December 29, 2007

பாகிஸ்தான் எதிர்காலம்? - நிபுணர் கருத்து

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடும்பத்தினரிடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார். பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார். பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார். அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இலியாஸ் கருத்து தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர். இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர். தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கையில் அமைதி ஏற்படாது : டக்ளஸ் தேவானந்தா ஆவேசம்

"பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஒப்புக் கொள்ளாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்' என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :
பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு ஒப்புக்கொள்ளாது. எனவே, பிரபாகரன் கொல்லப்பட வேண்டும். அவர் அமைதியை விரும்பவில்லை, இலங்கையை துண்டாடத்தான் விரும்புகிறார். வன்னிப்பகுதியில் வசித்து வரும் மக்களில் 99 சதவீதம் பேர் பிரபாகரனை வெறுத்து வருகின்றனர். இதை விட்டால், புலிகளை இணங்கவைக்க மற்றொரு வழி உள்ளது. அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தாங்கள் கைவிடப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தை ஏற்பட வைத்து அமைதி முயற்சியில் அவர்களாகவே சேரும்படி வைக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்தான் தற்போது மோதல்கள் நடந்து வருகின்றன. எனக்கு பொறுப்பு அளிக்கப் பட்டால், ஒரே ஆண்டில் அப்பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவேன். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.