August 19, 2007

மாலனின் அரசியல்!

கடந்த வாரம் சிறீலங்கா பாஸ்போர்ட் பற்றி தமிழ் வலைப்பதிவுலகம் பற்றி எரிந்தது. இது பற்றி தமிழ் சசி அவர்கள் விரிவான பதிவு ஒன்று இட்டுள்ளார் மாலனின் அரசியல். அவர் இந்த பிரச்சினை பற்றி வாழ்வியல் மற்றும் அரசியல் கோணத்தில் மிக விரிவாக அலசி இருந்தார். எனக்கு தெரிந்த ஒன்றையும் இதன் மூலம் சொல்ல விரும்புகிறேன். சிறீலங்கா பாஸ்போர்ட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. அது நம் யாருடைய பாஸ்போர்ட்டிலும் இல்லாதது. சிறீலங்கா பாஸ்போர்ட்டில் முகப்பு பக்கத்தில் தமிழ் இடம் பெற்று இருப்பது தான் அந்த சிறப்பு. உங்கள் பார்வைக்காக இதோ............................................

சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.

 • புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது?
 • இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும்?
 • அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா?
 • அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா?

நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.

ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.

இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.

எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.

இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.

இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு

இரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்!!

போரினது தேவையையும் அசைபடமொன்று செய்யக்கூடிய பிரசாரத்தினையும் இங்கே விட்டுவிடுவோம். போராளிகள், பயங்கரவாதிகள் போன்ற அரசியல் நுழைந்த சொற்கூட்டுகளையும் விட்டு விடுவோம். இப்படங்கள் அவற்றினைத் தயாரிப்பதற்கிருக்கும் பொருளாதார, தொழில்நுட்ப இடைஞ்சலுள்ளும் அவை சொல்ல வேண்டியவற்றைச் சுட்டும் திறனுக்காகப் பாராட்டப்படக்கூடியன.
ஜிகினாக்கோடி கொட்டித் தயாராகும் கோடம்பாக்கத் திரைப்படங்கள் இலங்கையிலே சிறப்பாக ஓடுவது குறித்தும் அரசியலை மூச்சிலுங்கூட வெளிவிடா ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம் வாழும் எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவிடும் தமிழகச் சஞ்சிகைகள் இப்படியான ஈழத்திலிருந்து வெளிவரும் குறும்திரைப்படங்கள், இசைவட்டுக்கள், படைப்பு நூல்கள் குறித்தும் துணிச்சலோடு அறிமுகமும் திறனாய்வும் பார்வையும் விரைவிலே தந்து இவற்றினை "அங்கீகரிக்கும்" என நம்புவோம்.

விலை

ஈரமண்

ஈரமண்

சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே ஊழல் நிறைந்தது

சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே இல்லாத ஒரு கட்சியாக இருக்கும். இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட கட்சிகளனைத்துமே ஊழல் நிறைந்ததாகச் சொல்கிறார் இந்த ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரும், சரத்குமாரின் கட்சியின் ஒரு முக்கிய நபருமான திரு.முருகன் IAS அவர்கள்! பொறுத்திருந்து பார்ப்போம்!

இடஒதுக்கீடு பகுதி 2

இடஒதுக்கீடு பகுதி 3

இடஒதுக்கீடு பகுதி 4

டாடா தொழிற்சாலை பற்றிய பதிவு : பகுதி 5

அறுசுவை உணவு என்றால் என்னவென்று தெரியுமா?

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்றைய குறள்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

அறத்துப்பால் : அன்புடைமை

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

- புத்தர்

தமிழோசை

 • கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
  சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர்.
 • இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 • இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
 • ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
  http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005

ஆகஸ்ட் 18, சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள் அந்தக் காலம் மீண்டும் வராதா ? !
- வி.ஏ.எம். அழகுமுத்து

''இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க) இந்துஸ்தான் ஆஸாத் (இந்தியா சுதந்திரம்) நேதாஜிக்கு ஜே!' என்று நாங்கள் யுத்த முழக்கமிடும் போது... நேதாஜி பின்புறம் இரு கைகளையும் கட்டிக் கொண்டு பார்வையிட்டவாறே வருவார். முதல் இரண்டு முழக்கத்திற்கும் கையை உயர்த்துவார். நேதாஜிக்கு ஜே எனும்போது கையை உயர்த்த மாட்டார். அவருடைய குறுகுறுப்பான பார்வை. அதிர்ந்து பேசத் தெரியாத குரல், சுவாமி விவேகாநந்தருக்குப் பிறகு யாரையும் எளிதில் கவரக்கூடிய முகக் கவர்ச்சி. உடலை அசைக்காமல் அப்படியே முகத்தை மட்டும் திருப்பிப் படையினரைப் பார்வையிடும் தன்மை...'' இப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த காலம் நோக்கி தன் நினைவைச் செலுத்திய வி.ஏ.எம். அழகுமுத்து, நா தழுதழுத்து, மீறி வந்த அழுகையைக் கொஞ்ச நேரம் மெளனித்து அடக்கிக் கொண்டார். சிறிது நேரம் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிரும்போது ''எனக்கு நேதாஜிதான் தலைவர். இப்ப எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால், யாரையும் என்னால் தலைவர் என்று ஒத்துக் கொள்ளவே முடியாது'' என்று திட்டவட்டமாகக் கூறியவரிடம் இடைமறித்து,
''நீங்கள் இந்திய தேசியப் படையில் சேர்வதற்கான காரணம் பற்றியும் அதில் உங்களுடைய பங்கு, நேதாஜியின் நடவடிக்கையில் மறக்க முடியாத நிகழ்வு இதைப் பற்றி சொல்லுங்கள்'' என்றதும் நிமிர்ந்து இருக்கையின் நுனியில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
வி.ஏ.எம். அழகுமுத்துவின் தந்தை தேசப் பற்று மிகுந்தவர். அவர், வி.ஏ.எம். மிடம் காந்தி, நேரு, விவேகாநந்தர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைப் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். அழுகுமுத்துவுக்குப் பத்து வயது நிரம்பும்போது தந்தை இறந்துபோக, கூலி வேலைக்குச் சென்று தனது தாயையும், தமக்கையையும் காப்பாற்ற வேண்டிய குடும்பச்சூழல். இந்தக் காலகட்டத்தில் இவர்கள் வசித்தது பர்மாவின் தலைநகர் ரங்கூனிலிருந்து 83வது கிலோ மீட்டரில் உள்ள 'தன்னாமீன்' எனும் இடத்தில். ஜப்பானியர்களிடம் இவரைப் போலவே இன்னும் ஏராளமான தமிழர்கள் கூலி வேலை செய்தவர்கள். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தமிழரை ஜப்பானியப் படை வீரன் ஒருவன் அடித்துவிட, இவர்களுக்கு மேஸ்திரியாக வேலை செய்த 'ஐயர் சாமி' என்பவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் ''பயப்படாதீர்கள். அடுத்த வருடம் இதே நேரம் எந்த ஜப்பானியனும் உங்களை அடிக்க மாட்டான். அடிக்கவும் அவர்களால் முடியாது'' என்று கூறியிருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டபோது, ''சுபாஷ் சுந்திரபோஸ் என்னும் மாபெரும் தலைவர் இந்தியாவில் பிரிட்டிஷாரின் கட்டுக் காவலில் இருந்து தப்பி ஜெர்மனை அடைந்து, அந்நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரோடு தோழமை கொண்டு, அங்கிருக்கும் இந்தியர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்து இந்திய சுதந்திரத்தை மீட்க இருக்கிறார். எனவே அவரை அங்கிருந்து ஆசியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று பதில் வந்தது ஐயர்சாமியிடமிருந்து.
மேலும் ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் (ஹிட்லரின்) ஆதிக்கத்தில் இருந்தாலும் அங்குக் குடியேறி வாழும் இந்தியர்கள் மிகக் குறைவு. ஆனால் கிழக்காசியாவில் முப்பது லட்சம் இந்தியர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். ஜப்பானியர்களிடம் ஐம்பதாயிரம் பிரிட்டிஷ் இந்தியப் படைகள் கைதாகியிருப்பதால், அவர்களையும் இணைத்துக் கொண்டு இங்கு ஒரு பெரும் படையைத் திரட்டி, பிரிட்டிஷார் மேல் படையெடுக்கும் திட்டம் உருவாகி வருகிறது. அதைத் தலைமையேற்று நடத்த சுபாஷ் சந்திரபோஸ்தான் தகுதியானவர் என்பதால் அவர் விரைவில் இங்கு வர இருப்பதாகவும் மேஸ்திரியான ஐயர் சாமி என்பவர் கூறியிருக்கிறார். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டதுடன், இந்தோ சீன நாடுகளையும், கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா போன்ற நாடுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஜப்பானியர் ஆதிக்கத்திற்குள் வந்திருந்தன. சீனாவின் பெரும் பகுதியையும், இந்தியாவையும், இலங்கையையும் தவிர, பிற ஆசிய நாடுகள் எல்லாம் ஜப்பானியர்களின் ஆளுகைக்குள் வந்திருந்தன. அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவைத் தாக்குவது உறுதி என்று எல்லோரும் அறிந்திருந்தாலும், ஜப்பான் உடனடியாக அந்த வேலையைச் செய்யவில்லை. ஏனென்றால் சுபாஷ் சந்திரபோஸின் வருகைக்காகவே ஜப்பான் இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்தக் காலம் தாழ்த்துகிறது. அவர் இங்கு வந்தவுடன் ஜப்பானியரிடம் கைதாகியுள்ள ஐம்பதாயிரம் இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களுடன் ஒப்படைத்து எல்லாவித உதவிகளையும் செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், அப்போது எல்லோரும் சுபாஷ் சந்திரபோசின் சுதந்திரப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்த இருப்பதால் எந்த ஜப்பானியன் உங்களைத் தொட்டு அடிக்க முடியும்? என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.
வி.ஏ.எம். அழகுமுத்து போன்றவர்களுக்கு மேஸ்திரியான ஐயர் சாமி கூறிய இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்தது என்றாலும், ''எப்படி எதிரிகளை ஏமாற்றிவிட்டு ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு வர முடியும்?'' என்ற சந்தேகக் கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். இதற்கு முன்பு 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரையே கேள்விப்படாதவராக இருந்திருக்கிறார். மேஸ்திரி சொல்லச் சொல்ல 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற மாமனிதரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல். இந்நிலையில் தண்டோரா போட்டு எல்லோரையும் பர்மியப் பள்ளிக் கூடத்தில் மாலையில் கூடி விட வேண்டும் என்று அறிவித்திருந்தனர். 150 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் டாக்டர் பரூவா, படாமியா ஆகியோர் ரங்கூன் சென்று திரும்பியதையும் ராஷ்பிகாரிபோஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின்' கிளை ரங்கூன் தலைநகரான 'தன்னாபீனில்' நிறுப்பட்ட விஷயத்தையும் அதன் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போது, 'சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ஏழு எட்டு மாதங்களாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து ஜப்பானை அடைந்து மன்னர் ஹிரா ஹிட்டோவையும், பிரதமர் டோஜோவையும் கண்டு பேசியிருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் வந்து ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கிழக்காசியாவில் உள்ள இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒரு சுதந்திரப் படையை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்ட இந்தியாவின் மேல் படையெடுக்கும் பணியைச் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி கிழக்காசியாவில் படை திரட்டிக் கொண்டிருந்தார். அவரது பணி தடங்கலின்றி நிறைவேற தன்னாபீன் தமிழர்களும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''1943ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் சந்திரபோஸ் வந்து சேர்ந்தார். நான் மறுமாதமே அவரது இந்திய தேசியப் படையில் சேர்ந்தேன். அங்கு எனக்களிக்கப்பட்ட வேலை என்பது ஒற்றுவேலை. வேவு பார்ப்பதும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதும் தான் பிரதானமாகயிருந்தது. என்னுடைய ஆசை ஒருவாறு நிறைவேறி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்துவிட்டேன். அவருடைய அதிகாரம் இப்போதுள்ள முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் இந்த மூன்று பேருடைய அதிகாரத்தையெல்லாம் மிஞ்சியது. ஆனால் பார்வைக்கு மிகவும் எளிமையானவர். அதே நேரத்தில் கம்பீரமானவர். அவர் மேடையேறினால் கீழே ஜப்பானியப் படையினர் உட்கார்ந்திருப்பார்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் பதவியேற்கும்போது கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். ''இத்தனையாயிரம் வீரர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்களே. இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்'' என்பதை நினைத்து அழுதார். அதே நேரத்தில் தமது சொந்த நாட்டில் அரசாங்கம் நடத்துவதைப் போல் துணிச்சலாக அரசு நடத்தினார். சுபாஷ் சந்திரபோஸ் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. நான் இரண்டே இரண்டு முறை மட்டுமே அவர் சிரித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை நாங்கள் இருந்த முகாமுக்கு ஒரு சர்க்கஸ் கோமாளி வந்தான். அவனைக் கர்னலிலிருந்து அனைவருக்குமே நன்றாகத் தெரியும். தொழில் இல்லாததனால் அவன் அங்கு வந்தான். அவனுடைய ஆசை நேதாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பது. உள்ளே வந்தவன் 'என்னை யாராவது தூக்க முடியுமா?'' என்றான். ' அப்படி என்னைத் தூக்க முடியாவிட்டால் எனக்கு இரண்டு ரூபாய் தர வேண்டும். தூக்கிவிட்டாலோ நான் நான்கு ரூபாய் அவர்களுக்குத் தருவேன்'' என்றான். முதல் தடவை தூக்கிவிடலாம். இரண்டாவது முறை மூச்சைப் பிடித்து நின்று கொள்வான். இதை சுபாஷ் சந்திரபோஸ் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு மெளனமாகச் சிரித்தார். அந்தக் கோமாளி ஒரு கர்னலிடம் சுபாஷைப் பார்க்க விருப்பம் தெரிவித்தான். கர்னல் இதைப்போய் அவரிடம் சொன்னவுடன் அவனைக் கூப்பிட்டனுப்பினார். போனவன் ''என்னைத் தூக்குங்கள் பார்ப்போம்'' என்றான். மெளனமாகச் சிரித்த நேதாஜி அலக்காகப் பிடித்துத் தூக்கிவிட்டார். ''மற்றொரு முறை தூக்குங்கள் பார்ப்போம்'' என்றவனை தூக்கிப் பார்த்தார். இரண்டாவது முறை அவனைத் தூக்கவே முடியவில்லை. அப்போது அவர் பலமாகவே சிரித்ததைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். மற்றொரு முறை, பயங்கரமாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நமது ராணுவத்தினர் அணிவகுத்து நின்று போர் முழக்கம் செய்துவிட்டுத் தாக்குதலுக்குத் தயாரானோம். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் எங்களை நோக்கி வரும்போது, கர்னல் நேதாஜியைப் பார்த்து, பதுங்கு குழிக்குள் போய் விடும்படி கூறினார். அப்போது நேதாஜி ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு, ''வெள்ளைக்காரர்கள் இன்னும் என் மேல் போடுகிற குண்டைத் தயாரிக்கவில்லை'' என்று சொன்னார். பெரும்பாலும் அமைதியாகவேதான் பேசுவார். எந்த நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார். பயிற்சிக்களத்திற்கு வந்தால், நேராக சமையல் அறைக்குச் செல்வார். தயாரித்து வைத்திருக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பார்ப்பார். தண்ணீரைக் குடித்துப் பார்ப்பார். கடைசியாக ''தண்ணீரைக் கொதிக்க வைத்தீர்களா?'' என்று கேட்பார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் நேதாஜியிடம், ''ஜப்பான் படையினரைச் சேர்த்துக் கொண்டு இந்திய விடுதலைக்குப் போராடுகிறீர்கள். அதே ஜப்பானியர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்த நினைத்தால் என்ன செய்வீர்கள்?'' என்றார்கள். அதற்கு அவர் சொன்னார், ''வெள்ளைக்காரர்களைச் சுட்ட துப்பாக்கியை கையில்தானே வைத்திருக்கிறோம்'' என்றார். நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜேதான். அடடா! அந்தக் காலம் மீண்டும் வராதா? அந்தக் கொந்தளிப்பிலும், பேரலையிலும் நீந்திக் குளிக்க மாட்டோமா? அந்தப் பெருமழையிலும், பெரும் புயலிலும் பூகம்பத்திலும் மகிழ்ச்சி பொங்க ஓடியாடி வினையாற்றும் பேறு கிட்டாதா? உருகியோடும் எரிமலை என்னும் தியாகக் குழம்பில் உருகி ஓட மாட்டோமா? மீண்டும் அந்தக் காலம் வராதா? அந்தத் தலைவன் போல் மற்றொரு தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி தவிக்கிறேன்'' என்று முடித்தார் கண்களைத் துடைத்துக் கொண்டே.
சந்திப்பு - பி. நந்தகுமார்.