மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை!
மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை! இயக்குனர் வடிவுடையான் இயக்கி, கரண், அஞ்சலி நடிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழக கேரள எல்லையைச் சுற்றி நடைபெற்ற உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளுக்கும், படப்பிடிப்பில் அடிதடி, தகராறு போன்றவற்றிற்கும் குறைவில்லை என்றே கூறலாம். கிட்டத்தட்ட தீபாவளிக்குப் பிறகு ஓரிரு வாரங்களில் படம் வெளியிடப்படும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் விழுந்திருக்கிறது இன்னொரு அதிர்ச்சி செய்தி. இப்படத்தினை திரையிட விடாமல் தடை வாங்குவோம் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக வரும் திங்களன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர் ஒரு தரப்பினர். மேலும், படம் வெளியிடுவதற்கு முன்னர் இந்தப்படத்தினை எங்களிடம் திரையிட்டுக் காண்பிக்கவேண்டும், அதன் பின்னரே படம் வெளியிடப்படவேண்டும் என்று 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' பட இயக்குனர் வி.சி.வடிவுடையான் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிற்கு "லைன் பால் அசோஸியேட்ஸ்" (Line Ball Associates) என்ற தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டிஸில் கூறப்பட்டிருப்பதாவது : 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் முழுக்க முழுக்க கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறினாலும்,
அந்தப்படத்தில் வரும் சம்பவங்களும், காட்சிகளும் அந்தப் பகுதியைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், வரலாற்றுச் சம்பவங்களுக்கு முன்னுக்குப் பின் முரணாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்தப் படம் கண்டிப்பாக எங்கள் பகுதி மக்களின் மனநிலையையும், கெளரவத்தையும் பெருமளவில் பாதித்து மன உளைச்சலுக்கு உட்படுத்தும். மேலும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக மாறக்கூடும் என்றும் அஞ்சுகிறோம். எனவே, இந்தப்படத்தினை வெளியிடாமல் உடனடியாக நிறுத்தி, படத்தினை திரையிடுவதற்கு முன் எங்கள் மனுதாரர்களிடம் திரையிட்டுக் காண்பித்து, மேற்கண்டவாறு படத்தில் எதுவும் தவறுதலாகச் சித்தரிக்கப்படவில்லை என்று எமது மனுதாரர்கள் உறுதியளிக்கும் பட்சத்தில் படத்தினை வெளியிடலாம். மீறி படத்தினை வெளியிட்டால் நாங்கள் படத்தினை வெளியிடத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்'. இது சம்பந்தமாக நோட்டிஸ் கிடைத்த மூன்று தினங்களுக்குள்ளாக எங்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் திங்களன்று நடைபெறப்போகும் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ன வடிவு சார்..... பாடர்னாலே.... பிரச்சினைதான்.
படத்திற்கு தடையா? அல்லது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விடையா? நீங்கதான் சொல்லணும்.