December 15, 2007

இன்றைய குறள்

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை 'இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது

அறத்துப்பால் : புறங்கூறாமை

உன்னதமான சங்கீதம்

உன்னதமான சங்கீதம் என்பது, இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல. எண்ண ஓட்டத்தைத் தெளிய வைத்து, மனதையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம் அது. சிந்தனையைச் செம்மைப்படுத்தாத எந்த இசையும், அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும், சங்கீதமாகக் கருத முடியாது" - பத்மஸ்ரீ டாக்டர் பிரபா ஆத்ரே, ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்

தமிழக மீனவர்கள் ஆந்திராவில் கைதாகி விடுதலை

தமிழக தலைநகர் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த சுமார் 150 மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் கடலில் தொழில் செய்து கொண்டிருந்தபோது, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதையடுத்து, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் பாதுகாப்பு தேடி கரைக்குத் திரும்பியபோது, தவறுதலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுக எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆந்திர போலீசார் மீனவர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து பெருமளவு மீன்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். இந்த நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அந்த மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. மீனவர்களை மீட்பதற்காக, காக்கிநாடா சென்றுள்ள, ராயபுரம் மீன்பிடித் துறைமுகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழக மீன்வளத் துறையின் உதவி இயக்குநர் எம். நஸீருல்லா இதுதொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram

அவசரகால நிலையை அகற்றினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வேஷ் முஷாரஃப் அவர்கள் கடந்த மாதம் முதல் நாட்டில் போட்டிருந்த அவசரகால நிலையை விலக்கியுள்ளார். கூடவே அரசியல் சாசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் தன்னால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிற்கு நாட்டின் முக்கிய நீதிபதிப் பதவிகளுக்கான சத்தியப் பிரமாணங்களையும் செய்து வைத்துள்ளார். இப்படியொரு நிலையில் அவசரகாலச் சட்டத்தை விலக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்கள் அதிபரை விமர்சிப்பவர்கள். அவசரகால நிலைமையின் போது பதவி விலக்கப்பட்ட பக்கச்சார்பற்ற நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படப் போவதில்லை. கூடவே செய்தி ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கப் போகின்றன. இந்த முன்னெடுப்புகள் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில் வந்துள்ளன.