May 02, 2008

பிரியங்கா - நளினி சந்திக்கவில்லை : சிறை அதிகாரி பகீர் தகவல்

சிறையில் ராஜீவ் காந்தி கொலையாளியான நளினியை பிரியங்கா சந்திக்கவில்லை என வேலூர் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் ராஜசௌந்தரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்த சம்பவங்களில் ஒன்று நளினி- பிரியங்கா சந்திப்பு. அச்சந்திப்பு பற்றி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்திகள் வெளியிட்டிருந்தன. ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தியும், மார்ச் 19-ல் வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பேசியதை ஒப்புக் கொண்டார்.
அப்பொழுது என்ன பேசிக் கொண்டார்கள்? எப்படி எல்லாம் நளினி, பிரியங்காவின் உணர்ச்சிப் பூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது… பிரியங்கா மனம் விட்டு அழுதது, சோனியாவுக்கு நளினி இனிப்பு பலகாரம் செய்து வைத்திருந்தது…இதனால் தன்னுடைய கணவர் முருகனுக்கும் நளினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது...இருவரும் தற்கொலைக்கு முயன்றது...இப்படி பக்க கணக்கில் இருவரின் சந்திப்பு பற்றி நாடே அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பேசிக் கொண்டது. இவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட 10 நாட்கள் நாட்டின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.


ஆனால் இப்பொழுது முழுப் பூசணியை சோற்றுக்குள் அமுக்குவது மாதிரி இச்சந்திப்பு நிகழவே இல்லை என சிறைக் கண்காணிப்பாளர் முரண்பட்ட அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு நிக்ழந்தா? இல்லையா? என்பது பற்றி சென்னை வக்கீல் ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்திருந்தார்.

இது பற்றி தெரிந்தவுடன் பிர்யங்காவிடம் டெல்லி பத்திரிகைகள் கேள்வி எழுப்பியது. அவரும் சந்திப்பை ஒத்துக் கொண்டார்.ஆனால் சிறைத்துறை வட்டாரம் அப்பொழுது தகவல் ஏதும் அளிக்கவில்லை.அதற்கான் பதிலை இப்பொழுது தெரிவித்துள்ளது.

"மார்ச் 14 மற்றும் மார்ச் 19 ந் தேதிகளில் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கும்படியான எவ்விதச் சந்திப்பும் நிகழவில்லை." என தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பித்திருந்த மனுவுக்கு பதில் அளித்துள்ளது சிறை நிர்வாகம்.

சிறைத் துறையின் இந்தப் பகீர் தகவலை அடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேல்முறையீடு செய்யப் போவதாக நளியின் வழக்குரைஞர் துரைசாமி கூறி உள்ளார்.

வேலுர்ர் சிறை பதிவேட்டில் ப்ரியங்கா- நளியின் சந்திப்பு பற்றி பதிவு செய்யப்படவில்லை. எனவே இசசந்திப்பு நிகழவில்லை என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. இதனை அடுத்து அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.

சந்தன வீரப்பனுக்கு சிலை

தமிழ்நாடு போலீசாருக்கு மிகப் பெரும் சவாலாக திகழ்ந்த `மாயாவி' வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அணை அருகே மூலக்காடு வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் வீரப்ப னுக்கு நினைவு மண்டபம் கட்ட அவரது மனைவி முத்து லட்சுமி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக முத்துலட்சுமி கூறியதாவது:-

எனது கணவர் வீரம் மிக்கவர், அதே சமயத்தில் ஏழை-எளியவர்களிடம் பரிவுடன் பழகி வந்தார். நயவஞ்சக செயல் மூலம் அவரை கொன்று விட்டனர்.

மூலக்காட்டில் அவர் சமாதி உள்ள இடத்தில் நான் நினைவகம் கட்ட உள்ளேன். இதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும். அந்த இடத்தில் எனது கணவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்றையும் நிறுவ போகிறேன்.

எனது கணவர் தமிழக எல்லையை காக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இதை இப்போது தான் எல்லைப் பகுதி மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தினம், தினம் என் கணவர் சமாதிக்கு வந்து மண் எடுத்துச் செல்கிறார்கள்.என் கணவர் ஆத்மாவை அவர்கள், "எல்லைச்சாமி'' ஆக பார்க்கிறார்கள்.

இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

தர்மபுரியிலும் "மாயாவி'' வீரப்பனுக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி வரும் டைரக்டர் ஜி.கவுதமன் யோசனையின் பேரில், பா.ம.க. நிர்வாகி சிவகுமார் இந்த சிலையை உருவாக்கி வருகிறார்.

இதுபற்றி சிவகுமார் கூறு கையில், "2 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பனுக்கு சிலை செய்து வருகிறேன். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்த நாயக்கன் பட்டியில் என் சொந்த நிலத்தில் இந்த சிலை நிறுவப்படும்'' என்றார்.

அடுத்த மாதம் (ஜுன்) வீரப்பன் சிலை திறப்பு விழா தர்மபுரியில் நடக்க உள்ளது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை தமிழ்சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் குடியேற ஒசாமா பின்லேடன் மகனுக்கு தடை

பின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர். ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.

தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.

'தசாவதாரம் படத்தை தடை செய்வோம்' - இந்து அமைப்பு போர்க்கொடி

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் அறிவித்துள்ளார். விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் நேற்று ராமேசுவரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடையும் வரையில் ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம். பிரியங்கா-நளினி சந்திப்பு அரசியலில் சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது அதேபோல `தீன்பிகார்' என்ற தீவை வங்காளதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்திய பகுதிகளை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது தேச பாதுகாப்புக்கு நல்லதல்ல. இந்த நிலை மாற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

"அரைகுறை" மல்லிகா ஷெராவத் மீது போலீசில் புகார்

முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை மல்லிகா ஷெராவத் குட்டை பாவாடை அணிந்து மனதை புண்ணாக்கி விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கனிராஜன், பெரியமேடு போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தசாவதாரம் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.
ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் சுளித்தனர்.
முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மல்லிகா ஷெராவத் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடரவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கனிராஜனின் வக்கீல் ராம் மனோகரனிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினை தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் கனிராஜனை அழைத்து இன்று (2-ந் தேதி) விசாரணை நடத்துவதாக பெரியமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.