December 03, 2007

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்" - நவின்

மதிப்பிற்குரிய திரு.அண்ணா கண்ணன் அவர்களை "நிலாச்சாரலுக்காக" நான் எடுத்த செவ்வி - கவிஞர், இதழாளர், ஆய்வாளர், 18 நூல்களின் ஆசிரியர் அண்ணா கண்ணன். இவரின் இரு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்ந்து இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பைப் பதிந்திருக்கிறார். அமுதசுரபியில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிவிட்டு, இப்போது இணைய இதழ் ஒன்றின் ஆசிரியராக இருக்கிறார். 'நான் பிறக்கும்போதே பேனாவோடுதான் பிறந்தேன், எனது லட்சியமே எழுத்து, எழுத்தே என் மூச்சு' என்றெல்லாம் பிதற்றும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளாத, ஒரு பாசாங்கில்லாத கவிஞனை, எழுத்தாளனை அண்ணா கண்ணன் மூலமாகப் பார்க்கிறேன்.
"கிழிந்த ஆடைகளை என் அம்மா தைத்துப் பயன்படுத்துவார், நான் அவர் வழியில் வருகிறேன். கிழிந்த ஆடைகளைக் கூடுமானவரை தைத்துப் பயன்படுத்துவது, பொருளை முழுமையாகப் பயன்படுத்தும், எதையும் வீணென்று தூக்கி எறியாத குணத்தினாலேயே. அந்த நேரங்களில் விரும்பி இருந்தால், இன்னும்கூட தாராளமாகச் செலவு செய்திருக்க முடியும். ஆயினும் ஒவ்வொன்றிலும் சிக்கனம் பேணும் விருப்பத்தினால் அவ்விதம் வாழ்ந்தோம், வாழ்கிறோம். கைக்குட்டை உருவானதும் ஜன்னல் விரிப்புகள், பழைய சேலையிலிருந்து உருவானதும் இந்தப் பின்னணியிலேயே" என்று அவர் கூறும்பொழுது, அவரின் எளிமை என்னை பிரமிப்புக்குள்ளாக்குகிறது. ஏழ்மையால் எளிமை என்பது வேறு, அது சாத்தியம். ஆனால் எல்லாம் இருந்தும் எளிமை என்பது வேறு, அது அசாத்தியம். அண்ணா கண்ணன் அசாத்தியமான எளிமை மிக்கவர். அவர் நிலாச்சாரலுக்காக என்னோடு சேர்ந்து நினைத்துப்பார்த்தவை...

தங்களின் நூல்கள், பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்...

'பூபாளம்' (1996), 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' (1997) ஆகிய கவிதைத் தொகுப்புகளை என் சொந்தச் செலவில் வெளியிட்டேன். 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' (நிறுவன வரலாறு), 'தகத்தகாய தங்கம்மா' (வாழ்க்கை வரலாறு), 'கலாம் ஆகலாம்', 'டம்டம் டமடம்' (சிறுவர் பாடல்கள்), 'நூற்றுக்கு நூறு' (சிறுவர் சிறுகதைகள்), 'தமிழில் இணைய இதழ்கள்' (எம்.ஃபில். ஆய்வேடு) ஆகிய நூல்களையும் படைத்துள்ளேன். கோலாலம்பூரில் உள்ள உமா பதிப்பகம், பழந்தமிழ்க் காப்பிய நூல்களை எளிய தமிழில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க, இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நள தமயந்தி, சூளாமணி, பாகவதம் உள்ளிட்ட 10 காப்பிய நூல்களை எழுதி வழங்கினேன்.

மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு போன்றவற்றுக்காகப் பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவிலும் பல பரிசுகள் பெற்றேன். நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டிகளில் வென்றேன். கல்லூரிப் பருவத்தில் பாரதியார் சங்கம், பாரதி இளைஞர் சங்கம் எனச் சில அமைப்புகள் நடத்திய கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பெற்றேன். என் இருபதுகளில் பல கவியரங்குகளில் கலந்து கொண்டேன். அவை பெரும்பாலும், சிறந்த கவிதைக்குப் பரிசு வழங்கும் வழக்கம் கொண்ட அமைப்புகள். அப்படி கவிதை உறவு, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் எனச் சில அமைப்புகளின் கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். சில போட்டிகளுக்கு என்னை நடுவராக இருக்குமாறு அழைத்தார்கள். அதன் பிறகு, போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகிக் கொண்டேன்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு, 'இளந்தென்றல்' என்று அழைத்தது. பொன்னடியானின் தமிழ்க் கவிஞர் மன்றம், 'கடற்கரை கவிமுத்து' என்ற பட்டம் அளித்தது. வல்லிக்கண்ணன் முதலிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரின் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு முறை ஒரு கவியரங்கில் நான் கவிதை வாசித்த உடன், அங்கு முன்னிலை வகித்திருந்த கவிஞர் சுரதா, ஒரு ரூபாயை எடுத்து எனக்குப் பரிசாக அளித்தார். வெறும் வாயால் பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். ஆயினும் அறிமுகம் இல்லாத ஒருவர், திடீரென நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ பாராட்டும்போது ஒரு புது உற்சாகம் ஏற்படுகிறது. என் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சில பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் விழாக்களில் பாடியும் வருகிறார்கள் என்று கேள்விப்படும்போது மகிழ்ச்சி உண்டாகிறது.

தங்களின் இரண்டு கவிதைகள் மட்டும் 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விசேஷ காரணம் என்ன?

தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க...http://www.nilacharal.com/ocms/log/12030709.asp

இன்றைய குறள்

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது

அறத்துப்பால் : வெஃகாமை

மனிதப்பெண் வெடிகுண்டு

முத்தையா முரளீதரன் உலக சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளரான முத்தையா முரளீதரன் உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார். கண்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான இன்று தனது 709ஆவது விக்கெட்டை வீழ்த்தி அவர் உலக சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண்னின் 708 விக்கெட்டுகள் என்கிற சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஞாயிறன்று வார்ண் அவர்களின் சாதனையை சமன் செய்திருந்த முரளீதரன் இன்று இங்கிலாந்து அணியின் பால் காலிங்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தியபோது உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், நன்பர்கள் சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அண்மைய ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் கூறியுள்ளார். முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி இலங்கை அரசு அவரது உருவம் பதித்த தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பாராட்டினை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர். தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

முதல்ல உன் பெயரை மாத்துப்பா

"எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் 80-வது பிறந்த நாள் விழாவில் விழுந்த கிசு கிசு. ரா.கி.ர.விடம் யார் வேலை கேட்டு வந்தாலும் முதலில் அவர்களது பெயரைக் கேட்பாராம். இப்படித்தான் ஒருவர் தனது பெயர் ரங்கராஜன் என்றதும் ரா.கி. "முதல்ல உன் பெயரை மாத்துப்பா, அப்புறம் நீ நல்ல கதை எழுதி பேர் வாங்கிடுவ, அது நான்தான்னு எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க" என்றாராம். அந்த ரங்கராஜனும் திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல எழுத்தாளர் சுஜாதாதான்"

கட்டாய கிராம சேவை: தமிழக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தினை தொடர்கிறார்கள்

மருத்துவ பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக ஓர் ஆண்டு கிராமப்புறங்களில் பணிபுரியவேண்டுமென்ற மத்திய அரசின் யோசனையினை எதிர்த்து தமிழக மருத்துவ மாணவர்கள் தங்கள் போராட்டத்தினை தொடர்கிறார்கள். இப்பிரச்சினை குறித்து ஆராயவென அமைககப்பட்ட சாம்பசிவராவ் குழுவின் அறிக்கைக்கு பிறகே இறுதிமுடிவு எடுககப்படும் என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தும் தங்கள் போராட்டத்தை நிறுத்த மாணவர்கள் முன்வரவில்லை. இன்று தமிழக மருத்துவக் கல்லுரிகளை மாநில அரசு மூடிவிட்டது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும வெளியேறிவிட்டனர். ஆனால் பிரச்சினை எதுவும் எழவில்லை. சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் இன்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் என மாணவர்கள் அறிவித்திருககின்றனர். ஆனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பவேண்டுமென முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிபுணர்குழு அமைத்த பிறகும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற ரீதியில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசிவருவதால் மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருககும் என்றால்கூட, குழுவின் அறிக்கைக்கு பிறகே இறுதிமுடிவு என்று மீண்டும் அவர் உறுதியளித்திருககிறார். எனவே மாணவர்கள் போராட்டதினை கைவிடவேண்டுமென முதல்வர் தனது அறிககையில் கூறியிருககிறார். மாணவர்களோ மத்திய அரசு கிராமப்புற பணித் திட்டம் கைவிடப்படுகிறது என்று அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக் கூறுகின்றனர். இதனிடையே பாட்டாளி மககள் கட்சி நிறுவனரும் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாகடர் ராமதாஸ், கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படைவசதிகளைப் பெருக்கவேண்டும், போதுமான அளவில் மருத்துவர்கள் நியமிககப்படவேண்டுமெனக் கோரி தமிழகம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமென அறிவித்திருக்கிறார்

கரடி பொம்மைக்கு 'முகமது' பெயர் சர்ச்சை: பிரிட்டிஷ் ஆசிரியைக்கு சுடான் அதிபர் மன்னிப்பு

  • சுடான் தலைநகர் கார்டூமில் பள்ளி ஆசிரியையாக இருந்துவருகிறார் கில்லியன் கிப்பன்ஸ்சுடானில், தனது வகுப்பிலுள்ள குழந்தைகள் ஒரு கரடி பொம்மைக்கு 'முகமது' என்று பெயர்வைக்க அனுமதித்த காரணத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஆசிரியைக்கு சுடானின் அதிபர் மன்னிப்பு வழங்கியுள்ளார். முஸ்லிம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-சுடான் இடையிலான உறவுகளிலும் அதற்கும் மேலாய் மேற்கத்திய நாடுகள்-இஸ்லாம் இடையிலும் இச்சம்பவம் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளது
  • ரஷ்ய தேர்தல்: தன் கட்சியின் வெற்றி நியாயமானது என்கிறார் ரஷ்ய அதிபர் புட்டின் : ரஷ்யாவில் நேற்று ஞாயிறன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நியாயமானவை என்றும், ரஷ்யாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் சமிக்ஞையே இந்த வெற்றி என்றும் அதிபர் விளாடிமிர் புட்டின் விபரித்துள்ளார்
  • நவாஸ் ஷெரிஃப் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தடை : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரிஃப் அவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது
  • உலக காலநிலை மாற்றம் குறித்து பாலியில் உலக மாநாடு துவங்கியது : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக, இந்தோனேஷியத் தீவான பாலியில், சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை மேற்கொள்கிறார்கள்
  • வெனிசுவேலா அரசியல் சாசன திருத்தம் குறித்த கருத்து வாக்கெடுப்பில் அதிபர் ஹியூகோ சாவேஸ் தோல்வி : வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ், நாட்டின் அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வர நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த போதிலும், மீண்டும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்
  • வட இலங்கையில் கடும் சண்டை - பலர் உயிரிழப்பு : இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் முகமாலை போர்முனைகளில் இன்று திங்கட்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 42 விடுதலைப் புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது

எவனோ ஒருவன் - க்ளிப்ஸ்