November 03, 2015

இளைஞர்களுக்கு இதோ என் பதில்

வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு, எல்லா திசைகளிலிருந்தும் கல்லெறி பட்டது போன்ற விரக்தி, தம்மைச்சுற்றிலும் கடன் தொல்லை, வறுமை, பணிப்பளு, பெருந்தோல்வியடைந்துவிட்டது போன்றதொரு பிரம்மை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவையும் தாங்க முடியாமல், சகித்துக்கொண்டு ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. எங்களுடைய சிரமம் யாருக்கு புரியப் போகிறது என தாங்களாகவே தங்கள் மீது சுய பச்சாதாபப்பட்டுக்கொண்டு வலம் வருகிறவர்கள் முக்கால் வாசி இன்றைய இளைய தலைமுறைகள், குறிப்பாக டீன்ஸ் என்று சொல்லக்கூடிய பள்ளி, கல்லூரி இளைஞர்-இளைஞிகளே ! இவர்களுக்கு என் பதில் இதோ..... 

"நேரத்திற்கு வீட்டுக்குப் போங்கள், சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குறைந்த பட்சம் சமைக்கும் அம்மா அல்லது அப்பாக்களுக்கு உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுங்கள், ஜன்னல், கதவு, தொலைக்காட்சி, காலணிதாங்கி, பால்கனி போன்றவற்றை சுத்தம் செய்யுங்கள். வீடு முழுக்க அங்கங்கு கழன்ற நிலையில் இருக்கும் போல்ட்டுகளை சரி செய்யுங்கள். தனியாக உங்கள் துணிகளையும் சேர்த்து துவைக்கும் அம்மாவிடம் அவற்றை வாங்கி வெயிலில் உலர்த்துங்கள். வீட்டைச் சுற்றி செடிகள், புல் தரையிருப்பின் அவற்றுக்கு தண்ணீர் விடுங்கள். அதிகம் வளர்ந்துள்ள புல்லை வெட்டி சீராக்குங்கள். வாகனங்களை கழுவி சுத்தம் செய்யுங்கள். பரணியில் இருக்கும் பழைய புகைப்படங்களையும், புத்தகங்களையும் தூசி தட்டுங்கள். இரும்புப் பெட்டிக்குள் இருக்கும் தாத்தா பாட்டியின் வெற்றிலை பாக்கு இடிக்கும் உலக்கை - உரலை ஒருமுறை தட்டிப் பாருங்கள். தொடர்ந்து வாசிக்க 'க்ளிக்' செய்யவும்


November 02, 2015

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?"

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" 
 
இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே.....

கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும், எங்க ஊருக்கெல்லாம் லேட்டாதான் படம் வரும், நல்ல படம்'னா அடிக்கடி திரையிடுவாங்க. சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டர் இப்போதைய ரவிபாலா. பொதுவா நடிகர் திலகத்தின் நடிப்பை அதிகம் சிலாகிச்சு பேசுற எங்க அப்பா, அவரு சின்ன வயசுல பாத்த படங்கள், ரசிச்ச பாடல்கள் எல்லாம் எனக்கு இப்பவும் அத்துபடி. கம்யூனிஸ்ட் இயக்கத்துல ரொம்ப தீவிரமா, பரபரப்பா இருந்த காலகட்டங்கறதால அதிகமா படங்கள் பாக்க மாட்டார். எனக்கு பள்ளி விடுமுறைன்னா எங்கப்பா கலந்துக்கற எந்த பொதுக்கூட்டம், போராட்டம், சாலை மறியலா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போறது வழக்கம். இரவு சிவகங்கைல ஒரு பொதுக்கூட்டத்துல பேசி முடிச்சுட்டு, நள்ளிரவாயிட்டதாலயும், அப்பதான் மழை பேஞ்சு விட்டிருந்ததாலயும், எங்க கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து இல்லாததாலயும், இப்ப என்ன செய்யலாம்'னு கேட்டார். நான் படத்துக்கு போகலாம்'னு சொன்னேன். அப்போ சிவகங்கைல மூணு தியேட்டர்னு ஞாபகம். அதுல ஒரு தியேட்டர்ல "முதல் மரியாதை"னு சொன்னேன். படம் பாக்க அவருக்கு உடன்பாடு இல்லன்னாலும், எனக்காகவும், சிவாஜி கணேசன் படங்கறதாலயும் எங்கப்பா ஒத்துக்கிட்டாரு. போறதுக்கு முன்னாடி ரோட்டுக் கடைல ஆட்டுக்கறி தோசையும், ஆம்லேட்டும் சாப்பிட்ட ஞாபகம். மழை விட்டிருந்த நள்ளிரவும், அந்த மணமும் அப்பப்பா... இன்னிக்கும் என்னால உணர முடியுது. அப்பறம் சைக்கிள்ல தியேட்டருக்கு போனோம். தியேட்டருக்கு ஒரு நூறு அடிக்கு முன்னால சைக்கிள நிறுத்தினாரு. எங்கப்பா தோள்ல எப்பவும் கம்பீரமா காட்சியளிக்கும் சிவப்புத்துண்டு மடிக்கப்பட்டு அவருடைய சிவப்பு பேக்'குக்குள்ள ஐக்கியமானது. என்னப்பா'ன்னு கேட்டேன். "யாராவது தெரிஞ்சவங்க இருப்பாங்க, நான் பொதுவா இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வர்றதில்ல இல்லயா?"ன்னாரு. ஒரு வழியா திரையரங்குக்குள்ள போயி, கடைசி சீட், எங்க தலைக்கு மேல ஆபரேட்டர் ரூம்ல இருந்து படம் வர்ற ரெண்டு துளைகள். எத்தனையோ படங்கள் ஊர்ல திரையிடும்போது சேந்து பாத்திருக்கோம். ஆனா தியேட்டர்ல அப்பாவோட சேந்து பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல. அதுனால, இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். படம் பாத்திட்டுருக்கோம்.

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" இந்த பாட்டு திரையில ஓடிட்டு இருக்கு. ஏதோ சரசர'ன்னு சத்தம். எங்கப்பா திடீர்னு எந்திரிச்சு ஆபரேட்டர் துளைக்கு பக்கத்துல செவுத்துல தட தடன்னு தட்டினாரு. லைட்டெல்லாம் போட்டுட்டாங்க. லைட் போட்டதால அணைக்கச் சொல்லி ஒரே விசிலும், சத்தமும் காத கிழிச்சது. எனக்கு ஒன்னும் புரியல. ஓரத்து சீட்டுல ஒக்காந்திருந்த எங்கப்ப எந்திரிச்சாரு. பக்கத்துல ஒருத்தர் கீழ கெடந்து துடிக்கிறார். கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது, சிமெண்ட் தரைல தேச்சு தேச்சு கை கால் எல்லாம் ரத்தம் ஒழுக ஆரம்பிக்கிது. திடீர்னு எங்கப்பா அவர அப்படியே அலேக்கா தூக்கிட்டு வெளியே போறாரு. லைட் எல்லாம் அணைச்சிட்டாங்க.... பாட்டு ஓடிட்டு இருக்கு. எனக்கு ஒன்னும் புரியல. நானும் எந்திரிச்சு அப்பா பின்னாடியே போறேன். அவர தூக்கிட்டுப் போன எங்கப்பா நேரா ஆபரேட்டர் ரூமுக்குள்ள போயி, ஏதோ ஒரு இரும்புக் கம்பிய கொடுத்து, அவர ஆசுவாசப்படுத்தி ஒக்காற வைக்கிறாரு. கொஞ்ச நேரத்துல கோலி சோடா, டீ எல்லாம் வருது.

ஆபரேட்டர் எங்கப்பாகிட்ட, "காக்கா வலிப்பு தோழர், நீங்க எப்படி இங்கே...?", "இப்பதான் பொதுக்கூட்டம் முடிஞ்சது. பஸ் இல்ல, தம்பி படம் பாக்கணும்னான். வந்தேன்.
சரி, தோழர் ! நீங்க போயி பாருங்க. அவர நம்ம பக்கத்து ஊருதான். நான் பாத்துக்கறேன்" என்று அந்த நண்பரை ஆபரேட்டர் ரூமிலிருந்தே படம் பாக்க வச்சாரு. வலிப்பால் அவதிப்பட்டவரு என் அப்பாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, "ரொம்ப நன்றிய்யா, நீங்க மட்டும் இல்லன்னா, நான் பொழச்சிருக்க மாட்டேன்" என்று நெகிழ வைக்க, "அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, இது ஒரு சின்ன விசயம், பயப்படாத, காலைல போயி வைத்தியரப் பாத்துட்டு வீட்டுக்குப் போகணும் என்ன?" என்றவாறு அங்கிருந்து கிளம்ப, என் அப்பாவின் வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் இரத்தக்கறை. சரி, போகலமா'ன்னு எங்கிட்ட கேட்க, ஆபரேட்டர் கொடுத்த தண்ணீரில் அப்பா வேட்டி, சட்டைய கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு, ஆபரேட்டர் எனக்காக சிபாரிசு செய்ய மறுபடியும் படம் பாக்க தியேட்டருக்குள்ள போனோம். எனக்கு படம் முழுசா பாக்க முடியலயேங்கிற வருத்தம் ஒருபக்கம். உள்ள நுழையும்போது மறுபடியும் லைட் போட்டாங்க. தியேட்டர்ல ஒரே சத்தம். படம் நிறுத்தப்பட்டது. மீண்டும் மீண்டும் சத்தம், விசில். அருகில் சிந்தியிருந்த ரத்தம் என்னோட கண்ணுல பட்டது. ஒருவழியா உள்ளே போய் ஒக்காந்தோம்.

"என்ன ஆச்சரியம் ! "பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" மறுபடியும் ஓட ஆரம்பிச்சது. எனக்கு ஒரே சந்தோசம், தியேட்டருக்குள்ளயும் ஒரே சந்தோச விசில் மட்டும் குரல். அந்த லேசான முகம் தெரியிற வெளிச்சத்துல அப்பா முகத்த பாத்தேன். என்னைப்பாத்து அவர் சிரிச்ச அந்த அழகு முகம் இப்பவும் என் மனசுக்குள்ள நிக்கிது. ஒரு வழியா படம் பாத்துட்டு அங்கருந்து ஜெயவிலாஸ் பஸ்ல காளையார்கோயில் வந்து இறங்கி, நானும் என் அப்பாவும் ரத்தக்கறையோடும், மன நிறைவோடும் கிட்டத்தட்ட 15 கி.மீ சைக்கிள்ல வீடு வந்து சேந்தோம்.

அந்த சிவப்புக்கறையும், என் மனசுல பதிஞ்சிருந்த நிறைவும், இன்னிக்கு ஏற்பட்டிருக்கிற வலியும் எப்படி மறையும் ? 

நானும் என் அப்பாவும் சேர்ந்து தியேட்டர்ல பாத்த முதலும் கடைசியுமான அந்தப் படம்தான் "முதல் மரியாதை". "பூங்காத்து திரும்புமா ?" எப்பல்லாம் இந்தப் பாட்ட கேக்குறேனோ அப்பல்லாம் இந்த காட்சி என் கண்ணை நனைச்சுட்டு போயிடும். அதுமாதிரிதான் இன்னிக்கும் அதிகாலைல எந்திரிக்கும்போது என்னையறியாமலே இந்தப் பாட்டு என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு... இதயம் கனக்க ஆரம்பிச்சது..... இதோ... என் தொண்டை அடைக்கிது...  

ஏன்னா... இதே நாள்... 2005 நவம்பர் 2, என்னோட அப்பா எங்ககிட்டேருந்தும், அவர் நேசிச்ச இந்த மண்ணுகிட்டேருந்தும் விடுப்பு எடுத்த நாள்....

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?"

இசைஞானிக்கு என் நன்றி
 

October 24, 2015

வணக்கம் உறவுகளே ! சவுகார்பேட்டை திரைப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன்

வணக்கம் உறவுகளே ! சவுகார்பேட்டை திரைப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன். தயவு செய்து இந்த முன்னோட்டத்தைப் பார்த்து நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி :) விரைவில் வெள்ளித்திரையில்...


October 21, 2015

திண்ணையில்... நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன..... 

October 16, 2015

புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது

அன்பிற்கினிய எம் தமிழுறவுகளே ! தோழர்களே !! வணக்கம். கடந்த (அக்டோபர்) 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகரமே கலை கட்டியது. ஆம் ! வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டு திருவிழாவில் புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே, அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கும், வந்திருந்த தோழர்களுக்கும் மிக்சிறந்த மரியாதை செய்து, அற்புதமான முறையில் விழாவினை ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினருக்கு வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் வலைப்பதிவு தோழர்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு எதிர்வரும் அடுத்த பதிவர் விழாவுக்காகக் காத்திருக்கிறேன். காலையில் விழாவிற்கு வந்த நான் மாலையும் திரும்ப வந்துவிட்டேன். இடையில் சில மணி நேரங்கள் அரங்கில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தோழர்கள் என்னை மன்னிக்கவும். காரணம், என் நெருங்கிய தோழர் இல்லத்தில் ஓர் எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தமையால் நான் அங்கு விரைந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எனவே, சில தோழர்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்க இயலவில்லையே என்ற வருத்தத்தை விழாக்குழுவினரின் அற்புதமான மிக நீண்ட காணொளி நிவர்த்தி செய்தது. காலை முதல் விழா முடியும்வரை விழாக்குழுவினரின் சுறுசுறுப்பும், உபசரிப்பும் என்னைத் திக்கு முக்காடச் செய்தது. விழாவில் கலந்து கொள்ள இயலாத தோழர்கள் தயவுசெய்து கீழ் காணும் சுட்டிகளின் மூலம் விழாவினை முழுவதுமாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, தயவு செய்து கீழுள்ள  வலைப்பதிவின் வாயிலாக அங்குள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இன்னொரு தருணத்தில் நாமனைவரும் சந்திப்போம் என்று கூறி விழாக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகளை இங்கே சமர்ப்பிக்கிறேன். நன்றி, வணக்கம்.

புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் “எந்தக் குறையும் இல்லை” என்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!

வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்

காணொளிகள்

October 13, 2015

திண்ணையில்.... என் "ஒத்தப்பனை"

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா ...... http://puthu.thinnai.com/?p=30574

October 08, 2015

ஒத்தப்பனை - நவநீ

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன். அதிகாலையில் நான் கண் விழிக்கும் முன்னரே வயல் காட்டில் கண் விழிக்கும் அவர், நான் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய் என்னைக் கட்டியணைத்து, சிவக்கச் சிவக்க வெற்றிலை நிரம்பிய வாயால் என்னை முத்தமிட்டு... "அய்யாடி வாங்க, எங்கப்பென் வாங்க... என்னெப்பெத்தவுக வாங்க..." என்று கொஞ்சிய கையோடு, கட்டி வைத்திருந்த குழி பணியாரங்களை ஒன்று விடாமல் ஊட்டி விடுவார். ஒரு வழியாகப் பணியாரங்கள் முடிந்ததும், என் வீட்டு மைலைப்பசுவின் மடியிலிருக்கும் அசல் பால் இறக்குமதி செய்யப்பட்டு, மிச்ச மீதியுள்ள என் வயிற்றின் காலியிடத்தை 'காப்பி'யாய் கச்சிதம் செய்யும். பிறகு, இருபுறமும் கால் போட வைத்து, என்னைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு, "அந்தப் பனமரத்துல யாகுமுத்து இருக்கானான்னு பாருய்யா" என்பார் என் தாத்தா. "ஆமா தாத்தா, இப்பத்தான் மரத்துல ஏறிகிட்டு இருக்காரு"... இது நான். இருவரும்.... இல்லை, இல்லை அவர்மட்டும் அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார். நான் பாதை பார்த்து முள், மேடு, பள்ளம் என வழி சொல்லுவேன் அவர் தோளில் இருந்தபடி. அவருக்குச் சற்று தூரப்பார்வை குறைவாதலால் என்னை தினந்தோறும் அந்த மரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு வழியாக மரத்தடி வந்து சேரவும், யாகுமுத்து என்ற அந்த 'கள்' இறக்கும் கணவான் மரத்திலிருந்து இறங்கவும் சரியாக இருக்கும். பொங்கும் நுரையோடு ததும்பத் ததும்ப பனங்கள்ளை சுரைக்குடுக்கையில் (முற்றி, காயவைத்து, காம்பு வெட்டப்பட்ட சுரைக்காய் குடுக்கை) நிரப்பி, இடுப்பிற்குப் பின்புறம் அது தொங்கும் அழகு, அப்பப்பா... நானும், என் தாத்தாவும் இன்னும் சில என் தாத்தாவின் சிநேகிதர்களும் மரத்தடியில் காத்திருப்போம். உடனே, பக்கத்தில் உள்ள பனங்குட்டிகளில் உள்ள பனை ஓலைகளை வெட்டி, சிறு சிறு பட்டைகள் செய்து, கள்ளில் தற்கொலை செய்துகொண்ட தேனீக்களை அகற்றிவிட்டு, அந்த சோமபானமானத்தை பட்டைகளில் ஊற்றி ஒவ்வொருவரும் உரிந்து குடிக்கும் சத்தமும், அந்த வாசமும், பாசமும், பறிமாறலும் என் எண்ணம் விட்டு நீங்காது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. 'யாரிடமும் சொல்லக்கூடாது' என்ற என் தாத்தாவின் சத்தியப் பிரமாணத்தோடு, நானும் பலமுறை பனங்கள்ளைச் சுவைத்திருக்கிறேன். 

ஆனாலும், குடிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கும். திடீரென்று ஒரு வாசனை... சுட்ட உப்புக்கண்டமும், கருவாடும் கட்டி வைத்திருந்த இடுப்பை விட்டு விடுதலை செய்யப்பட்டு கள் பட்டைக்கருகே காத்திருக்கும். பனங்கள், சுட்ட கருவாடு, உப்புக்கண்டம்..... சொர்க்கம்... சுரைக்குடுக்கை சுத்தமாகும்..... 

இவை இனி எப்போதாவது கிடைக்குமா? நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா, அவரின் சினேகிதங்கள், அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், இன்றும், கம்பீரமாய்க் காட்சியளிக்கும் அந்த 'ஒத்தப்பனை'யையும், பட்டை பிடிக்க ஓலைகள் வெட்டிய அந்தப் பனங்குட்டிகள், இன்று ஓங்கி வளர்ந்து கிட்டத்தட்ட அந்த ஒத்தப்பனைக்கு இணையாக நிற்பதையும் தவறாமல் பார்த்துவிட்டு, பெருமூச்சோடு வீடு திரும்புவேன். அந்தப் பனைமரத்தை பலமுறை நான் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருக்கிறேன். ஓங்கி வீசும் காற்றில் அந்தப் பனைமரம் என்னை கட்டியணைத்துக்கொண்டு, அசைந்து அசைந்து எனக்குள் ஏதோ சொல்லும். என் தாத்தா இன்று என்னோடு இல்லாவிட்டாலும், இன்னும் கம்பீரமாய் அங்கு நின்று பள்ளியிலிருந்து வரும் என்னைக் கட்டியணைத்துத் தழுவுவதாய்த்தான் இன்றும் உணர்கிறேன். 

 - நவநீ

நல்லா வருவ - தமிழ் குறும்படம்

September 15, 2015

நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன.
மண்ணைப் பிரிந்து கடல் கடந்து தப்பி வந்த தம் மக்களோடு மக்களாய், கனத்த மனத்துடன் தானிருக்கும் இராமேஸ்வரம்-மண்டபம் முகாமில் வலியறிந்து, குறிப்பறிந்து, தாயாய் சேவை செய்த செவிலி ஒருத்திக்கு ஒரு முருங்கை உறவை தத்துக்கொடுக்கிறாள் அந்த ஈழத்துத்தாய். அன்போடு பெற்றுக்கொண்ட செவிலித்தாய் அந்தக் கிளையை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தபோதிலும், தம்மால் இயலுமோ இயலாதோ? என்ற ஐயத்தில் "அண்ணன் கை.... ராசி, அவன் கையில் கொடுத்தால் அவன் எப்படியும் ஆளாக்கி/மரமாக்கி விடுவான்" என்ற தன்னம்பிக்கையில் தன் அண்ணனிடம் அன்போடு தருகிறாள். அண்ணன் ஆசை ஆசையாய் அள்ளி அணைத்து அந்த ஈழத்து உறவை நம் மண்ணில் நிரந்தரமாக்குகிறான்.

அபார வளர்ச்சி, அற்புதமான சுவை.... முழுமையாய் வளர்ந்து அந்த அண்ணனை மகிழ்விக்குமுன் அவன் அமெரிக்கா சென்று விடுகிறான். சில வருடங்கள் கழித்து ஒரு கோடையில் வந்தவன் கண்களில்... குளிரூட்டியது. ஓங்கி வளர்ந்து, மென்மையான வாசத்துடன், பூக்களும், காய்களுமாய் நிறைந்து கம்பீரமாய் காட்சியளித்தது அந்த முருங்கை உறவு. அண்ணன் கண்களில் "ஈழம் தந்துவிட்ட அந்த அண்ணன்" கண்களின் ஆனந்தக் கண்ணீர்". கண்கள், மனம், வயிறு எல்லாம் நிறைந்து போனது. சில மாதங்கள் கழித்து உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த முருங்கை நெத்து (முதிர்ந்த நெற்று) அண்ணனை பார்த்து கைசைத்துக்கொண்டே சலசலவென்ற சத்தத்துடன் காலடியில் வந்து விழுந்தது. அள்ளி அணைத்து முத்தமிட, அந்த நெத்து தந்த சத்தம் 'அம்மா எப்படியிருக்கிறாள், அண்ணன் எங்கிருக்கிறார்' என்று கேட்பதாய் கேட்டது.  
அண்ணன் திரும்பவும் அமெரிக்க பயணத்திற்கு ஆயத்தமாகிறான். கூடவே, அந்த முருங்கை நெத்தையும் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறான். சட்ட விரோதம் என்பது பற்றியெல்லாம் சற்றும் அவன் சிந்திக்கவில்லை. ஈழத்து முருங்கை இறங்கிய வேகத்தில் அழகான தொட்டிக்குள் அமொிக்க மண்ணோடு ஐக்கியமானது. சிறு வயதில் தன் கொள்ளுத்தாத்தா கையாண்ட உத்தியைப் பயன்படுத்தி அந்த நெத்தை முழுவதுமாக தொட்டிக்குள் புதைத்தான். தனித்தனி விதையை நட்டு வைக்காமல் முழு நெத்தையும் அப்படியே ஆழத்தில் நட்டு வைத்தால் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக, செழிப்பாக வளரும் என்ற தன் தாத்தாவின் உத்திதான் அது. அந்த முருங்கை நெத்தை அண்ணன் அமெரிக்காவின் தன் கொள்ளைப்புறத்தில் நட்டு வைக்க ஆசைதான். ஆனால், அமெரிக்க தட்பவெப்பநிலையில் முருங்கை வளராதென்பதால் தொட்டிக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

திரும்பவும் தாயகப் பயணம். ஓர் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாலை எழுந்ததும் கைப்பேசியை திறக்கையில் கண் கொள்ளாக்காட்சி. மனைவி அனுப்பியிருந்த புகைப்படத்தில் அந்த முருங்கைக் கன்று அவன் கைபேசியில் கண்ணைப் பனி(றி)த்தது. அப்பப்பா.... அந்த சந்தோசத்திற்கு இணையேது. தன் முதல் மகள் பிறந்த தினம் நினைவுக்கு வந்து போனது. இப்படியாக குளிர்காலங்களில் குழந்தைகளோடு குழந்தையாக வீட்டுக்குள்ளும், கோடை காலங்களில் மரங்களோடு மரமாக கொள்ளைப்புறத்தில் மளமளவென்று வளர்ந்தது. ஈழ மண்ணில் பிறந்து இந்திய வம்சாவழியாய் இப்போது அமெரிக்க மண்ணில் எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராய் மாறிப்போன என் முருங்கை உறவை காணும்போதெல்லாம் என் கண்ணில் ஈழம் மலர்ந்துவிட்ட மகிழ்ச்சி. இந்த என் முருங்கை வித்து, நெத்து தரும் அந்த தருணத்திற்குள்ளாவது ஈழம் மலர்ந்து விடுமா? என்ற ஏக்கத்தை எனக்குள்ளிருந்து எடுக்க இயலவில்லைதான். 

கடந்த முறை நான் செல்லும்போது முருங்கைக்கீரையை முழுவதுமாய் பறித்து சுவைத்துவிட எத்தனிக்கையில் மனதுக்குள் எங்கோ ஓர் மூலையில் வலிக்கத்தான் செய்தது. என் மனைவி பறிக்கவே கூடாது என்று தடுத்தும், அவன் வளர்ச்சிக்காக அதை செய்யாமலிருக்க முடியவில்லை. மொத்தமாக குடும்பத்தோடு நின்றுகொண்டு காம்புக்குக்கூட காயம் பட்டுவிடக் கூடாதென்ற கவனத்தில் பக்குவமாய் பறித்தெடுத்த நிமிடங்கள் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது.

அந்த முருங்கைக்கீரை மொத்தமாய் எங்களது இரத்தத்தில் சங்கமித்தது. மீண்டும் நான் அமெரிக்கா செல்லும்வரை அந்த முருங்கை உறவை அன்போடு கவனிக்க தாயாய் என் மனைவி, தமக்கையராய் என் மகள்கள்....

ஒவ்வொரு முறை அலைபேசும்போதும் மறக்காமல் நலம் விசாரிக்கிறேன். வாரமொரு முறையேனும் வலை முகநேரம்/நேரடி காணொளி செய்கிறேன் (Face Time / Web cam). காத்திரு......

இதோ இரண்டே மாதங்களில் வந்து விடுகிறேன் என் ஈழத்து உறவே.....

ஏக்கத்தோடு உன் அண்ணன்


January 21, 2015

"தொட்டால் தொடரும்" நாளை 23.01.2015 வெள்ளியன்று உலகமெங்கும்...

வணக்கம் உறவுகளே !
" FCS கிரியேஷன்ஸ் துவார் சந்திரசேகர் தயாரிப்பில், இயக்குனர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் தமன், அருந்ததி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் "தொட்டால் தொடரும்" திரைப்படம் நாளை 23.01.2015 வெள்ளியன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். இந்தப் படத்தில் உங்களின் வற்றாத அன்பிற்கினிய நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து எனதன்பு மிக்க உறவுகளனைவரும் "திரையரங்கிற்கு சென்று" இத்திரைப்படத்தினை பார்த்து படக்குழுவினர் அனைவருக்கும் உங்களின் மேலான ஒத்துழைப்பினை நல்குமாறு வேண்டி நிற்கிறேன்.

நன்றியோடும் வற்றாத அன்போடும் 
உங்கள் - நவின் சீத்தாராமன் smile emoticon

"முன்னோட்டங்கள் உங்கள் பார்வைக்கு"


January 02, 2015

என் மனமார்ந்த 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

வணக்கம் என் உறவுகளே! தங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)
 
தங்களின் அற்புதமான நேரத்திற்கு முதற்கண் என் நன்றி. காரணம், இந்த பதிவு சற்று நீளமானது.

இதுவரை நாம் பல வருடங்களை கடந்து வந்திருப்போம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தாம் கடந்து வந்த வருடங்களுள் மிக முக்கியமான, சுவாரஸ்யமான, மைல் கல்லாய், மனதில் குதூகலமாய் அல்லது வலி நிறைந்ததாய்.... இப்படி எப்படியாயினும் மறக்கவியலா சில வருடங்கள் மனதில் வந்து செல்லும். அப்படி என்னில் வந்து செல்லும் வருடங்களுள் மிக முக்கியமானதொரு வருடம், இதோ இன்னும் சில மணித்தியாலங்களில் நம்மைவிட்டு பிரியப்போகும் இந்த 2014. எத்தனை தவம் இருந்தாலும் இனி திரும்பக்கிடைக்குமா இந்த 2014 ? என் ஆத்மார்த்த முத்தங்களுடன் உன்னைவிட்டுப் பிரியும் இந்த தருணத்தில், என் கண்கள் பணிப்பதை என்னால் மறைக்க முடியவில்லை. போய் வா.... 2014.

உன்னையும், உன்னோடு என்னில் பயணித்த என் அன்பான உறவுகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

விமான விபரீதங்கள் அதிகம் நிறைந்தது இந்த 2014, நான் அடிக்கடி விமானப் பயணம் செல்வதாலோ என்னவோ அதன் வலி சற்று மிகுதியாகவே என்னை பாதித்தது. இனி வரும் ஆண்டிலாவது அப்படி நடக்காதிருக்க பிரார்த்திப்போம்.

------------
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். உடலளவில் இங்கிருந்தாலும், உள்ளத்தளவில் என் மண்ணில் மாத்திரமே வசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை ஒளிவு, மறைவின்றி இங்கே பதிவு செய்கிறேன். இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், அமெரிக்காவில் படமாக்கப்படும், நம் தமிழ் உட்பட இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து பணி புரிந்தாலும், எனக்குள் தீராத பசியொன்று இருந்தது. அது, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். சென்னையிலேயே இருந்து முயற்சிக்க வேண்டும். தேவைப்படும்பொழுது மாத்திரம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நான் சென்னையில் தங்கி, நடிக்கும் வாய்ப்புக்காக முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கொருமுறை அமெரிக்கா சென்று வருவதும், அதன் பொருட்டு ஆகும் பொருட்செலவும், மனைவி மற்றும் பத்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளைப் பிரிந்திருப்பதால் அவர்களின் மனநிலை, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், பணி செய்துகொண்டும், எனக்குத் தேவையான பொருளாதார உதவிகளை செய்துகொண்டும் அன்றாடம் மன அழுத்தத்திலும், பணிப்பளுவிலும் வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ள என் மனைவியின் மனநிலை..... இப்படி சிக்கல்களையும், சிரமங்களையும், சச்சரவுகளையும்... அடுக்கிக்கொண்டே போகலாம்...

இப்படி இவ்வளவு சுமைகளுடன் நான் தமிழ் சினிமாவில் நடித்தேதான் ஆக வேண்டுமா? பேசாமல் அமெரிக்காவில் இருந்தால் குறைந்த பட்சம் மாதமொன்றுக்கு சுமார் 5000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கலாமே?

ம்ம்.... ஆக... "தமிழ் சினிமாவில் நடித்தே தீருவேன்" ஒரு வழியாக என் குடும்பத்தினரை தேற்றி, ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சென்னை புறப்படுகிறேன். என் கையில் வெறும் 90 நாட்களேயான என் குழந்தை. காரணம், ஏற்கனவே இருக்கும் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே என் மனைவிக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும்போது நடுநிசி, 90 நாட்கள் சரியாக நிறைவடைந்திருந்தது. நான் 90 நாட்களே நிரம்பிய குழந்தையோடு சென்னை வருவேன் என்பது என் அம்மா உட்பட யாருக்குமே தெரியாது. பிறகு, நாட்கள் செல்லச் செல்ல.... என்னோடு பயணித்த என் நெருங்கிய நண்பர்களுக்கு மாத்திரம் தெரிய வந்தது. அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

"நீ என்ன லூசா...... நீதான், திமிரெடுத்து, சினிமாவில் நடிச்சு, கிழிச்சே தீருவேன்னு வந்திருக்கே, பாவம் அந்த கொழந்தை, என்னடா பண்ணுச்சு?"

அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த என் குழந்தையைக் ஒரு வழியாக மீள் குடியமர்த்தி சென்னைவாசியாக்க முயற்சிக்கையில், கிராமத்தில் இருக்கும் என் அம்மாவையும் கூட வைத்துக்கொண்டால், எனக்கு வாய்ப்புத் தேட வசதியாய் இருக்குமே என ஒரு நப்பாசையில் என் அம்மாவை சென்னை அழைத்து வந்தேன். சுமார் பத்து நாட்கள் கடந்தது. ஒரு வழியாக என் அம்மாவுக்கும், குழந்தைக்கும் தீவிர பயிற்சி கொடுத்து, எல்லாம் கூடி வரும் வேளையில்...  என் அம்மா,

"தென்னம்பிள்ளைக்கி நம்மள மாதிரி ஒழுங்கா யாரும் தண்ணி ஊத்த மாட்டங்கையா, 20 முட்டையோட கோழிய அடை வச்சுட்டு வந்து இன்னிக்கோட 22 நாளாச்சு, இன்னும் அஞ்சாறு நாள்ல அம்புட்டும் பொறிச்சிரும், ஆளில்லாட்டி அம்புட்டு புறாவையும் நாய் புடிச்சிட்டு போயிரும், கோழிய சாயந்தரத்துல டயத்துக்கு புடிச்சு கோழிக்கூட்டுல அடைக்காட்டி அம்புட்டையும் கீறிப்புள்ள சாப்டுரும், கம்மாய்ல வேற தண்ணியில்ல, வாத்துக்கு நேரா நேரம் தொட்டில தண்ணி வைக்கணும்....." இப்படியாக பொலம்பல். என் மூன்று மாத குழந்தையை பார்த்துக்கொள்வதைவிட, என் அம்மாவை அந்த உறவுக்கார கோழிகளிடமிருந்தும், வாத்துகளிடமிருந்தும் மீட்க பெரும்பாடாய் போனது. இதற்கு ஒரே வழி..... அம்மாவின் வழியிலேயே விட்டுப்பிடிப்பதுதான். என் குழந்தையை அம்மாவுடன் அனுப்பி கிராமத்தில் இருக்க வைப்போம். எனக்குத்தான் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குழந்தைக்காவது கிடைக்கட்டும் என முடிவெடுத்து, என் இரண்டு குழந்தைகளையும் (என் அம்மாவையும்தான்) கொண்டுபோய் என் கிராமத்தில் விட்டு வந்தேன்.

தினம் தினம் அலைபேசியில் பேசிக்கொண்டாலும், மாதத்திற்கொருமுறை போய் பார்த்துக்கொள்வதும், ஒருபுறம் என் மனைவியை தேற்றுவதும், ஒரு புறம் குழந்தைகளைத் தேற்றுவதும், ஒரு புறம் என்னைத் தேற்றுவதும், ஒரு புறம் வாய்ப்புக்கள் தேடி அலைவதுமாய் கழிந்தது சில மாதங்கள். நான் என் கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம்...

என் அம்மா கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு....

"ஏய்யா.... நானும் ஒங்கூட அமெரிக்க வந்திருக்கேன். எப்படிப்பட்ட ஊரு அது, வேர்க்கவே வேர்க்காத ஊர்ல பொறந்த இந்தப்புள்ள அங்க
இருந்திருந்தா எப்படியெல்லாம் வளந்திருக்கும்! இந்த கொசுக்கடியிலயும், வெயில்லயும், வேணக்கட்டிலயும் இப்படி கஷ்டப்படணுமா? என்ன பாவம் செஞ்சுச்சு இந்த பச்ச சிசு?" என் அம்மா.

"நீயும் இங்கதான இருக்கே! நீ என்ன பாவம் பண்ணே ? நானும் இங்கதானே இருந்தேன்...." இது நான்.

"அதுக்கு சொல்லலய்யா.... எனக்கு பழகிருச்சு"

"இவளுக்கும் பழகிரும்"

"ஒனக்கு எப்பவும் பிடிவாதம், நான் சொல்றத கேளு. பேசாம போயி அங்க பிள்ளையளோட இரு. நீ நடிச்சு கிழிச்சது போதும்".

நான் கல்லூரி செல்லும் வரையில் மின் விசிறி கண்டிராத என் கிராமத்து வாழ்க்கை என்னவென்பது எனக்குத் தெரியும். ஆனாலும், என் தங்கையின் சடங்குக்கு தாய்மாமன் கொடுத்த டேபிள் ஃபேன்தான் என் வீட்டின் முதல் மின் விசிறி. அதுவும் அவ்வளவாய் அன்று தேவைப்படவில்லை.

ஆனால், இன்றோ.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட என் கிராமம் இன்னொரு சவூதி அரேபியா. என் கிராமத்தில் நான் தங்கும் சில இரவு நேரங்களில் புரண்டு புரண்டு அழும் என் குழந்தையை தூக்கினால், அப்போதுதான் குளிப்பாட்டிய குழந்தையைப்போல் ஈர உடலோடு துவண்டு விழுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அவ்வப்போது, சில இயக்குனர்கள் சிறு பாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தனர். நடித்தேன். இந்த நேரத்தில் அவர்களுக்கும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.

சினிமாவில் நடிக்கவும், இயக்குனராகவும் அன்றாடம் அலைந்து திரிந்து போராடும் எத்தனையோ நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களோடு ஒப்பிடுகையில் என் சிரமம்
எனக்கொன்றும் மிகப்பெரிதாகத் தெரியவில்லை. கையால் எழுதப்பட்ட காகிதத்தின் நகல்களோடு சினிமா கம்பெனிகளின் முகவரிகளைத் தேடித் தேடி மிதிவண்டியிலும், ஷேர் ஆட்டோவிலும், பைக்கிலும், பஸ்ஸிலும், நடந்தும் வீதி வீதியாக வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகத்தான என் உறவுகளின் சிரமத்தைவிடவா என் சிரமம் பெரிது ? அவர்களின் வலியை விடவா என் வலி பெரிது ?

எத்தனை கதைகள் வேண்டும்? எத்தனை ஆவணப்படங்கள் வேண்டும்? எத்தனை குறும்படங்கள் வேண்டும்? வடபழனி, ஏவி.எம்-மிற்கு எதிரேயுள்ள அருணாச்சலம் சாலையில் "காவேரி கார்னர்" தேநீர் நிலைய வாசலிலும், மணி தேநீர் கடை வாசலிலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் வந்து நின்று ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், சினிமா கம்பெனிகளின் முகவரிகள் நிறைந்த கையெழுத்து நகல்களை பரிமாறிக்கொள்வதும்.... பசி நிறைந்த வயிற்றோடும், கனவுகள் நிறைந்த கண்களோடும், எதிர்காலம் பற்றிய தீர்க்கமான வெறியோடும்.... அப்பப்பா...

எத்தனையெத்தனை விதவிதமான கதாபாத்திரங்கள் !!

என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஹாலிவுட் திரையுலக வாய்ப்புகள் மிகச் சுலபம், அனுபவத்தில் கூறுகிறேன்.

சாலிகிராமம் காவேரி கார்னரும், மணி டீக்கடையும் என்னை சென்னையில் இருக்க கட்டாயப்படுத்தியவை. இப்படி நான் பார்த்து பிரமித்த இந்த தமிழ் திரையுலக நடமாடும் எதிர்காலங்களில் என்னையும் ஐக்கியமாக்கிக் கொள்வதில் எனக்குக் கிடைத்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

அது ஒரு சுகமான வலி... ஆம்... எங்களுக்கு அதுதான் வழி....

இவ்வளவு தெரிந்த பின்னும் நான் எப்படி திரும்ப அமெரிக்கா செல்வேன் ? என்னையும் அவர்களோடு இணைத்துக்கொண்டு வீதி வீதியாக வாய்ப்புக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கலைஞர்களுள், நானும் ஒருவன்.

சென்னை வீதிகளில் இதோ வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்.....

காவேரி கார்னரிலும், மணி டீக்கடையிலும் முகவரி வாங்கி, வாய்ப்புத்தேடி, பிறகு ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, இன்று தமிழ் திரையுலகில் பிஸி நடிகர்களாக, இயக்குனர்களாக வலம் வரும் எவரும் இதனை பதிவு செய்ய விரும்பவில்லை அல்லது பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில், அப்படிப்பட்ட வசதியற்ற எம் உறவுகள், கைகள் கடுக்கக் எழுதி, அதனை சொந்த செலவில் நகலெடுத்து, அனைத்து நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களோடு தாமும் சேர்ந்து வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகான்கள், துர்பாக்கிய மனிதர்கள், நடிகர்கள் யார்..... ? யாருக்காவது தெரியுமா ?

முதலில் அவர்கள்  ஜெயிக்க வேண்டும், காவேரி கார்னர், மணி டீக்கடை மகாநடிகர்கள் ஜெயிக்க வேண்டும்.... பிறகு நானும் ஜெயிக்க வேண்டும்.

ஜெயிப்போம்.... எனக்காக இல்லையேனும், என்னோடு பயணித்த 90 நாட்களேயான என் பிஞ்சுக்  குழந்தைக்காக.... என் மனைவி, குழந்தைகளின் தியாகத்திற்காக.... என் அம்மாவின் தள்ளாத வயது சிரமத்திற்காக.... என் குடும்பத்தினரின் எனக்கான பங்களிப்பிற்காக.... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒராயிரம் வலிகளோடு நிறைந்த வாழ்க்கையின் கனவுகளுக்காக.... வயிற்றுக்காக.... வைராக்கியத்திற்காக.... நிச்சயம் ஜெயிப்போம், தொடர்ந்து போராடுவோம்... தொடும் தூரம் தொலைவில் இல்லை.....

இந்த 2015 நமக்கான ஆண்டு... நம் ஆண்டு...

என்னை அன்போடு அழைத்துச் சென்று பல திரையுலக அலுவலகங்களை அறிமுகம் செய்த எனதன்பு உறவுகளை இங்கே நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் என் எதிர்கால பயணங்களில் என்னோடு அவர்களும் பயணிப்பார்கள் என்பதை இங்கே தெளிவாகப் பதிவு செய்கிறேன். நான் சந்தித்த, என்னோடு பயணித்த சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள எனது அன்பான உறவுகளில் கசப்பானவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். "அவர்களால்தான் உண்மையானவர்கள் பிரகாசமாய் தெரிந்தார்கள்" என்பதைத் தவிர அவர்கள் செய்த பிழைதான் என்ன? ஒரு வகையில் அவர்கள் நமக்கு நன்மை புரிந்துள்ளார்கள் என்பதை மாத்திரம் நம் நினைவிற்கொள்வோம்.

எப்படியாயினும்....

உலகம் முழுக்க இருக்கும் என் அன்பான உறவுகள் அனைவரையும் இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன். நன்றி :)

தொடர்பில் இருப்போம்.... தொடர்ந்து பயணிப்போம்....

வற்றாத அன்புடன் - நவின் சீத்தாராமன்