October 17, 2008

“தாம்பத்யம்” – நவநீ

திண்ணை-யில் பிரசுரமான எனது சிறுகதை : http://www.thinnai.com/?module=displaystory&story_id=10810164&format=html

“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ சந்திச்சுருப்பேனா சொல்லு. ஒனக்கு ஒன்னும் ஆகாது சிவகாமி! ஒன்னோட கையிலதான் என்னோட உயிரு போகணும்னு அந்தப் பகவான் ஏற்கனவே எழுதிட்டான் சிவகாமி” என்று துக்கம் தொண்டை அடைக்க, பெட்டில் படுத்திருந்த சிவகாமியின் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தார் பரமசிவம்.

டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “சுகர் கொஞ்சம் ஹை-யா இருக்கு, ப்ரஷரும் நார்மலா இல்ல, அதான் ஒங்களுக்கு மயக்கம் ஜாஸ்தியா வருதும்மா, மெடிசின்ஸ் தர்றேன்…. எடுத்துக்கங்க, சாப்பாடு நான் சொன்னபடி சாப்பிடுங்க, எல்லாம் சரியாய்டும், நத்திங் டு வொர்ரி, கண்ணெவிட மேலாக் கவனிச்சுக்க ஒங்க கணவர் பக்கத்துல இருக்கறச்ச நீங்க ஒர்ரி பண்ணலாமா? ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணப்படாது, சரியா?” என சிரித்த முகத்தோடு, சிவகாமியிடம் கூறிவிட்டு, “டேக் கேர் மிஸ்டர் பரமசிவம்” என்று சொல்லிச் சென்றார் டாக்டர்.

“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” - என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.

பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.

“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.

“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.

திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.

அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.

ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.
பரமசிவன் முதியோர் இல்லத்துக்கு வருவதற்கு முன் இருந்தே சிவகாமி அங்கு இருக்கிறாள். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும்தான் அங்கு நெடுநாட்களாக இருப்பவர்கள். இல்ல நிர்வாகத்தினர் தவிர அனைவருமே இவர்களைக் கணவன் மனைவி என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். சிவகாமி எங்கு பிறந்தாள். பெற்றோர் யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன்? அவளுக்கே தெரியாது. இந்த இல்லத்தை நடத்தும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், கல்கத்தாவில் அவர்களின் கிளையில் இருந்து சிவகாமியை அவளது முப்பதாவது வயதில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். இங்கு இந்த இல்லத்தில் முக்கியமான பணிகளையெல்லாம் கவனித்துவருகிறாள். தான், கல்கத்தாவில் சிவராத்திரியன்று கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் ஒப்படைக்கபட்டதாகவும், அங்கு அடிக்கடி வந்து போகும் அன்னைத் தெரசாதான் தனக்குச் சிவகாமி என்று பெயரிட்டதாகவும், தனக்கென்று யாருமில்லையென்றும், தான், ஒரு ஆதரவற்ற பெண் என்பதையும் சிவகாமி பரமசிவனிடம் சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் அன்பாகப் பழகினர். ஒருவருக்கு வேண்டியதை இன்னொருவர் செய்துகொண்டு, மிக அமைதியான சூழலில் வாழ்ந்தனர். பரமசிவத்துக்குக் கிடைக்கவேண்டிய மன அமைதி, நிம்மதி இந்த இல்லத்தில் கிடைத்ததாகவே உணர்ந்தார். அதனால்தான் அமெரிக்கா செல்வது பற்றித் தன் மகனிடம் அவர் இதுவரை பேசியதே இல்லை.

பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம் “நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.

இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்... ஹையா.. ஜாலி.... பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர்.
நன்றி : திண்ணை

October 10, 2008

பட்டன் குடை

சில காட்சிகள், சில நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும். அவை மனதுக்குள் குதூகலத்தையும் வர வைக்கலாம் அல்லது மனதின் எங்கோ ஓர் மூலையில் வலியையும் ஏற்படுத்தலாம் அல்லது அதுவே நெருடலாகவும் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும்போல் எனக்குள்ளும் ஏற்பட்டவைகளைத்தான் இனி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

நல்ல மழை! ஆம்! மழை என்றால் பேய் மழை. நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். காரணம், என்னோடு பள்ளிக்கு வருபவர்கள் அனைவருமே கையில் குடை வைத்திருக்கிறார்கள். ஆம், அந்த வயதில் பள்ளிக்கு குடை கொண்டுவந்தால் ஏதோ ஒரு பெரிய சாதனையாளன் போன்ற ஒரு தொணியில் நடைகூட மாறிப்போய்விடும். சிலர் மட்டும் கலர் கலராய் விற்கும் பாலித்தீன் கவர்களை, (எங்கள் கிராமங்களில் கொங்கானி என்று சொல்லப்படும்) மடித்து, புத்தகப்பையோடு கொண்டுவருவர். எங்கள் வீட்டிலிருந்த ஒரு குடையையும் என் அப்பா வெளியில் எடுத்துச்சென்றுவிட்டார். இன்னொரு குடையோ, கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்துச்சென்றால் அனைவரும் சிரிப்பார்கள் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தேன். வெளியில் பார்த்தால் மழை விட்டிருந்தது. ஓ.... இதுதான் சமயம் என்று நினைத்து, அடுத்த மழை வருவதற்குள் பள்ளி சென்றுவிடலாம் என்று எண்ணி, கிளம்புகிறேன்.

திடீரெனச் சந்தேகம், போகும் வழியில் மழை வந்துவிட்டால்! சரி, அதற்கு அம்மாவிடம் "அம்மா நல்ல ஒரச்சாக்கு இருந்தா, மடிச்சுக் குடும்மா" என்கிறேன். "எப்படியும் இந்த வாரச் சந்தையில ஒரு கொடை வாங்கியாந்துருவம்யா" என அம்மாவும் ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி, வயல்களில் உரம் போட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்து, மடித்து வைக்கப்பட்டு, இருப்பதிலேயே கொஞ்சம் 'பளிச்' என இருக்கும் ஒரு சாக்கை எடுத்து, கொங்கானி-யாக மடித்து,
"என் ராசா, என் தங்கம்.... எம்புட்டு சமத்துப் புள்ளயில… இந்தாடி, ராசா! தலையில போட்டுக்கய்யா, தூத்த விழுகுது" என அம்மா அந்தச் சாக்கை என் தலையில் போட்டு, புத்தகப்பையை நனையாமல் உள்பக்கமாக வைக்கச் சொல்லி வழியனுப்பினாள்.

பள்ளிக்கூடம் கிட்டத்தட்ட 2-3 கி.மீ இருக்கும். போகும் வழியில் சாக்கை மடித்துத் தலையில் போட்டுக்கொண்டால் யார் பார்க்கப்போகிறார்கள்? பள்ளிக்கு அருகில் சென்றதும் ஆவரைத்துறில் மடித்து வைத்துவிட்டு மாலை வரும்போது எடுத்து வந்து விடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு புறப்படுகிறேன். காரணம் ‘படிப்பில் அவ்வளவு அக்கறை’ எனத் தவறாக நினைக்கவேண்டாம். பள்ளிக்குப் போகாவிட்டால் "முதுகுப்பட்டைத்தோலு பிஞ்சுரும்" என் அப்பாவின் இந்த ஸ்லோகம் என் காதுகளுக்குள் அவ்வப்போது ஒலிக்கத் தவறியதில்லை.

ஒரு வழியாக, நான் புறப்பட்டு எங்கள் ஊர் கண்மாய்க் கரை வழியாகச் சென்று கொண்டிருக்கையில், வயல் பக்கம் எங்கள் ஊர் "நொண்டி சுப்ரமணி" எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் கண்களை வெகுவாக உறுத்தியது. ஒரு பக்கம் வயிற்றெரிச்சல் வேறு. நான் அவரைப் பார்த்துக்கொண்டே செல்கிறேன். அவரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். "தம்பி! நில்லுய்யா" என்று என் அருகே வருகிறார். நான் நிற்கிறேன். "இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். "அட! என்ன அப்படி முழிக்கிற, இங்கெ பாரு...இந்தா இருக்குல பட்டன், அத அமுக்குனா அதுவா விரிஞ்சுக்குரும், சுருக்கும்போது மாத்தரம் கொஞ்சம் சூதானமா சுருக்கோணும், இல்லாட்டி கண்ணு-காத கெடுத்துப்புரும் சரியா" என்றதும்,
"அப்ப ஒனக்கு" என்கிறேன்.

"எரவா மாடு மேய்க்கிறவனுக்கு எதுக்குய்யா பட்டன் கொடை? நீ படிக்கிற புள்ள....சரி சரி..அந்தக் கொங்கானிய எங்கிட்ட குடு, நீ கௌம்பு, பள்ளிக்கொடத்துக்கு நேரமாச்சு"
என் தலையில் இருந்த கொங்கானி அவர் தலையில் இருந்ததைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.

"தம்பி! கொடைய தூக்கிப்புடி, தூத்த தலையில் விழுகுது" என்றதும் சுதாரித்தவனாக, குதூகலத்தில் பள்ளிக்கூடத்தை அடைந்தேன். அந்தக் குடையை நான் வழி நெடுக சுழற்றிக்கொண்டே சென்றதில் என் கைகள் கொப்பளித்துப்போனதும், அன்று முழுவதும் ஒருவரைக்கூட என் குடையை தொடாமல் காவல் காத்ததும், வழக்கத்திற்கு மாறாக அன்று எனக்கு அடிக்கடி "நம்பர் ஒன்" வந்ததும், யாருக்கு 'நம்பர் ஒன்' வந்தாலும் என் குடையோடு அவர்களை அழைத்துச்சென்று, ஒரு "கொடைவள்ளல்" ஆனதும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

ஒரு சில மாணவிகளுக்கு என் குடையைக் கொடுக்கும்போது மட்டும் எனக்குள் "சிலு சிலுவென குளிரடித்ததும்" எனக்குள் இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது. அப்போது எனக்கு பத்து அல்லது பதினோறு வயதிருக்கும்.

வீடு திரும்பிய நான் அன்று நடந்த அனைத்தையும் கதை கதையாய் என் அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அம்மாவை உறங்கவே வைத்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் எனக்கு பட்டன் குடை கனவுதான். வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எனக்கு முழிப்பு வந்து, "அம்மா! ஏம்மா நொண்டிச் சுப்ரமணிக்கி, நொண்டிச்சுப்ரமணி-னு பேரு?" அம்மாவுக்கும் பதில் தெரியாதவளாய், அது நொண்டி நொண்டி நடக்குதுல, அதான் அதுக்கு அப்படிப் பேரு" என்று சமாளித்தாள். ஆனால் அது நொண்டி நடப்பதில்லை, எல்லோரைப் போலவும் நன்றாகத்தான் நடக்கும். அந்த வயதில் அதுவரை எழாத சந்தேகம் எனக்குக் குடை கொடுத்தபிறகு எனக்கு எழுந்தது ஏன்? என இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது? எனது எந்தச் சந்தேகத்தையும் தீர்த்துவைக்கும் என் அப்பா இதையும் தீர்த்துவைத்தார். அவர் சொன்ன விசயங்கள் நூறு சதவிகிதம் அன்று புரிந்ததோ இல்லையோ, இன்றும் வலிக்கிறது. "தம்பி! அவன் நொண்டியெல்லாம் கெடையாது, நம்ம ஊருல மேலவீட்ல இன்னொரு சுப்ரமணி இருக்காருல, இவரு பேரும் சுப்ரமணிங்கறதால, கொழப்பமாகும்ல. அதுனால இவன நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடுறோம்.
"ஏம்ப்பா! அப்ப அந்த மேலவீட்டு சுப்ரமணிய நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டியதுதானே?" என்றதும், "நீ கேக்கறது சரிதான், அவனுக்கு நான் பேரு வைக்கலடா, யாரோ வச்சுருக்காங்க, வச்சவங்க செத்துப்போய்ட்டாங்க! நம்ம அவன சுப்ரமணின்னே கூப்புடுவோம், மத்தவங்க மாதிரி நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டாம், சரியா?" என்றார்.

என் கதாநாயகனை நொண்டி சுப்ரமணி என யார் அழைத்தாலும் எனக்கு நெடுநாள் கோபம் வரும். பிறகு நான் கல்லூரிக்குச் செல்லும் காலத்தில் "தம்பி! என என்னைப் பாசமாக அழைத்த சுப்ரமணி, அய்யா! என என்னை அழைத்தபோதுதான் எனக்குள் வலிக்க ஆரம்பித்தது. தாழ்ந்த சாதியினர் எனத் தள்ளி வைத்தது மட்டுமின்றி, அவர்களை ஊனமுற்றவர்களாக்கி வேறு இந்தச் சமூகம் ஒடுக்கி வைத்தததை எண்ணி வேதனைப்பட்டதுண்டு. ஆனால் நானே சுப்ரமணியிடம் "இனிமே என்னை அய்யா-ன்னு கூப்பிடக்கூடாது, தம்பி-ன்னே கூப்புடுங்க" எனச் சொன்னதை என் அப்பாவிடம் வந்து சொல்லி, என் அப்பா என்னை கட்டியணைத்துக் கொண்டது இன்னும் கண்களை ஈரமாக்குகிறது. பிறகு நான் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில், கீழ் சாதி என முத்திரை குத்தப்பட்ட அனைவரையும் என்னை "அய்யா-வுக்குப் பதிலாக, அண்ணன் என" அழைக்க வைத்ததால் நான் சந்தித்த பிரச்சினைகள், அடிதடிகள் ஏராளம். அதற்கு ஒரே உதாரணம் இன்றும் என் கிராமத்தில், சுற்றுவட்டாரத்தில் என்னை மட்டுமில்லை, இந்தத் தலைமுறையினரையும் "அண்ணன்" என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்க முடிந்த உண்மை. இப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எண்ணியெல்லாம் நான் அன்று செய்யவில்லை. அன்று எனக்குள் அப்படித் தோன்றுவதற்குக் காரணம், என் தந்தையின் வாழ்வில் அன்று நடந்த சில சம்பவங்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள்தான். இவையனைத்திற்கும் ஒரு சராசரித் தந்தையாக என் தந்தை இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை ஆளாக்கிய என் அப்பாவும் இன்று இல்லை, என் குடை கொடுத்த அந்தக் "கொடைக் கதாநாயகன்" சுப்ரமணியும் இன்று இல்லை.
- நவநீ

October 07, 2008

தமிழின் தலைமகன் கலைஞர் அவர்களுக்கு - கை.அறிவழகன்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழின் தலைமகனாகிய, வாழுகிற தமிழின் கடைசித் தலைவர் என்று நாங்கள் நம்புகிற, தமிழகத்தின் முதல்வரும், இந்திய அரசுகளின் செயல்பாடுகளை வழிநடத்துகிற ஆற்றல் மிக்க ஐயா டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு!

திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு மிகப்பெரிய சக்தியை, அதன் கொடியின் நிறத்தை நீங்கள் எப்படி உங்கள் குருதியால் உருவாக்கினீர்களோ, அதே வழிவந்த உங்கள் தமிழ்ப் பேரனின் குருதியில்தான் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது.

{xtypo_quote}இந்தக் கடிதம் உங்கள் மனதை வென்றுவிடுமேயானால் அது தமிழின் வெற்றி மட்டுமில்லை, ஒட்டு மொத்தத் தமிழினத்தின் உயர்வானவெற்றி{/xtypo_quote}

அன்று அண்ணாவுக்காக, நீங்கள் எழுதிய இரங்கற்பாவைப் போல, நீதி மறுக்கப்பட்ட இன்னொரு அண்ணனுக்காக எழுதப்படுகிற கண்ணீர்க்கடிதம். விலைமதிக்க முடியாத மனிதஉரிமைகளின் மறுப்பையும், மீறலையும் சந்தித்த அண்ணனின் அடக்க முடியாத உணர்வுகளால் உந்தப்பட்டு எழுதப்படும் மன்றாடல் கடிதம். மறுக்கவும், மறைக்கவும் முடியாத துன்பம்தான் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம். அவரது மறைவுக்காக, அவர்கொல்லப்பட்ட விதத்துக்காக மனித நேயம் மிக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் கலங்கிப்போனோம், கண்ணீர் விட்டோம். அவரைக் கொன்றவர்கள் யாராக இருப்பினும் தண்டனைக்குரியவர்கள். குற்றவாளிகள் என்பதில் நமக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்துக்கிடையாது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுமையான மனநெருக்கடிகளுக்கும், கடும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டு ஒரு பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம், இன்று தூக்குக் கயிறுகளின் இறுக்கத்தில் இருந்து நீதிகேட்டுக் கடிதம் எழுதிய அண்ணன் பேரறிவாளனுக்கு நீதிகேட்டு, உள்ளக் குமுறல்களில் இருக்கும் தமிழ்த்தம்பிகளின் சார்பில் எங்கள் குடும்பத்தின் மூத்த தலைவரிடத்தில் முறையிடும் கடிதம்.
தூக்குக் கயிறுகளுக்கு அஞ்சி நடுங்கும் வழிவந்த இனமல்ல இந்தத் தமிழினம் என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும், விடுதலைக்கு முன்னரே வெள்ளையரின் அடக்குமுறைகளுக்கு இரையாகி மகிழ்வோடு தூக்குமேடைகளின் கயிறுகளை முத்தமிட்டு மாலையாக்கி மகிழ்ந்தவர் பட்டியல் நம்மிடம் உண்டு. தன் தமிழினம் அழியாமல் இருக்கப் போராடும், அதன் விடுதலையை வென்றெடுக்கப் பாடுபடும் போராளிகளை இளங்கன்றாய், பயமறியாது, மனதளவில் ஆதரித்த குற்றம்தான் அண்ணன் பேரறிவாளன் செய்துவிட்ட மாபெரும் குற்றம். சட்டங்கள் அறியாது, விதிமுறைகள் தெரியாத பத்தொன்பது வயதில் விடுதலைப் புலிகளை, அதன் தலைவர்களை உணர்வுள்ள எல்லாத் தமிழ் இளைஞர்களையும் போல மனதில் இருத்தியது ஒன்றுதான் அண்ணன் பேரறிவாளன் செய்த அழிக்க முடியாத குற்றம். நீதிமன்றங்களும், நீதிஅரசர்களும் ஒருபுறம் இருக்கட்டும் ஐயா. தமிழினத்தின் தலைவரே! முறையீடு இப்போது எங்கள் இறுதித் தலைவராக நாங்கள் எண்ணுகிற உங்கள் கைகளில் வந்துவிட்டது. விட்டுப் போன விடுதலைக் காற்றும், மறுதலிக்கப்பட்ட மனுக்களின் பாரத்தையும் மறுசீராய்வுகளாய் நீங்கள் மனம் திறந்து படிக்கவேண்டும், குற்றங்கள் புலப்பட்டால் சட்டங்கள் பாயட்டும். குற்றவாளி இல்லை என்று சட்டங்கள் சொல்லி விட்டால், கடைத்தேற்ற முடியாத, துடைக்கவும் முடியாத ஒரு தாயின் பதினாறு ஆண்டு காலக் கண்ணீர்ப் பயணத்தை நீங்கள் பரிவோடு பார்க்க வேண்டும். திருமணத்தைக்கூட தவிர்த்துவிட்டுத் தன் சகோதரனுக்காய் வாடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ்ச் சகோதரியின் வாழ்வை வளமாக்குவதற்கு உங்களைத் தவிர இவ்வுலகில் யாராலும் இயலாது ஐயா. விட்டுப் போன விடுதலைக்காற்றும், மறுதலிக்கப்பட்ட மனுக்களின் பாரத்தையும் மறுசீராய்வுகளாய் நீங்கள் மனம் திறந்து படிக்கவேண்டும்

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் சாரத்தை அறிவதற்கே அவனுக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. முறையீடுகளைச் செவிமடுக்காத மறுக்கப்பட்ட நீதிகளோடு மரணத்தை நோக்கி நிற்கின்ற அண்ணன் உயிர்ப்பிச்சை கேட்டுக்கடிதம் எழுதவில்லை. நீதி மறுக்கப்பட்டது என்கிற மனவேதனையோடு கடிதம் எழுதுகிறான். செய்யாத குற்றத்துக்காய், வெங்கொடுமைச் சாக்காட்டில் கதிரவனைக் கூடக்காணக்கிடைக்காத கொடுஞ்சிறை வாசம் என் அண்ணனுக்கு நிகழ்ந்ததென்றால் அதனைக் கண்டும். காணாமல் வாழ நினைக்கிற வெற்றுத் தம்பிகள் அல்லவே நாங்கள். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வார்த்துக் கொடுத்த தம்பியின் ஆட்சியில் வாழும், தமிழ்த்தம்பிகள் தானே நாங்கள்! தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...