அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்
லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.