கதாநாயகனாய் கரட்டாண்டி
கரட்டாண்டி... முறுக்கு மீசை, முரட்டு உருவம், மதுரைத்தமிழ் என ராதிகாவின் அரசி தொடரில் சிறைக் கைதியாக கலக்கியவர். சொந்தப் பெயர் பக்தவசலம் என்கிற பக்தன். சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, நீ வேணுன்டா செல்லம், பழனி, தலைநகரம், தாமிரபரணி, பேரரசு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். சத்யராஜின் வீரநடையில் ஆரம்பித்தது இவருடைய திரை வாழ்க்கை. இன்னும் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு ஏற்ற சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார் பக்தன். தன்னை சரியான வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அரசி தொடர் இயக்குனரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
இன்னும் வறுமையுடன் வாழ்க்கை நடத்தும் பக்தனுக்கு தங்குவதற்கென்று வீடு கூட இல்லை. சென்னை வடபழனி பேருந்து நிலையத்துக்கு அருகில், தான் நடத்தும் பிளாட்பார இளநீர் கடையிலேயே தங்கிக்கொள்கிறார். எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த தவம் என்கிறார். சினிமா ஆசை தன் வாழ்க்கையை நிறையவே பாதிப்படைய வைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். தன்னைப்போல சினிமாவுக்காக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள் என்று கனவுத் தொழிற்சாலைக்குள் நுழையும் புதியவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார். இளநீர்க் கடை முழுக்க சிவன் படங்கள். அளவு கடந்த தெய்வ பக்தி கொண்ட பக்தன், 'சினிமாவில ஜெயிக்கணும். நிறைய சம்பாதிக்கணும். என்னை மாதிரி சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறவங்களுக்கு வாரத்துக்கு ரெண்டு நாளாவது என் சொந்தச் செலவில சாப்பாடு போடணும். ஊனமுற்றவர்களுக்கு ஆசிரமம் கட்டிக் கொடுக்கணும். இது போதும்ண்ணே எனக்கு’ என்கிறார் 12 ரூபாய்க்கு இளநீரை வியாபாரம் செய்து கொண்டே.
1999-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 200 குடுபம்ங்களை, தான் ஒரே ஆளாக நின்று கயிறு கட்டி இழுத்துக் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மாவட்ட நிர்வாகம் இவருக்கு பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறது.
சினிமாவில் ஹீரோவாக முடியாவிட்டாலும் பக்தன் நிஜத்தில் ஹீரோதான்.