May 16, 2019

வேலிக் கருவைச் சீமைக்குள் வில்வ நிலம்

வேலிக் கருவைச் சீமைக்குள் வில்வ நிலம். எங்கு பார்த்தாலும் வேலிக்கருவை வனம்... வியர்த்துக் கொட்டி வேகவைக்கும் வெயில்.. கண்ணுக்கெட்டிய தூரம்வரை கரிசல் பூமி ..இவற்றுக்கு மத்தியில் ஆண்டுதோறும் பசுமையும் குளுமையும் குறையின்றி குடிகொண்டிருக்கிறது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி -பார்த்திபனூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கீழப்பெருங்கரை கிராமத்தில் குடிகொண்டிருக்கும் ஜலமாருடைய ஐயனார் கோவில் மண். அக்கோவிலில் சரம் சரமாய் பச்சைக் கூடாரம்போல் 63 மஹா வில்வமரங்கள் அழகாய் காட்சியளிக்கின்றன... சீமைக்கருவை ராஜ்ஜியத்துக்குள் 63 மஹாவில்வமரங்களா? அதுவும் ஒரே இடத்திலா? அதிசயிக்க வைக்கிறது அனைவரையும்..! அந்த நெடுஞ்சாலையைக் கடப்பவர்களை ஒரு கணம் இது திரும்பிப் பார்க்க வைக்காமல் இருக்காது. அவ்வழியே இந்த வருட தீபாவளிக்கு முதல்நாள் 5-11-2018 அன்று சென்ற நாமும் அப்படித்தான் அங்கு ஈர்க்கப்பட்டோம்... வில்வமரங்கள் புடைசூழ அதன் நிழலில் வீற்றிருக்கிறார் ஜலமாருடைய ஐயனார். கூடவே சோணைக் கருப்பரும் காவலுக்கு இருக்கிறார்... இன்னும் வண்ணம் மங்கா மண் குதிரைகள் நெஞ்சை அள்ளுகின்றன...அந்தக் குதிரைகளின் வயதைக் கேட்டால் சுமார் 170 ஆண்டுகள் என்கிறார் அக்கோவில் பூசாரி சோணையா....! இன்னும் படைப்பின் இளமை மாறாமல் எக்காளமிடுகின்றன அக்குதிரைகள்...! ஜலமாருடைய ஐயனாரின் காரணப்பெயர்....இதற்கு காரணமாய் இருந்த பசுக்காரத் தேவர்... 500 ஆண்டுகள் பழமையுடைய 63 மஹா வில்வமரங்கள்.. ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு விதமான வண்ணத்தில் கனிகள்.. 63 மரங்களுக்குமேல் வேறு இடத்தில் இதன் விதைகள் முளைக்க வைத்தால் முளைக்காமல் போகும் ஆச்சரியம்..இது 63 நாயன்மார்களுக்கும் இந்த இடத்திற்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பு. இராமேசுவரம் செல்லும் சாதுக்களின் ஓய்விடம்...இன்னும் வட இந்தியாவிலிருந்து வந்துபோகும் சாதுக்கள் இங்கு தங்கி யாகம் செய்து தவமிருந்துவிட்டுச் செல்வது... ஆண்டுதோறும் இங்கு மாசித்திருவிழா நடத்துவது.. இப்படி பல சிறப்புகளுடன் அமைந்திருக்கிறது தெய்வீக அடையாளம் நிறைந்த இத்திருக்கோயில்.. சற்று நேரம் இங்கு அமர்ந்து சென்றால் மனம் அமைதிக்குள் ஆட்படுகிறது.. இனம் புரியா சாந்தமும் அமைதியும் நம்மையறியாமலேயே சூடிக்கொள்கிறது... வெளிநாடு முதல் உள்நாடு வரை ஆயிரக்கணக்கான பறவைகளும் இங்கு வந்துவிட்டுப் போகின்றன...! இந்தச் சாலையை உங்கள் வாகனம் கடக்க நேரிட்டால் இங்கேயும் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு வாருங்கள்... ஓர் ஏகாந்த உணர்வு உள்ளுக்குள் உங்களுக்கும் மலரும்...!