்மதிக்க வைத்தனர். வழக்கமாக, தாய்லாந்து, இந்தோனேசியா கொண்டு வரப்படும் ஆயுத கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புலிகளின் சிறிய படகுகளில் ஆயுதங்கள் ஏற்றப்படும். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு இருக்காது. அதனால், அங்கிருந்து தப்பி, கடற்படை கண்காணிக்காத நேரம் பார்த்து, இலங்கை கடலில் படகுகள் நுழையும்.
படகுகள் மூலம்: இப்படி சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருவதை கண்டுபிடித்தபோது, அவற்றை குண்டு வீசி இலங்கை கடற்படை அழித் துவிடும். அப்போது மட்டும், மற்ற படகுகளை அனுப்பாமல், இடைத்தரகர்கள் நிறுத்திவிடுவர். சில நாள் கழித்து, மீண்டும் சிறிய படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டு, புலிகள் கைக்கு போய்ச்சேரும். இரண்டு ஆர்டர்கள் மூலம் புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் தடுக்க முடியவில்லை. மூன்றாவது ஆர்டரை கண்டுபிடித்து, இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுக்க, ஆயுத ஆர்டரை ஆயுத நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
ஒடுங்கும் நாள்: இருந்தாலும், புலிகளுக்கு சர்வதேச அளவில் இன்னமும் அமெரிக்கா உட்பட எந்த நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கவனம், அல் - குவைதா பயங்கரவாதிகள் மீதுதான் உள்ளது. மேலும், இலங்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவும் இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியாவை மீறி தலையிடவும் யாரும் தயாரில்லை. அல் - குவைதா விவகாரத்துக்கு பின்தான், புலிகள் விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக இறங்கும் என்று தெரிகிறது. மேலும், புலிகள், தனி நாடு கேட்டு போர் செய்து வருவதால், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு உள்ளது. இப்படி சில குழப்பங்கள் உள்ளதால், அதை பயன்படுத்தி, சர்வதேச அளவில் புலிகள், இன்னமும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். சர்வதேச ஆயுத கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்படும் போது, புலிகள் சுருதி அறவே ஒடுங்கி விடும் என்பது நிச்சயம்.
ஆண்டுக்கு 1,500 கோடி குவியுது விடுதலைப்புலிகளுக்கு எப்படி பணம் வருகிறது? இந்த கேள்விக்கு பதில், அவர்கள் பணம் பறிப்பு, கடத்தல் போன்றவற்றின் மூலம் திரட்டுகின்றனர் என்று சொல்லி விடலாம். ஆனால், அதையும் தாண்டி, பல நாடுகளில் லட்சக்கணக்கில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் பணம் கிடைக்கிறது. சிலரிடம் மிரட்டி, சிலரிடம் அன்பாகவும் பணம், புலிகளுக்கு வருகிறது. இந்த பணத்தை சேகரிப்பதும், அவர்களின் ஏஜென்ட்கள்தான். ஆயுதங்கள் வாங்க மட்டும், இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
புலிகள் மற்றும் இலங்கைப் பிரச்னை பற்றிய முக்கிய தகவல்கள்: இலங்கையில், தமிழ் ஈழம் கோரி, 24 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களை புலிகள் நடத்துகின்றனர். அங்கிருந்து தான், சட்டப்படி ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. புலிகள் படையில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் இன்று வரை கிடைக்க காரணம், சர்வதேச அளவில் உள்ள `ஆயுத நெட்வொர்க்' தான். பிரிட்டனில் ஒன்றரை லட்சம், கனடாவில் இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள், புலிகளின் ஆதரவாளர்கள்தான். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை பணம் , புலிகளுக்கு வருகிறது. கடத்தல், மோசடி, கொள்ளை போன்றவற்றில்தான் அதிக பணம் வருகிறது. தாமாக முன்வந்து நன்கொடை வருவது குறைவுதான். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் உட்பட சில இடங்களில் அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, புலிகள் மீதும் கண்காணிப்பு அதிகமானது. அப்போதில் இருந்துதான், ஆயுதக் கடத்தலில் புலிகள் மீது கண் விழுந்தது. ஆயுதக் கடத்தலையும் தடுக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில், புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை இலங்கை அரசு தீவிரப்படுத்தியதும், பல நாடுகளில் புலிகள் மீதான நல்லெண்ணம் குறைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் கைதான புலிகள் ஏஜென்ட்கள் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளதால், புலிகளுக்கு இனி போதாத காலம் தான்.