May 26, 2009

ஈழம்தான் அற்றுப்போய்விட்டதா அல்லது காலம்தான் அற்றுப்போய்விட்டதா


ஈழத்தின் தீயூழ்!
மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! "ஈழம் எங்கள் தாகம்'' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன!

ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள் : "அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!''

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத்தாய் ஒருத்தி அந்த மண்ணின் விடுதலைக்காகச் சுமந்தாள்!

இலங்கை மக்கள் ஒரே நாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டுபோன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று; அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப் பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே!

தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன் சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகைதொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே!

வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவண வதம் நிகழ்வதற்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா?

வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன?

நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்கிறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை முத்தமிடுகிறார்!

அந்தக் குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டேன் என்பதுதானே!

சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது; ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப் பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டேன் என்பதுதானே!

ஈழப் பிரிவினைக்குக் கூட பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடிந்தால் நிறைவேற்றிக் கொள் என்பது ராஜபட்சவின் அறைகூவல்!

அப்படி முடியாதென்றால் "ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்'' என்று சமாதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை!
அதை விட்டு விட்டு உரிமை பற்றிப் போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப் பொசுக்கும்; அதற்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை.

இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப் பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக் கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை!

அந்த வெட்டுக் கத்தியைக் கொடுக்க விடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இவரும் சேர்ந்து கொண்டு "ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்தது, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்!

ஈழத் தமிழினத்திற்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தொடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போராளிகளை ராணுவ ரீதியாக வளர்த்தவர்கள் அவர்கள்தான்!

முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒரு பகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது!

ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின. இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்கு ராஜபட்ச வருவதற்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்!

எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப் பிழைப்புக்குப் பதிலாக ஈனப் பிழைப்புப் பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா?

ரணிலுக்குப் பதிலாக ராஜபட்ச வந்தது தமிழின அழிவுக்கு முதற் காரணம்.

சோனியாவின் "ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன் சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்து விட்டதை ஈழத்தின் தீயூழ் என்றுதான் வள்ளுவ மொழியில் சொல்ல வேண்டும்!

இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புக் கடை ஆனதற்கும் ராஜபட்ச முதற் காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன் சிங் துணைக் காரணம்! மன்மோகன் சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாக வாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரிய வழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச் சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேளை வரும்வரை உண்ணாநோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னொரு துணைக் காரணம்!

ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன் சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின!

நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்துத் தொடங்கும் என்பதே!

நான்கோடு எண்ணிக்கை முடிந்துவிட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன் சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது.

ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப் போய்விட்டதா? அல்லது காலம்தான் அற்றுப் போய்விட்டதா?

உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம் கண்ட இனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது!