December 08, 2007

இன்றைய குறள்

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

அறத்துப்பால் : புறங்கூறாமை

வர்த்தகத் துறையில் இந்தியா பீடுநடை போடுகிறது

வர்த்தகத் துறையில் இந்தியா பீடுநடை போடுகிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக ஆசியாவிலுள்ள உயர்ந்த 100 நிறுவனங்களில் இந்தியாவில் மட்டும் 13 நிறுவனங்கள் இருக்கின்றன என அமெரிக்காவின் பிசினஸ் வீக் செய்த சர்வே கூறுகிறது. முதலிடத்தில் தைவானும், இரண்டாம் இடத்தில் ஜப்பானும் உள்ளன. அடுத்த படியாக இந்தியா, சீனாவையும் பின்னுக்குத் தள்ளி முந்தியிருக்கிறது நமக்கெல்லாம் பெருமைதானே!

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் சமீப காலமாக மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தொழில்துறையினரும் பொதுமக்களும் புகார் கூறி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் வரை, தமிழ்நாட்டில் மின்சாரம் உபரியாக இருந்தது. மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் முதல் காற்றாலைகள் மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரம் 1500 மெகாவாட்டும், மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் 1000 மெகாவாட்டும் கிடைக்காத காரணத்தால், தற்போது தமிழகத்தில் தாற்காலிகமாக மின்தடை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே எண்பது லட்சம் நுகர்வோர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 18 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம்தான் தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்று, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கியுள்ளார் அமைச்சர். அதே நேரத்தில், கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாடு வராத அளவுக்கு, அஸ்ஸாம், ஹரியானா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரத்தை வாங்கி, தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார். மின் தட்டுப்பாடு குறித்தும், அமைச்சர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாகவும், கோவையில் உள்ள தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் கே. செல்வராஜு அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இந்தியாவில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைக்குமா?

இந்தியாவின் கிடுகிடு பொருளாதார வளர்ச்சியும் பிரம்மாண்ட தொழில் வளர்ச்சியும் நாட்டின் நிலங்களை குறைவானவர்கள் கைகளில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது. நகரங்களில் வர்த்தகம் பெரும் முன்னேற்றம் கண்டுவருகிறது. வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் பிரம்மாண்ட நடுத்தர வர்க்கத்தில் தற்போது சுமார் 30 கோடிப் பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் மாபெரும் ஜனத்தொகையில் 8 சதவீதம் பேர் இன்றளவும் ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்ந்துவரும் அவலநிலை. ஏழைகள் பிழைப்புக்காக கிராமங்களை விட்டு வெளியேறி நகர்ப்புற சேரிகளில் தஞ்சம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் நில உரிமை நிலை என்பது உலகில் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமுள்ள நியாயமற்ற, சமச்சீரற்ற நிலையில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்று நிலமற்றவர்கள் விரும்புகிறார்கள்.