October 24, 2015

வணக்கம் உறவுகளே ! சவுகார்பேட்டை திரைப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன்

வணக்கம் உறவுகளே ! சவுகார்பேட்டை திரைப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன். தயவு செய்து இந்த முன்னோட்டத்தைப் பார்த்து நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி :) விரைவில் வெள்ளித்திரையில்...


October 21, 2015

திண்ணையில்... நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன..... 

October 16, 2015

புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது

அன்பிற்கினிய எம் தமிழுறவுகளே ! தோழர்களே !! வணக்கம். கடந்த (அக்டோபர்) 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகரமே கலை கட்டியது. ஆம் ! வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டு திருவிழாவில் புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே, அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கும், வந்திருந்த தோழர்களுக்கும் மிக்சிறந்த மரியாதை செய்து, அற்புதமான முறையில் விழாவினை ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினருக்கு வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் வலைப்பதிவு தோழர்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு எதிர்வரும் அடுத்த பதிவர் விழாவுக்காகக் காத்திருக்கிறேன். காலையில் விழாவிற்கு வந்த நான் மாலையும் திரும்ப வந்துவிட்டேன். இடையில் சில மணி நேரங்கள் அரங்கில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தோழர்கள் என்னை மன்னிக்கவும். காரணம், என் நெருங்கிய தோழர் இல்லத்தில் ஓர் எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தமையால் நான் அங்கு விரைந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எனவே, சில தோழர்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்க இயலவில்லையே என்ற வருத்தத்தை விழாக்குழுவினரின் அற்புதமான மிக நீண்ட காணொளி நிவர்த்தி செய்தது. காலை முதல் விழா முடியும்வரை விழாக்குழுவினரின் சுறுசுறுப்பும், உபசரிப்பும் என்னைத் திக்கு முக்காடச் செய்தது. விழாவில் கலந்து கொள்ள இயலாத தோழர்கள் தயவுசெய்து கீழ் காணும் சுட்டிகளின் மூலம் விழாவினை முழுவதுமாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, தயவு செய்து கீழுள்ள  வலைப்பதிவின் வாயிலாக அங்குள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இன்னொரு தருணத்தில் நாமனைவரும் சந்திப்போம் என்று கூறி விழாக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகளை இங்கே சமர்ப்பிக்கிறேன். நன்றி, வணக்கம்.

புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் “எந்தக் குறையும் இல்லை” என்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!

வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்

காணொளிகள்

October 13, 2015

திண்ணையில்.... என் "ஒத்தப்பனை"

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா ...... http://puthu.thinnai.com/?p=30574

October 08, 2015

ஒத்தப்பனை - நவநீ

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன். அதிகாலையில் நான் கண் விழிக்கும் முன்னரே வயல் காட்டில் கண் விழிக்கும் அவர், நான் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய் என்னைக் கட்டியணைத்து, சிவக்கச் சிவக்க வெற்றிலை நிரம்பிய வாயால் என்னை முத்தமிட்டு... "அய்யாடி வாங்க, எங்கப்பென் வாங்க... என்னெப்பெத்தவுக வாங்க..." என்று கொஞ்சிய கையோடு, கட்டி வைத்திருந்த குழி பணியாரங்களை ஒன்று விடாமல் ஊட்டி விடுவார். ஒரு வழியாகப் பணியாரங்கள் முடிந்ததும், என் வீட்டு மைலைப்பசுவின் மடியிலிருக்கும் அசல் பால் இறக்குமதி செய்யப்பட்டு, மிச்ச மீதியுள்ள என் வயிற்றின் காலியிடத்தை 'காப்பி'யாய் கச்சிதம் செய்யும். பிறகு, சுமார் ஆறரை அடி உயரமிருக்கும் என் தாத்தா, என்னைத் தூக்கி, தன் தோள்களின் இருபுறமும் கால்கள் போட வைத்து சுமந்துகொண்டு, "அந்தப் பனமரத்துல யாகுமுத்து இருக்கானான்னு பாருய்யா" என்பார். "ஆமா தாத்தா, இப்பத்தான் மரத்துல ஏறிகிட்டு இருக்காரு"... இது நான். இருவரும்.... இல்லை, இல்லை அவர்மட்டும் அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார். அவர் தோளில் இருந்தபடி நான் பாதை பார்த்து முள், மேடு, பள்ளம் என அவருக்குத் தற்காலிகக் கண்ணாக இருந்து வழி சொல்லுவேன் . அவருக்குச் சற்று தூரப்பார்வை குறைவாதலால் என்னை தினந்தோறும் அந்த மரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு வழியாக மரத்தடி வந்து சேரவும், யாகுமுத்து என்ற அந்த 'கள்' இறக்கும் கணவான் மரத்திலிருந்து இறங்கவும் சரியாக இருக்கும். பொங்கும் நுரையோடு ததும்பத் ததும்ப பனங்கள்ளை சுரைக்குடுக்கையில் (முற்றி, காயவைத்து, விதைகள் நீக்கப்பட்டு, காம்பு வெட்டப்பட்ட சுரைக்காய்) நிரப்பி, இடுப்பிற்குப் பின்புறம் அது தொங்கும் அழகு, அப்பப்பா... நானும், என் தாத்தாவும் இன்னும் சில என் தாத்தாவின் சிநேகிதர்களும் மரத்தடியில் காத்திருப்போம். உடனே, பக்கத்தில் உள்ள பனங்குட்டிகளில் உள்ள பனை ஓலைகளை வெட்டி, சிறு சிறு பட்டைகள் செய்து, கள்ளில் தற்கொலை செய்துகொண்ட தேனீக்களை வாயால் ஊதி, அகற்றிவிட்டு, அந்த சோமபானமானத்தை பட்டைகளில் ஊற்றி ஒவ்வொருவரும் உரிந்து குடிக்கும் சத்தமும், சுத்தமும், அந்த வாசமும், பாசமும், பறிமாறலும் என் எண்ணம் விட்டு நீங்காமல் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. 'யாரிடமும் சொல்லக்கூடாது' என்ற என் தாத்தாவின் சத்தியப் பிரமாணத்தோடு, நானும் பலமுறை பனங்கள்ளைச் சுவைத்திருக்கிறேன். 

ஆனாலும், குடிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கும். திடீரென்று ஒரு வாசனை... சுட்ட உப்புக்கண்டமும், கருவாடும் கட்டி வைத்திருந்த இடுப்பை விட்டு விடுதலை செய்யப்பட்டு கள் பட்டைக்கருகே காத்திருக்கும். பனங்கள், சுட்ட கருவாடு, உப்புக்கண்டம்..... சொர்க்கம்... சுரைக்குடுக்கை சுத்தமாகும்.....

இதோ..... இன்று.... பக்கத்தில், பட்டை பிடிக்க உதவிய பனங்குட்டிகள் ஒத்தப்பனைக்கு இணையாக ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.

இனியொருமுறை அது நடக்குமா? நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா சிநேகிதர்களோடு அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், அந்த 'ஒத்தப்பனை'யையும், கள் இறக்கிய யாகுமுத்துவையும் பார்க்கத் தவறுவதில்லை. அந்த ஒத்தப்பனையைக் கட்டியணைக்கும் போதெல்லாம் அது என்னிடம் ஏதோ பேசும்....

என் தாத்தா உயிரோடு இல்லை.... அதனால் என்ன? அதோ..... காற்றில் அசைந்து அசைந்து, என்னைப் பார்த்துக் கையசைத்து.... கம்பீரமாய் காட்சியளிக்கும் என் ஒத்தப்பனை இருக்கிறதே....

 - நவநீ

நல்லா வருவ - தமிழ் குறும்படம்