December 23, 2007

நடிகை தமானா

இன்றைய குறள்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லிவிடலாம், ஆனால் பயனில்லாத சொற்களை சொல்லாமல் இருப்பதே நல்லது

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய்

புகை பிடிப்பதால் புற்று நோய், இதயக்கோளாறுகள் தாக்கக் கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அகில உலகளவில் அண்மையில் செய்த ஒரு ஆய்வின்படி இளமையிலேயே தலை வழுக்கை விழும் சாத்தியங்கள் அதிகமென்ற செய்தி சரும நோயின் ஆவணங்கள் என்ற பிரிடிஷ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லும்போது புகை பிடிப்பது பற்றிய ஒரு உபரி செய்தி நினைவுக்கு வருகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகர் விஜய் இனி திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேனென்று உறுதி அளித்து அவரின் சபாஷைப் பெற்றிருக்கிறார்.

குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். குஜராத் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் ஞாயிறுக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், பாரதீய ஜனதா கட்சி, 117 தொகுதிகளில் வென்று, ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தற்போது முடிவடைய உள்ள சட்டப்பேரவையில், பாரதீய ஜனதா கட்சி 127 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 51 இடங்களையும் கொண்டுள்ளது. இந்த முறை பாரதீய ஜனதா 10 இடங்களை இழந்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கூடுதலாகப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில், வடக்கு, தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பிராந்தியங்களில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு மதக்கலவரம் நடைபெற்ற மத்திய குஜராத்தில், கடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, இந்த முறை கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதாக நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக, உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி, தேசிய அளவில் அந்தக் கட்சி பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி,தேர்தல் பிரசாரத்தின்போது, புதுப்புது வழிகளில், புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை. குஜராத் மக்கள், எதிர்மறை சக்திகளைத் தோற்கடித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றி, ஐந்தரை கோடி குஜராத் மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் மன்மோகன் சிங், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநில முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews