August 25, 2007

சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? "சோ" பதில்


ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஒன்று. (எங்கோ படித்தது)

சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி. நேற்றைய எதிரி... ஜெயா இன்றைய எதிரி... சன் நாளைய எதிரி... மக்கள் டி.வி-யா?
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட இவரது அரசியல் ஆரூடங்கள் ஆதர்சம்! மனதில் பட்டதைச் சட்டென்று போட்டு உடைக்கிற மனிதர் சோ..! தற்போதைய அரசியல் களம் பற்றி சுடச் சுட பேச ஆரம்பித்தார்.
‘‘தி.மு.க-வின் இன்றைய...?’’
‘‘களேபரம்! அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர முன்வராமல், அதை மறுப்பதன் மூலமே அரசாங்கத்தை நடத்திச் சென்றுகொண்டு இருக்கிறார்கள். விலைவாசி உயர்வா? ‘உயரவில்லை!’, மணல் கொள்ளையா? ‘கொள்ளை அடிக்கப்படவில்லை!’, தனியார் கல்லூரிகளில் பகல் கொள்ளையா? ‘பகலுமில்லை, கொள்ளையுமில்லை. தடுக்க எங்களிடம் அதிகாரமுமில்லை!’ இப்படி எல்லாவற்றையும் மறுப்பதே இந்த அரசாங்கத்தின் வாடிக்கையாகிவிட்டது! துணைநகரம், விமான நிலையவிரிவாக்கம், ஹெல்மெட் சட்டம், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னை என எல்லா விஷயங்களிலும் தெளிவில்லாத ஒரு குழப்பமே தெரிகிறது. தவிர, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கிரிமினல்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு! தென்காசிக் கொலைகள், சிவகங்கை ரிமோட் வெடிகுண்டு என பக்கம் பக்கமாக ரத்தச் செய்திகள். இந்த ஆட்சியில் மட்டும்தான் இது நடக்குதுன்னு சொல்லலை. ஆனா, இந்த ஆட்சியில் வன்முறையின் தாக்கம் அதிகமா இருக்கு என்கிறேன்!’’
‘‘சாத்தான்குளத்தில் டைட்டானியம் ஆலை அவசியமா?’’
‘‘என்னைப் பொறுத்தவரையில் டைட்டானியம் தொழிற்சாலை அமைவதில் தவறில்லை. தொழிற்சாலைகளும் பெருகினால்தான், ஒரு நாடு உண்மையிலேயே முன்னேறியதாக அர்த்தம். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும்போது, விவசாய நிலங்களுக்குச் சற்றே பாதிப்பு ஏற்படுவது இயற்கைதான். ஆனால், டைட்டானியம் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படும்போது நிலத்துக்கு உண்டான உண்மையான மதிப்பை நில உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். டைட்டானியம் விலையுயர்ந்த தாது. டாடா நல்ல லாபகரமான நிலையில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனம். எனவே, ஒரு துண்டு நிலமானாலும் அதற்கு எந்தளவுக்கு அதிகபட்ச விலை கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு கொடுத்து வாங்குவதுதான் முறை. இதனைச் சாத்தியப்படுத்த அரசாங்கம்தான் முனைந்து, முன்நின்று செயல்பட வேண்டும்! அப்படிச் செய்தால் டைட்டானியம் ஆலை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மற்றபடி யாரோ ஒரு தனியார் தொழில் அதிபரை முடக்கவே டாடாவை ஊக்குவிக்கிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!’’
‘‘அரசாங்கமே கேபிள் டி.வி-யைத் தொடங்குவதை நீங்கள் வரவேற்கிறீர்களா..?’’
‘‘ஜெயலலிதா ஆட்சியின்போது மாறன் குடும்பத்தாரின் சுமங்கலி கேபிள் விஷன், தமிழகத்தில் அதிரடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருந்தது. போட்டிக்கு இருந்த மற்ற நிறுவனங்களை மிரட்டி உருட்டி தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வந்தார்கள். விஜய் டி.வி-யில் செய்தி வாசிக்க முடியாமல், ராஜ் டி.வி புது சேனல்களை ஆரம்பிக்க அனுமதி பெற முடியாமல் பல தடங்கல்கள் உண்டாக்கப் பட்டன. அப்போதே நானும் சிலரும் ‘அரசாங்கமே கேபிள் டி.வி. நடத்தலாம்’ என்று குரல் கொடுத்தோம். அதை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்களோ... மொத்தமா எல்லா தனியார் கேபிள் சேனல்களையும் அரசுடமையாக்க சட்டம் கொண்டு வந்தாங்க ஜெயலலிதா. அதை இதே கருணாநிதி எதிர்த்தார். ஆனால், இப்போது..? ஜெயலலிதா எல்லா சேனல்களையும் அரசாங்க கன்ட்ரோல்-ல கொண்டுவரப் பார்த்தாங்க. ஆனால், இப்போதைய அரசாங்கம் கொண்டுவரப் போறதா சொல்ற ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ என்பது அப்படி அல்ல. மற்ற நெட்வொர்க்குகளுடன் இதுவும் நடக்கும். ஆனால் இது, இன்னொரு சுமங்கலி கேபிள் விஷன் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு நெருக்கமா இருந்தவங்களே மத்தவங்களை மிரட்டமுடியும் என்கிறபோது, அரசாங்கமே கேபிள் நடத்தினால் இன்னும் அதிகமாகவே அது நடக்க வாய்ப்பு இருக்கு! ‘நேற்றைய எதிரி’யாச்சேன்னு ஜெயா டி.வி-க்குக் குடைச்சல் கொடுப்பது, ‘இன்றைய எதிரி’ன்னு சன் டி.வி. ஒளிபரப்பைக் கெடுப்பது, ‘நாளைய எதிரி’ன்னு மக்கள் தொலைக்காட்சிக்கு தொல்லை கொடுக்குறதுனு இந்த ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ செயல்படுகிற ஆபத்து இருக்கு. இந்தக் குறைகள், விரோத மனப்பான்மைகள் எதுவும் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களையும் அரவணைத்து, குறைவான கட்டணத்துடன் அரசின் கேபிள் கார்ப்பரேஷன் செயல்பட்டால் அதை வரவேற்கலாம்!’’
‘‘புது எம்.பி. கனிமொழியின் செயல்பாடுகள் எப்படி?’’
‘‘கருணாநிதி அவர் குடும்பத்துல இன்னும் யாரை விட்டுவைக்கப் போறார்னு தெரியலை. ஸ்டாலினுக்கு கோட்டை, அழகிரிக்கு தென் தமிழ்நாடு, கனிமொழிக்கு டெல்லின்னு ஏதோ ஒரு பேரரசர் தன் வாரிசுகளுக்கு சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொடுக்குற மாதிரி பிரிச்சுக் கொடுத்துட்டு வர்றார். கொஞ்ச காலத்துக்கு முன், கனிமொழியைப் பற்றி விமர்சனம் கிளம்பியதற்கு ‘அவர் அரசியலிலேயே இல்லையே! எதற்கு அவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்?’னு கேள்வி கேட்டார். அது நடந்த ரெண்டாவது வாரமே கனிமொழி எம்.பி-னு அறிவிப்பு வந்தது! ‘அரசியல் அவங்களுக்கு என்ன புதுசா? ரொம்ப நாளா பழக்கமான துறைதானே? அதனால் எம்.பி. ஆக்கப்பட்டுள்ளார்’னு கதையை மாத்தினார். தி.மு.க. தலைவர் பதவியை எந்தளவுக்கு துஷ்பிரயோகம் பண்ண முடியுமோ, அந்தளவுக்குப் பண்ணிட்டு இருக்கார் கருணாநிதி. வேறென்ன சொல்ல?’’
‘‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘தயாநிதி மாறன், அன்புமணி, கனிமொழி போல அரசியலில் திணிக்கப்பட்டவர் அல்ல ஸ்டாலின். அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கி முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன! எமர்ஜென்சி காலங்களில் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர், எம்.எல்.ஏ., மேயர் எனப் படிப்படியாகத்தான் அவர் முன்னேறுகிறார். கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும், ஒரு கட்சியினால் தங்கள் ஆட்சியின் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உள்ள வழி முறைகளின்படியே அவர் தயாராகி வருவதால், அவர் அந்தப் பதவிக்கு வந்தாலும் குற்றம் காண முடியாது’’.
‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’
‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திராகாந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாம் நடத்திய சோதனைகளே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’
‘‘கலைஞர் டி.வி. குறித்தான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?’’
‘‘அந்தப் பெயரே தப்பாகத் தோன்றுகிறது எனக்கு! டி.வி. தொடங்கப்படுவதற்கு முன்னரே அதன்மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது போல இருக்கிறது. தமிழ் சேட்டிலைட் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் சன் டி.வி-தான். அதிகமான எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், பெரிய சினிமா லைப்ரரி, பக்கா புரொஃபஷனலான டீம்னு நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. அதோட போட்டி போடணும்னா, தெளிவான திட்டங்களுடன் தயாராகணும்’’.
‘‘டாக்டர் ராமதாஸ் செய்கிற எதிர்ப்பு அரசியல் பற்றி..?’’
‘‘டெல்லியில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான சர்ச்சைகளில் அன்புமணி சிக்கிக்கிட்டு தவிச்சப்ப, ராமதாஸுக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ தி.மு.க. எதுவும் செய்ய முன் வரவில்லை. அப்போ தன்னைக் கைவிட்டுட்டாங்க என்கிற பெரிய வருத்தத்தில்தான் இதெல்லாம் ஆரம்பிச்சது. இன்னொரு முக்கியமான விஷயம்... விஜயகாந்த்தின் வளர்ச்சி! அரசாங்கத்தை எதிர்ப்பதால்தான் விஜயகாந்த்துக்கு வாக்குகள் விழுது, மக்கள் கிட்டேயும் ஆதரவு பெருகுதுன்னு ராமதாஸ் நினைக்கிறார். இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் அரசாங்கத்துக்கு ஆதரவா செயல்பட்டா, தங்களுடைய வாக்குகளில் கணிசமான அளவை விஜயகாந்த் பிடிச்சுக்குவாரோன்னு பயம். அதனாலதான் இப்படி தினமும் அரசுக்கு எதிரா அறிக்கை மேல அறிக்கை விட்டுட்டு இருக்காரு. மூணாவதா, கலைஞரேகூட அடுத்த தேர்தல்ல தன்னை எப்படி நடத்து வார்ங்கிற சந்தேகமும் ராமதாஸுக்கு வந்திருக்கு. இதெல்லாமேதான் காரணம்!’’
‘‘எதிர்க்கட்சித் தலைவராக வெறும் அறிக்கைகள் மூலமே அரசியல் செய்கிறாரே ஜெயலலிதா... சட்டசபைக்குக்கூட வருவது இல்லையே..?’’
‘‘அ.தி.மு.க-வும் ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதெல்லாம் போதாது. ஜெயலலிதா சட்டசபைக்குத் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டபோது, தன்னந்தனியாக ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று பேசியது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அப்போது கிடைத்த வரவேற்பை அவர் தக்கவெச்சிருக்கணும்!’’
‘‘சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். இந்த அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘கழக இமேஜ் ரொம்ப நன்றாக இருக்கிறதா என்ன..! மெயின் இமேஜே சரியில்லாம இருக்கும்போது இதைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு..?’’ -
சூடாகப் பேசி முடித்து, புன்சிரிப் போடு விடை கொடுக்கிறார் சோ!

ஓணம் நல்வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்! இலைபோட்டு சாப்பிடுவதை மறந்து நெடுநாட்களாகி விட்டாலும், (சாப்பிட வழியில்லை என்பது வேறு விசயம்!) இந்த படத்தை பார்த்தாவது ஆறுதல் அடைந்துகொள்வோம். என்னைப்போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான நண்பர்கள் குடும்பத்தோடு திரும்பவும் இந்தியா வந்து இலைபோட்டு, அந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும், வெறியோடும், கனவோடும் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களனைவருக்கும் இந்தப் படத்தின் மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

இன்றைய குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு"
- சுவாமி சித்பவானந்தர்

சல்மான்கான் சிறையில் : தமிழோசை

  • நடிகர் சல்மான்கான் இந்தியாவில் அரிய வகை மான் ஒன்றை கொன்றதற்காக தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் முறையீடு செய்தார். ஆனால் இந்த முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சல்மான் கான் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உரிய விடுப்புகளை பெறாமல், பணிக்கு வராமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • சீனாவில் பெண் கருக்கலைப்பு தொடர்பில் புதிய சட்டம்
  • சுமார் 80 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள கிரேக்கத்துக்கு ஐரோப்பிய நாடுகள் விரைந்து உதவிகளை அனுப்பிக் கொண்டுள்ளன.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 25 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஃபாக்ஸ் மூவி டோன் செய்திக்காக "மகாத்மா காந்தி" அவர்களின் நேர்முகம்