April 30, 2008

தொழிலில் இறங்கும் பாலிவுட் நடிகைகள்

கதாநாயகர்கள் மட்டும்தான் தொழில் அதிபர்களாய், பெரிய வர்த்தகர்களாய் வலம் வரவேண்டுமா? முடியாது. ‘நாங்களும் தொழிலில் ஜெயித்துக் காட்டுவோம்’ என களம் இறங்கி இருக்கிறது பாலிவுட் நடிகைகள் கூட்டம்.
மிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான், சுனில் ஷெட்டி ஆகியோர் வியாபாரத்துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அவர்களுக்கு கடும் போட்டியாய் களத்தில் இருப்பவர்கள் சுஷ்மிதாஷென், பிரீத்திஷிந்தா மற்றும் ஐஸ்வர்யாராய்.

சுஷ்மிதா ஷென் 2006-லேயே ஒரு தொழில் முனைவோராய் மாறிவிட்டார். மிகப்பெரிய பிரமாண்ட அளவில் கொல்கத்தாவில் ஒரு பெரிய வணிக வளாகத்தை நடத்தி வருகிறார். பார், கேளிக்கை அரங்கு என மக்களின் பொழுது போக்கு ரசனைகளை பணமாக்கும் தொழிலில் இறங்கி இருப்பவர் சுஷ். தன்னை ஒரு நடிகை என்று சொல்வதை விட ஒரு தொழில் முனைவோர் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறேன் என பல முறை கூறி இருக்கிறார்.

இதோடு மட்டுமில்லாமல் சினிமா தயாரிப்பு, இயக்கம் எனும் பணிகளிலும் அவர் தீவிரமாய் செயல்படுகிறார். "ராணி லட்சுமிபாய் - தெ வாரியர் குயின்" எனும் படத்தில் நடிகை, தயாரிப்பளர் மற்றும் இயக்குனர்.

ஐபிஎல்-2020 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை விலைக்கு வாங்கி மைதானங்களில் வலம் வருகிறார் பிரீத்தி ஷிந்தா. "நான் எப்பொழுது எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவேன். இது 2008. பெண்கள் தீவிரமாக தொழிலில் இறங்கவேண்டும், சினிமாவில் நடிப்பது என்பது வேறு. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவது என்பது வேறு என்கிறார் அவர்.

அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யாராய் அவர்களின் குடும்ப நிறுவனமான AB கார்ப்பரேசனுக்காக மீண்டும் சினிமா தயாரிக்கும் பணியில் இறங்க இருக்கிறார்.

ரவீனா டான்டான் தன்னுடைய கணவரின் சினிமா வியாபரத்துக்கு பெருந்துணையாக உள்ளார்.

டிவிங்கில் கண்ணா மும்பையில் வெற்றிகரமான இண்டீரியர் டெக்கரேசன் தொழிலை நடத்தி வருகிறார்.

இப்படி கேமராவுக்கு முன்னால் நடித்துக் கொண்டிருந்த பாலிவுட் நடிகைகள் தொழில் அதிபர்களாய் அவதாரம் எடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சட்டசபையில் வீசிய "நர்கீஸ்" புயல்

சட்டசபையில் இன்று "நர்கீஸ்' புயல் குறித்து ருசிகர விவாதம் நடைபெற்றது.
சட்டமன்றத்தில் இன்று பால் வளம், கால்நடை மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் பேசிக்கொண்டிருந்தார். கடல், துறைமுகம் தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர் பி.கே. சேகர்பாபு எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.

வங்கக் கடலில் உருவான புயலுக்கு "நர்கீஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது. பழம் பெரும் இந்தி நடிகை நர்கீஸ். அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறப்படுகிறது.

கலையுலகில் பலரையும், பெரிதும் கவர்ந்த அந்த நடிகையின் பெயரை புயலுக்கு தேர்வு செய்தது சரியா? புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது? இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா? என்று சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.

அப்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி குறுக்கிட்டு, இந்த புயலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது: புயலுக்கு நர்கீஸ் பெயரை வானிலை நிபுணர்கள்தான் சூட்டி இருக்கிறார்கள். இந்த புயலுக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் புயல் அமைதியாக போய் விட்டது.

இந்த புயல் சின்னத்தால் காற்று பலமாக வீசியதன் மூலம் தினமும் அரசுக்கு ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம் என்றார் ஆற்காடு வீராசாமி. இந்த ருசிகர விவாதத்தால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.