September 25, 2007

இன்றைய குறள்

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லலைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

"பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது" - சுவாமி விவேகானந்தர்

  • யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது : உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
  • அதிபராகத் தேர்தெடுக்கப்படாவிட்டால், இராணுவப் பொறுப்பில் தொடர முஷாரஃப் திட்டம் : அதிபர் முஷாரஃப்பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள், மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு தேர்தெடுக்கப்படாவிட்டால், இராணுவத் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள அவர் எண்ணியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
  • காலநிலை மாற்றம் தொடர்பில் உலகத் தலைவர்களின் உடனடி நடவடிக்கை தேவை என்கிறார் ஐ.நா தலைமைச் செயலர் : காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலகத் தலைவர்கள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
  • புவி வெப்பமடைதலுக்கு மனிதனின் செயற்பாடே காரணம்: பிபிசி ஆய்வில் தகவல் : இதற்கிடையே, பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், புவி வெப்பமடைதலுக்கு, ஒரு முக்கிய காரணியாகக மனிதனின் செயற்பாடே இருக்கிறது என்று கூறியுள்ளனர்
  • பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை : அதிபர் புஷ் பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்
  • யார் இந்த பர்மா ஜெனரல்கள்? : பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்
  • இன்றைய (செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மேட்ரிமோனியல் பெயரில் இப்படியொரு மோசடி!

நூறு பெண்களை ஏமாற்றிய பலே ஆசாமி சிக்கினான் : திருமண வெப்சைட்டுகள் மூலம் மோசடி

சென்னை : திருமணம் செய்து கொள்வதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவன் சிக்கினான். திருமண வெப்சைட்டுகள் மூலம் ஐ.ஏ.எஸ்., என்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் போலியாக விளம்பரம் கொடுத்து இதுவரை ஐந்து பெண்களை திருமணமும் செய்து கொண்டுள்ளான். திருமண ஆசை காண்பித்து, பல பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தும் பணத்தை சுருட்டியிருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நெய்வேலியைச் சேர்ந்தவர் லியாகத் அலி(34); கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவன். நெய்வேலியிலேயே கம்ப்யூட்டர் மையத்தை நடத்திய லியாகத் அலிக்கும், கடலூரைச் சேர்ந்த சபரியாவுக்கும் (28) அவரது பெற்றோரால் கடந்த 2002-ல் திருமணம் நடந்தது. தற்போது ரூபினா (2) குழந்தை உள்ளது. நெய்வேலியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி நஷ்டமடைந்ததால், பின்னர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கம்ப்யூட்டர் மையத்தை தொடங்கினான். அங்கு கம்ப்யூட்டர் மையம் என்ற பெயரில், கள்ள ரூபாய் நோட்டு கும்பலுடன் செயல்பட்டு ஏமாற்றிய வழக்கில் திருச்சி பாலக்கரை போலீசாரால் லியாகத் அலி கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஜாமீனில் வெளியே வந்த லியாகத் அலி, மணமாலை டாட் காமில் பணிபுரிந்த நண்பர் முருகானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் கைதேர்ந்த லியாகத் அலி, "ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், சுதாகர் ஐ.ஏ.எஸ், சந்தீப்சிங் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் புதிய வெப்சைட்டை தொடங்கினான். அந்த வெப்சைட்டின் முகவரி மற்றும் மொபைல் போன்களின் நம்பரை மட்டுமே கொடுத்து மணமாலை டாட் காமில் நண்பரின் உதவியுடன் வரன்களை தேடுவதுபோல் விளம்பரப்படுத்தினான். குறிப்பாக விவாகரத்தான, ஊனமுற்ற, விதவை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்ததால் விளம்பரத்தை பார்த்து பல பெண்கள் ஆச்சரியப்பட்டனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சங்கீதா, சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரும், "ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், லண்டன்' என்ற விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்தார். மொபைல்போனில் மட்டுமே சங்கீதா மற்றும் அவரது தாயிடம் லியாகத் அலி முதலில் பேசினான். தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே லண்டன்தான் என்றும், லண்டனுக்கு எந்த விமானத்தில் செல்வது, எவ்வளவு லக்கேஜ் விமானத்தில் எடுத்து சென்றால் அனுமதிப்பர், மேற்கொண்டு லக்கேஜ்ஜை கார்கோவில் அனுப்பினால் குறைந்த கட்டணமே வசூலிப்பர் மற்றும் உலக விஷயங்களை அனைத்தும் கரைத்து குடித்தவன் போல் இன்டர்நெட்டில் இருக்கும் தகவல்களை திரட்டி அசத்தினான். இதனை உண்மையென நம்பிய சங்கீதா குடும்பத்தினர், லியாகத் அலி சொல்வதை கேட்டு ஆச்சரியப்பட்டனர். அவரை சந்திக்க மும்பைக்கு சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர். லண்டனில் இருந்து தற்போதுதான் வந்ததாகவும், வரும் வழியில் லக்கேஜ் தவறவிட்டதாகக் கூறி பதட்டமடைவதுபோல் "பாவ்லா' காண்பித்தான். இன்னும் இரண்டு நாளில் லண்டன் போக வேண்டுமே விசா எடுக்க பணம் இல்லையே என்று கூறியதும், பெற்றோரிடம் இருந்து சங்கீதா லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொடுத்தார். அந்த பணத்தில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக செலவழித்து வந்தான்.
ஈரோட்டில் அரசு அதிகாரியாக பணிபுரியும் விவேகானந்தன், தனது தங்கை சகானாவின் ஊனமுற்ற மகளுக்கு மணமாலை டாட் காமில் விண்ணப்பித்தார். இவரும் மணமாலை டாட் காமில் "சுதாகர் ஐ.ஏ.எஸ் விளம்பரத்தைக் கண்டு ஏமாந்தார். விமானத்தில் வந்த லியாகத் அலியை கண்டு விவேகானந்தன் உள்ளிட்ட பலர் நல்ல வரன் கிடைத்துவிட்டதாக நினைத்தனர். பேச்சுவாக்கில் விவேகானந்தனின் மகனுக்கு தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி இன்ஜினியரிங் சீட்டு வாங்கித் தருவதாக லியாகத்அலி ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக பெற்றான். சந்தேகமடைந்த விவேகானந்தன், லியாகத் அலியை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மீதப் பணத்தையும் கொடுத்தால் சீட்டு வாங்கித் தருவதாக ஏமாற்ற முயன்ற லியாகத் அலியின் போட்டோவை வைத்து அவரது சொந்த ஊரான நெய்வேலிக்கு சென்று விசாரித்தார். லியாகத் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வடக்கு இணை கமிஷனர் ரவியிடம் விவேகானந்தன் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து, இணை கமிஷனர் ரவியின் தனிப்படை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார் விவேகானந்தனின் மொபைல்போன்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, கடலூர் கூத்தப்பாக்கம் மனைவியின் வீட்டில் லியாகத் அலியை தனிப்படை போலீஸ் சுற்றிவளைத்தது. இவனிடம் நடத்திய தொடர் விசாரணையில், நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீமா (26), மும்பையைச் சேர்ந்த சித்ரா(27), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜூடு (25) உள்ளிட்ட ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும், 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.
பெண்களை மயக்கியது எப்படி? : சென்னையில் கைது செய்யப்பட்ட லியாகத் அலி, பெண்களை ஏமாற்ற "பாரத் மெட்ரிமோனி.காம்" என்ற இணைய தளத்தையே அதிகளவு பயன்படுத்தி உள்ளான். இவனது தந்தை நூருல்லா கான் நெய்வேலியில் வசித்து வருகிறார். தாய் ஜமீலா பஹ்ரைன் நாட்டில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவனது தம்பி இப்ராகிம், தங்கை ரஹ்மத் பீவி ஆகியோரும் உள்ளனர். மணமகன்களை தேடி இணைய தளத்தில் பதிவான இளம்பெண்களை தொடர்பு கொண்டு அவர்களது வசதிகளை கேட்டறிந்து அதற்கேற்ப தன்னை சாப்ட்வேர் இன்ஜினியர் என்றோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றோ அறிமுகப்படுத்திக் கொள்வான். பிறகு அவர்களை தான் தங்கியிருக்கும் லாட்ஜூக்கோ, கெஸ்ட் அவுசிற்கோ வரவழைத்து அவரது பாஸ்போர்ட்டை பெறுவான். வெளிநாட்டுக்குச் செல்ல விசா எடுக்க வேண்டும் என்று கூறி பணத்தையும் பெற்றுக் கொள்வான். அப்பெண்ணிடம் இருந்து பணத்தை பெற அவன் செய்யும் தந்திரம் வித்தியாசமானது. அப்பெண்ணின் வங்கி கணக்கில் பணத்தை போடச் சொல்லிவிடுவான். பிறகு, அப்பெண்ணின் ஏ.டி.எம் கார்டு மூலமாகவே பணத்தை எடுத்து தரும்படி கூறுவான். இதன் மூலம் அப்பெண்தான் பணத்தை வங்கியிலிருந்து பெற்றதாகவே கருத முடியும் என்ற நிலையை உருவாக்கி தந்திரமாக மோசடி வேலை செய்துள்ளான். ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறி கொண்ட இவன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் செல்வதாக கூறி பல பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளான். திருச்சியில் மட்டும் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளான். இவன், நாட்டில் பல மாநிலங்களிலும் தன் நெட்வொர்க்கை விரிவு படுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்து திருமணம் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இணையதள நிறுவனங்களில் விசாரிக்க முடிவு : திருமணங்களுக்கான இணைய தளங்கள் என்ற பெயரில் செயல்படும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் போலியான தகவல்களை இணைய தளத்தில் அளித்து அதன் மூலம் இளம்பெண்கள் மற்றும் அவரை சார்ந்தோரை ஏமாற்றுவது தடுக்க வழிவகை காணப்படும். இணைய தளத்தில் அளிக்கப்படும் தகவல்கள் குறித்து உறுதி செய்யப்படவேண்டும். அதன் பிறகே இதுபோன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்ளவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். அதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என வட சென்னை போலீஸ் இணை கமிஷனர் ரவி தெரிவித்துள்ளார்.
சில பெண்கள் லியாகத் அலியின் ஆங்கில பேச்சிலும், ஆடம்பரத்திலும் மயங்கி தனது கற்பையும் பறி கொடுத்துவிட்டனர். ஊட்டி, கொடைக்கானலில் "இன்ஸ்பெக்ஷன்' போகிறேன் என்று பல பெண்களிடம் கூறி, அவர்களை அங்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளான். குறிப்பாக, மாப்பிள்ளை கிடைக்காமல் தவிக்கும் பெண்களையும், ஊனமுற்ற பெண்களின் இயலாமையையும் தனக்கு சாதகமாக்கி, கற்பை சூறையாடியுள்ளான். கைதான லியாகத் அலியிடம் இருந்து கார், லேப்டாப் கம்ப்யூட்டர், கேமரா, இரண்டு மொபைல் போன்கள், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவரிடம் ஏமாந்தவர்களின் விவரம் மற்றும் வேறு யாராவது பின்னணியில் செயல்படுகின்றனரா என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.