September 14, 2007
நீங்கள் "40 பிளஸ்' வயசா? : கேன்சர்!
மனிதர்களுக்கு எப்போது எந்த நோய் தாக்கும் என்று யாராலும் கூற முடியாது. இவர்களுக்கு தான் இந்த நோய் வரும், இவர்களுக்கு வராது என்று சொல்லவே முடியாது. முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக், ஏதோ பணக்கார வியாதி என்ற எண்ணம் இருந்தது. சில ஆண்டாக ஏழைகளையும் இது தாக்கியதால் அந்த எண்ணம் மாறியது. சரியாக கவனித்துக் கொள்ளாத யாருக்கும் இந்த அதிரடி நோய் வரும் என்று பரவலான கருத்து நிலவியதால் பலரும் உடம்பை கவனிக்கத் துவங்கினர்.
பெண்களை எடுத்துக்கொண்டால், பொதுவாக உடல் ஆரோக்கியம் மீது ஒரு முன்னெச்சரிக்கை உண்டு. ஆனாலும், சமீபத்திய சர்வே படி, ஆபீஸ் போகும் பெண்கள் மட்டுமின்றி, வீட்டுப்பெண்களும் தங்கள் உடல்நிலையை சரிவர பார்த்துக்கொள்வதில்லை. நாற்பது வயது வரை பரவாயில்லை. அதற்கு அப்புறமாவது, உடல் மாற்றங்களை கவனிக்க வேண்டியது பெண்களை பொறுத்தவரை முக்கியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடற்பயிற்சி இல்லாததால் தான் பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் பிரச்னை வருகிறது. பொதுவாக, கேன்சரை பற்றி தவறான எண்ணம் உண்டு. யாருக்காவது கேன்சர் என்றால், அடடா! அது தொற்று வியாதி ஆயிற்றே? அவங்க பரம்பரையில யாருக்காவது இருக்கா? என்று ஒரு மாதிரியாக பேசுவார்கள். ஆண்களை பொறுத்தவரை கேன்சர் வர பல காரணங்கள் உண்டு. பெண்களை பொறுத்தவரை சில காரணங்கள் தான். முன்னெச்சரிக்கையாக இருந்தாலே, இதை தவிர்க்கலாம்.
இந்த கால கட்டத்தில் எதையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. என்ன தான் நீங்கள் பிசியாக இருந்தாலும், இது போன்ற விஷயங்களை கவனித்து, சில விஷயங்களை படித்து தெரிந்துகொள்வது தான் நல்லது.
அந்த வகையில் தான் இந்த சிறப்பு பேட்டி. சென்னை அப்போலோ மருத்துவமனையில் கேன்சர் பிரிவின் டைரக்டரும், இந்திய அளவில் கேன்சர் சிகிச்சையில் முதன்மை டாக்டர்களில் ஒருவராக கருதப்படுபவர் டாக்டர் ரமேஷ் பி.வி.நிம்மகட்டா எம்.பி.பி.எஸ்., எப்.ஆர்.சி.பி.சி., படித்த படிப்புக்கும் சரி, ஆராய்ச்சிகளுக்கும் சரி, ஈடு இணையல்ல.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் பதிமூன்று ஆண்டுகளும், இந்தியாவில் அப்போலோ மருத்துவமனையில் பதினெட்டு ஆண்டுகளும் கேன்சர் நோய்க்கு நவீன சிகிச்சை அளித்து வருகிறார் டாக்டர் ரமேஷ். கேன்சர் தொடர்பான கோளாறுகளுக்கு இதுவரை முப்பதாயிரத்திற்கும் அதிகமான பேர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். கேன்சர் பற்றிய சர்வதேச அரங்குகளிலும், தேச அளவில் கருத்தரங்களிலும் சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப்பட்டு உள்ளார். பல முக்கிய உரைகளை தந்துள்ளார்.
கேன்சரைப் பற்றி தவறான எண்ணங்கள், கருத்துக்கள் மக்களிடையே காணப்படுவது, அவற்றின் காரணமாக இந்த நோயைப் பற்றி மக்களிடையே தேவையற்ற பயம் இருப்பது, பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் கேன்சர் பற்றி அறிவது, இந்த நோயின் ஆரம்ப காலத்திலேயே அதை அறிந்து குணப்படுத்துவது, சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றி விரிவாக டாக்டர் ரமேஷ் இந்த சிறப்பு பேட்டியில் விவரித்தார்.
கேள்வி: என்னென்னவோ முன்னேற்றங்கள் வந்தும் இன்னும் இந்த கேன்சரை பற்றி அறிந்தால் பலரும் பயப்படுவது ஏன்? என்ன தான் காரணம்?
டாக்டர்: மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து பெரும் சவாலாக இருப்பது கேன்சர். கடந்த ஐம்பது வருட மருத்துவ முன்னேற்றத்தில், பல கொடிய நோய்கள் முழுமையாக கன்ட்ரோல் செய்யப்பட்டிருக்கின்றன. கேன்சர் சிகிச்சையில் இப்போது வியக்கத்தக்க முன்னேற்றங்கள் வந்திருக்கின்றன. இருந்தும் கேன்சரை இதுவரை மருத்துவ விஞ்ஞானத்தால் அழிக்க முடியவில்லை. போலியோ, அம்மை போன்ற நோய்கள் அறவே ஒழித்து விட்டது போல, கேன்சரை வென்று விட்டோம் என்று மருத்துவமும், விஞ்ஞானமும் மார் தட்ட முடியாது.
கேள்வி: கேன்சரில் அப்படி என்ன பெரிய பிராப்ளம்?
டாக்டர்: கேன்சர் என்பது ஒரு நோய் அல்ல. பல நோய்களின் மொத்த கலவை. உடலில் உள்ள திசுக்கள் மாற்றம் அடைந்து ஒரு கன்ட்ரோல் இல்லாத நிலையில் வளர்கின்றன. அதோடு நிற்காமல் உடலில் ஆரம்ப இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பரவி, எங்கெல்லாம் பரவுகிறதோ, அங்கெல்லாம் வளர்கின்றன. இது தான் கேன்சரின் முக்கியமான பிரச்னை. கேன்சர் வந்திருப்பது, ஆரம்ப காலத்திலேயே, கண்டுபிடிக்கப்படும் போது, அதாவது ஆரம்பிக்கும் இடத்திலே மட்டும் கேன்சர் கட்டி இருக்கும் போது, அறிந்து சிகிச்சை அளித்தால், முழுமையாக குணம் பெறலாம். ரொம்பவும் முற்ற விட்டுவிட்டால் அவ்வளவு தான் என்று யாரும் பயப்பட வேண்டாம். கேன்சர் முற்றிய நிலையிலும் கூட, சில வகை கேன்சர்கள் குணமாக்கப்பட்டு விடுகிறது. இதற்கு நாம் மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள புரட்சிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு சிலர் நடுத்தர நிலையில் கேன்சர் கட்டி இருக்கும் போது சிகிச்சைக்கு வருகின்றனர். சிலரோ, முற்றிய நிலையில் வருகின்றனர். அப்போது, கேன்சர் கண்டுபிடிக்கப்படும் போது கூட, நவீன சிகிச்சை மூலம் சரி செய்ய வசதி உள்ளது, எந்த நிலையிலும், நவீன சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து ஆயுள் அதிகரிக்க முடிகிறது. நோயாளிக்கு நிம்மதி கொடுக்க முடிகிறது.
கேள்வி: நமது உடலில் கேன்சர் வர முடியாத பாகங்கள் என்று இருக்கிறதா?
டாக்டர்: தோல், மார்பகம், நுரையீரல், வயிறு, மூளை, வாய் என்று எல்லா இடங்களிலும் கேன்சர் வரலாம். நகங்களிலும், முடியிலும் வருவதில்லை. பல்வேறு டைப்பான கேன்சர் நூற்றுக்கும் அதிகமான டைப்களில் கேன்சர் வரக் கூடும். இதற்காக, பயப்பட வேண்டாம். ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்கும் போது முழுமையாக குணம் அடைய முடியும். மற்றவர்களைப் போல நார்மலான வாழ்க்கை நிச்சயம் வாழ முடியும்.
கேள்வி: கேன்சர் தோன்றுவதற்கு என்ன அறிகுறிகள் தெரிகின்றன?
டாக்டர்: பொதுவாக "இது தான்' கேன்சர் வந்திருப்பதற்கு அறிகுறி என்று சொல்ல முடியாது. உடலில் பல பகுதிகளில் வரக் கூடும் என்பதால், அறிகுறிகள் மாறுபட்டு இருக்கும். இருந்தாலும், பொதுவான அறிகுறிகள் குறிப்பிடுகிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இங்கு முக்கியமாக ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இந்த அறிகுறிக்காக டாக்டரை சென்று பார்த்தவுடனே, நமக்கு கேன்சர் வந்து விட்டது என்று எவரும் எண்ணக் கூடாது. முடிவு செய்யக் கூடாது. ஒரு குறிப்பிட்ட அறிகுறி உள்ளது என்று டாக்டரிடம் செல்பவர்களில், நுõறு பேர்களில் 90 சதவீதம் பேர்களுக்கு கேன்சர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்காக ஆரம்ப அறிகுறியை புறக்கணிக்கக்கூடாது. கண்டிப்பாக அறிகுறி தென்பட்டவுடன் டாக்டரை போய்ப் பார்க்க வேண்டும். ஆரம்ப நிலையில் அறிந்தால், சிகிச்சை எடுத்துக் கொண்டு முழுமையாக குணம் பெறலாம். அசட்டையாக இருந்து அந்த தங்க வாய்ப்பை தவற விடாதீர்கள் ப்ளீஸ்.
இதோ சில அறிகுறிகள்
- மூன்று வாரங்களுக்கு மேலாக, நம் உடலில் ஏற்படும் காயம் அல்லது புண் குணமாகவில்லை என்றால் உடனே கவனிக்க வேண்டும். சர்க்கரை நோய் கூட காரணமாக இருக்கலாம்.
- உடலில் எந்த பாகத்திலும் சரி, இரண்டு வாரங்களுக்கு அதிகமாக வலி இருக்கிறதோ, இல்லையோ ஏதாவது கட்டி காணப்பட்டால் உடனே கவனிக்க வேண்டும்.
- நமது சிறுநீரிலோ, மலத்திலோ ரத்தமும் கூட வந்தால் உடனே கவனிக்க வேண்டும். லைப்ஸ் மூலம் ஆக கூட இருக்கலாம்.
- மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருக்கும் இருமல் நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
- வாந்தி எடுக்கும் போது, எச்சில் துப்பும் போது ரத்தம் வந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
- விழுங்குவதில் கஷ்டம் இருந்தால் உடனே கவனித்துக் கொள்ள வேண்டும். உணவு குழாயில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கலாம்.
- குரலில் ஏதாவது மாற்றம் தெரியும் போது டீன்ஏஜில் சிறுவர் குரல் மாறுவதை தவிர.
- பெண்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்கள் தவிர, மற்ற நேரங்களில் அதிகமாக ரத்தப் போக்கு ஏற்பட்டால் இருபது ப்ளஸ் வயது பெண்கள் டாக்டரை கன்சல்ட் செய்ய வேண்டும்.
இவைகள் பொதுவான, அறிகுறிகள் தான். உடனே டாக்டரிடம் சென்று கவனித்துக் கொள்வது நல்லது. நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் எந்த பிரச்னையும் இருப்பதில்லை.
கேள்வி: எந்த வகை கேன்சர் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடலாம்?
டாக்டர்: பெண்களுக்கு வரும் கேன்சரில் 60 சதவீதம் மார்பகங்களிலும், கர்ப்பப்பையிலும் ஏற்படுகிறது. கடவுளின் அருளால், இவை ஆரம்ப நிலையிலே நிச்சயமாக கண்டுபிடித்து விட கூடியவை.
வாயில் ஏற்படும் கான்சரும் ஆரம்ப நிலையிலே கண்டுபிடித்து விடலாம். இந்தியாவில் ஆண்களிடையே பரவலாக வருவது வாயில் கேன்சர் தான். சிகரெட் பிடிப்பது, புகையிலை போடுவது, பான்பராக் போன்றவை போடுவது முக்கிய காரணம். ஆண்களுக்கு ஏற்படும் மற்றொரு வகை கேன்சர் ப்ராஸ்ட்டேட் கேன்சர் என்பது. சிறுநீர் கழிப்பதில் கஷ்டம் வருவது. இதை கண்டுபிடிக்க தனி ரத்த பரிசோதனை உள்ளது இதையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.
கேள்வி: கேன்சர் நோய் பற்றியும், அதன் பயங்கரத்தைப் பற்றியும் பல தவறான கருத்துக்கள் மக்களிடையே காணப்படுகின்றன. அது பற்றி?
டாக்டர்: முக்கியமான கேள்வி. பொதுவாக கேன்சர் பற்றி பல தவறான கருத்துக்கள் இருக்கின்றன. கேன்சர் என்று கண்டுபிடிக்கப்பட்டாலோ உடனே மரணம் வந்துவிடும் என்று நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறு. உங்களுக்குத் தெரியுமா? முதல் ஹார்ட்அட்டாக் வருபவர்களில் இருபது சதவீதம் தங்கள் முதல் ஹார்ட் அட்டாக்கிலேயே இறந்து விடுகிறார்கள். ஆனால், எந்த வகை கேன்சராலும் அந்த ஆபத்து கிடையாது. மெஜாரிட்டியான பேர்களுக்கு சிகிச்சை, நல்ல பலனை அளிக்கிறது.
கேள்வி: கேன்சர் ஒரு தொற்று வியாதியா?
டாக்டர்: இதுவும் முற்றிலும் தவறான கருத்து. கேன்சர் தொத்து வியாதி அல்ல. கேன்சர் உள்ளவரின் செல்களை எடுத்து மற்றவர் உடலில் இன்ஜெக்ட் செய்தால், அந்த செல்கள் இறந்து விடும். கேன்சர் உள்ளவரை தொடலாம்; பழகலாம் எந்த பிராப்ளமும் கிடையாது. சிலர் ஏதோ பாவம் செய்ததால் தான், பூர்வ ஜென்ம பலன் தான் கேன்சர் வந்திருக்கிறது என்கிறார்கள். இதுவும் முற்றிலும் தவறான கருத்து. இது பரம்பரை வியாதி என்றும், சிலர் கருதுகிறார்கள். தவறு. இது பரம்பரை நோய் அல்ல. 95 சதவீதத்திற்கும் அதிகமாக கேஸ்களில் இது பரம்பரை நோய் இல்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆபரேஷன் பண்ணினால் அபாயம். உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி விடும். தவறான கருத்து. ஆபரேஷன் செய்து, கேன்சரால் பாதிக்கப்பட்ட உடல் பகுதியை நீக்கி விடுவதால், கேன்சர் குணமடைகிறது. ஆபரேஷன் செய்வதால் எந்த நெகடிவ் பலனும் ஏற்படுவதில்லை.
கேள்வி: கேன்சர் வருவதற்கு என்ன காரணங்கள்?
டாக்டர்: இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இந்த காரணங்களால் கேன்சர் வருகிறது என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. அது தான், இந்த நோயின் பயங்கரத்திற்கு ஒரு முக்கிய காரணம். சில காரணங்கள் உடலுக்குள் ஏற்படுகின்றன. சில வெளி காரணங்கள். ஸ்மோக்கிங் பொறுத்தவரை, சிகரெட் பிடிக்கும் எல்லாருக்கும் கேன்சர் வருவதில்லை. ஆனால், நுரையீரலில் கேன்சர் பாதிக்கும் ஆண்களில் 80 சதவீதம் போல, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தான்! சிகரெட் பிடிப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு கேன்சர் வருவதில்லை. கேன்சர் வருவதற்கு காரணம் என்று குறிப்பிட்டு சொல்வதை விட, கேன்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணங்களில் அதுவும் ஒன்று, அவ்வளவு தான். புகையிலை முக்கியமானது. எந்த வகையில் புகையிலையை எடுத்துக் கொண்டாலும் சரி சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை மெல்லுதல், பான்பராக் எல்லாம் சிகரெட் பிடிப்பதை விட, புகையிலை போட்டுக் கொள்வது அதிக ஆபத்தானது. சிகரெட் பிடிப்பது, மதுபானங்கள் குடிப்பதை விட ஆபத்தானது. சிகரெட் பிடிப்பதால், நுரையீரல், இதயம், கால்கள் பக்கவாதம் பாதிக்கப்படலாம்; கேன்சர் வரலாம். சீனாவில் இப்போது சிகரெட் பிடிப்பவர்கள் அதிகம் இருப்பதால், கேன்சர் அதிகரித்து உள்ளது. சிகரெட் கம்பெனி அதிகாரி தன் மகனுக்கு ஸ்வீட்ஸ், கேக் வாங்கி கொடுப்பதைப் போல, சிகரெட் கொடுப்பாரா? நீங்களே யோசித்து பாருங்கள். பத்து வருடங்கள் முன்பு இருந்ததை விட நுரையீரல் கேன்சரை நான் அதிகம் பார்க்கிறேன். ஒரு ஆண் வீட்டில் சிகரெட் பிடிக்கும் போது அவரது மனைவி குழந்தைகளும் அந்த சிகரெட் புகையால் பாதிக்கப்படுகிறார்கள்
கேள்வி: பெண்களுக்கு எப்போது வருகிறது கேன்சர்?
டாக்டர்: பெண்களைப் பொறுத்தவரை முப்பது வயதிற்குள் தாய்மை அடையும் பெண்களுக்கு, மார்பகங்களில் கேன்சர் வருவது குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நாற்பது ஆகி விட்டால் கவனித்துக்கொள்வது நல்லது. இதில் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது. கண்டிப்பாக அறிகுறி இருக்கிறதோ, இல்லையோ டாக்டரை பார்த்துத்தான் ஆக வேண்டும். தாய்மை அடைவது ஒரு வகையில் இதற்கு பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு தாய்க்கு எவ்வளவு குழந்தைகள் பிறக்கின்றன என்பது முக்கியமல்ல. எந்த வயதில் முதலாவதாக தாய்மை அடைகிறாள் என்பது தான் முக்கியம்.
கேள்வி: திருமணமான பெண்களை விட மணமாகாத பெண்களுக்கு தான் கேன்சர் வாய்ப்பு அதிகமா?
டாக்டர்: ஐம்பது வருடங்கள் முன்பு நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி திருமணம் செய்து கொள்ளாத பெண்களுக்கு, திருமணம் ஆன பெண்களை விட, மார்பக கேன்சர் வருவதற்கு அதிக சாத்தியங்கள் இருக்கிறது. கருத்தரிக்கும் சமயத்தில் பெண்கள் உடலில் பல சுரப்பிகள் இயங்குகின்றன என்பதும் அவர்களுக்கு கேன்சர் வருவதற்கு சாத்தியம் குறைவானதற்கு ஒரு காரணம். கொழுப்பு சத்து அதிகமாக உள்ள ஆகாரங்களை அதிகமாக சாப்பிடுவது, குண்டாக இருப்பது இவைகளும் பெண்களிடையே மார்பக கேன்சர் வருவதற்கு, அதிகரிப்பதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. கொழுப்பு சத்து அதிகமாக பெண்கள் சாப்பிடும் நாட்டில் மார்பக கேன்சரின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
கேள்வி: ஏன் திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் வர வாய்ப்பு அதிகம்? அவர்களில் பெரும்பாலோருக்கு வருமா?
டாக்டர்: திருமணமாகாத எல்லாருக்கும் அறிகுறி இருக்கும் என்று சொல்லக்கூடாது. சில பெண்களின் நடவடிக்கைகள் காரணமாகத்தான் கேன்சர் அறிகுறி வருகிறது. இதை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும். சிறிய வயதில் செக்ஸ் வைத்துக் கொள்வது, அதுவும், ஒருவருடன் மட்டுமல்ல, பலருடன் செக்ஸ் உறவு கொள்வது, அதிலும், சுத்தமில்லாமல் இருப்பது முக்கிய காரணங்கள். இதனால், கர்ப்பப்பையில் கேன்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
கேள்வி: மார்பகங்களை, பெண்கள் எப்படி "செக்' செய்து கொள்ள பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?
டாக்டர்: ஒரு பெண் தனது மார்பகங்களை தானே பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். மாதவிலக்கு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணும் (இருபது வயதிற்கு மேல்) தனக்குத் தானே மார்பகங்களை தடவி, தொட்டுப் பார்த்து, பரிசோதனை செய்ய வேண்டும். ஏதாவது கட்டி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது வித்யாசமாக தெரிந்தால் உடனே தங்கள் டாக்டரிடம் சென்று காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். எனக்குத் தெரிந்து செக்கிங் செய்த பிறகு தான் மெஜாரிட்டி பெண்கள், டாக்டரிடம் வருகிறார்கள். இங்கு ஒரு முக்கிய விஷயம். டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள போகும் போது டாக்டர் ஆணா, பெண்ணா என்று பார்க்க வேண்டாம். டாக்டர் உங்களை பரிசோதிக்கும் போது தன் கடமையை தான் செய்கிறார். எனவே, அதில் பெண்கள் வெட்கப்பட கூடாது. டாக்டர் உங்களை ஒருமுறை பரிசோதித்து பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று ஒரு முறை சொல்லிவிட்டால் வாழ்க்கை பூராவும் பிராப்ளம் ஏதும் இல்லை என்று எண்ணி விடக் கூடாது. தன்னைத் தானே பெண் ஒவ்வொரு மாதமும், தொட்டுப் பார்த்து கட்டி ஏதும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு தொடர் கதை போல தொடர வேண்டும்.
கேள்வி: எந்த வயதில் ஒரு பெண் தன்னை பரிசோதித்து கொள்ள வேண்டும்?
டாக்டர்: ஒரு பெண்ணிற்கு நாற்பது வயது ஆன பின், வருடத்திற்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. முன் ஜாக்கிரதையான செயல். சில குடும்பங்களுக்கு மற்றவர்களை விட ரிஸ்க் அதிகமாக இருக்கலாம். தன் தாய் வழியில், தாய்க்கோ, சகோதரிக்கோ மார்பக கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பெண்கள் ரெகுலராக செக்அப் செய்து கொள்வது ரொம்ப அவசியம். ஒரு வீட்டில் இருவருக்கு கேன்சர் இருந்தால், மற்றவர்களுக்கு வருவதற்கு சான்ஸ் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து செக்அப் செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரம் நோயை கண்டுபிடிக்கிறோமோ முழுமையாக நிவாரணம் பெறலாம் அந்த குடும்பத்திலும். இங்கு மற்றொரு விஷயத்தை கண்டிப்பாக கூற வேண்டும். கனடா, அமெரிக்கா நாடுகளில் பல ஆண்டுகள் இந்தத் துறையில் நான் பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன். அங்கு 30 வயது முதல் 70 வயது, 30 முதல் 70 வரை உள்ள பெண்களில் பத்தில் ஒருவருக்கு மார்பக கேன்சர் வருகிறது. நல்லவேளை இந்தியாவில் அந்த விகிதத்தைப் போல பல மடங்கு குறைவாகவே கேன்சர் அபாயம் காணப்படுகிறது. கனடா, அமெரிக்க நாட்டுப் பெண்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் அவர்கள் தங்கள் மார்பகங்களை தாமே பரிசோதனை செய்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டதற்கு இரு காரணங்கள். ஒருவேளை தங்களை தாங்களே பரிசோதித்துக் கொள்ளும் போது ஏதாவது கட்டி அகப்பட்டு விடுமோ என்கிற பயம் தான் முக்கிய காரணம். எவ்வளவு இமாலயத் தவறு? அதற்காகத் தானே பரிசோதனை செய்கிறோம்? சீக்கிரமே ஆரம்ப ஸ்டேஜில் கண்டுபிடித்தால் தானே நல்லது? உடனே டாக்டரிடம் சிகிச்சை பெறலாம். அது ஆபத்து இல்லாதது என்றால் நிம்மதி. அப்படி இல்லாவிட்டாலும் ட்ரீட்மென்ட்டை உடனே ஆரம்பித்து முழுமையாக குணம் பெறலாமே? அந்த நாட்டுப் பெண்களுக்கு இரண்டு பயங்கள். கேன்சரைப் பற்றிய பொதுவான பயம், மார்பகங்களை இழக்க வேண்டி வருமோ என்பது இரண்டாவது பயம். இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டிய பயங்கள். அந்த நாடுகளில் இதற்கான நிறைய கவுன்சிலிங் செய்கிறார்கள்.
நீங்கள் "40 பிளஸ்' வயசா? மார்பகத்தை இழக்க வேண்டுமா?
கேள்வி: ஒரு பெண் தன்னைத் தானே தொட்டுப் பார்த்து, கட்டி போன்று ஏதோ இருப்பதாக சந்தேகித்தால் பிறகு என்ன செய்ய வேண்டும்?
டாக்டர்: கட்டி இருப்பது ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அவருடைய மார்பகங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. அவற்றை இழக்க வேண்டிய தேவை இருக்காது என்று சொல்லலாம். மார்பகத்தில் கட்டி என்று சந்தேகம் வரும் போது, நேரத்தை வீணாக்காமல், உடனே டாக்டரை சென்று பார்க்க வேண்டும். டாக்டர் முதலில் அந்த பெண்ணை பரிசோதிப்பார். தேவை இருந்தால் மட்டுமே மாமோகிராம் என்று அழைக்கப்படும் டெஸ்ட் செய்வார். மார்பகங்களை எக்ஸ்ரே எடுப்பார். பிறகு ஒலி அலைகளால் ஸ்கேனிங் செய்கிறார். அது தான் அல்ட்ரா ஸோனோக்ராம். இந்த இரண்டு டெஸ்ட்கள் செய்த பிறகும் அவருக்கு ஒருவேளை கேன்சராக இருக்குமோ என்று தொடர்ந்து சந்தேகம் இருந்தால் Fine Needle Aspiration Citology என்கிற டெஸ்ட் தேவை இருக்கும். கட்டி என்று சந்தேகப்படும் இடத்திலிருந்து, சில செல்களை உறிஞ்சி எடுத்து மைக்ராஸ்கோப் மூலம் அதை சோதிக்கிறார். இந்த நிலையில் கூட மெஜாரிட்டியான கேஸ்களுக்கு பிரச்னை இருக்காது. பைப்ரோ எடினோமா என்று சொல்லுவார்கள். கெடுதல் ஏதுமில்லை. கேன்சர் இல்லை.
மைக்ராஸ்கோப் மூலம் அந்த செல்களை பரிசோதிக்கும் போது, அவை கேடு விளைவிக்கும், கேன்சர் செல்களாக இருந்தால், அந்த கட்டியின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, பயாப்ஸி எனப்படும் அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்புவார். (நோய் குறி இயல் நிபுணர்) எனப்படும் பதாலஜிஸ்ட் டாக்டர் சோதித்த பிறகு கேன்சர் என்று அவர் சோதனைகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தால் தான் கேன்சர் என்று ரிப்போர்ட் கொடுக்கிறார். இந்த எல்லா டெஸ்ட்களுமே சென்னையிலேயே முழுமையாக செய்து கொள்ள முடியும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் கேன்சர் ஆஸ்பத்திரிக்கு எல்லாவற்றையும் அனுப்பி அங்கிருந்து இறுதியான நிலையை அறிந்து கொள்வார்கள்.
கேள்வி: இந்த டெஸ்ட்களின் மூலம் வந்திருப்பது கேன்சர் என்று தெரிந்ததும், நோயாளிடம் உடனே சொல்லி விடுவார்களா?
டாக்டர்: கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவரிடமே நேரடியாக நாங்கள் சொல்லி விடுவோம். நமக்கும் அவர்களுக்கும் வாழ்க்கை முறையில், கலாசார ரீதியில் பல வேறுபாடுகள். இங்கு, நேரிடையாக ஆரம்பத்தில் நோயாளிடம் சொல்வதில்லை. அவர்களது குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடம் சொல்லுவார்கள். பிறகு மெதுவாக சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லி அவர்களை பக்குவப்படுத்தி பின்னர் தான் கேன்சர் என்று தீர்மானமாக சொல்லுவார்கள். மார்பக கேன்சர் என்று உறுதி ஆனதும், உடனே எழுகின்ற கேள்வி உடலின் மற்ற பாகங்களுக்கு கேன்சர் பரவி இருக்கிறதா என்பது தான். எல்லா டெஸ்ட்களுமே உடனுக்குடன் செய்யப்படுவதால் மெஜாரிட்டி கேஸ்களில், உடலில் மற்ற பாகங்களுக்கு பரவி இருக்காது.
இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். பல சமயங்களில் நோயாளி ஆரோக்கியமாக இருப்பது போலத் தான் தோன்றுவார். தோற்றத்தால் ஏதுவும் சொல்லிவிட முடியாது.
கேன்சர் கட்டி இருப்பது ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டால் மார்பகங்களுக்கு ஆபத்து இல்லை. அவை காப்பாற்றப்படலாம். அந்த கட்டியை மாத்திரம் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்து விடுவார்கள். இதற்கு "லம்பெக்டாமி' என்று சொல்லுவார்கள். வேறு இடங்களை பாதிக்காமல் இருக்க அந்த இடத்தில் ரேடியேஷன் சிகிச்சை கொடுப்பார்கள். கீமோ தெரபி என்பது இன்ஜக்ஷன் ஊசி மாத்திரைகள் கொடுத்து குணமாக்குவது. எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சால் குணப்படுத்துவதற்கு ரேடியேஷன் என்று சொல்லுவார்கள். கட்டி பெரியதாக இருந்தால், உடலின் மற்ற பாகங்களுக்கு பரவி விடுவதை தடுக்க மார்பகத்தை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டி வரும். இதை "மாஸ்டெக்டமி' என்று சொல்லுவார்கள்.
அவ்வாறு மார்பகத்தை அகற்றும் போது "லிம்ப்நாட்ஸ்' என்ற சுரப்பிகளையும் அகற்றி விடுகிறார்கள். அந்த சுரப்பிகளும் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற நிலை இருப்பதால். மார்பகங்களை அகற்றுவது என்பது இறுதி கட்ட முடிவு. நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது மட்டும் தான் மருத்துவர்கள் இந்த முடிவு எடுக்கிறார்கள். ரேடியோதெரபி எக்ஸ்ரே கதிர்களை உடலுக்குள் செலுத்துவது, அந்த இடத்தில் மீண்டும் கேன்சர் செல்கள் வராமல் அழிப்பதற்கு செயல்படுகிறது. கிமோதிரபி மருந்துகள் உடலின் மற்ற பாகங்களில் (அவை) செல்கள் பரவாமலே தடுப்பதற்கு செய்யப்படுகிறது. இவை தொடர்ந்து ஆறு மாதங்கள், ஒரு வருடம் தேவைப்படும். நோயின் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், மார்பக புற்று நோய், முற்றிலும் குணமாவதற்கு மிகவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
மற்றொரு முக்கிய விஷயம் டயாபடிஸ் ஆஸ்துமா, இதயம், மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அந்த நோயாளி உயிர் வாழும் வரை குறிப்பிட்ட மருத்துகள் தினமும் அல்லது தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கேன்சருக்கு அப்படி அல்ல. கேன்சர் குணப்படுத்தப்பட்ட பிறகு, தொடர்ந்து மருந்தோ, சிகிச்சையோ எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சினிமா படங்கள், "டிவி' தொடர்கள், தொடர்ந்து கேன்சரை மிகவும் தவறான கண்ணோட்டத்திலேயே சித்தரிக்கிறார்கள். கேன்சர் என்றாலே உடனே மரணம் என்பது மாதிரி படமாக்குகிறார்கள். மிகவும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. ஒரு பெரிய மீடியாவில் தவறான எண்ணம் பரவும் வகையில், பெரிய பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது, அவர்கள் சமுதாயத்திற்கு செய்கிற பெரிய தீங்கு, அநீதி என்பதை மீடியாக்காரர்கள் தயவு செய்து உணர வேண்டும். உங்கள் கதையில ஒரு காரெக்டரை முடிக்க வேண்டும் எடுத்துவிட வேண்டும் என்றால் உடனே அவருக்கு கேன்சர் என்று காண்பிக்காதீர்கள். வேறு ஐடியா தேடுங்கள். உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளில் கேன்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மருந்துகள் இப்போது பரவலாக்கப்பட்டுள்ளன. நிபுணர்களான டாக்டர்கள் பல நகரங்களிலும், சென்னையிலும் கூட கருத்தரங்கு நடத்துகின்றனர். கேன்சரை குணப்படுத்துவதற்காக, இந்தியர் வெளி நாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் கண்டிப்பாக இல்லை. இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு அந்த மாதிரி நிலை இருந்திருக்கலாம். இப்போது கண்டிப்பாக இல்லை.
எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், கேன்சருக்கு சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகளும் இங்கு உள்ளன. மேல் நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிகிச்சைக்கு ஆகக் கூடிய செலவு, இங்கு ஆகும் செலவை விட மிகவும் அதிகம். கேன்சருக்கு எதிரான போராட்டத்தில் முதல் கட்டம், கேன்சர் என்ற பயத்தைப் போக்குவது தான். கேன்சர் குணமடைந்து ஏராளமானவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ முடியும். குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ், போலியோ, அம்மை போன்ற நோய்களை ஒழிப்பதற்கு அரசும் சரி, தனியார் தொண்டு நிறுவனங்களும் சரி நிறைய விளம்பரங்கள் செய்கிறார்கள். ரேடியோ, "டிவி' ஆகியவை இதற்கு உதவி செய்கிறார்கள். அந்த அளவு கேன்சர் ஒழிப்பில், ஏன் இந்த மீடியா அக்கறை காட்டவில்லை என்று தெரியவில்லை. தூர்தர்ஷன், ரேடியோ, தனியார் டிவி சேனல்கள், தனியார் ரேடியோக்கள், எல்லா மீடியாக்களும் சேர்ந்து கேன்சரை குணப்படுத்த முடியும் என்பதையும், மார்பக கேன்சரை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்து, குணப்படுத்த பெண்கள் தங்கள் மார்பகங்களை தாங்களே அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் தொடர்ந்து தங்கள் மீடியா மூலம் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதில் வரவு, செலவு கணக்கு பார்க்காமல், நாட்டிற்கும், நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கும் தாங்கள் செய்யக் கூடிய கடமையாக இதை செய்ய வேண்டும். பாராட்டுதலுக்குரிய தொண்டு இது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி போன்ற பல தர்ம நிறுவனங்கள், மேல் நாடுகளில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்திய கேன்சர் சொசைட்டியும் இந்த விஷயத்தில் நிறைய தொண்டுகள் செய்து வருகிறது. ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
கேள்வி: ஒருவருக்கு கேன்சரை குணப்படுத்தி விட்டால் கேன்சர் மீண்டும் திரும்பி வருமா?
டாக்டர்: ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு குணமாக்கப்பட அநேகமான கேஸ்களில் (மெஜாரிட்டி கேஸ்களில்) கேன்சர் திரும்பி வருவதில்லை. இட் இஸ் கான், போயிந்தி, போயே போச்சு. அதே இடத்தில் திருப்பி வருவதற்கு நூற்றில் ஐந்துக்கும் குறைவான சான்ஸ் தான் உள்ளது. கேன்சர் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு, குணமாகிய பிறகு, ஐந்து வருடங்கள் வரை வராவிட்டால், அது மீண்டும் வரக்கூடிய சான்ஸ் மிகவும் குறைவு. கேன்சரை எதிர்த்து நமக்கு உள்ள ஒரே ஆயுதம் ஆரம்ப நிலையிலேயே அறிந்து உடனே சிகிச்சை பெறுவது தான். இதை மறக்கக் கூடாது. நீங்களே மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ளவும். டாக்டரிடம் செல்லவும், தயங்காதீர்கள்; பயப்படாதீர்கள்.
கேள்வி: வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து கேன்சருக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்களா?
டாக்டர்: நான் முன்னமே சொன்ன மாதிரி, சர்வதேச அளவில், கேன்சருக்கு கிடைக்கக் கூடிய "பெஸ்ட்' சிறப்பான சிகிச்சை இன்று இங்கு சென்னையில் கிடைக்கிறது. மருந்துகள், உபகரணங்கள், அனுபவம், திறமைமிக்க டாக்டர்கள், ஆஸ்பத்திரி வசதிகள் எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. துபாய், கென்யா, ஓமன், நேபாளம், மாலத்தீவுகள், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் உள்பட பல நாடுகளிலிருந்து கேன்சர் நோயாளிகள் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்று, குணமாகி திரும்பச் செல்கிறார்கள். சென்னை அப்போலோ கேன்சர் ஆஸ்பத்திரியில் மட்டும் நான் இதுவரை பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நோய்களுக்கு ட்ரீட்மென்ட் செய்திருக்கிறேன்.
பாகிஸ்தானிலிருந்து பதினான்கு பேர் இலங்கையில் இருந்து பதினெட்டு பேர் உள்பட 120 பேர்கள் இங்கு (அப்போலோ) Bone Marrow Transplantation செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல பாகிஸ்தானியர்கள், "சென்னை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது; ஹோம்லியாகவே நாங்கள் பீல் பண்ணுகிறோம்' என்கிறார்கள். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகவே சற்று நெருடலாக உறவு முறை இருந்து வரும் நிலையில், பாகிஸ்தானியர்கள் இங்கு வந்து கேன்சருக்கு விசேஷ சிகிச்சை பெறுவது, பாராட்டத்தக்கது
நீங்கள் "40 பிளஸ்' வயசா? டாக்டர் ரமேஷ், பி.வி.நிம்மகட்டா பற்றி சில குறிப்புகள்:
டாக்டர் ரமேஷ் பி.வி.நிம்மகட்டா, கேன்சருக்கு சிகிச்சை அளிப்பதில் இந்திய அளவில் தனக்கென்று ஸ்பெஷல் இடத்தைப் பிடித்திருப்பவர். வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான கேன்சர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கனடா, அமெரிக்கா நாடுகளில் பதிமூன்று ஆண்டுகளும், அப்போலோ சென்னை மருத்துவமனையில் பதினெட்டு ஆண்டுகளாகவும் சிகிச்சை அளித்து வருகிறார். தகுதியானவர்களுக்கு தேவையானவர்களுக்கு, சென்னை அப்போலோ மருத்துவமனை சிகிச்சையில் நிறைய சலுகை அளித்து வருகிறது. தேனாம்பேட்டையில் அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி 1992ல் கட்ட ஆரம்பித்த போது, டாக்டர் ரமேஷ் மட்டும் தான் கேன்சர் பிரிவில் மருத்துவர். ஆனால், அப்போதே, அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி, இதை முழுமையான கேன்சர் சென்டராக உருவாக்க திட்டமிட்டு, செயல் புரிந்தார். 1993ல் இந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. அமெரிக்காவில் 1972ம் ஆண்டு ஓஹாயோ நகரில் பாத்தாலஜிஸ்டாக டாக்டர் ரமேஷ் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கேன்சர் சிகிச்சையில் செய்யப்படும் மருத்துவ ஆராய்ச்சிகள் முன்னேற்றங்களைப் பற்றி நேரில் முழுமையாக அறிந்து இந்த பயங்கள் நோயை குணப்படுத்துவதற்காகவே தன் வாழ்வை முழுவதும் அர்ப்பணிக்க தீர்மானித்தார். மருத்துவத்தின் மற்ற பல்வேறு பிரிவுகளில் ஒன்றில் இவர் விரும்பி ஈடுபட்டிருந்தால், நிறைய செல்வமும் (பணமும்) டென்ஷன் இல்லாத வாழ்க்கை முறையும் இவருக்கு கிடைத்திருக்கும்.
இந்த கொடிய நோயை, சிகிச்சை செய்து குணப்படுத்தி நார்மலான வாழ்க்கை அவர்கள் வாழ ஆரம்பிப்பதை பார்க்கும் போது சரி, சிகிச்சையின் மூலம் அவர்களது கஷ்டத்தை குறைக்கும் போதும் சரி, தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக டாக்டர் ரமேஷ் குறிப்பிடுகிறார்.
பாப்ஸ்மியர் டெஸ்ட் என்ற எளிதான டெஸ்ட் மகப்பேறு மருத்துவர்கள், பெண் டாக்டர்கள் செய்யக் கூடிய ஈசியான டெஸ்ட்டை, 25 வயதிற்கு மேற்பட்ட திருமணமான பெண்கள் செய்து கொண்டால் மிகவும் நல்லது. கர்ப்பப்பையில் கேன்சர் வரக்கூடிய நிலையை இந்த டெஸ்ட்டின் மூலம் கண்டுபிடித்து விடலாம். டாக்டர் ரமேஷ் நன்றாக பாடுவார். நண்பர்கள், உறவினர்களின் பார்ட்டிகளில் இவரது குரல் வளத்தை கேட்கலாம். புத்தகங்கள் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, அரவிந்தர் போன்றவர்களின் புத்தகங்களை விரும்பி படிக்கிறார். ரிலாக்ஸ் செய்து கொள்ள பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பி.ஜி.ஒட்ஹவுசின் புத்தகங்களை நிறைய படிக்கிறார்.
மணமாகாத பெண்களா?: திருமணமாகாத பெண்களுக்கு, கன்னிப் பெண்களுக்கு, கர்ப்பப்பை கேன்சர் வருவதில்லை.
கேன்சருக்கு சிகிச்சை அளிப்பது பற்றிய மிகவும் பயனுள்ள ஸ்பெஷல் புரோக்ராம் ஒன்றை டாக்டர் ரமேஷ் தற்போது கம்ப்யூட்டரில் தயாரித்து வருகிறார். இந்தியாவில் உள்ள கேன்சரை குணப்படுத்தும் 300க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு இதை இலவசமாக வழங்கவிருக்கிறார் இன்னும் சில மாதங்களில். உலகிலேயே கேன்சர் மட்டும் தான் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவக் கூடிய கொடிய நோய். கேன்சர் வந்திருப்பதை கண்டுபிடிப்பதிலும், குணப்படுத்துவதிலும் டாக்டர் ரமேஷ் பகவத்கீதையின் தத்துவத்தை முழுவதுமாக கடைபிடிக்கிறார். முயற்சிகள் நாம் செய்கிறோம், பலனை கடவுள் தான் அளிக்கிறார். பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் வரக்கூடிய கேன்சரை, ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்த முடியும். தங்களைத் தானே பெண்கள், முழுமையாக ரெகுலராக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதற்கான சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது நம் அனைவரின் கடமை ஆகும் என்று மீண்டும் வலியுறுத்துகிறார். அமெரிக்காவிலேயே குறைஞ்சி வருது...: அமெரிக்காவில் கடந்த 1975ம் ஆண்டு எடுத்த கணக்குப்படி, 13 பெண்களில் ஒருவருக்கு, அல்லது 7 சதவீத பெண்களுக்கு மார்பக கேன்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆண்டு அமெரிக்காவில் மார்பக கேன்சர் என்று 90 ஆயிரம் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அப்போது மட்டும் 33 ஆயிரம் பேர் இறந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மார்பக கேன்சரால் தான் இறந்திருக்கின்றனர். அப்போது தான் மார்பக கேன்சரின் அபாயம் பற்றி உலகுக்கு தெரிந்தது. டாக்டர்கள் ஆராய்ச்சியில் இறங்கினர். ஒரு பக்கம் நோயை போக்கும், தடுக்கும் வழிகளை கண்டறிந்தனர். இன்னொரு பக்கம், கேன்சர் எப்படியெல்லாம் வருகிறது என்று ஆராய்ந்தனர். ஆனால், இதனால் தான் வருகிறது என்று யாரும் கண்டுபிடிக்கவில்லை. இன்று வரை இது தொடர்கிறது. நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுகமில்லீங்க அந்த டாக்டர்...இது எப்படியிருக்கு...நோயாளி சொல்றார்!: பெண்களுக்கு வரும் மார்பக கேன்சர் முற்றிலும் குணமாக கண்டிப்பாக வழிகள் உண்டு. எல்லா நோய்களையும் போல கடைசி நிமிடத்தில் தான் டாக்டரிடம் பலர் வருகின்றனர். அப்போது, எப்படி டாக்டரால் உத்தரவாதம் தர முடியும்?
சில பேரை பார்த்திருப்பீங்க, "நான் போகாத டாக்டர் இல்லை, பார்க்காத வைத்தியம் இல்லை, என்ன பயன்? நாலு லட்சம் போனது தான் மிச்சம்' என்பார்கள். உண்மையில், இவர்கள் வியாதி, 90 சதவீதம் குணமாகி இருக்கும். அதற்குள் விரக்தி வந்தால்...
பொதுவாகவே நோயாளிகள் நோய் வந்த பின் தான் புலம்பித்தவிக்கின்றனர். "என்னத்த டாக்டர்? சுகமில்லீங்க...' என்று சுகமில்லாத இவர் டாக்டரை பற்றி கமென்ட் அடிப்பார். என்ன கொடுமை பாருங்க, நாம ஒழுக்கம் கெட்டு, முறை தவறி, வாழ்க்கையை சரிவர நடத்தாததன் விளைவு தான் எந்த நோயும். அப்படியிருக்க, டாக்டரை குறை சொல்லி என்ன பயன்? மார்பக புற்றுநோயை பொறுத்தவரை, முதல் நிலை என்பது அறிகுறி தான். அப்போதே டாக்டரை பார்க்கலாம். பார்த்தால், 97 சதவீதம் உயிர் பிழைக்கும் சான்ஸ் உண்டு. இரண்டாவது நிலையில், அதாவது, நடுத்தர நிலையில் கேன்சரில் ஒருவர் வந்தால், அவர் எடுத்துக்கொள்ளும் சிகிச்சையை வைத்து 70 சதவீதம் உயிர் பிழைக்கும் சாத்தியம் உண்டு என்று சொல்லலாம். மூன்றாம் நிலை தான் மோசமானது. முற்றிய நிலையில் வரும் இவர்களில் 38 சதவீதம் பேருக்கு தான் உயிர் பிழைக்கும் நிலை உண்டு. ஆனாலும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்து தான் எதுவும் உள்ளது. யாரும் நீண்ட நாள் வாழலாம்.
தொடவே கூச்சப்பட்டீங்கன்னா...: பலரும் மார்பகத்தை தொடவே கூச்சப்படறாங்க. இது தவறு. தன்னோட மற்ற உறுப்புகள் போலத்தான் அதுவும். உணர்ச்சிக்கு எளிதில் ஆட்படக்கூடியது என்பதால், அதை இன்னும் ஜாக்கிரதையாக தானே பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் சுத்தமாக, ஆரோக்கியமாக வைப்பது முக்கியம் இல்லையா?
டாக்டர் சொல்கிற படி, நீங்கள் எந்த வயதினராக இருப்பினும், மசாஜ் பாணியில், உடற்பயிற்சி செய்யுங்கள். மார்பத்தை பொறுத்தவரை இந்த பயிற்சி முக்கியம். இதற்காக தனி பயிற்சி வகுப்புகள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன. ஆனால், நீங்களே, சில சாதாரண பயிற்சிகளை செய்யலாம். கடந்தவாரம் சில பயிற்சி பற்றி சொல்லியிருக்கிறார். இதோ சில பயிற்சிகளை செய்யுங்கள். இது தான் முக்கியம். வந்த பின் பதைப்பதை விட வருமுன் பாதுகாப்பது நல்லது தானே.
இதனாலையா? அதனாலையா? நீங்களே குழம்பாதீங்க!: மார்பக கேன்சர் யாருக்கும் வரும். யாருக்கும் வராமலும் இருக்கலாம். வந்து விட்டால், அடடா! அப்பவே நினைச்சேன், பழக்க வழக்கம் நல்லா இருந்தா ஏன் வரப்போகுது...ன்னு வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. பழக்க வழக்கம் காரணமா வருதுன்னு யாரும் சொன்னது கிடையாது. நமக்கு உடம்பில் பல ஹார்மோன்கள் சுரக்கிறது. எதுவும் சரிவர சுரந்தால் நல்லது. அதிகமாக சுரந்தால், எங்கு போவது? கண்டபடி அலையும் தானே. இப்படி தான் எஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகமாக சுரப்பதன் விளைவு தான் மார்பக கேன்சர் கட்டி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கெல்லாம் எஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்கிறது என்பது தான் கேள்வி. அப்படி அதிகமாக சுரப்பவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றபடி ஒரு குறிப்பிட்ட காரணத்தால் தான் வருதுன்னு இதுவரை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை.
பெண் டெக்னீஷியன்கள் இல்லையா? அப்படின்னா பெண்கள் வரமாட்டாங்க! நம் கலாசாரப்படி வெளி ஆண்களிடம், அவர்கள் டாக்டரே ஆனாலும், தங்கள் உறுப்புக்களை சோதிக்க அனுமதிப்பதில்லை. சில முற்றிய நோய்களின் போது இது தவிர்க்க முடியாதே தவிர, மற்றபடி, சாதாரண நிலையில் பெண்கள், எப்போதும் பெண் டாக்டரிடம் தான் போவார்கள். இது இயல்பு. பண்பாட்டின் அடிப்படையில் வந்தது.
டாக்டர்களை பொறுத்தவரை கடவுள் மாதிரி. நீதிபதியிடம் மறைக்கக்கூடாது என்பது போல டாக்டரிடம் உடல் பற்றி மறைக்கக்கூடாது. இது புனிதமான தொழில். இப்படிப்பட்ட மருத்துவ உலகில், டாக்டர்களில் கூட பெண்கள் வந்து விட்டனர். ஆனால், சில டெக்னீஷியன்கள் தான் இன்னும் ஆண்களே இருக்கின்றனர். இதனால், தான் மார்பக கேன்சர் போன்ற நோய்கள் வந்தால் ஆண் டெக்னீஷியன்கள் என்பதால் தயங்குகின்றனர். "மம்மாலஜி' தொடர்பான பெண் டெக்னீஷியன்களை அதிகம் நியமிக்க வேண்டும். மார்பகம் என்றாலே பெண்களுக்கு தான், அதனால், அது உட்பட சில உறுப்புகளை பரிசோதிக்க எப்படி பெண் போலீசார் இருக்கின்றனரோ, அப்படி பெண் டெக்னீஷியன்களை நியமிக்கலாமே. அதனால் ஒரு தைரியம் வந்து பலரும் வருவார்கள்.
******
* நீங்க தான் உஷாரா இருந்தா "பிளஸ்' வயசுல கவலையே வேணாம்!
* இதில் வெட்கப்பட தேவையே இல்லை
* வெட்கம், தயக்கம் நோயை அதிகரிக்கும்
* எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமோ அது நல்லது
* மறைக்க வேண்டிய விஷயம் அல்ல இது
* வந்த பின் பதைத்து ஒரு பயனும் இல்லை
* மார்பக கேன்சரும் தீர்க்கக்கூடியதே
*****
- நான் என் வாழ்நாள்ல ஒரு நாள் கூட டாக்டரிடமே போனது கிடையாது. நல்லா வச்சிருக்கேன் பாருங்களேன்.
- சேச்சே! நான் எல்லாம் காண்பிக்க மாட்டேன், ஆம்பிள டாக்டர்கிட்டே எப்படி காட்டறது?
- என்னவோ! அழுத்தினா லேசா கட்டி போல உள்ளாற தட்டுப்படுது, அது தானோ?
- ஆமா! காட்டி என்னாவப்போகுது, போனாப்போறேன் போங்க, இனி ரொம்ப தேவையாக்கும்.
இப்படி ஏதாவது விஷயும் தெரியாமல், விவரம் தெரிந்தும் விதண்டாவாதமாக, எல்லாம் அறிந்தும் வீண் பிடிவாதமாக பேச வேண்டாமே. எந்த நோயும் யாருக்கும் வரலாம். வராமலும் இருக்கலாம். இதனால் தான் இந்த நோய் வந்தது என்று நாமே தீர்மானிப்பது எப்படி சரி? பரம்பரை நோய் என்பதால் தனக்கு வந்திருக்கு?ன்னு எப்படி சொல்லலாம். "அந்த பழக்கத்துனால தாம்பா வந்தது. இதப்போய் எப்படி டாக்டர்கிட்டே சொல்றது?, வந்தா வரட்டும், போவப்போவது ஆறிலும் போகும், அறுபதிலும் போகும் என்று ஏதோ எல்லாத்தையும் அனுபவிச்சவங்க போல பேசுவதா? விட்டுடுங்க பெண்ணே!
(என்னாது? எங்களுக்கு இல்லையா சமாச்சாரம்?-ன்னு ஆண்கள் நினைப்பது புரியுது. நீங்க படிக்கலாம். அதன் மூலமா மனைவியை நல்லா கவனிச்சிக்குங்க சார், எங்கத்த...ஆபீசே சரியா இருக்குன்னு அலுத்துக்காதீங்க) எல்லாத்தையும் மனசுல போட்டு குழம்பிக்கறதை. அது தான் நல்லது. எதையும் லேசாக எடுத்துக்குங்க, எதையும் தாமதம் செய்யாதீங்க, எதிலும் தெளிவா இருங்க, எதற்கும் தயக்கம் வேண்டாமே.
தொடர்ந்து ஆண்களுக்குரிய கேன்சர் பற்றிய கட்டுரையைப்படிக்க கீழுள்ள இணைப்பில் செல்க..http://www.banderasnews.com/0512/hb-cutcancerrisk.htm
Posted by Manuneedhi - தமிழன் at 5:58 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : 2003-ல் எங்கோ படித்த பேட்டி : மன்னிக்க : பத்திரிகை பெயர் மறந்ததற்கு
கலக்(ங்)கப்போவது யாரு? கலைஞர் டிவி
Posted by Manuneedhi - தமிழன் at 5:29 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : குருத்து
இன்றைய குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
Posted by Manuneedhi - தமிழன் at 1:27 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 104 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 1:22 PM 0 comments (நெற்றிக்கண்)
- சேதுத்திட்டத்தின் போது இராமர் பாலத்தை காப்பாற்ற நடவடிக்கை: இந்திய அரசு அறிவிப்பு : சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றும் போது, இராமர் பாலம் என்று கூறப்படும் பகுதிக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்படின் மாற்றுப் பாதையில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை செயற்படுத்துவது குறித்தும் ஆராயப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்று வழிகள் குறித்து ஆராய்வதற்கு மூன்று மாதகால அவகாசம் வேண்டும் என்றும், அந்தக் காலப்பகுதியில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இராமர் பாலத்தைப் பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய மத்திய அரசு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு ஒன்றில் இதனைத் தெரிவித்த மத்திய அரசின் வழக்கறிஞர், இது தொடர்பில் மத்திய அரசும், இந்திய தொல்பொருள ஆய்வு நிறுவனமும் அளித்த பிரமாணப் பத்திரங்களை தாம் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். மத்திய அரசின் கூற்றை வைத்துப் பார்க்கும் போது இராமர் பாலம் தற்போதைக்கு இடிக்கப்படாது என்பது போல் தென்படுவதாகவும், எனினும் மூன்று மாத கால முடிவில் நிபுணர் குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி முடிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள் http://www.bbc.co.uk/tamil/2115.ram
- அமெரிக்க அதிபர் மீது இரானிய மதத்தலைவர் விமர்சனம் : இரானிய அதியுயர் தலைவர் அயதொல்லா கமனேய் இரானிய தலைநகர் டெஹ்ரானில் நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அமெரிக்க அதிபர் புஷ் மீது கடுமையான தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்
- பாகிஸ்தானுக்கு அக்டோபரில் திரும்பப் போவதாக பேனசீர் பூட்டோ அறிவிப்பு : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசீர் புட்டோ அவர்கள், தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்ட பல ஆண்டுகால நாடு கடந்த அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு, அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்
- இராக் அரசு பெரிய முன்னேற்றம் காணவில்லை : இராக்கில் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை நிர்ணயிக்கும் 18 அளவீடுகளில், இராக் அரசு பெரிய அளவில் கூடுதல் முன்னேற்றம் காணவில்லை என்று அமெரிக்க அதிபரின் அலுவலகம் அறிவித்திருக்கிறது
- வெப்ப அதிகரிப்புக்கு மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றத்தை ஏற்பதாக அமெரிக்க அதிகாரபூர்வ விஞ்ஞானி அறிவிப்பு : பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றமே, உலகின் வெப்பத்தை அதிகப்படுத்துவதற்கான பிரதான காரணி என்ற, 90 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பை தாம் ஏற்பதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்
Posted by Manuneedhi - தமிழன் at 12:54 PM 0 comments (நெற்றிக்கண்)
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை-பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்-பதற்றம்
Posted by Manuneedhi - தமிழன் at 1:59 AM 0 comments (நெற்றிக்கண்)