July 27, 2007

டாக்டர் மேதகு அப்துல் கலாம் பேட்டி

கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற அப்சல் குரு தாக்கல் செய்த கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காதது ஏன்? இதுதொடர்பாக உங்கள் மீது விமர்சனமும் எழுந்ததே?
பதில்:- அப்சல் குருவின் கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய, அந்த அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் கடைசிவரை, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை பதில் வந்திருந்தால், அதை நான் பரிசீலித்து இருப்பேன்.
கேள்வி:- அதுபோல், நீங்கள் வெளிநாட்டில் இருந்தபடி, பீகார் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியதே?
பதில்:- அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்போது நான் ரஷியாவில் இருந்தேன். அங்கிருந்தபடியே, பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினேன். அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர் இரண்டு தடவை என்னுடன் அதுபற்றி விவாதித்தார். எனக்கு தேவையான விவரங்கள் எல்லாம் ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், நான் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்தேன்.
கேள்வி:- ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை நீங்கள் திருப்பி அனுப்பியதும் சர்ச்சை உண்டாக்கியதே?
பதில்:- அதுவும் சரியான முடிவுதான். முதலில் அதை நான் பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பினேன். மத்திய அரசு அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியது. அந்த மசோதா தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேள்வி:- எதிர்காலத்தில், பிரதமர் பதவிக்கு பொது வேட்பாளர் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா?
பதில்:- இந்த கேள்வி உங்களுக்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு கற்பனையாக தோன்றுகிறது. எனக்கு 5 கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
கேள்வி:- முதல்முறையாக பெண் ஜனாதிபதி கிடைத்து இருப்பது பற்றி?
பதில்:- இது உண்மையிலேயே நல்ல செய்தி.
கேள்வி:- வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகிய இரண்டு பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இருவருமே திறமையானவர்கள், சிந்திக்கும் வகையை சேர்ந்தவர்கள், பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுபவர்கள். அவர்களுடன் எனக்கு சிறப்பான உறவு நிலவியது. மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
கேள்வி:- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டுமா?
பதில்:- தேவை இல்லை. அரசியல் சட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சோதனைகளை தாங்கி நிற்கிறது. என்னை பொறுத்தவரை எனது பணியில் எந்த முட்டுக்கட்டையும் இருக்கவில்லை.
கேள்வி:- 27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையை சமாளிக்க வழி என்ன?
பதில்:- கல்வி நிறுவனங்களில் `சீட்'களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கேள்வி:- இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?
பதில்:- அணுசக்திக்கு நம்மை நாமே சார்ந்திருப்பதுதான் ஒரே வழி. நம்மிடம் நிறைய தோரியம் இருக்கிறது. அதை வைத்து அணுசக்தி உற்பத்தி செய்ய ஈனுலைகள் அமைக்க வேண்டும்.
கேள்வி:- தற்போதைய அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அரசியல் நிலைமை கவலை அளிக்கிறது. முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவது இல்லை. வளர்ச்சி பற்றி போதுமான அளவு பேசப்படுவது இல்லை. அதற்கு உயர் முன்னுரிமை கொடுப்பது இல்லை. உதாரணமாக, எந்த ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று எந்த கட்சியும் இலக்கு நிர்ணயிப்பது இல்லை.எல்லா அரசியல் தலைவர்களும், வளர்ச்சிரீதியான அரசியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. வளர்ச்சி பணி அடிப்படையில் தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

* மனிதர்களை களங்கப்படுத்தும் செயல்களில் எல்லாம் அச்சம் பிரதானமாக இருக்கிறது. அது, இறைவன் உங்களுக்கு கொடுத்த கடமையைக்கூட எளிதாக முடிக்க விடாமல் தடுக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் கொடுத்திருக்கிறார். மனதில் பயம் இருப்பவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை

- ஸ்ரீஅன்னை

இன்றைய குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக்கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டாதரணி நேர்முகம் பகுதி II

கேபிள் டிவி-யும் ஆளும் கட்சியும்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 27 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாமின் பத்து கட்டளைகள்

வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற,
10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர்.


மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்தினார்.

"நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, "நம்மால் முடியும்'' என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். ""சுகோய்-30'' ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, "அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்'' என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்' என்றார் கலாம்.