November 21, 2007

இன்றைய குறள்

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும் கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

பத்மஸ்ரீ கமலின் கவிதை வரிகளில் புல்லரித்துப்போனேன்! நானும் ஒரு தமிழன் என்ற கர்வத்துடன்!!

தராசு சொல்லுகிறது

"நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போல் பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையும் இருக்க வேண்டும்" - மகாகவி பாரதியின் 'தராசு' சிறுகதையிலிருந்து

இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை

  • இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது
  • ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்
  • இராக்குக்குள் மீண்டும் திரும்பும் மக்கள் : இராக்கிற்குள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் மக்கள் மீண்டும் திரும்ப வந்துகொண்டிருப்பதாக தாங்கள் கணிப்பதாக, இராக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள்
  • இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு : வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்
  • ஷிராக் மீது நிதி முறைகேட்டு விசாரணை : பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான ஜாக் ஷிராக் அவர்கள், 1977 முதல் 1995 வரையிலான காலப்பகுதியில், பாரிஸ் நகர மேயராக இருந்த வேளை நகர நிதியை மோசடி செய்தது பற்றிய குற்றச்சாட்டுக் குறித்து முறையான புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளனர்
  • தனது போட்டியாளர்களை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக புட்டின் குற்றச்சாட்டு : ரஷ்ய அதிபர் புட்டின் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தனது அரசியல் எதிரிகளை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்
  • பெட்ரோலிய விலை அதிகரிப்பு : சர்வதேச அளவிலான பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் சுமார் நூறு அமெரிக்க டாலர்களைத் தொட இருக்கிறது. நியூயார்க்கில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை தொண்ணூற்றி ஒன்பது டாலர்கள் மற்றும் ஐம்பத்தி ஒன்பது செண்ட்களைத் தொட்டிருக்கிறது
  • காசாவில் ஆயுதகுழுக்களின் உறுப்பினர்களுக்கு மனித நேயச்சட்டங்கள் பற்றிய பயிற்சி : ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை கற்பிக்கும் தனது உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காசாவில் உள்ள பாலத்தீன ஆயுதக்குழுக்களுக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளது