July 04, 2008

'தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ்' - அத்வானி

மழை மேகங்களுக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் மேகங்கள் தென்படுகின்றன. தொடைதட்டும் ஓசைகள் அரசியலில் கேட்கத்தொடங்கிவிட்டன.தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவி.
தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ் என்கிறார் அத்வானி. வாயில் வருவதெல்லாம் கோதைக்கு பாட்டு என்கிற மாதிரி லாலு சொல்லுகிறதெல்லாம் ஜோக்காகிப்போய்விட்டது. கனவில் கூட அத்வானி பிரதமராக முடியாது என்கிறார் லாலு. இடதுசாரிகளை பார்லிமெண்டில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமாஜ்வாதியின் சகாயத்தினால் ஆட்சி சரிந்துபோகாது என்று தெரிகிறது. மத்தியில் தேர்தல் மேகங்களால் தமிழ்நாட்டிலும் குளிர்காற்று வீசத்தொடங்கிவிட்டது. 'அண்ணன் எப்போது வெளியேறுவான்...திண்ணை எப்போது காலியாகும்' என்று நான்கு வருடங்களாக காத்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி.'பசித்தவனுக்கு குழம்பெல்லாம் வேண்டாம்' என்கிற மாதிரி கிடைக்கிற ஆட்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது அம்மாவின் அணி.'இரண்டிலொன்றில் இணையமாட்டோமா...இரண்டொரு இடங்களாவது கிடைக்காதா' என்று கணக்குபோடும் நடிகர்களின் அண்மைக்கால கட்சிகள்...'சூடிய பூவாக இருந்தாலும் பரவாயில்லை. வாடிய பூ வேண்டாம்' என்று ஏதாவதொரு நடிகரின் துணையைத் தேடும் திராவிடக்கட்சிகள்...
"கட்சியாக இருப்பவர்களுக்குத்தான் கவலை. குழுக்களாக இருக்கும் எங்களுக்கென்ன கவலை. சொந்தக் காரியம் ஜிந்தாபாத். இருக்கவே இருக்கிறது டெல்லி காட்டும்பாதை" என்கிறது காமராஜ் ஆட்சி என்கிற சொப்பனத்தில் இருக்கும் காங்கிரஸ். பதவிசுகம் அனுபவித்து விட்ட பாட்டாளிகளோ காற்று வீசும் திசைக்காக காத்திருக்கிறார்கள். மாநிலத்தில் அமையப்போகும் அணிகள் மத்தியில் அமையப்போகும் அணிகளுக்காக காத்திருக்கின்றன. வளைந்து போனாலும் வழியோடு போகணுமல்லவா?இயங்கிக்கொண்டிருக்கும் 'லாபி'கள் இப்போது ஓவர்டைம் செய்து கொண்டிருக்கின்றன.
"மத்தியிலும் பதவி வேண்டும். மாநிலத்திலும் பதவிவேண்டும். அதுமாதிரி ஏதாவது பாரப்பா..? "இது அதிகார மையங்களின் கட்டளை.
'ஃபீலர்'களின் வாகனங்களுக்கு பெட்ரோல் கூடுதலாக தேவைப்படுகிறது. தேர்தல் லாவணியில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் சாதாரணமாக இருக்கப்போவதில்லை. பதவி சுகத்தில் இருந்தவர்களுக்கு முள்ளாய் குத்தும் கேள்விகள் தயாராகிவிட்டன.
விலைவாசி ஏன் உயர்ந்தது?
விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் என்ன செய்தது?
நீயும்தானே ஆட்சியில் இருந்தாய்? நீ என்ன செய்துவிட்டாய்?
நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?
மதுக்கடையை ஏன் திறந்தாய்?
மணல்கொள்ளையில் ஆதாயமா?
பதுக்கலைப்பார்த்து ஏன் பதுங்கிப்போனாய்? இப்படிப்போகும் கேள்விகள்.
அன்னாடங்காச்சி பகல் கஞ்சி குடித்துவிட்டு அரைத்தூக்கத்தில் இருந்தார். மாலைநேரக்கல்லூரிக்குப் போன அவருடைய மகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.,
"ஏண்டா, காலேஜுக்கு போவலை?"
"இல்லேப்பா, காலேஜு இல்லை."
"என்னடா ஆச்சு?'
"சாயந்திர காலேஜுக்கு வாத்தியாரெல்லாம் இன்னும் போடலியாம். லெக்சரர் எல்லாம் வந்தப்புறம் வாங்கன்னு எளுதிப்போட்டிருக்கு"
"எப்போ வருவாங்களாம்?"
"அரசாங்கத்துலேந்து ஆர்டர் போட்டு புது லெக்சரர் போடணுமாம். அடுத்தவாரம் வந்து பாருங்கன்னு சொல்லிட்டானுக."
"யாருடா சொன்னது?"
"பிரின்ஸ்பால்தான்"
"அது என்னடா பிரின்ஸ்பாலெ மரியாதெ இல்லாமெ பேசுறே?"
"காலேஜுலே எல்லாரும் அப்பிடித்தான் சொல்லுவானுக. அது பலக்கமாயிப்போச்சு"
"ஏய்...அது என்னடா பலக்கம்...? பழக்கம்னு சொல்லுடா?"
"இப்போதானே செம்மொழி கட்டிடம் தொறந்திருக்காங்க. கொஞ்சநாள் போவட்டும். கத்துக்குடுவேன்"
- அன்னாடங்காச்சி