சேதுசமுத்திரமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்!
சிங்களரை ஆதரித்தும், தமிழரை எதிர்த்தும், அழித்தொழித்தும் படு நாசம் புரியும் தமிழ்க் குலப் பகைவரான காங்கிரசுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்டால், கருணாநிதியும் தமிழக மக்கள் பலரும் காங்கிரசோடு ஒப்புறவாய் இருந்து தமிழக நலன்கள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னதுண்டு. அப்படி என்ன பெரிதாய்ச் செய்தாய், செய்யப் போகிறாய் என்றால் செம்மொழி என்பார்கள்; அப்புறம் 5,6 பாலங்கள் என்பார்கள்; அப்புறம் வேறு சில சில்லரை விதயங்களைச் சொல்லி, அண்ணாவின் கனவான சேது சமுத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் என்பார்கள்.
கன்னடத்தான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான் - 'எங்கள் கட்சி தமிழர்களை ஒழிக்க முழுமனதோடு சிங்களவனுக்கு உதவுகிறது' என்று. சிங்களனின் கட்சியாகிவிட்ட காங்கிரசின் தயவும், அக்கட்சியின் எந்த உதவியும் இனி தமிழகத்திற்குத் தேவையில்லை. காங்கிரசே அந்நியன் கட்சியாக, பகைவனின் கட்சியாகப் போய்விட்ட பின்னர் அந்தக் கட்சி தமிழகத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஒழிந்து போக வேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் தயவால் தமிழருக்குப் பயன் எதுவும் தேவையில்லை. தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் மானமும் சூடு சொரனையும் இருக்கவே செய்கிறது.என்னையும் உள்ளிட்ட பலர் சேது சமுத்திர திட்டத்தினை எதிர்பார்த்தவர்கள்தான். தமிழக மக்களின் ஞாயமான எதிர்பார்ப்புதான் அது என்பதில் ஐயமில்லை. ஆனால், சிங்களனின் கைப்பாவையான சோனியா காந்தியின் தயவாலோ, மன்மோகன் என்ற துரோகியின் ஆதரவாலும், ப.சிதம்பரம் என்ற தமிழ்க் குலக் கருங்காலியாலும் இந்த சேது சமுத்திர திட்டம் தமிழர்களுக்கு நடை பெற வேண்டாம். இவர்களினால் இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்ற போதிலும், இதையெல்லாம் வைத்து கருணாநிதியோ மற்ற தமிழக அரசியல்வாதிகளோ காங்கிரசிற்குப் போவார்களே ஆனால், அது தமிழ் மக்களுக்கு அவமானம். சேது சமுத்திரம் என்பது தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பெற நடைபெறுகின்ற ஒரு முனையல். அவ்வளவுதான். தமிழ் இனமே புல் பூண்டு இல்லாமல் காங்கிரசுக் காரர்களால் அழிக்கப் படும்போது, அந்தப் பேரழிவைச் செய்யும் காங்கிரசுக்கட்சியின் தயவால் எந்த ஒரு பயனும் தமிழகத்திற்கு வேண்டியதில்லை. சேது சமுத்திர முனையல் இல்லாவிடில் தமிழகத்தில் எதுவும் குடி முழுகிப் போகப் போவதில்லை. ஒரு இனம் உயிர் வாதையில் இருக்கும்போது உயிர் காப்பது முக்கியமா? அல்லது அந்த உயிர்களை வாங்கும் காங்கிரசுக்கட்சியை நக்கிக் கொண்டு இருப்பது முக்கியமா?
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சேது சமுத்திர திட்டம் என்பது ஒரு சிறு மயிர்! அந்த மயிரைப் பிடுங்க காங்கிரசுக்காரன் தேவையில்லை!
தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ச் சிந்தனைக் களங்கள் எவ்வளவு விரைவாக காங்கிரசைப் புறக்கணிக்கின்றனவோ, எவ்வளவு விரைவாக காங்கிரசை ஆதரிப்பவரைப் புறக்கணிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவாவது தமிழ் மக்களில் சிலரேனும் உயிர் பிழைப்பார்கள்.தமிழ் நாட்டில் தமிழன் உயிருக்குப் பாதுகாப்பு தரும் கட்சிதான் நிலைக்க வேண்டும். அழிப்பவர்களின் கட்சி மக்கள் மனதில் இருந்து அழிந்து பட வேண்டும். தமிழ் மக்களைச் சாகடிக்கும் காங்கிரசுக்காரர் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் அரசியல் முகவரி இல்லாமல் போகவேண்டும். 1972-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசே! உன் வேரிழந்து, விழுதிழந்து சவலையாய் நாயாய் திரிவாய் தமிழ்நாட்டில்... காத்திரு!
- நாக.இளங்கோவன்