September 19, 2007

இன்றைய குறள்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப்பார்த்தாலே போதுமானது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

"பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்"

- சுவாமி விவேகானந்தர்

  • தமிழகத்தில் ஆலய அர்ச்சகர்களாக அனைத்து சாதியினருக்கும் பயிற்சி : தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்கிற புதிய ஏற்பாட்டின் கீழ், மாநிலத்தின் சைவ மற்றும் வைணவ ஆலயங்களில், மொத்தம் ஆறு இடங்களில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது
  • மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் சர்வதேச தரத்திதுக்கு பொருந்தவில்லை என்று வல்லுநர் குழு கூறியுள்ளது : இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசாங்க விசாரணைகள், சர்வதேச தரத்துக்குப் பொருந்தவில்லை என்றும், அதன் நடவடிக்கைகள் தோல்வியில் முடியும் போல் தென்படுவதாகவும், அவற்றைக் கண்காணிப்பததற்காக அமைக்கப்பட்ட சர்வதேசக் குழு கூறியுள்ளது
  • யாழ் குடாநாட்டில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் சட்டத்தரணிகளின், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, அங்குள்ள சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகப், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு சட்டத்தரணிகளைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு கப்பமாக பெருந்தொகைப் பணத்தைக் கோரி, அச்சுறுத்தல் விடுத்துள்ள அடையாளம் தெரியாதவர்களின் நடவடிக்கை காரணமாக நேற்று நண்பகல் முதல் இந்த பணிபுறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக யாழ் சட்டத்தரணிகள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
  • கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் மூத்த தலைவர் கைது :
    கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் உயிருடன் இருக்கும் மிக மூத்த உறுப்பினரான, நுவோன் சீயா, ஐ.நா மன்ற ஆதரவுடன் இயங்கும் விசாரணைக்குழு ஒன்றினால், போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
  • பர்மாவில் புத்த பிக்குமாரின் போராட்டம் தொடருகிறது : பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிரான, தமது மூன்றாவது நாள் தொடர் போராட்டத்துக்காக, செவ்வாடைகளையும், ஊதாநிறப் பட்டிகளையும் அணிந்த புத்த பிக்குமார், பர்மாவெங்கிலும் உள்ள நகரங்களில் ஊர்வலமாகச் சென்றனர்
  • துருக்கியில் பெண்கள் இஸ்லாமிய தலையங்கி அணிவதற்கு இருக்கும் தடை விலக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறுகிறார் : துருக்கிய பிரதமர் ரெசெப் டயிப் எர்துவான் , அரசாங்க பல்கலைக்கழகங்களில் , பெண்கள் இஸ்லாமிய தலையங்கி அணிவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்
  • காசாப் பிரதேசத்தின் ஒரு பகுதியை எதிரிப் பிரதேசமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது : பாலத்தீனர்களின் காசா பிராந்தியத்தின் மீது புதிய பொருளாதார தடைகளைக் கொண்டுவர வழிசெய்யும் முகமாக, அந்தப் பிராந்தியத்தை ஒரு எதிரிகளின் பகுதியாக இஸ்ரேல் பிரகடனம் செய்துள்ளது
  • பிரிட்டனில் பல்வேறு இனக்குழுக்களிடையே வேறுபாடுகள் ஆழமாக உள்ளன என்று தகவல் : பிரிட்டனில் வாழும் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவும் வேறுபாடுகள் முன்பு எப்போதும் இருந்ததைவிட ஆழமாக இருப்பதாகவும் இவை, மத மற்றும் அரசியல் தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும் பிரிட்டனில் வெளியாகி உள்ள ஒரு அறிக்கை கூறுகிறது