வாஷிங்டன்: மனிதர்களுடன் சைகை மொழியில் பேச பழக்கப்பட்ட முதல் பெண் சிம்பான்சி குரங்கு இறந்து விட்டது. இது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பது டார்வின் தத்துவம். அதே நேரத்தில் மனிதனுடன் குரங்கு பேச முடியுமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கினர். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள சிம்பான்சி மற்றும் மனித தகவல் பரிமாற்றம் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 1980-ம் ஆண்டு ஒரு பெண் சிம்பென்சி குரங்கு குட்டியை தேர்ந்தெடுத்து வளர்க்க தொடங்கினர். அந்த சிம்பான்சிக்கு
`வஷூ' என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். சைகை மொழியில் தகவல் பரிமாற்றம் செய்ய அந்த சிம்பென்சி பல ஆண்டுகளாக பழக்கப்படுத்தப்பட்டது. நாளடைவில் விஞ்ஞானிகளின் சைகையை புரிந்து கொண்டும், அதற்கு உரிய வகையில் செயல்படவும், பதில் அளிக்கவும்
`வஷூ' நன்கு பயிற்சி பெற்று விட்டது. மேலும், உலகளவில் `வஷூ'வுக்கு பல மனித நண்பர்களும் உருவாகினர். `வஷூ' நேற்று முன்தினம் இரவு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டது. இதற்கு வயது 42. `வஷூ'வின் மறைவு, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `வஷூ' நினைவாக வரும் 12-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.` இயற்கைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு தெரியப்படுத்த ஒரு துாதராக வந்தாள் `வஷூ'. ஏராளமானவர்களிடம் அவள் மிகவும் அன்பாக பழகினாள். அவளை நாங்கள் இழந்து விட்டோம்' என்று விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். `வஷூ'வின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தனியாக ஒரு இணையதள முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில்,` மனித மொழியை புரிந்து கொண்ட முதல் சிம்பென்சி `வஷூ' தான். தனது வளர்ப்பு மகனுக்கும் அந்த மொழியை அவள் கற்றுக் கொடுத்தாள். `வஷூ' மிகவும் தனித்தன்மை வாய்ந்தது' என்பது உட்பட பல உருக்கமான தகவல்களை பலர் அந்த இணைய தள முகவரியில் வெளியிட்டு வருகின்றனர்