நிறைய பேசுபவர்கள் ஒருவிதமான மன நோயாளிகள். அது சாருவானாலும் சரி, ஜெயமோகனானாலும் சரி - நாகூர் ரூமி
நாகூர் ரூமி. இவர் தமிழின் மிக முக்கிய தவிர்க்க முடியாத ஆளுமை. நெடுங்காலமாய் எழுத்தோடு இயங்கி வருபவர். இருபத்து ஐந்து நூல்களை இதுவரை எழுதியுள்ளவர். இதில் ஏழு நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள். தத்துவத்தின் பின்புலமும் அதனோடு சமயத்தைச் சார்ந்து கேள்விகளை எழுப்பும் நேர் உரையாடலை நிகழ்த்துபவர். சென்னை பெசன்ட் நகரில் தற்போது இருக்கும் அவரோடு ஒரு நேர்காணலை அதிகாலைக்காக நிகழ்த்தினோம்.
அதிகாலை : வணக்கம். தாங்கள் எழுதவந்த சூழல் எத்தகையது?
ரூமி : 1980-களில் நான் எழுதத் தொடங்கினேன். முதன் முதலாக கணையாழியில் ஒரு கட்டுரை வந்தது. மணிச்சுடர் என்ற மாத இதழில் சிறுகதைகள் தொடர்ந்து வந்தன. திருச்சியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவனாக இருந்தபோது நடந்தது இது. ஒரு காதல் ஒன்றும் உண்டு. காதலையும் இலக்கியத்தையும் தவிர எழுதுவதற்கு வேறு சூழல் ஒன்று வேண்டுமா என்ன!
அதிகாலை : தொடக்கக் காலத்தில் மீட்சி போன்ற நவீன இதழ்களில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்கள் எழுத்துக்கள் எப்படிப்பட்டதாக இருந்தது?
ரூமி : மீட்சி சிரியர் பிரம்மராஜன் எனது நண்பர். தீவிரமாக இலக்கியம் படிப்பவர். நவீன இலக்கியத்தின் முக்கிய போக்குகளை தமிழுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்தது. அதன் விளைவாகத்தான் மீட்சி இதழை அவர் தொடங்கினார் என்று நினைக்கிறேன். அதில் நான் சில கவிதைகளையும், கவிதை பற்றிய சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். மற்றபடி பத்திரிகைக்குத் தகுந்த மாதிரி எழுதுவது என் பழக்கமல்ல. நான் மீட்சியிலும் எழுதியிருக்கிறேன், குமுதத்திலும் எழுதியிருக்கிறேன். மீட்சியில் பிரசுரிப்பதாக இருந்தால் குமுதத்தில் எழுதிய கதையையோ, குங்குமத்தில் எழுதிய கவிதையையோ மீட்சிக்குக் கொடுத்திருப்பேன்.
அதிகாலை : சிறுபத்திரிகைகள் குறித்த உங்கள் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
ரூமி : சிறுபத்திரிகைகள்தான் உண்மையான இலக்கியத்தைக் கொடுத்தன என்ற கருத்தில் மூழ்கியிருந்த கால கட்டம் அது. அது ஒருவகையில் உண்மையாகவும் இருந்தது. ஆனால் போகப்போக சிறுபத்திரிக்கைகளும் தனிமனித வழிபாடு அல்லது எதிர்ப்பு என்று இறங்கிவிட்டன. என்றாலும் அந்தக் காலத்தில் வந்து கொண்டிருந்த கையெழுத்துப் பிரதிகளில் எந்த அரசியலும் கலக்கவில்லை. திருச்சியில் இருந்து ‘மானுடம்’ என்று ஒரு இதழை விஜயகுமார் என்ற நண்பர் கொண்டு வந்து கொண்டிருந்தார். இலக்கு, கொல்லிப்பாவை, யாத்ரா, ஆவரம், மீட்சி, புது எழுத்து போன்ற இதழ்களோடு எனக்கு பரிச்சயமும் தொடர்பும் உண்டு. அ• பரந்தாமனும் மீட்சி பிரம்மராஜனும் இதில் சிறப்பு கவனத்துக்குரியவர்கள். வடிவமைப்பில் தொடங்கியே அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுடைய அபார, தீவிர உழைப்பு ஒவ்வொரு இதழிலும் தெரியும். பல சிறு பத்திரிக்கைகளில் நான் எழுதியும் இருக்கிறேன். தீவிரமான இலக்கிய வாசிப்புக்கும் அறிமுகத்துக்கும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிக்கைகள் அவசியம். கணையாழியைக்கூட இலக்கிய உலகில் பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்ற சிறுபத்திரிக்கை என்றே சொல்ல வேண்டும்.
அதிகாலை : ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதி உங்கள் முதல் நூல். அதைப்பற்றி உங்கள் நினைவுகள்?
ரூமி : முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அது என் விஷயத்தில் பொய்யாகிவிட்டது! படிப்பவர்களுக்கு எளிதில் புரியக் கூடாத வகையில் எழுதப்படுவதுதான் கவிதை என்று நினைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது அது! அதனாலேயே அதிலுள்ள பல கவிதைகள் பலர் புரிந்து கொள்ள எளிதாக இருக்காது! (அதற்கு ஒரு முன்னுரை தருவதற்காக நடிகர், இயக்குனர் நாசர் அதைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆறு மாதம் அலைந்தார் பாவம்)! ஆனால் அதில் உள்ள எல்லாக் கவிதைகளும் அப்படி இருக்காது. என்னையும் மீறி, என்னைக் கேட்காமலே பல கவிதைகள் எளிமையாகவே அதில் வந்துவிட்டன! ‘நதியின் கால்கள்’ நூலுக்கு நான் பிரம்மராஜனுக்குத்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவருடைய சிபாரிசின் பேரில்தான் ஸ்நேகா பதிப்பகத்தார் அந்நூலையும் அதன் பிறகு ‘குட்டியாப்பா’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வந்தனர். நதியின் கால்களில் உள்ள கவிதைகள் பல தரப்பட்டவை. காதல், பாசம், ஆன்மிகம் என ஒரு கலவையாக இருக்கும்.
அதிகாலை : ‘குட்டியாப்பா’ உங்கள் நூலில் உள்ள எழுத்து முறையில் ஏதாவது புதுமை செய்திருக்கிறீர்களா?
ரூமி : ‘குட்டியாப்பா’ ஒரு சிறுகதைத் தொகுப்புதான். எழுது முறையில் நான் எப்போதுமே புதுமை செய்ததில்லை. நான் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் எழுதி வருகிறேன். என்னுடைய எல்லா எழுத்திலும் இருப்பது இரண்டு குணங்கள். ஒன்று எளிமை, இன்னொன்று நகைச்சுவை. இந்த இரண்டும் இல்லாத நாகூர் ரூமியின் எழுத்தைப் பார்க்க முடியாது. இது தவிர வேறு எந்த உத்தியையும் மனதில் வைத்துக் கொண்டு நான் எழுதுவதில்லை. இந்த இரண்டு குணங்களும்கூட என்னோடு, என் எழுத்தோடு கூடப்பிறந்தவை. அவற்றைப் புகுத்துவதற்காக நான் தனி ‘காமெடி ட்ராக்’ போடுவதில்லை. போகிற போக்கில் அது வந்துவிடுகிறது. அவ்வளவுதான். குறிப்பாக ‘குட்டியாப்பா’ எனக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான அனுபவம். அதை நான் அப்படியே கொடுத்துள்ளேன்.
அதிகாலை : அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்து என்பது வேண்டுமென்றே புனையப்படுவதா? அல்லது கவிதையின் போக்கில் தேவையா?
ரூமி : அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்தா? அதிர்ச்சியாக இருக்கிறது! அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்தைவிட நம்மை முதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துதான் தேவை என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத்துக்காக வலிந்து செய்யப்படும் எந்த எழுத்தும் நிற்காது. பாரதியின் தேசவிடுதலைப் பாடல்களைப் போல.
அதிகாலை : ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்னும் சல்மாவின் நூலுக்கு நீங்கள் எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள்.அந்த நாவலோடு உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
ரூமி : ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ இரண்டு வகையில் தோல்வியடைந்த நாவல். ஒன்று அதன் மொழியும் நடையும். கொஞ்சம்கூட இலக்கியத்தன்மையற்ற நடை. உப்பில்லாத சோறு போல. (இலக்கியத்தன்மை என்றால் என்ன என்ற கேள்வி நியாயமானதே. இது எனது கருத்துத்தான்). இரண்டாவது, நாவலின் களமும் கதையும். ஒரு சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி விமர்சனத்தோடு ஒரு நாவல் எழுதப்படலாம். அதற்கு அந்த எழுத்தாளருக்கு அல்லது -ளிக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் வரும் நிகழ்வுகள் எல்லாம் போலித்தனமானவையாக உள்ளன. உதாரணமாக, இறந்த உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் பெண்கள் அனைவரும் இறப்பை கொஞ்சம்கூட மதிக்காமல் பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு தன் கணவர்களோடும் காதலர்களோடு அனுபவித்ததையும் அனுபவிக்காததையும் பற்றி கொச்சையான வார்த்தைகளில் பேசிக்கொள்வதாக நாவலில் வருகிறது. இது எந்த உலகிலும் நடக்காதது. இறப்பு நடக்கிறது. பெண்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது நடக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணைந்து நடப்பதாகக் காட்டியிருப்பது நடப்பல்ல. புனைவு. இது படைப்பல்ல. புடைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் இந்த நாவல் பற்றி எழுதியுள்ள என் நீண்ட கட்டுரையில் எப்படி போலித்தனமான ஒரு சமுகச் சூழலை இந்த நாவல் ஏற்படுத்துகிறது என்று காட்டியுள்ளேன். நீண்ட அந்த கட்டுரையை இங்கே சொல்ல முடியாது. (விருப்பமுள்ளவர்கள் www.tamiloviam.com/rumi என்ற என் தளத்துக்குச் சென்று அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு கருத்தை எனக்கு எழுதலாம்). மற்றபடி சல்மாவுக்கும் எனக்கும் எந்த விரோதமும் கிடையாது. என்னுடைய கருத்தில் அது ஒரு சுயநலமான அரசியலை நோக்கமாக வைத்து புனையப்பட்ட நாவலாகத் தோன்றுகிறது. சல்மா தனது கவிதைகளிலாவது அரசியல் ஏதுமற்ற சுதந்திரக் காற்றை சுவாசித்த வண்ணம் எழுதி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் நாவலோடு எனக்கு உடன்பாடு இல்லை.
அதிகாலை : ஒரு படைப்பு என்பது சமூக கண்ணோட்டத்துடந்தான் எழுதப்பட வேண்டுமா?
ரூமி : அப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். அப்படி சிறப்பாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அதிகாலை : தலித் எழுத்துக்கள் வீரியத்தை இழந்துவிட்டன என்று சோ.தர்மன் பேசுகிறாரே?
ரூமி : தமிழிலா அல்லது வேறு மொழியிலா? தமிழில் சிறப்பாக எழுதும் தலித் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக அழகிய பெரியவன், யாழன் தி. வீரியம் என்று சோ.தர்மன் எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ‘தீட்டு’ என்ற அழகிய பெரியவனின் கதையை தர்மன் மறுபடி படித்து விட்டு கருத்து சொல்லட்டுமே.
அதிகாலை : நீங்கள் முற்போக்கா? நற்போக்கா?
ரூமி : நல்லவேளை, வயிற்றுப் போக்கா என்று கேட்காமல் விட்டீர்கள்! எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் என் போக்கு.
அதிகாலை : எழுத்தின் எல்லா வகைமையிலும் நீங்கள் இயங்கியுள்ளீர்கள் உங்களுக்குப் பிடித்தது கவிதையா? உரைநடையா?
ரூமி : இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே எனக்குப் பிடித்தவைதான். ஆனால் நாடகம் இதுவரை எனக்கு பிடிபடாத ஒரு வகை. மிகவும் பிடித்தது வாமன அவதாரம் போல் இருக்கும் ஆற்றல் மிகுந்த வடிவமான கவிதைதான்.
அதிகாலை : மொழி பெயர்ப்பில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறீர்கள். பர்வேஷ் முஷாரப்பின் சுயசரிதை மற்றும் கிரேக்க இதிகாசமாகிய ‘இலியட்’ போன்றவை குறிப்பிடத்தக்கன. பிற மொழிகளிலிருந்து வருவதைவிட தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் செல்வது மிகவும் குறைவாக இருப்பது ஏன்? நீங்கள் ஏதாவது முயற்சி செய்துள்ளீர்களா?
ரூமி : இல்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான் கொண்டு வந்ததெல்லாம், நான் விரும்பி ஏற்றுக் கொண்ட, கொடுக்கப்பட்ட பணிகள். ஒரு சில சிறுகதைகளை நானாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்திருக்கிறேன். உதாரணமாக வண்ண நிலவனின் மழை என்ற சிறுகதை என்னுடைய மொழிபெயர்ப்பில் The Rain என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்தது. இவ்வித மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கு ஆங்கில அறிவு குறைவாக இருப்பதுதான் காரணம், வேறென்ன?
அதிகாலை : தற்கால எழுத்தாளர்களில் யாரை நீங்கள் முன்னிறுத்துவீர்கள்?
ரூமி : யாரையும் முன்னிறுத்துவது என் வேலையல்ல. எனினும் சில வார்த்தைகள் சிலரைப் பற்றிச் சொல்ல வேண்டும். இன்னும் ஒரு தொகுதிகூட வெளிவரவில்லை. ஆனால் எழுதிக்கொண்டே இருக்கிறார் தாஜ். அவருடைய தொகுதி ஒன்று விரைவில் வரவேண்டும். ‘நிறங்களின் கூடு’ என்ற தொகுதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்தவர் ஆனந்தராஜ். அற்புதமான மொழியும் கவிதா அழகும் கொண்ட கவிதைகள். தலித் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் யாழன் ஆதி. பிரச்சனையை இலக்கியத்தின் தீவிர அழகோடு சொல்வது எப்படி என்று இவருடைய கவிதைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். பிரச்சனைகளில் அடிக்கடி மாட்டிக் கொண்டாலும் அற்புதமாக கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர் ஹெச்.ஜி.ரசூல். “சுமய்யாக்களின் பெண் குறிகளில் அம்பெய்து கொல்லும் அபூ ஜஹில்கள்” என்று ஒரு வரி. இஸ்லாமிய வரலாறும், சமகாலப் பிரச்சனையும் ஒருசேர விமர்சிக்கப்படும் வரி அது. முஸ்லிம் கவிஞர்களில் ஹெச்.ஜி.ரசூல் போன்ற ஆற்றல் மிக்க கவிஞர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பிதீன் அற்புதமான எழுத்துக்குச் சொந்தக்காரர். இதுவரை இரண்டே சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. ஒன்று என் முயற்சியில் ஸ்நேகா வெளியீடாக, சொதப்பலாக வெளியான ‘இடம்’ என்ற தொகுதி. தற்போது எனி இண்டியன் வெளியிட்டிருக்கும் ‘உயிர்த்தலம்’ என்ற தொகுதி. ஒருமொழியில் அங்கதம், நகைச்சுவை, கிண்டல், விமர்சனம் இவற்றுக்கான புதிய பரிமாணங்களையும் சாத்தியக்கூறுகளையும் இவர் எழுத்து காட்டும். உளவியல் ரீதியான அருமையான சிறுகதைகளை எழுதுகிறார் களந்தை பீர்முகம்மது. ஒரு சில மிக சிறப்பான சிறுகதைகளை எழுதி இருக்கிறார் நத்தர்சா. ஒரு சில என்று ஏன் சொல்கிறேன் என்றால், நத்தர்சா நிறைய சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் என்னுடைய பாரபட்சமற்ற தேர்வில் ஒரு சிலதான் தேறும். ஆனால் எப்படிப்பட்ட எழுத்தை உருவாக்கவல்லவர் என்று புரிந்துகொள்ள அந்த ஒரு சில கதைகள் போதும். ‘செப்புத் தூக்கி’ என்று ஒரு கதை. இறந்த உடலின் பின்னால் அல்லது முன்னால், அடக்கஸ்தலத்தில் விநியோகம் செய்யப்பட வேண்டிய சில சமாச்சாரங்களைச் சுமந்து செல்லும் ஒரு அனாதையின் இறப்பு பற்றியது. இதுவரை யாரும் தொடாத ஒரு பாத்திரத்தைத் தொட்டு மிகையின்றி மிகச் சிறப்பாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். ஒருவர் நிறைய எழுத வேண்டுமா என்ன? ஒரு சோறு போதாதா? அந்த வகையில் நத்தர்சா குறிப்பிடத்தகுந்தவர். செப்புத் தூக்கி பாணியில் அவர் தொடர்வாரேயானால் தமிழுக்கு இன்னொரு சிறந்த படைப்பாளி கிடைப்பார்.
கவிஞர்கள் தாஜ், ஆனந்த ராஜ், ஹெச்.ஜி.ரசூல், யாழன் ஆதி, எழுத்தாளர்கள் பிதீன், களந்தை பீர்முகம்மது, நத்தர்சா போன்றவர்கள் பரவலாக அறியப்படவும் பாராட்டப்படவும் வேண்டியவர்கள்.
அதிகாலை : சினிமா தொலைக்காட்சி தொடர்கள் ஏதாவது முயற்சி நடக்கிறதா?
ரூமி : சினிமாத் துறைக்கும் நாகூருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ரவீந்தர் என்ற நாகூர்க்காரர்தான் ‘மஹாதேவி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். சினிமா உலகில் சிறந்த வசனகர்த்தாவாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த தூயவன் எனக்கு தாய்மாமா உறவுதான். நடிகர் நாசரும் எனக்கு தூரத்து உறவுதான். சினிமா, தொலைக்காட்சித் துறையில் இயக்குனர்கள், நடிகர்கள், கவிஞர்கள் போன்ற நல்ல நண்பர்கள் இருக்கின்றனர்.
ஆனால் குடும்ப அல்லது ஊர் பெருமை பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்று சொல்லி என்ன பயன், எங்களிடம் ஒரு கழுதைகூட இல்லாதபோது? என் குடும்பத்தாருக்கும் என் ஊராருக்கும் கலைத்துறையில் இருந்த திறமைகள் எனக்கும் இருப்பதை நான் அறிவேன். வாய்ப்புக் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன். ஆனால் அதற்காக யார் வாசலிலும் போய் நிற்க மாட்டேன்.