June 24, 2008

அன்னாடங்காச்சி!

"அடியே! உன்னோட குடும்பம் நடத்த என்னாலெ ஆகாது. நான் சந்நியாசம் போறேன். வாசலில் சொம்பு இருக்கிறது பார்! எவனாவது லவட்டிக்கொண்டு போய்விடப்போகிறான். சொம்பை எடுத்து உள்ளே வெச்சுக்கோ!"
ஐக்கியமுன்னணி அரசோடு இனிமேல் குடும்பம் நடத்த முடியாதென்று முடிவெடுத்துவிட்ட இடதுசாரிகளுக்கு மதவாதிகள் ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்கிற கவலை. இந்தியா அமெரிக்காவிடம் அடகு போய்விடக் கூடாதே என்கிற தேசபக்தியாக இருக்கலாம். அல்லது அரசு கவிழ்ந்து போனால் தேர்தல் வரும். 'தேர்தலை சந்திக்கவேண்டுமே' என்ற பயமாகவும் இருக்கலாம். இப்போது தேர்தலை சந்திப்பதுபோல பயங்கரம் ஆளும் கட்சிகளுக்கு வேறு வேண்டியதில்லை.விலைவாசி ஏறிப்போய் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் வந்தால் கோஷங்களுக்கு பதில் சொல்ல திமுக-வால் கூட முடியாது. காங்கிரஸ் எந்த மூலை!

'பக்தவச்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று திமுக நாற்பது வருடங்களுக்கு முன்னால் கேட்டது. அன்றைக்கு வீழ்ந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றுவரை எழுந்துகூட பார்க்கவில்லை.
'பானா சீனா அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று பிஜேபியும் அதிமுகவும் பிய்த்து எடுத்து விடுவார்கள். விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டில் ஒரு 'சென்ஸிட்டிவ்' பிரச்சினை. ஒருபுறம் இப்போது தேர்தல் வராமல் இருக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். 'நீங்க கொஞ்சம் சொல்லுங்க' என்று சென்னைக்கு கூட வந்திருக்கிறார்கள். மறுபுறம் நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தைப்பூட்டும் வேலை இது. விலைவாசி ஏற்றம் 5.5 சதவீதமாக இருந்தபோதே வட்டி விகிதத்தை அதிகமாக்குங்கப்பா..

அத்தியாவசியப் பொருட்களின் மீது யூக வணிகத்தை தடை செய்யுங்கப்பா...என்ற கூக்குரல் இந்தியா முழுவதும் கேட்டது. நிதியமைச்சருக்கு மட்டும் அந்தக்குரல் கேட்கவில்லை.
வட்டியை ஏத்துங்கப்பா...பதுக்கல்காரனும், ஆன்லைன் வியாபாரியும் வியாபாரத்துக்கு பணம் கிடைக்காமல் விலகிப்போய்விடுவான் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னார்கள். அந்தக்குரலும் அரசுக்கு கேட்கவில்லை. பொருளாதாரம் இப்படியாகிப்போனது ஒருபுறமிருக்க மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணிக்கட்சிகள் குலுக்கிப்போட்ட சோழிகளைப்போல சிதறிக்கொண்டிருக்கின்றன.

மாயாவதி சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'டாட்டா'

முலாயம் சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'ஹலோ'

நம்மூரிலும் சில 'டாட்டா' க்கள். 'பை...பை' கள்.

'ஹலோ' இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அன்னாடங்காச்சி இதையெல்லாம் படித்துவிட்டு வெறும் சிரிப்பை உதிர்க்கிறார். "சரிதான் போப்பா. எல்லாரும் ஒரே தொழிலில் இருக்கிறவங்க. நீரடிச்சு நீர் விலகாதுப்பா. அப்படியே விலகினாலும் இமயமலைக்கா போகப்போறாங்க. அம்புவிட்ட அர்ச்சுனனும், நெஞ்சுகாட்டி நின்ன துரியோதனனும் பங்காளிங்கதானே! எல்லாம் பேசித்தீத்துக்குவாங்க! அரசியல் செய்யுறவங்க பங்காளியாவும் உறவு முறையாவும் இருக்கறதுதானே நல்லது!

பாம்பின் கால் பாம்புக்குத்தானே தெரியும்! நீ வேணும்னா பாரு! எல்லாம் ஒண்ணா கூடிக்குவாங்க!

ஒருத்தர் சிரிச்சுக்கிட்டே சொல்லுவார் 'நாங்க ரெட்டக்குழல் துப்பாக்கி... தெரியுமில்லே'...!"

மக்கள் டிவி மீது வழக்கு

ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு மக்கள் டி.வி. மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
மக்கள் தொலைக்காட்சியில் புஷ்பராஜ், பாஸ்கரன், மாரியப்பன், ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளனர். இந்த டி.வி.யில் கடந்த அக்டோபர் மாதம் முதல் என்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்படுகிறது. நானும், முன்னாள் கலெக்டரும் சேர்ந்து அரசு நிலத்தை பினாமி பெயரில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை வடநெமிலியில் எனக்கு நிலம் கிடையாது. நான் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. எங்களது நன்மதிப்பை களங்கப்படுத்தும் நோக்கில் தவறாக செய்தியை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தொலைக்காட்சியும், தொகுப்பாளர்களும் சேர்ந்து எனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். உண்மைக்கு புறம்பான என் தொடர்பான செய்தியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த மனுவை விசாரித்தார். இதுபற்றி பதில் தருமாறு மக்கள் டி.வி.க்கு நோட்டீசு அனுப்பும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (ஜுலை) 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.