கன்னடர்களுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் ரஜினி கலந்து கொள்வாரா?
கர்நாடகத்தின் அட்டூழியங்களையும், அராஜகத்தையும் கண்டித்து தமிழ் திரைப்பட உலகம் வரும் 4-ந்தேதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளது. இந்த உண்ணாவிரத்திதில் கன்னடரான ரஜினி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அப்படி அவர் கலந்து கொள்ளவில்லை எனில் திரைப்பட சங்கத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் இப்பொழுதே பரபரப்பான ஊகங்கள் கிளம்பத் தொடங்கி விட்டது.
ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கர்நாடகா, தமிழக மாநிலங்களுக்கிடையே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென கன்னட அமைப்புக்கள் வெறித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் திரைப் படங்கள் வெளியிடப்பட்ட 3 திரையரங்குகள் பெஙகளூருவில் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.
கர்நாடகத் தமிழர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டசபை கர்நாடாகவைக் கண்டித்து கண்டனத் தீமானம் நிறைவேற்றி உள்ளது. அதே போல் தமிழ் திரை உலகம் கன்னட அமைப்புக்களுக்கு எதிராக களம் இறங்கி உள்ளது.
இதுபற்றி விவாதிக்க இன்று அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கன்னட அமைப்புக்களைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 4-ம் தேதி உண்ணாவிரதம் இருப்பது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதில் ரஜினி உள்ளிட்ட கன்னடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடிகர்கள் கலந்து கொள்வார்களா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஒருவேளை ரஜினி உள்ளிட்ட சென்னை வாழ் கன்னட நடிகர்கள் பங்கேற்காவிட்டால் என்ன நடவ்டிக்கை எடுப்பது என்றும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதம் தவிர பல அடுக்கு தொடர் போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஏப்ரல் 4-ம் தேதி நடக்கும் இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். போராட்டம் நடைபெறும் இடம் காவல்துறையினருடன் விவாதித்து விட்டு அறிவிக்கப்படும்.
போராட்டம் நடைபெறும் நாளின்போது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெறாது. டப்பிங் பணிகள் ரத்து செய்யப்படும் தியேட்டர்களில் படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்படும்.
அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கலைஞர்களுக்கு திரைத் துறையின் எந்த சங்கமும் ஒத்துழைப்பு தராது. இது திரையுலகின் ஒருமித்த முடிவு என்றார்.
அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கலைஞர்களுக்கு திரைத் துறையின் எந்த சங்கமும் ஒத்துழைப்பு தராது. இது திரையுலகின் ஒருமித்த முடிவு என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்த்துக்கும் இந்த போராட்டம் பொருந்துமா என்று கேட்டபோது குறுக்கிட்ட நடிகர் சத்யராஜ், "தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு, தமிழனோட சோத்தை திங்கிறவன் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ளவேண்டும். இல்லைன்னா அவர்கள் இங்கே இருக்கவே முடியாதுங்க" என்றார் ஆவேசமாக.
ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையில், பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் மாபெரும் போராட்டத்தை நடிகர் சங்கம் நடத்தியது நினைவிருக்கலாம். அந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அதில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
ஆனால், அர்ஜூன் உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்திலோ அல்லது ரஜினியின் உண்ணாவிரதத்திலோ பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.