June 18, 2008

தசாவதாரம் - திரை விமர்சனம்

தமிழ்த் திரையுலகின் தரத்தை உலக அளவில் உயர்த்தி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக (ஏன் அதற்கே சவால்விடும் அளவிற்கு) தொழில்நுட்ப பிரமாண்டத்தை மூன்று மணிநேரத்தில் நம் நரம்புகளில் ஊடுருவச் செய்கிறது தசாவதாரம். கமலின் கனவுக் கதையை நிஜத்தில் நமக்கு பத்து பாத்திரங்கள் மூலம் கத்துவாரியாக பின்னப்பட்ட (ஹாலிவுட்டில் ஹேடொமன் பாணி) திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும் ரவிக்குமாருக்கும், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் நூறு சபாஷ்.
நடிப்பு : கமலஹாசன், அசின், மல்லிகா செராவத், ஜெயப்ரதா, நாகேஷ், நெபோலியன், சந்தான பாரதி
இயக்கம் :
கே.எஸ்.ரவிக்குமார்
இசை : ஹிமேஷ் ரேஷமியா
தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன்

சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் கருணாநிதி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமர்ந்திருக்க, விஞ்ஞானியான கோவிந்த ராஜு (கமல்) நேரு ஸ்டேடியத்தில் அலைகடலென கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தில் சக்திவாய்ந்த ஒரு சிலையைப் பற்றி பேசுகிறார். உடனே நம்மை பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். ரங்கனாதரின் சிலையை அகற்ற வந்த சிவ பக்தனான ராஜா குலோதுங்க சோழனின் (நெப்போலியன்) படை வீரர்களுடன் சண்டையிடுகிறார் ரங்கராஜன் நம்பி(கமல்). ராஜா "சிவாய நமஹ" என ஓத ஆணையிட்டும் கூற மறுத்த நம்பி "ஓம் நமோ நாராயணா" எனக் கூற சிலையோடு ஜலசமாதி அடைகிறார். நெப்போலியன் மற்றும் கமல் பரிவாரத்திடையே நடக்கும் உரையாடல் நேராக நம் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை. முற்காலத்தில் இருந்த சைவ-வைஷ்ணவ பிரச்சனையின் வேகத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளார்கள்.

மறுபடியும் 21-ஆம் நூற்றாண்டு : கோவிந்த் அமெரிக்காவில் மனித குலத்தையே அழிக்கும் சக்திவாய்ந்த கதிர்வீச்சு உயிரியல் சம்பந்தபட்ட யுத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஓர் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்பை (ரசாயன ஆயுதம்) அவரது பாஸ் மூலம் தவறாக பயன்படுத்த நேரிடும் அச்சத்தில் மனித குலத்தைக் காப்பாற்ற கமலின் போராட்டம் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் ஆரம்பித்து இந்தியாவில் சுனாமியில் முடிகிறது. இதற்குள் நடைபெறும் சம்பவங்களில் ஒன்பது விதமான கதாபாத்திரங்களும் நம்மை பிரமிக்க வைக்கிறது. (இதற்கு மேல் கதை கூற வேணாம்! வெள்ளித் திரையில் பார்க்க)

கமல் என்னும் உன்னதக் கலைஞனின் உயிர்நாடி சினிமா மட்டுமே என்பதை மறுபடியும் நமக்கு உணர்த்தியிருக்கிறது இப்படம். பத்து அவதாரங்களிலும் நடை, உடை, பாவனையில் வாழ்ந்து காட்டுகிறார் கமல். பத்து பாத்திரங்களில் இந்திய ரா-சிபிஐ அதிகாரி பலராம் நாயுடு அனைத்து கைத்தட்டல்களையும் வாங்கிச் செல்கிறார். அதிக மேக்கப் இல்லாமல் தெலுங்கு பேசும் இவரது நகைச்சுவையில் தியேட்டரே சிரிக்கிறது. அடுத்து நெல்லைத் தமிழ்ப் பேசும் பூவராகவனும், ஜப்பானிய மார்சியல் ஆர்ட் கும்பூ கமலும் ரசிகர்களின் மனதில் பதிந்துவிடுகிறார்கள். வயதான பாட்டியும் சரி, ஜார்ஜ் புஷ் கதாப்பாத்திரமும் இனி உருவாகப்போகும் மேக்கப்மேன்களுக்கு ஒரு பாடம். நாத்திக கமலின் வாதம் அவ்வளவாக எடுபடவில்லை.

அசினுக்கு இரு வேடம். ஆனால் நம் மனதில் நிற்பதோ பிராமண பெண் பாத்திரம்தான். ஜெயப்பரதாவும், அதிகம் சர்ச்சைக்கு உள்ளான மல்லிகா ஷெராவத்தும் படத்தில் வந்து போகிறார்கள். கிராபிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட சுனாமியும், சக்திவாய்ந்த சிலையும் படம் முழுக்க நம்முடன் உலாவருகின்றன. ரீ-ரெகார்டிங்கில் தேவிபிரசாதும், காலை மட்டும் பாடலில் ஹிமேஷும் ஜொலிக்கிறார்கள். ரவிவர்மாவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

இவ்வளவு இருந்தும் இடைவேளைக்குப் பிறகு திருப்புமுனைகள் ஏதும் இல்லாமல் படத்தில் தோய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இவ்வளவு பெரிய தொழில்நுட்ப பிரமாண்டம் அன்றாடம் வேலை செய்யும் கடைநிலை ரசிகர்களிடமும், மாஸ் ஆடியன்ஸ்-முதல் சீட் ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறி?

தசாவதாரம் : தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்