சுயமரியாதை இயக்கப் போராளியும், முதுபெரும் எழுத்தாளருமான குருவிக்கரம்பை சு.வேலு-க்கு அஞ்சலி

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முந்திய திராவிடர்களின் மகத்தான வரலாற்றை, பண்பாட்டு மேன்மையை பல்வேறு நூல்களில் ஏராளமான ஆதாரங்களுடன் உருவாக்கியவர். மறைக்கப்பட்ட திராவிடர்களின் வரலாற்றை வேதங்களையும் உபநிஷதங்களையும் ஆதாரமாகக் கொண்டு இதுதான் வேதம், இவர்தான் புத்தர் என்று பல்வேறு நூல்களில் அம்பலப்படுத்தியவர். சுமார் 22 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 'சிந்து முதல் குமரிவரை', 'இதுதான் வேதம்', 'இவர்தான் புத்தர்' போன்றவை மிகவும் பிரபலமான நூல்கள். இப்பூவுலகில் வாழ்ந்த காலங்களில் ஆற்றிய களப்பணிகளோடு நின்றுவிடாமல், தான் இறந்த பின்பும் தனது உடல் பயன்தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், தனது உடலை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பணிகளுக்காக ஒப்படைக்க கோரியிருந்தார். அண்ணாரின் எண்ணப்படியே அவர்தம் உடலை குடும்பத்தினர் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
பல்வேறு தோழர்களின் உதவியுடன் குத்தூசி குருசாமிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் வெண்கலச்சிலை வடிவமைக்கச் செய்தும், திறப்பு விழா நடத்த முடியவில்லையே என்ற மனவருத்தத்துடன் மறைந்துள்ளார் என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆனாலும் வெகுவிரைவில் அவரின் கனவை நிறைவேற்ற அண்ணாரின் குடும்பத்தாரும், தோழர்களும் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். மாபெரும் போராளியும், எழுத்தாளருமான குருவிக்கரம்பை வேலு அவர்களின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, நக்கீரன் கோபால் மற்றும் அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அண்ணாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் அதிகாலை.காம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தகவல் : சித்தார்த்தன் வேலு மற்றும் சுப்பையன் (LIC)