“அன்னையர் தினம்”
அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம் கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்துசென்றான்
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!
- நவநீ
கருவறை; தாய்மையின் அடையாளம்; கரு உருவாகி, மெல்ல... மெல்ல வளர ஆரம்பித்ததும், அப்பெண்ணின் தன்மையே மாறிவிடும். ஈருயிர், ஓர் உடலாக வாழ்வாள். தனக்காக இல்லாவிட்டாலும், கருவறையில் குடியிருக்கும் குழந்தைக்காக பார்த்து, பார்த்து சாப்பிடுவாள். பிடிக்காதென ஒதுக்கி வைத்த உணவு பொருட்களாக இருந்தாலும், "குழந்தை சத்து போடும்' என நினைத்து சாப்பிடுவாள். பத்து மாதங்கள் தவமிருந்து பெற்ற பின்பும்கூட, குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதற்காக, தனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், தாய் பாலாக்கி ஊட்டுவாள். ஒவ்வொரு தாயும், கடவுளுக்கு சமம்!
ஆனால், இன்றைய சமுதாயத்தில் தாய்மார்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது. பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று சொல்வதற்கேற்ப, முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. கோவை நகரில் அங்கொங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த முதியோர் இல்லங்கள், இன்று புற்றீசல் போல பல இடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோவை நகரில் மட்டும் 60 முதியோர் இல்லங்கள் துவக்கப்பட்டுள்ளன. பொத்தி, பொத்தி பாதுகாக்க வேண்டிய பெற்றோரை, இன்றைய இளைஞர்களில் சிலர், நெஞ்சிரக்கமின்றி தனியார் காப்பகங்களில் விட்டுவிட்டு, தங்களது பொறு ப்பை தட்டிக் கழிக்கின்றனர்.அவர்களும், உற்றார் உறவினர் இல்லாமல், பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ முடியாமல், கண்ணீரோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். "என்னோட பிள்ளை கலெக்டராகணும்; கமிஷனராகணும்; டாக்டராகணும்' என பலவிதமான கனவுகளோடு வியர்வை சிந்தித்து சம்பாதித்து ஒவ்வொரு காசையும், தனது குழந்தையின் கல்விக்காக கொட்டுகின்றனர் பெற்றோர். ஆனால், மெத்த படித்ததும் வெளிநாட்டு கனவில் மிதக்கின்றனர். வேலை கிடைத்ததும், பெற்றோர் ஒதுக்கித்தள்ள "துணிந்து' முடிவெடுத்து விடுகின்றனர்.
"வெளிநாட்டில் அதிகம் குளிர் இருக்கும்; உன்னோட உடம்பு தாங்காது; முதியோர் இல்லத்தில், கொஞ்சள் நாள் இருங்கள்; திரும்பி வந்து உங்களை கூட்டிச் செல்கிறேன்' இதுவே, பெற்றோருக்கு, அக்குழந்தைகள் சொல்லும் கடைசி வார்த்தைகள். அதன்பின், பாசத்துக்கு பதில், பணம் தான் வரும், பராமரிப்பு செலவுக்காக. முதியோர் இல்லங்களை பராமரித்து வருபவர்களிடம் விசாரித்தபோது, "பெற்ற குழந்தைகளை காட்டிலும், பேரன், பேத்திகளே, தாத்தா, பாட்டிகளை அதிகம் வெறுக்க துவங்குகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு முதியோர்களிடம் இருந்தது. இப்போது, இரண்டு வயதானதும், அருகிலுள்ள காப்பகத்தில் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால், தாத்தா, பாட்டிகளின் அருமை தெரியாமல், இக்குழந்தைகள் வளர்கின்றன.
"வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் கூறும் அறிவுரையால் எரிச்சல் அடைகின்றனர்; வயதான காலத்தில் அவர்கள் இருமுவது கூட சிறிய குழந்தைகளுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. தங்களது குழந்தைகளுக்காக, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது' என்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.
மாமியார் மருமகள் இடையே ஏற்படும் பிரச்னை, வயதாகும்போது வரும் உடல் நலக்குறைவு, பேரன், பேத்திகளால் ஓரம் கட்டப்படுவது என பல்வேறு காரணங்களால்,கோவையில் சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. முதியோர் உதவித்தொகையாக, மாதம் ரூ.400 கருணை தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இத்தொகை தனியார் காப்பகங்களில் வசிக்கும் முதியோருக்கு கிடைப்பதில்லை.
"ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குமுன், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்!