July 23, 2007

"வாழ்க்கையில் என் சிறகுகள் கவிந்து கொண்டு இருக்கும். எந்த நேரமும் இவை விரியும். சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல் அவை பறந்து போகும். முடிவின் எல்லை நோக்கி அவை பயணம் போகும் போது, நான் இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். நான் மீண்டும் பிறப்பேன் பிறந்து முதலில் இருந்தே துவங்குவேன். மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வேன்"
- கவியரசு கண்ணதாசன்

இன்றைய குறள்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

ஜனாதிபதி மாளிகையில் தங்கி சாப்பிட்டதற்கு பணம் கட்டிய பண்பாளர் அப்துல்கலாம்


ஜனாதிபதி மாளிகையில் தனது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் தங்கி சாப்பிட்டதற்கு கூட பணம் செலுத்திய பண்பினை பெற்றவர் அப்துல் கலாம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறப்பு அலுவல் அதிகாரியாக இருந்த சுதீந்திர குல்கர்னி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் செயலாளராக இருக்கும் சுதீந்திரி குல்கர்ன், அப்துல் கலாமின் குணநலன்கள் குறித்து வியந்து எழுதியுள்ள ஒரு கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:
அரசியலின் தரம் குறைந்து கொண்டு வந்த இந்திய வானில், இக்கால இளமையான இந்தியர்களுக்கு அரசியலின் மீது ஒரு புது நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வந்தார். அப்துல்கலாம் நாட்டின் கடைகோடியில் இருக்கும் குடிமகனுக்கும் நாட்டின் வளர்ச்சியின் பயனை எட்டச் செய்யும், "வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும்" என்ற அவரது கொள்கையானது, சரியான கோணத்தில் சிந்திக்கும் எல்லா இந்தியர்களின் உணர்வையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருந்தது. அவரது நன்நடத்தையும், அவரின் எளிமையுமே ஆகும்.
அவரது ஈடில்லா பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக, "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல்'' ஒரே ஒரு சிறந்த உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். கடந்த ஆண்டில் ஜனாதிபதி மாளிகைக்கு அப்துல் கலாமின் சொந்த கிராமத்தில் இருந்து 60 உறவினர்களும், நண்பர்களும் வந்தார்கள். அவர்கள் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். அவர்கள் டெல்லியை சுற்றி பார்க்க விரும்பினார்கள். ஜனாதிபதி மாளிகையில் ஏராளமான கார்கள் இருந்தாலும், டெல்லி மாநகரை அவரது உறவினர்கள் சுற்றி பார்க்க சென்றபோது ஒரு காரைக் கூட அவர்களுக்காக அப்துல் கலாம் அனுப்ப உத்தரவிடவில்லை. அவர்களுக்காக ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதற்கு தனது சொந்த கணக்கில் இருந்தே பணம் செலுத்தினார். அவர்கள் தங்கியதற்கான அறை வாடகை, உணவுக்கான செலவினையும் அவரே செலுத்திவிட்டார். அப்துல் கலாமின் தனி பங்களாவில் அவரது 90 வயது சகோதரர் ஏ.பி.கே. முத்து மரைக்காயர் அப்போது தங்கினார். அவர் தங்கியதற்காக பணம் செலுத்த அப்துல் கலாம் முன்வந்தார். அப்போது, மிகுந்த உணர்ச்சி பெருக்கால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, "ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். இதற்கு மட்டும் எங்களால் கட்டணம் வாங்கவே முடியாது'' என்று ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நாலடியார்

1. அறத்துப்பால்

1.9 பொறையுடைமை

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை
மனவேறுபாடில்லாமல் கலந்து வாழும் நண்பருக்குள்ளே அந்த நண்பர் ஒருவராலே களங்கம் உண்டாகுமெனின் சிறிது அமைதி காக்க! அப்படி முடியாத போது அவதூறு பேசாமல் விலகிபோவது நல்லது

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Patience
When two persons are friends, mixing without variance, should there be misconduct on the part of one, let the other be patient, as far as he can bear it. If he cannot take it patiently, let him not speak evil, but withdraw to a distance.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

இன்றைய (ஜுலை 23 திங்கட்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com Radio Player

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?
இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்! தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது. சக பதிவரான தம்பி என்னாரெசு மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.
இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.



இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார். பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.