January 02, 2015

என் மனமார்ந்த 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

வணக்கம் என் உறவுகளே! தங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)
 
தங்களின் அற்புதமான நேரத்திற்கு முதற்கண் என் நன்றி. காரணம், இந்த பதிவு சற்று நீளமானது.

இதுவரை நாம் பல வருடங்களை கடந்து வந்திருப்போம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தாம் கடந்து வந்த வருடங்களுள் மிக முக்கியமான, சுவாரஸ்யமான, மைல் கல்லாய், மனதில் குதூகலமாய் அல்லது வலி நிறைந்ததாய்.... இப்படி எப்படியாயினும் மறக்கவியலா சில வருடங்கள் மனதில் வந்து செல்லும். அப்படி என்னில் வந்து செல்லும் வருடங்களுள் மிக முக்கியமானதொரு வருடம், இதோ இன்னும் சில மணித்தியாலங்களில் நம்மைவிட்டு பிரியப்போகும் இந்த 2014. எத்தனை தவம் இருந்தாலும் இனி திரும்பக்கிடைக்குமா இந்த 2014 ? என் ஆத்மார்த்த முத்தங்களுடன் உன்னைவிட்டுப் பிரியும் இந்த தருணத்தில், என் கண்கள் பணிப்பதை என்னால் மறைக்க முடியவில்லை. போய் வா.... 2014.

உன்னையும், உன்னோடு என்னில் பயணித்த என் அன்பான உறவுகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

விமான விபரீதங்கள் அதிகம் நிறைந்தது இந்த 2014, நான் அடிக்கடி விமானப் பயணம் செல்வதாலோ என்னவோ அதன் வலி சற்று மிகுதியாகவே என்னை பாதித்தது. இனி வரும் ஆண்டிலாவது அப்படி நடக்காதிருக்க பிரார்த்திப்போம்.

------------
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். உடலளவில் இங்கிருந்தாலும், உள்ளத்தளவில் என் மண்ணில் மாத்திரமே வசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை ஒளிவு, மறைவின்றி இங்கே பதிவு செய்கிறேன். இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், அமெரிக்காவில் படமாக்கப்படும், நம் தமிழ் உட்பட இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து பணி புரிந்தாலும், எனக்குள் தீராத பசியொன்று இருந்தது. அது, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். சென்னையிலேயே இருந்து முயற்சிக்க வேண்டும். தேவைப்படும்பொழுது மாத்திரம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நான் சென்னையில் தங்கி, நடிக்கும் வாய்ப்புக்காக முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கொருமுறை அமெரிக்கா சென்று வருவதும், அதன் பொருட்டு ஆகும் பொருட்செலவும், மனைவி மற்றும் பத்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளைப் பிரிந்திருப்பதால் அவர்களின் மனநிலை, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், பணி செய்துகொண்டும், எனக்குத் தேவையான பொருளாதார உதவிகளை செய்துகொண்டும் அன்றாடம் மன அழுத்தத்திலும், பணிப்பளுவிலும் வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ள என் மனைவியின் மனநிலை..... இப்படி சிக்கல்களையும், சிரமங்களையும், சச்சரவுகளையும்... அடுக்கிக்கொண்டே போகலாம்...

இப்படி இவ்வளவு சுமைகளுடன் நான் தமிழ் சினிமாவில் நடித்தேதான் ஆக வேண்டுமா? பேசாமல் அமெரிக்காவில் இருந்தால் குறைந்த பட்சம் மாதமொன்றுக்கு சுமார் 5000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கலாமே?

ம்ம்.... ஆக... "தமிழ் சினிமாவில் நடித்தே தீருவேன்" ஒரு வழியாக என் குடும்பத்தினரை தேற்றி, ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சென்னை புறப்படுகிறேன். என் கையில் வெறும் 90 நாட்களேயான என் குழந்தை. காரணம், ஏற்கனவே இருக்கும் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே என் மனைவிக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும்போது நடுநிசி, 90 நாட்கள் சரியாக நிறைவடைந்திருந்தது. நான் 90 நாட்களே நிரம்பிய குழந்தையோடு சென்னை வருவேன் என்பது என் அம்மா உட்பட யாருக்குமே தெரியாது. பிறகு, நாட்கள் செல்லச் செல்ல.... என்னோடு பயணித்த என் நெருங்கிய நண்பர்களுக்கு மாத்திரம் தெரிய வந்தது. அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

"நீ என்ன லூசா...... நீதான், திமிரெடுத்து, சினிமாவில் நடிச்சு, கிழிச்சே தீருவேன்னு வந்திருக்கே, பாவம் அந்த கொழந்தை, என்னடா பண்ணுச்சு?"

அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த என் குழந்தையைக் ஒரு வழியாக மீள் குடியமர்த்தி சென்னைவாசியாக்க முயற்சிக்கையில், கிராமத்தில் இருக்கும் என் அம்மாவையும் கூட வைத்துக்கொண்டால், எனக்கு வாய்ப்புத் தேட வசதியாய் இருக்குமே என ஒரு நப்பாசையில் என் அம்மாவை சென்னை அழைத்து வந்தேன். சுமார் பத்து நாட்கள் கடந்தது. ஒரு வழியாக என் அம்மாவுக்கும், குழந்தைக்கும் தீவிர பயிற்சி கொடுத்து, எல்லாம் கூடி வரும் வேளையில்...  என் அம்மா,

"தென்னம்பிள்ளைக்கி நம்மள மாதிரி ஒழுங்கா யாரும் தண்ணி ஊத்த மாட்டங்கையா, 20 முட்டையோட கோழிய அடை வச்சுட்டு வந்து இன்னிக்கோட 22 நாளாச்சு, இன்னும் அஞ்சாறு நாள்ல அம்புட்டும் பொறிச்சிரும், ஆளில்லாட்டி அம்புட்டு புறாவையும் நாய் புடிச்சிட்டு போயிரும், கோழிய சாயந்தரத்துல டயத்துக்கு புடிச்சு கோழிக்கூட்டுல அடைக்காட்டி அம்புட்டையும் கீறிப்புள்ள சாப்டுரும், கம்மாய்ல வேற தண்ணியில்ல, வாத்துக்கு நேரா நேரம் தொட்டில தண்ணி வைக்கணும்....." இப்படியாக பொலம்பல். என் மூன்று மாத குழந்தையை பார்த்துக்கொள்வதைவிட, என் அம்மாவை அந்த உறவுக்கார கோழிகளிடமிருந்தும், வாத்துகளிடமிருந்தும் மீட்க பெரும்பாடாய் போனது. இதற்கு ஒரே வழி..... அம்மாவின் வழியிலேயே விட்டுப்பிடிப்பதுதான். என் குழந்தையை அம்மாவுடன் அனுப்பி கிராமத்தில் இருக்க வைப்போம். எனக்குத்தான் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குழந்தைக்காவது கிடைக்கட்டும் என முடிவெடுத்து, என் இரண்டு குழந்தைகளையும் (என் அம்மாவையும்தான்) கொண்டுபோய் என் கிராமத்தில் விட்டு வந்தேன்.

தினம் தினம் அலைபேசியில் பேசிக்கொண்டாலும், மாதத்திற்கொருமுறை போய் பார்த்துக்கொள்வதும், ஒருபுறம் என் மனைவியை தேற்றுவதும், ஒரு புறம் குழந்தைகளைத் தேற்றுவதும், ஒரு புறம் என்னைத் தேற்றுவதும், ஒரு புறம் வாய்ப்புக்கள் தேடி அலைவதுமாய் கழிந்தது சில மாதங்கள். நான் என் கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம்...

என் அம்மா கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு....

"ஏய்யா.... நானும் ஒங்கூட அமெரிக்க வந்திருக்கேன். எப்படிப்பட்ட ஊரு அது, வேர்க்கவே வேர்க்காத ஊர்ல பொறந்த இந்தப்புள்ள அங்க
இருந்திருந்தா எப்படியெல்லாம் வளந்திருக்கும்! இந்த கொசுக்கடியிலயும், வெயில்லயும், வேணக்கட்டிலயும் இப்படி கஷ்டப்படணுமா? என்ன பாவம் செஞ்சுச்சு இந்த பச்ச சிசு?" என் அம்மா.

"நீயும் இங்கதான இருக்கே! நீ என்ன பாவம் பண்ணே ? நானும் இங்கதானே இருந்தேன்...." இது நான்.

"அதுக்கு சொல்லலய்யா.... எனக்கு பழகிருச்சு"

"இவளுக்கும் பழகிரும்"

"ஒனக்கு எப்பவும் பிடிவாதம், நான் சொல்றத கேளு. பேசாம போயி அங்க பிள்ளையளோட இரு. நீ நடிச்சு கிழிச்சது போதும்".

நான் கல்லூரி செல்லும் வரையில் மின் விசிறி கண்டிராத என் கிராமத்து வாழ்க்கை என்னவென்பது எனக்குத் தெரியும். ஆனாலும், என் தங்கையின் சடங்குக்கு தாய்மாமன் கொடுத்த டேபிள் ஃபேன்தான் என் வீட்டின் முதல் மின் விசிறி. அதுவும் அவ்வளவாய் அன்று தேவைப்படவில்லை.

ஆனால், இன்றோ.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட என் கிராமம் இன்னொரு சவூதி அரேபியா. என் கிராமத்தில் நான் தங்கும் சில இரவு நேரங்களில் புரண்டு புரண்டு அழும் என் குழந்தையை தூக்கினால், அப்போதுதான் குளிப்பாட்டிய குழந்தையைப்போல் ஈர உடலோடு துவண்டு விழுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அவ்வப்போது, சில இயக்குனர்கள் சிறு பாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தனர். நடித்தேன். இந்த நேரத்தில் அவர்களுக்கும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.

சினிமாவில் நடிக்கவும், இயக்குனராகவும் அன்றாடம் அலைந்து திரிந்து போராடும் எத்தனையோ நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களோடு ஒப்பிடுகையில் என் சிரமம்
எனக்கொன்றும் மிகப்பெரிதாகத் தெரியவில்லை. கையால் எழுதப்பட்ட காகிதத்தின் நகல்களோடு சினிமா கம்பெனிகளின் முகவரிகளைத் தேடித் தேடி மிதிவண்டியிலும், ஷேர் ஆட்டோவிலும், பைக்கிலும், பஸ்ஸிலும், நடந்தும் வீதி வீதியாக வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகத்தான என் உறவுகளின் சிரமத்தைவிடவா என் சிரமம் பெரிது ? அவர்களின் வலியை விடவா என் வலி பெரிது ?

எத்தனை கதைகள் வேண்டும்? எத்தனை ஆவணப்படங்கள் வேண்டும்? எத்தனை குறும்படங்கள் வேண்டும்? வடபழனி, ஏவி.எம்-மிற்கு எதிரேயுள்ள அருணாச்சலம் சாலையில் "காவேரி கார்னர்" தேநீர் நிலைய வாசலிலும், மணி தேநீர் கடை வாசலிலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் வந்து நின்று ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், சினிமா கம்பெனிகளின் முகவரிகள் நிறைந்த கையெழுத்து நகல்களை பரிமாறிக்கொள்வதும்.... பசி நிறைந்த வயிற்றோடும், கனவுகள் நிறைந்த கண்களோடும், எதிர்காலம் பற்றிய தீர்க்கமான வெறியோடும்.... அப்பப்பா...

எத்தனையெத்தனை விதவிதமான கதாபாத்திரங்கள் !!

என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஹாலிவுட் திரையுலக வாய்ப்புகள் மிகச் சுலபம், அனுபவத்தில் கூறுகிறேன்.

சாலிகிராமம் காவேரி கார்னரும், மணி டீக்கடையும் என்னை சென்னையில் இருக்க கட்டாயப்படுத்தியவை. இப்படி நான் பார்த்து பிரமித்த இந்த தமிழ் திரையுலக நடமாடும் எதிர்காலங்களில் என்னையும் ஐக்கியமாக்கிக் கொள்வதில் எனக்குக் கிடைத்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

அது ஒரு சுகமான வலி... ஆம்... எங்களுக்கு அதுதான் வழி....

இவ்வளவு தெரிந்த பின்னும் நான் எப்படி திரும்ப அமெரிக்கா செல்வேன் ? என்னையும் அவர்களோடு இணைத்துக்கொண்டு வீதி வீதியாக வாய்ப்புக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கலைஞர்களுள், நானும் ஒருவன்.

சென்னை வீதிகளில் இதோ வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்.....

காவேரி கார்னரிலும், மணி டீக்கடையிலும் முகவரி வாங்கி, வாய்ப்புத்தேடி, பிறகு ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, இன்று தமிழ் திரையுலகில் பிஸி நடிகர்களாக, இயக்குனர்களாக வலம் வரும் எவரும் இதனை பதிவு செய்ய விரும்பவில்லை அல்லது பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில், அப்படிப்பட்ட வசதியற்ற எம் உறவுகள், கைகள் கடுக்கக் எழுதி, அதனை சொந்த செலவில் நகலெடுத்து, அனைத்து நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களோடு தாமும் சேர்ந்து வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகான்கள், துர்பாக்கிய மனிதர்கள், நடிகர்கள் யார்..... ? யாருக்காவது தெரியுமா ?

முதலில் அவர்கள்  ஜெயிக்க வேண்டும், காவேரி கார்னர், மணி டீக்கடை மகாநடிகர்கள் ஜெயிக்க வேண்டும்.... பிறகு நானும் ஜெயிக்க வேண்டும்.

ஜெயிப்போம்.... எனக்காக இல்லையேனும், என்னோடு பயணித்த 90 நாட்களேயான என் பிஞ்சுக்  குழந்தைக்காக.... என் மனைவி, குழந்தைகளின் தியாகத்திற்காக.... என் அம்மாவின் தள்ளாத வயது சிரமத்திற்காக.... என் குடும்பத்தினரின் எனக்கான பங்களிப்பிற்காக.... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒராயிரம் வலிகளோடு நிறைந்த வாழ்க்கையின் கனவுகளுக்காக.... வயிற்றுக்காக.... வைராக்கியத்திற்காக.... நிச்சயம் ஜெயிப்போம், தொடர்ந்து போராடுவோம்... தொடும் தூரம் தொலைவில் இல்லை.....

இந்த 2015 நமக்கான ஆண்டு... நம் ஆண்டு...

என்னை அன்போடு அழைத்துச் சென்று பல திரையுலக அலுவலகங்களை அறிமுகம் செய்த எனதன்பு உறவுகளை இங்கே நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் என் எதிர்கால பயணங்களில் என்னோடு அவர்களும் பயணிப்பார்கள் என்பதை இங்கே தெளிவாகப் பதிவு செய்கிறேன். நான் சந்தித்த, என்னோடு பயணித்த சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள எனது அன்பான உறவுகளில் கசப்பானவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். "அவர்களால்தான் உண்மையானவர்கள் பிரகாசமாய் தெரிந்தார்கள்" என்பதைத் தவிர அவர்கள் செய்த பிழைதான் என்ன? ஒரு வகையில் அவர்கள் நமக்கு நன்மை புரிந்துள்ளார்கள் என்பதை மாத்திரம் நம் நினைவிற்கொள்வோம்.

எப்படியாயினும்....

உலகம் முழுக்க இருக்கும் என் அன்பான உறவுகள் அனைவரையும் இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன். நன்றி :)

தொடர்பில் இருப்போம்.... தொடர்ந்து பயணிப்போம்....

வற்றாத அன்புடன் - நவின் சீத்தாராமன்