August 23, 2007

எக்காலத்துக்கும் பொருந்துவது "திருக்குறள்" மட்டுமல்ல, இந்த மாமேதையின் சொற்பொழிவும்தான்! நான்கு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோமா?


குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை ஜூலை 5, 2003 வாழ்த்துக்கள் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நாளும் கோளும் ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் preference என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்". அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார்.
இவ்வாறாக நான் ஜூலை 25-ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், "சந்திரசேகர் லிமிட்" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படி பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.
இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "I am the universe and universe is my conciousness" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது. The Creator நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்", என்றேன்.
இவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. வானகம் திறந்து வழிவிடும் அந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு
செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறந்தாலும் ஞானமும்
கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே
இந்தப் பாடல் நன்றாக இருந்ததா? இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள்.
அந்தக் குறள்:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
இதன் பொருள் என்ன? The higher you aim you will raise to that level. You will succeed. This is the message. இரண்டு ஆசைகள் நான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன். அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா? இதுவா உண்மை நிலை? நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார்? என்ன குலம்? எந்த நாடு? எந்த மதம்? என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார். இந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும். PURA நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும். இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும். இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம் இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும்
இந்த லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
எனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ஆ.ப.ஜெ அப்துல் கலாம், 5.7.2003 இது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டது.

கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது. அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95-இலக்கம். அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா? இதற்கு விடை காண, வரலாற்றை விவரிக்க வேண்டும். 1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு, பழைய சென்னை மாகாணத்திலிருந்த எல்லையோரப் பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, சித்திரதுருகம், கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளுடனான தனி வரலாறு உண்டு. பத்திராவதி, சிக்கமக்ளூர், சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள், கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர். கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை. பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர். முசுலிம்களோ, பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கன்னடரோ, கருநாடகத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர். தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர். பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும், ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும், பம்பாய் மாகாணத்திருந்து சிலபகுதிகளையும், மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கருநாடக மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் பிழைப்புத் தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் "மொழிவழியில்" கன்னடருக்கு அரிந்துகொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும். அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள், இப்பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், இப்பகுதியில் தொன்று தொட்டுவாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லித் தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர். இந்நிலையில், பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம். பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத்தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராசராசதேவனால் வெல்லப்பட்டன. மாகடிப் பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான். இன்று எலவங்கா என்றழைக்கப்படும், பெங்களுர் பகுதி சோழவள நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. அதற்கு "இலைப்பாக்கநாடு" என்று பெயர். இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோழர்கள் ஆட்சியில் "எலவக்கா" என்றாகி பிறகு "எலவங்கா" என்று திரிந்தது. சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலைநகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால், தமிழ் கங்கர் எனப்பட்டனர். Source : (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )
தொடரும்
அன்புடன்அரவிந்தன்
பெங்களூர்

இன்றைய குறள்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

"பல்லைக்காட்டிச் சிரிப்பு சிறுபிள்ளைத்தனமானது. உங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ள ஏதாவது காரணமிருந்தால் புன்னகை செய்வதே போதும்"

- புத்தர்

தமிழோசை

  • பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நாடு கடந்து வாழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் நாடு திரும்பலாம் என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது
  • இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் எண்ணம் இடதுசாரிக் கட்சிகளுக்கு இல்லை. ஆனாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த அரசின் முடிவையடுத்தே ஆதரவு குறித்து தெரிவிக்கப்படும் என இந்திய இடதுசாரிகள் கூறியுள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 23 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews