May 01, 2008

"மே தினம்! உழைப்பவர் சீதனம்!!"

உலகமெங்கும் "மே" மாதத்தில் தொழிலாளர் தினம்
கொண்டாடும்போது ஏன்? அமெரிக்காவில்... கனடாவில் மட்டும்
செப்டெம்பர் மாதத்தில்.... என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?!

அவர்களுக்காக இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.....! இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் நிறுவனமாகட்டும்காலையில் 8 மணிக்கு அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை(கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில் ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா", அமெரிக்காவில‌ எலெக்ச‌ன் என்னாச்சு? த‌மிழ‌க‌ சினிமாவின் 75-ம் ஆண்டு விழாவுக்கு ந‌டிக‌ர் ச‌ங்க‌ம் க‌ருணாநிதியையும் செய‌ல‌லிதாவையும் அழைக்க‌ப் போகிறார்க‌ளாமே....".... என்ற அலசல் நேரம் உட்பட) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த பைலை கொஞ்சம்பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு, எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக்கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம்கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16 மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால்தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.

அன்று...1863-களில்...

அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச் சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப்பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசி நாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலை ஆரம்பமாகிவிடும். அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷூவு-க்கு கொஞ்சம் பாலீஷ் போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..."என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷூ பாலீஷ் வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ள நாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள் மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும். காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சு கூட விடமுடியாது.

ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டு அந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமான வயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதர சகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்த ஐரிஷ் சிறுவனின் பெயர் பீட்டர் மெக் குரி! ( Peter Mc Guire ) .

டிஸ்மிஸ்...

19-ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க் நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின் கனவு நொறுங்கித்தான் போனது. ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில் நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர்.

இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்தது போல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வேளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடித் தெருக்களில் வலம் வந்தனர்.

இவர்களுக்கு கிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்து வந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்றுவேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. லை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்கு இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.

தொழிற்சங்கம்...

பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்த மற்ற வேலைகளைவிடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை குறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான்.

இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின் வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக்குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய் இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைக்காமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை.

தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872-ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலை முடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற்சங்கம் வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக்கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது. தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப்பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிற்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும் தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக "பொது மக்களின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர்" என்ற முத்திரை குத்தப்பட்டார். பீட்டர் பார்த்த வேலையும் சில விஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடு ஊர் ஊராகப் பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.

1881-ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State)உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில் ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.

எட்டு மணி நேர வேலை...

இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில் உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த உற்சாகம் ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காங்கே தொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேரவேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடு கூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திரதின நாளுக்கும், நன்றி கூறும் நாளுக்கும் இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.

1882-ம் ஆண்டு செப்டெம்பர் 5-ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கியதொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில் "LABOR CREATS ALL WEALTH" என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURS FOR REST, EIGHT HOURS FOR RECREATION !" என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களை வசீகரிக்கும் மந்திரச் சொல்லானது.

பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டு மகிழ்ந்தனர். அன்றிரவு வாணவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்த வெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால் என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்று ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம் கொண்டாடினர்.

1894 ல்.....

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது. 1894-ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகின்றனர். பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும் நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது.

அரசியல்வாதிகள்கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக் கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம்.

சிகாகோ கலகம்

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட்
பகுதியில் 1886-ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் "எட்டு மணி நேர வேலை" என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு "மே" மாதம் 4-ம் தேதி ஏற்பாடு செய்தது. சிகாகோவின் அந்நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்துகொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக்கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை வீச...... தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த ஆபத்தான வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான
காவலர்கள் காயமுற 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்ப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ள் இற‌ந்த‌ன‌ர். எண்ண‌ற்ற‌ தொழிலாள‌ர்க‌ள் காய‌முற்ற‌ன‌ர்.

கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய் அன்றைய தினம் அமைந்தது....தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம் எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கண் கொண்டு பார்க்க இயலும்.

காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்க தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லிநாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற் சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு. தொழிலாளர்கள் தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.

பேரியக்கம்... சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர். உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர சிகாகோ கலகம் காரணமாகிப் போனது. அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.

கனவும் நனவும்....

தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் "எட்டு மணி நேர வேலை" என்றஅரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன. தொழிலாள வர்க்கத்தின் கனவு நனவானது 1888-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது. 1889-ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர். உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாகஅந்தக் கூட்டம் அமைந்தது. அதுமட்டுமல்ல, உழைப்பாளிகள் ஒன்று படவும் அவர்தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர். 1891-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் "மே" தினத்தைக் கொண்டாடினர்.

சைனாவில் 1920-லும், இந்தியாவில் 1927-லும் (இந்தியாவில் கல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் "மே" தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905-ம் வருடத்திலிருந்து வருடம் தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர் தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது. கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமையையே தொழிலாளர் தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

என்ன ஒரு வருத்தமான செய்தி என்றால், அன்று உண்மையிலேயே உழைப்பாளர்களால் கொண்டாடப்பட்டது! இன்றைக்கு உழைப்பாளர்கள் கட்சி என்ற அடையாளத்துக்குள் மறைந்து சடங்குத்தனமாக, சம்பிரதாயமாக நடப்பதுதான்! தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமை என்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக்கொண்டு வாழ்ந்த சிங்காரவேலர் "மே" தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும் 1923-ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின் இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்த வரலாறும் தொழிலாளர்கள் மறந்துவிட முடியாத மாசற்ற உண்மையாகும்.

1908-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற "கோரல் மில்' தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1918 ஏப்ரல் 27 அன்று "மெட்ராஸ் லேபர் யூனியன்' என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.

இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன. 1889-லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
"போராடுவோம், போராடுவோம்...வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!"

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!"
"இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?"
"அஞ்சோம், அஞ்சோம் அடக்குமுறை கண்டு அஞ்சோம்!"
"தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!"
போன்ற சிங்காரவேலரின் சிறப்புக் கோஷ‌ கீதங்கள் இன்றளவும் நம் செவிப்பறையில் ஆங்காங்கே விழுந்துகொண்டுதானே இருக்கிறது! உழைப்பாளர்களுக்கான தமிழகத் தந்தை சிங்காரவேலர் அவர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு (2006) மார்ச் திங்கள் 2-ம் நாளன்று அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது! உழைப்போரால்தான் இந்த உலகம் இன்னும் கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை!!!

ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்! தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றி இயங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள் விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர், சிங்காரவேலர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?
- ஆல்பர்ட்

உலக அளவில் செல்வாக்குப் பெற்ற 100 பேர்:சோனியா உட்பட 3 இந்தியருக்கு இடம்

2008 - ஆம் ஆண்டில் உலக அளவில் செல்வாக்குபெற்ற 100 நபர்களில் சோனியா காந்தி, தொழிலதிபர் ரத்தன் டாடா, பெப்சி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி இந்திரா நூயி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2008-ஆம் ஆண்டில் உலக அளவில் செல்வாக்குப்பெற்ற 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் இந்திய அரசியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பெண்மணியாக சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர். பலத்த சோதனைகளுக்கு இடையிலும் காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்தியவர் என்ற பெருமை சோனியாவிடம் காணப்படுகிறது.
இந்திரா நூயி (வயது 51) தான், சார்ந்திருக்கும் பெப்சி நிறுவனத்தை உலக அளவில் முன்னணி நிறுவனமாக மாற்றிய சாதனையாளர். அவரின் வியாபார நுணுக்கங்களும், புதுமைகளும்தான் பெப்சியின் சந்தையை உலகமயமாக்கியது. எனவே அவர் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 70), இவர் இடம் பெறக் காரணம்- 1 லட்ச ரூபாய்க்கு நேனோ காரை அறிமுகப்படுத்த இருப்பதால்தான்.

திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவும், சீனப் பிரதமர் ஹூ ஜிந்தோவும் இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் பெயரும் இதில் உள்ளது. டோனி பிளேரின் பெயர் முதல் முறையாக இந்தப் பட்டியலில் இந்த ஆண்டுதான் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இங்கிலாந்து பிரதமரான கோர்டன் பிரௌன் 2005-ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு இடம் பிடித்திருந்த அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனும், அதிபர் வேட்பாளாரான பராக் ஒபாமாவும் வழக்கம் போல் இந்த ஆண்டுப் பட்டியலிலும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி இருக்கிறார்கள். உலக அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் 100 நபர்களை 'டைம்ஸ் இதழ்' தேர்வு செய்து தனது இணயத் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் வலைப்பதிவு எழுதுகிறார்

மலேசிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிதாக வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். தன்னுடைய கருத்துக்களை எல்லாம் உலக சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் நவீன ஆயுதமாக இணையத் தளங்கள் என்று சொல்லக்கூடிய வலைப் பதிவில் தனது கருத்துக்களை வெளியிடுவதுதான். அந்தப்பட்டியலில் இப்பொழுது மகாதீரும் சேர்ந்துள்ளார்.
'செ டெட்' அல்லது 'மிஸ்டர்.டெட்' என்ற புனை பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் தொடந்து பல கட்டுரைகளை எழுதி வந்தவர் மகாதீர். எனவே மீண்டும் தனது புனை பெயரான ‘செ டெட்’ என்ற பெயரிலேயே வலைத் தளத்தையும் தொடங்கி இருக்கிறார். (http://www.chedet.com/)

82 வயதான மகாதீர், 1981 - முதல் 2003 வரை 22 ஆண்டுகாலம் மலேசியாவின் பிரதமராக இருந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த மகாதீர் மருத்துவம் படித்தவர். சில காலம் அரசு மருத்துவராகவும் பணிபுரிந்தவர். அதன்பின் அரசியலில் புகுந்து பிரதமராகி, விவசாய நாடாக இருந்த மலேசியாவை ஒரு முன்னணி தொழிற்துறை நாடாக மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உலக நாடுகளுக்கு மலேசியாவை ஒரு வளமிக்க நாடாக அறிமுகப்படுத்தியவர் மகாதீர்.

தற்போதைய பிரதமர் அப்துல்லா படாவிக்கு எதிராக தனது கருத்துக்களை தயங்காமல் தெரிவித்து வருகிறார். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். படாவியை அடுத்த பிரதமராக கொண்டு வந்ததில் மகாதீருக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற முடியாத படாவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த மார்ச் 8-ல் நடைபெற்ற தேர்தலில் மகாதீரின் புதல்வர் கூட வெற்றி பெற்றார். ஆனால் படாவியை ராஜினாமா செய்யச் சொல்லி தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே தற்போதைய பிரதமருக்கு எதிராக முன்னாள் பிரதமரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதன் தீவிர நடவடிக்கைகளில் ஒன்றுதான், இப்பொழுது மகாதீர் தொடங்கி இருக்கும் வலைத்தளமும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு இணையத் தளங்களின் பங்கு பெரிய அளவில் இருந்தது. இதை பலரும் உணரத் தொடங்கி இருக்கின்றனர். தேர்தல் காலத்தில் “மலேசியாகினி” - என்ற இணையத் தளம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை கட்டுரை வடிவில் வெளியிட்டது. அதற்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான டிஏபி கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங்கும் வலைத் தளத்தில் எழுதி வருகிறார். தேர்தல் சமயத்தில் அவருடைய கருத்துக்கள் பலவும் தனது வலைத் தளம் வழியாகத்தான் பெரும்பான்மை மக்களை சென்றடைந்தது. அதேபோல் மலேசியாவின் வலைத்தள நிபுணர்களில் ஒருவரான ஜெப் ஓய் அரசுக்கு எதிரான அனல் பறக்கும் கருத்துக்களை தனது வலைத் தளத்தில் வெளியிட்டார்.அதனால் அவருக்கு டிஏபி கட்சி சார்பில் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க...http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/உலகம்/மலேசிய-முன்னாள்-பிரதமர்-வலைப்பதிவு-எழுதுகிறார்

ஜனாதிபதியின் அரசுப் பயணத்தில் மகன் முறைகேடு?

ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் மகன் ராஜேந்திரசிங் ஷேகாவாத். இவர் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் பிரதீபா பாட்டில் லத்தீன் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அவருடன் சென்றிருந்தார்.
பிரதீபா பாட்டில் மெக்சிகோ சென்றபோது அவருக்கு மெக்சிகோ அதிபர் பெலிப்கால்டரன் விருந்து கொடுத்தார். அப்போது ஷெகாவத்துக்கு மிக முக்கிய பிரமுகர் வரிசையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த விருந்திற்கு வரவில்லை. இதனால் ஜனாதிபதியுடன் சென்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க..http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/இந்தியா/ஜனாதிபதியின்-அரசுப்-பயணத்தில்-மகன்-முறைகேடு

சென்னை - இந்தியாவின் இரண்டாவது சிலிகான் பள்ளத்தாக்கு!

இந்தியாவின் ஐ.டி. தலைநகராக சென்னை மாறத் தொடங்கி இருக்கிறது. இதுநாள் வரை சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வரும் பெங்களூரூக்குப் போட்டியாக சென்னை களம் இறங்கி இருக்கிறது. அதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை திகழ ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவில் உள்ள 10 முன்னணி ஐ.டி. ஏற்றுமதி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சென்னையில் செயல்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஐ.டி. நிறுவனங்கள் இல்லை. விப்ரோ, டிசிஎஸ், காக்னிசன்ட், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான நிபுணர்களுடன் தனது தொழிலை சென்னையில் நடத்தி வருகிறது.

மேலும் மின்ட்ரி, போலாரிஸ், பட்னி,ஹெக்ஸாவேர், டெக் மஹேந்திரா போன்ற நிறுவனங்கள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் தனது வியாபார எல்லை நீட்டித்துக் கொண்டே போகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் அதன் மிகப் பெரிய தயாரிப்பு பணிகள் எல்லாம் சென்னையில்தான் நடைபெறுகிறது.

"சென்னையில் மட்டும் எங்களுக்கு 6 நிறுவனங்கள் உள்ளன. இதில் 23 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சென்னை நகரில் இதுவரை நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். இன்னும் சிலமாதங்களில் சிறுசேரியில் 70 ஏக்கர் பரப்பளவில் 21 ஆயிரம் பணியாளர்களுடன் எங்களின் பணியைத் தொடங்க இருக்கிறோம்" என்கிறார் டிசிஎஸ்-இன் செய்தித் தொடர்பாளர்.

உலகத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஐ.டி. நிபுணர்களைக் கொண்ட நகரமாக விளங்க இருக்கும் சென்னை நகரில் மஹேந்திரா நிறுவனம் 25 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் மொத்தம் 75 ஆயிரம் பணி இடங்கள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பணியாளர்கள் இருப்பதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் சென்னை பொறுப்பாளார். இந்த எண்ணிக்கை பி.பி.ஓ. பணிகளை சேர்க்காதது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 35 ஆயிரமாக்க திட்டமிட்டுள்ளது விப்ரோ.

இதே சம அளவு எண்ணிக்கையில் செயல்படுகிறது காக்னிஸன்ட் நிறுவனம். உலக அளவில் தனது நிறுவனத்தின் பணிகளில் 40% -யை சென்னையில்... தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/சென்னை-இந்தியாவின்-இரண்டாவது-சிலிக்கான்-பள்ளத்தாக்கு

வழக்குகளை ரத்து செய்ய முடியாது : குஷ்பூவுக்கு நிதானம் தேவை - உயர்நீதி மன்றம்

பல்வேறு கோர்ட்டுகளில் நடிகை குஷ்பு மீதுள்ள 26 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது, இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அனைத்து வழக்குகளையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும், பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 26 கோர்ட்டுகளில் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யவேண்டுமென்று, குஷ்பு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதுதவிர, மேட்டூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டுமென்று குஷ்பு இன்னொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். குஷ்பு சார்பில் சீனியர் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடுகையில், `ஒருவரை குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசினால் மட்டுமே அவதூறாக அமையும் என்றும், ஆனால், குஷ்பு பேசிய பேச்சு அவதூறாகாது' என்று குறிப்பிட்டார். `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இல்லை என்று வற்புறுத்தி வாதாடினார்.

அவதூறு வழக்குகள் தொடர்ந்தவர்களின் சார்பில் வக்கீல்கள் கே.பாலு, அனந்தநாராயணன், ரூபர்ட் பர்னபாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். `பேசியதில் தவறில்லை, புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி, புரியாதவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று இழிவுபடுத்தி பேசிய குஷ்பு விமர்சித்து கூறியுள்ளார்' என்று அவர்கள் வாதாடுகையில் குறிப்பிட்டனர்.

நேரடியாக தமிழ் பெண்களை அவதூறாக பேசியுள்ளார் என்றும், அவர் ஒரு நடிகை தானே தவிர, மருத்துவ ரீதியானவர் அல்ல என்றும், இப்படிப்பட்டவர் கூறிய கருத்து எதிர்காலத்தில் சமுதாயம் ஒரு தவறான போக்கிற்கு ஆளாகிவிடும் என்று வற்புறுத்தி வாதாடினார்கள். ஆகவே, இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டனர். மேலும், எந்த கருத்துக்களையும் கூறக்கூடாது என்று மேட்டூர் கோர்ட்டு நிபந்தனை விதித்தும், அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றும் வற்புறுத்தி வாதாடினார்கள்.

குஷ்பு மீதான 26 வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

குஷ்பு பேசியது அவதூறாக எடுத்துக்கொண்டால் கூட, பல கேள்விகளை காணும் நிலையில்தான் வழக்கு உள்ளது. அவர் சொன்ன கருத்துக்கள் நல்ல நோக்கத்தில் பேசப்பட்டதா, எந்த சூழ்நிலையில் பேசப்பட்டது, எந்த நோக்கத்திற்காக பேசப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.

சாட்சி விசாரணையின்போது தான் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஆகவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கோர்ட்டு உத்தரவினால் அவர் கைது செய்யப்படாமல் இருக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு விதிவிலக்கு அளிக்கும்போது, இந்த விஷயம் பற்றி ஏதும் பேசக்கூடாது என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை அவர் கடைபிடிக்க தவறிவிட்டார்.

மேலும், சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். நீதிமன்றங்களையும், சட்டங்களையும் இழிவாக பேசி பேட்டி அளித்துள்ளார். இதுபோன்று பேசும்போது அவர் நிதானத்தை கடைபிடிக்க தவறிவிட்டார். பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசவேண்டும் என்பதில்லை. இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இந்திய பண்பாடு, தமிழ் பண்பாடுக்கு எதிராக மோசமாக, அவதூறான கருத்துக்களை ஒருவர் தெரிவிக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் நபர் இந்த கருத்துக்களினால் தான் புண்பட்டுவிட்டதாக புகார் தரும்பட்சத்தில், அதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதே சமயம் வழக்கின் தன்மை குறித்தும், சூழ்நிலை குறித்தும் ஆராய வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட்டு வழக்கு தொடர்பாக விமர்சிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்த பிறகும், குஷ்பு தன்னால் கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை. இவர் மீது வெவ்வேறு கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆகவே, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம். ஆகவே, இந்த வழக்குகள் அனைத்தையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அக்கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

ஒரே மேடையில் கலைஞர் - ஜெயலலிதா : நடிகர் சங்கம் ஏற்பாடு

தமிழக அரசியலின் இருதுருவங்களான முதல்வர் கலைஞர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமர வைத்து விழா நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவையொட்டி, சென்னையில் மிக பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் ரூ.3 கோடியே 12 லட்சம் கையிருப்பில் உள்ளது. நடிகர் சங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிப்பு பயிற்சி கல்லூரி வருகிற ஜுலை அல்லது ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும். மும்பையில் நடிகர் அனுபம் கேர் மிகச் சிறப்பான முறையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறார். அமெரிக்கா, கனடாவில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேருகிறார்கள். அதுபோன்று தரமான நடிப்பு கல்லூரியை தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கும்.

இப்போது கையிருப்பில் உள்ள பணத்தை தொடாமலே நடிகர் சங்கத்துக்கு, புதிய கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டும் சினிமாவில் நடிக்க வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டிருக்கிறோம்.


தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவை சென்னையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

மலேசியா-சிங்கப்பூரில் நடைபெற்றதை போன்று மாபெரும் நட்சத்திர கலைவிழாவை சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறோம். இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

முன்னதாக, நலிந்த நடிகர் நடிகைகள் 50 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் துணைத்தலைவர் மனோரமா, செயலாளர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை, இணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், நடிகர்கள் சத்யராஜ், முரளி, கே.ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் சார்லி, கே.ராஜன், நடிகைகள் மும்தாஜ், விந்தியா, சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.