August 28, 2020

உலகிலேயே பெண்களைப் போற்றி மகிழும் ஒரே மொழி தமிழ் || The only language which respects women is Tamil


August 26, 2020

சொந்தம் - நவின் சீதாராமன்

வணக்கம் உறவுகளே!


கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், இதே ஆகஸ்ட் மாதம் 2007 - ல் அமொிக்காவிலிருந்து வெளிவரும் மாதாந்திர இதழான 'தென்றல்' பத்திரிகையில் நான் எழுதிய உண்மைச் சம்பவத்தின் பதிவுதான் நீங்கள் கீழே வாசிக்க இருக்கும் 'சொந்தம்". இதை சிறுகதையாகப் பிரசுரித்தார்கள். ஆனால் இது ஓர் ஆத்மார்த்தமான தம்பதியரின் அற்புதமான வாழ்க்கை. 2007 - ல் இதை எழுதும்போது நான் ஒரு மன நிறைவோடு பதிவு செய்தேன். ஆனால், இன்று வருத்தத்தோடு இதைப் பகிர்கிறேன். ஆம்.... இந்தப் பதிவில் வரும் என் கதாநாயகி இரு தினங்களுக்கு முன் எங்களை விட்டும், அவள் வாழ்ந்த அந்த மண்ணை விட்டும் விடை பெற்றுக்கொண்டாள். இந்தக் கரோனா காலப் பிடியில் சிக்கிக்கொண்டதால், அந்த மகத்தான மனுசியைக் கடைசியாக ஒரு முறையேனும் பார்க்க இயற்கை அனுமதிக்கவில்லை. ஆனாலும், அவள் எப்போதும் எங்கள் எண்ணங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். நன்றி!

சொந்தம் - நவின் சீதாராமன்

ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு, எப்ப நீ டீய'ப் போடறது? எந்திரிப்பா... ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி, தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். 'ம்ம்… நல்லா அசந்து தூங்கிட்டம்பா' என்ற முனகலோடு நெட்டி முறித்துக்கொண்டே ராமு எழுந்து வந்து 'கொண்டா, என்றவன்.... என்ன இன்னிக்கி பாலு கம்மியாருக்கு' என்று வாங்கிக் கொண்டான். 'எருமைக்குத் தவுடு கிவுடு, பருத்திக்கொட்ட, புண்ணாக்கு இப்படி நல்லா வச்சாத்தானே பாலு நெறயக் குடுக்கும்'  என்று சலித்துக்கொண்டபடி அடுப்பைப் பற்ற வைக்கிறான். ராமுவின் டீயைக் குடித்த பிறகுதான் அந்தப் பகுதி விவசாயிகள் வயலிலேயே இறங்குவார்கள். அந்த டீ அப்படி ஒரு வசியம். அந்தப் பகுதிக்கே ஒரே ஒரு டீக்கடைதான். அதற்கு பால் சப்ளை செய்வது சுப்ரமணிதான்.

 

சுப்ரமணி ஒண்டிக்கட்டை. அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நான்கு எருமை மாடுகளும், இரண்டு கன்றுகளும் தான். அதில் கறக்கும் பாலை இந்த டீக்கடையில் ஊற்றுவதும், காலையிலும் மாலையிலும் ஓசியாகக் கிடைக்கும் டீயைக் குடிப்பதும், எருமைகளை மேய்த்து, குளிப்பாட்டி அழகு பார்ப்பதும், அவ்வப்போது சந்தைக்குச் சென்று, ஊரில் உள்ளவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வந்து கொடுப்பதும்தான் அவன் வேலை. ஊரில் உள்ளவர்களுக்கு உதவியாக இருப்பதோடு, தகப்பன் வழி, விட்டுச்சென்ற மூன்று ஏக்கர் நிலத்தைப் பராமரித்துக் கொள்வதும்தான் சுப்ரமணிக்கு வாழ்க்கை.


தவறாமல் வருடா வருடம் பழநி ஆண்டவருக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, கால்நடையாய் நடந்து மலைக்குப் போவதும், வந்தவுடன் வீடு தவறாமல் பஞ்சாமிர்தம் கொடுப்பதும்தான் அவனது தலையாயக் கடமை. 'எலேய்! சுப்ரமணி' என்று அவனைவிட வயதில் சின்னவர்கள் கூட கூப்பிடும் அளவுக்கு சுப்ரமணி செல்லப்பிள்ளை. ஆனால் மாலை போட்டிருக்கும்போது மட்டும், அனைவரும் 'சாமி' என்று மரியாதையாக அழைப்பார்கள். அந்த தற்காலிக மரியாதை கலந்த வாழ்க்கை சுப்ரமணிக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு நாள் கொட்டும் மழையில் தலையில் சாக்கை மடித்து கொங்கானி போட்டுக்கொண்டு, ஊர்த்தலைவர் மகன் நவநீதன், சுமார் ஐந்தாறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிலுக்கபட்டி பள்ளிக்குச் சென்றதைப் பார்த்து, மனது கேட்காமல், ஓடிவந்து, தான் வைத்திருந்த குடையை அவன் கையில் கொடுத்துவிட்டு, அவன் போட்டிருந்த கொங்காணியை இவன் வாங்கிக்கொண்டு, 'எரவமாடு மேய்க்கறவனுக்கு எதுக்கிய்யா பட்டன் கொடை, நீ படிக்கிற புள்ள இந்தா கொண்டு போய்யா' என்று கொடுத்துவிட்டு, அந்தப் பிஞ்சு முகத்தில் வந்த சந்தோசக் களிப்பில், தானும் சந்தோசப்பட்ட ஒரு சராசரி மனிதன்தான் சுப்ரமணி.

 'சாமி எப்ப மலைக்குப்போகுது?' ராமு கேட்க, 'வார வெள்ளிக்கெழம வெள்ளெனக் கௌம்பிறேஞ் சாமி. சரி, மறக்காம மாட்டுக்குத் தீனி வச்சுரு, பாலு ஒட்டக் கறந்துறாத, கண்ணுக்குட்டி தொத்தலாப் போய்ரும்' என்றான் சுப்ரமணி. தன் சொந்தங்களைப் பிரிந்து செல்வதே இந்தப் பாதயாத்திரை சமயத்தில்தான். கோயிலுக்குச் செல்லும் அந்த நாட்களில் டீக்கடை ராமுதான் மாடுகளைப் பார்த்துக் கொள்வான்.

40 நாட்களுக்கு மேல் வளர்த்த தலைமுடியையும், தாடியையும் பழநி முருகனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, அந்தி சாயும் நேரத்தில் திரும்பிய சுப்ரமணி தன் வீட்டை நெருங்கும்போது ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட்டது. தன் வீடுதானா என்ற ஆச்சர்யத்தோடு, நெருங்கி வந்தான். வாசல்புறம், மாடு கட்டும் கொல்லைப்புறம், அருகில் உள்ள குட்டிப்பனை, வைக்கோற்போர், தவிட்டுத்தொட்டி எல்லாம் மிகச் சுத்தமாக தன் தலையைப் போலவே பளிச்சென்று இருந்தது. வழக்கமாகக் கோயிலுக்குப் போய்த் திரும்பியபின் மொத்தச் சாணத்தையும், கொல்லைப்புறத்தையும், வீட்டையும் சுத்தம் செய்யக் குறைந்தது மூன்று நான்கு நாட்கள் எடுக்கும்.

யார் சுத்தம் செய்திருப்பார் என ஒன்றும் புரியாதவனாய் நெருங்கி வந்தான். திடுக்கிட்டு நின்றான். தன் வீட்டுக்கு பூட்டுப் போட்டு பூட்டிவைக்கும் அளவுக்கு பொக்கிஷங்கள் இல்லாவிட்டாலும், மற்ற பிராணிகள் உள்ளே செல்லாமல் இருக்க கம்பி போட்டு முறுக்கி, இறுக்கிக் கட்டிவிட்டுத்தான் போயிருந்தான். ஆனால் அது அறுக்கப்பட்டு வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாதவனாய் திறந்து பார்த்தான். அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. உள்ளே அழகாக விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது. கத்தரிக்காய், மொச்சக்கொட்டை சோ்த்து  வைத்த கருவாட்டுக் குழம்பு வாசனை அடிவயிற்றில் சுரக்கும் அமிலத்தை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. கண்களில் லேசாகக் கண்ணீர் சுரக்க, இந்த ராமுவுக்கு நான் என்னதான் கைம்மாறு செய்யப்போகிறேனோ என மனதுக்குள் எண்ணி, கொண்டுவந்த பையை ஆணியில் தொங்கவிட்டுவிட்டு வெளியே வந்தான். வெளியே வந்த அவனுக்கும், தண்ணீர்க் குடத்தைத் தலையில் இருந்து இறக்கி உள்ளே கொண்டுபோக வந்த அந்தப் பெண்ணுக்கும் இடையே ஓர் அடி தூரம்தான். அவன் ஒன்றும் புரியாதவனாய் திகைத்துப்போய் நின்றான்.

'யார் நீ... நீங்... நீங்க? இங்க எப்படி வந்திய' சுப்ரமணி கேட்டான். 'எனக்குன்னு யாருமில்ல, என்னெக் குத்தஞ் சொல்லாதிய, எனக்கு வேறவழி தெரியல, என்னெ வெளிய கிளிய வெரட்டிராதிய, யாம்பட்டுக்கு இங்கன ஒரு மூலையில குத்தவச்சுக்கறேன், என்னால ஒங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது' என்று ஒரு மூச்சில் சொல்லி முடித்தவள், பதில் வருவதற்குள், 'நா..வந்து ரெண்டு நாளாச்சு இந்த வீட்டுக்குள்ள, இனிமே நா எங்கெ போறது? நீங்க எதுவுஞ்சொல்லாம இப்படி இருந்திய'ன்னா, யாம்பாட்டுக்கு ஒரு கெணத்துலயோ, கயத்துலயோ என்னோட சீவென முடிச்சுக்கிருவேன்' என்றாள்.

சுப்ரமணிக்குப் பேச வாய் வரவில்லை. 'இந்தா வாரேன்' என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

சுப்ரமணிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவனது தந்தை, அவனையும் ஆத்தாவையும் விட்டு ரங்கூன் போனதாகவும், அதன் பிறகு அவர் அங்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும், பிறகு திரும்ப தாயகம் வரவே இல்லையெனவும் இரண்டு மூன்று தபால்களுக்குப் பிறகு தொடர்பே கிடையாது எனவும் ஆத்தா சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்தப் பெண் யார்? எங்கிருந்து வந்தாள்? நான் இதுவரை என்னொடு ஒரு பெண்ணைச் சேர்த்து நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இது எப்படி நடந்தது? குழப்பத்தில் எந்த முடிவுக்கும் வரமுடியாதவனாய், வேறு வழியின்றி நேராக ஊர்த்தலைவர் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நடந்ததைப் பக்குவமாக எடுத்துச் சொன்னான்.

இந்தப் பெண் வந்து இரண்டு நாட்களாகியும் ஊரில் யாருக்குமே தெரியாமல் போனதற்கு ஆச்சர்யப்பட்டு எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்தபின் ஊர்த்தலைவர் ஒரு முடிவுக்கு வந்தார். 'சரி நீ வீட்டுக்குப்போ. ஒன்னும் மனசப் போட்டு கொழப்பிக்காதெ, வெள்ளனப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் சுப்ரமணி' என்றார்.

வாழ்நாளில் இப்படியொரு சூழ்நிலை வருமென்று அவன் நினைத்ததே இல்லை. இந்த இரவு மட்டும் அவனால் ஏனோ உறங்க முடியவில்லை. எங்கு போவதென்று ஒன்றும் புரியவில்லை. 'என்ன ஆனாலும் சரி, பழநி முருகன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டேன் நடப்பது எதுவானாலும் அது அவன் சித்தம்' என்று புலம்பினான். சோர்வடைந்து கிராமத்தில் உள்ள டி.வி. ரூமில் படுத்துக் கொண்டான். ஆனால் நினைவுகள் அனைத்தும் தன் வீட்டையும், அந்தப் பெண்ணையுமே சுற்றிச் சுற்றி வந்தன. மனதுக்குள் ஒரு பயம் வேறு, அவள் ஏதாவது அவசரப்பட்டுச் செய்து கொண்டால்! மனது கேட்கவில்லை, நல்ல பௌர்ணமி நிலவு, தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கிராமத்தில் அத்தனை நாய்கள் இருப்பதை அன்றுதான் அவன் உணர்ந்தான். அவனைக் கண்டதும் படுத்திருந்த மாடுகளும், கன்றுகளும் தீனி போட வருவதாக எண்ணி விருட்டென எழுந்து நின்றன. பாவம்!

மாடுகள் தன்மீது உரசுவதிலிருந்தே அவைகளுக்கு என்ன வேண்டும் என்பதையும், அவற்றின் பார்வையிலிருந்தே பாதி வயிறுதான் நிரம்பியுள்ளது என்பதையும் உணர முடியும் அளவுக்கு அவற்றோடு ஒன்று கலந்திருந்த சுப்ரமணி இன்று அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. கதவைத் திறந்தான். அங்கு அவள் நிம்மதியாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளையே உற்றுப்பார்த்துக்கொண்டு நின்ற சுப்ரமணி, நிம்மதியாகப் பெருமூச்சு விட்டு, பிறகு ஒரு தெளிவான முடிவோடு டி.வி. ரூமுக்கே திரும்ப வந்து படுத்துக்கொண்டான்.

பொழுது பளீரென விடிந்தது. ஊர்க்கூட்டம் கூடியது. ஆளாளுக்குப் பேசினர். 'சரிப்பா, அவனும் ஒண்டிக்கட்டை, அவனுக்குனு யாரு இருக்கா, காலம்பூறா எருமையக் கட்டிகிட்டு அழுகுறாம்பா, இந்தப் புள்ளயும் பாத்தா நல்ல மாதிரித்தான் தெரியிது, அந்தப் புள்ள பேரு என்னப்பா? ம்ம்... வெள்ளையம்மா. அது கிட்டயும் விசாரிச்சேன். அது இங்க சபைக்கி வரக் கூச்சப்படுது. அதுக்கும் கூடப்பொறந்தவக, சொந்தஞ்சொறவுனு சொல்லிக்கிறதுக்கு யாருமில்லே'னு கேள்விப்பட்டேன். ஊரு கெழக்கயாம். பேசிப் பாத்தேன். இவனும் ஒத்தையாத்தானே கெடக்கிறான்! நாம எல்லாருமே இவன அடிமாடாட்டமா வேலையத்தான் வாங்கிக் கிட்டமே வாசி, அவனுக்குனு என்னத்த பெருசா செஞ்சி கிழிச்சிப்புட்டோம்? அவனும் பொணையமாடு மாதிரி நம்மளயே சுத்திக்கிட்டுத்தான் கெடக்குறான். நாளைக்கி அவெம் பாட்டுக்கு படுத்துக்கிட்டான்னா ஒரு தண்ணி வெண்ணி வச்சுக் குடுக்கக்கூட ஆளு இல்ல. அதனால நாமதெ ஆளும்பேருமா நிண்டு, அங்ஙன கோயில்ல வச்சு கட்றா தாலியன்ற வேண்டியதுதான். என்ன நாஞ்சொல்றது?' என ஒரே மூச்சாகச் சொல்லிமுடித்தார் ஊர்த்தலைவர்.

கல்யாணம், மனைவி, குடும்பம் குழந்தை இதுபற்றியெல்லாம் சுப்ரமணி கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதற்கான வயதையும் தாண்டிவிட்ட நிலையில், நடப்பதையெல்லாம் தடுக்கமுடியாமலும், ஊர் மக்கள் தனக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்று நினைத்து இப்படிச் செய்துவிட்டதாகவும், தான் நினைக்காத ஒன்று நடந்துவிட்டதாகவும் ஒருபுறம் நினைத்தான். ஆனாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் தனக்கும் ஏதோ ஒரு சொந்தம் இருப்பதாகவும், கொட்டும் மழையில், தாங்கமுடியாத குளிரில் கைகளைத் தன் கால்களுக்கு நடுவில் வைத்துத் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்போது, யாரோ தன்னை ஒரு கம்பளிப் போர்வையால் முழுவதுமாகப் போத்திவிட்டுச் சென்றதொரு சுகமான ஒர் உணர்வு அவனுக்குள் தோன்றியது. அது அவனுக்குத் 'தேவை' என்பதாய் தோன்றியது.

'என்ன சுப்ரமணி! இப்பல்லாம் பால் நெறயக் கொண்டுவர்ற, மாட்டுக்கு நல்லாத் தீனி வக்கிறியா?' ராமு கேட்டான். 'ஆமா ராமு, இன்னும் ரெண்டு மாடு கன்னு போட்டுருக்கு. அதான் பாலு கொஞ்சம்கூட, நீயென்ன குடுத்த காசத்தானே குடுக்கப்போற, அதுக்குனு கூடவா குடுத்துறப்போறெ' சுப்ரமணி பதில் சொன்னான்.

'வெள்ளையம்மா! சுப்ரமணி எங்க புள்ள?' தபால்காரர் கேட்டார். 'இங்கனதான் நின்டது, எரவமாட்டப் பத்திகிட்டு, கம்மாப்பக்கம் போய்ட்டதோ என்னமோ! இந்தா நான் கூட்டியாறேன்' வெள்ளயம்மா சொன்னாள். பின்புறமுள்ள கண்மாய்ப் பக்கம் போய்ப் பார்த்து, மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த சுப்ரமணியை, 'இஞ்சொறுங்க, ஒங்களத்தானெ, இந்தா தவால்காரு கூப்புடறாரு' அடித்தொண்டயில் அழைத்தாள் வெள்ளயம்மா. 'ஏன்டி! நீயென்ன கிறுக்கா, எந்தக் கொழுந்தியா எனக்குக் காயிதம் போடப்போறா, இல்ல ஒனக்குத்தான் கலைட்ரு வேலைக்கி கடிதாசி வரப்போகுதா? வேலையப் பாப்பியா' என்றான் சுப்ரமணி நக்கலாக. 'சுப்ரமணி! ஒனக்கு லட்டர் வந்திருக்குப்பா' போஸ்ட்மேன் நேரடியாக அங்கேயே வந்துவிட்டார். 'என்னய்யா சொல்றிய? எனக்கா? எனக்கு யாரு கடுதாசி போடப்போறா?' கரையேறி வந்தான் சுப்ரமணி.

லெட்டரை அவரே படித்து, முடித்து சுப்ரமணியிடம் கொடுத்துவிட்டு, 'உங்க சின்னத்தா, தம்பிங்க, புள்ளையளோட எல்லாரும் ராமேஸ்வரத்துல அகதிகள் முகாம்ல இருக்காகளாம், வரச்சொல்லி விலாசம் கொடுத்திருக்காகப்பா' சொல்லி முடித்தார் போஸ்ட்மேன். சுப்ரமணிக்குத் தலைசுற்றியது, ஒன்றும் புரியவில்லை. வெள்ளையம்மா முகத்தைப் பார்த்தான், அத்தனை மகிழ்ச்சி. 'ஏய், வெள்ளையம்மா! பாத்தியாடி, நீ வந்த நேரமுடி. எங்க சின்னத்தா, புள்ளயல்லாம் கொண்டுவந்து சேத்துட்டடி. இனி எனக்கென்ன கொறை?' குளிப்பாட்டிய எருமைமாடுகள் எல்லாம் மைலைப் பசுக்கள் போல் காட்சியளித்தன. சுப்ரமணியின் சந்தோசத்தில் வெள்ளையம்மாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி, தன்னைத் தாலிகட்டிய அன்று இருந்ததைப்போன்ற ஒரு முகமலர்ச்சி, சந்தோசம். அவனுடைய ஏக்கங்களையும், உணர்வுகளையும், தேவைகளையும் அவளால் மட்டுமே உணரமுடியும். அதன் விளைவு, கொக்கரித்துக்கொண்டு திரிந்த இரண்டு வெடைக்கோழிகள் குழம்பில் கொதித்தன.

இராமேஸ்வரம், யார் முகமும் இவனுக்குத் தெரியாது. எப்படிக் கண்டுபிடிப்பது? யாரைப்போய்ப் பார்ப்பது? ஒன்றும் புரியாதவனாய் ஒரு வழியாய்ச் சேகரித்துக்கொண்டு சென்ற தகவல்களையும், தான் கொண்டுபோன குடும்ப அட்டை மற்றும் சில ஆவணங்களையும் காட்டி அங்குள்ள முகாமில் விசாரித்து முடிக்கும் வேளையில் 'தம்பி! சுப்ரமணி' என்று ஒரு குரல். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், தன்னைக் கட்டிப்பிடித்து கதறியழும் அந்தத் தாயின் முகத்தைக்கூட ஒழுங்காகப் பார்க்கமுடியவில்லை. இவனும் கதறியழுதான். ஆனாலும் கண்கள் யாரையோ தேடியதை உணர்ந்த தாய் 'எங்களையெல்லாம் அனாதியா விட்டுட்டு அந்த மனுசன் போய்ட்டாருய்யா. எங்களுக்கு யாருமில்லன்னு நெனச்சோம். கடவுளாப் பாத்து ஒன்ன அனுப்பிருக்காருய்யா, ஒங்கப்பாவே திரும்பி வந்தமாதிரி இருக்குய்யா' என்று கதறியழும்போது அங்கு தம்பிகள், அவர்களது மனைவிகள், பிள்ளைகள் எல்லோரும் தன்னைக் கட்டியணைத்து அழுது கொண்டிருந்தனர். வாழ்ந்து களித்த தேசத்தை விட்டு, பழகிய மண்ணையும் மக்களையும் விட்டு, அகதிகளாக வந்து, சற்றும் எதிர்பாராது, திடீரெனச் சொந்தம் ஒன்றைக் கண்டு கொண்டுவிட்டால்! அந்தக் கணம்... அடடா...  அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

ராமுவின் டீக்கடைக்குப் பால் கொடுப்பதை சுப்ரமணி நிறுத்திவிட்டான். குடும்பம் பெரியதாகி விட்டது. பக்கத்தில் இரண்டு தம்பிகளுக்கும் சிறிய வீடுகள் கட்டிக் கொடுத்துவிட்டான். ஆளுக்கொரு ஏக்கர் நிலம் கொடுத்துவிடலாம் என்று யோசிக்கையில் 'அதொன்டும் வேண்டாமண்ணா! நாம ஒன்டாக இருப்பம், அதொன்டு போதும், எங்கட அண்ணன் வேறு, நாங்கள் வேறல்ல அண்ணா! எதச்செய்தாலும், சேந்து செய்வொம்' என்று தம்பிகள் சொன்னபோது இதுவரை கலங்காத சுப்ரமணியின் கண்களும் கலங்கின. என்ன ஆரோக்யமான உணர்வு! கொடுக்கல் வாங்கலுக்கே கொலை செய்யத்துணியும் பங்காளிச் சண்டை நிறைந்த மண்ணில் இந்த வார்த்தைகள் அவனுக்குப் பெரிய ஆச்சர்யமாய் இருந்தன. இந்த ரத்த உறவுகளை அனுபவிக்காமல் இருந்ததன் வேதனையை இப்போதுதான் உணர்கிறான். தம்பியின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை சுப்ரமணியும் வெள்ளையம்மாவும் பார்த்துப் பூரித்துப் போனார்கள். தன்னையும் வெள்ளையம்மாவையும், தன் ஆத்தாவையும் தவிர அனைவருமே படித்தவர்கள். இப்போதும் சுப்ரமணி சந்தைக்குச் செல்கிறான். வழக்கமாகக் கிடைக்கும் பரோட்டா குருமாவும், மரிக்கொழுந்தும் வெள்ளையம்மாவுக்கு முன்புபோல முழுவதுமாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் வெள்ளையம்மா பளீரென்று வெள்ளையாகத்தான் தெரிந்தாள். தனக்குப் பிடித்த ஒருவருக்குப் பிடிக்கும் எல்லாமே தனக்கும் பிடித்துப்போய்விடும். அவர் ரசிக்கும் அனைத்தையும் தனக்கும் ரசிக்கத் தோன்றும். இதுதான் இல்லறத்தின் இலக்கணம். குதூகலம் பூத்துக் குலுங்கியது. வறண்டுபோய்க்கிடந்த வெள்ளையம்மா சுப்ரமணியின் வாழ்க்கையில் முழுச்சந்தோசம் கிடைத்ததாகப் பூரித்துப்போனார்கள்.

ஒருநாள் இரவு சுப்ரமணியிடம் அவனுடைய அப்பா பற்றி வெகுநேரம் சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தாள் ஆத்தா. திருமணமாகி சில நாட்களிலேயே ரங்கூனிலிருந்து ஈழத்திற்கு தேயிலைத் தோட்ட வேலைக்கு வந்துவிட்டதாகவும், அடிக்கடி சுப்ரமணி மற்றும் அக்கா, அதாவது சுப்ரமணியின் ஆத்தா பற்றியெல்லாம் மூச்சுக்கு மூச்சுப் பேசுவாரென்றும், சுப்ரமணியும் உருவத்தில் தன் அப்பாவைப் போலவே இருந்ததாகவும், அத்தோடு, சிறு வயதில் அப்பா நுங்கு வெட்டும்போது பாதியாகத் துண்டிக்கப்பட்ட சுப்ரமணியின் இடது கை ஆள்காட்டி விரலை வைத்தும்தான் கேம்ப்பில் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டதாகவும் கூறினாள். பிறகு, எல்லோரையும் கொண்டுவந்து ஓரிடத்தில், பூர்வீக மண்ணில் சோ்த்துவிட்டேன். இனி நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேன் என்று மிகவும் சந்தோசமாக நடுநிசிவரை பேசிவிட்டு உறங்கிய ஆத்தா, அடுத்த நாள் எழவே இல்லை. அந்தச் சந்தோசத்தோடே ஜீவன் பிரிந்துவிட்டது. பார்க்கமுடியாத பந்தங்களையெல்லாம் பார்த்து, சேர்க்க வேண்டிய சொந்தங்களையெல்லாம் ஒன்று சேர்த்துவிட்ட சந்தோசத்தில் ஆத்தா நிம்மதியாகப் போய்விட்டாள். எல்லாமே வேகவேகமாக நடந்து முடிந்துவிட்டது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சுப்ரமணியனுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தம்பிகள் எல்லோரும் படித்தவர்களாதலால், அவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கூடலூரில் முகாம் மூலமாக வேலை கிடைத்திருப்பதாகவும், இந்தக் கிராமத்தில் அனைவரும் இருந்து அண்ணனுக்கு சிரமம் கொடுப்பதைவிட குடும்பத்தோடு அங்கு செல்ல இருப்பதாகவும், அடிக்கடி வந்து போவதாகவும் சொன்ன நியாயமான விளக்கத்தை சுப்ரமணியாலும், வெள்ளையம்மாவாலும் தட்டமுடியவில்லை. ஒருவரையொருவர் முட்டிமோதி அழுகத்தான் முடிந்தது.

'ராமு... ராமு... கோழி கூப்டுருச்சு, எந்திரிப்பா. பால் கொண்டுவந்திருக்கேன்' இப்போதெல்லாம் வெள்ளையம்மா டீக்கடைக்கு பால் கொடுக்கிறாள். சந்தைக்குச் செல்கிறாள். வேண்டியவற்றையெல்லாம் வாங்கி வந்து அவரவர் கையில் சேர்த்துவிட்டு, வெறுங்கையோடு வீடு திரும்பும் வெள்ளையம்மா வரும் வழியைக் கன்றுக்குட்டிகளும் மாடுகளும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

ஒட்டிப்பிறந்த உறுப்புக்களில் ஒன்றை இழக்கும்போதுதான் அதன் அவசியம் புரியும். உயிர்வலி தெரியும். தேடினாலும் காண முடியாத தன் தாய், தம்பிகள், பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குதூகலித்த அந்த வீடு வெறிச்சோடிக் கிடப்பதையும், வந்த வேகத்தில் அனைவருமே பிரிந்து போய் விட்டதையும் நினைத்து சுப்ரமணி கிட்டத்தட்ட ஒரு நோயாளியாகிவிட்டான். இப்பொழுது கூடவே இருப்பது தன் வெள்ளையம்மா மட்டும்தான். யாருமே உணரமுடியாத ரண உணர்வுகளை ஆறவைத்த இந்த உத்தமிக்கு நான் என்ன செய்தேன்? என்னைத்தேடி இவளை அனுப்பியது யார்? நான் வணங்கும் பழநி ஆண்டவனா? அனுப்பியவன் நான் இளவயதிலிருக்கும்போது அனுப்பியிருக்கக் கூடாதா? காலம் கடந்துவிட்ட நிலையில் எனக்கு இப்படி ஒரு உறவு! எனக்குப்பிறகு என் வெள்ளையம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்னை நம்பி வந்த இவள் எனக்குச் சாமியா, என் தாயா? நான் இவளை விட்டு எப்படிச் செல்லமுடியும்? பழநியாண்டவா! இவ்வளவையும் நான் கேட்காமலே கொடுத்த நீ ஒரு வாரிசை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா என முதன்முறையாகக் கடவுளைக் கேட்டான். கொடுத்திருந்தால் நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேனே. எனக்குப் பிறகு என் வெள்ளையம்மாவுக்குத் துணை யார்? எப்படி என்னைப் பிரிந்து இருப்பாள்? சுப்ரமணி நடந்தவற்றை எண்ணி எண்ணி படுத்த படுக்கையாகி விட்டான். தனது சொந்தங்களாகிய பத்துப் பதினைந்து எருமை மாடுகளையும், கன்றுகளையும் இப்போது வெள்ளையம்மா கவனித்து வருகிறாள். முறையாக எழுதித்தராவிட்டாலும் மூன்று ஏக்கர் நிலத்தையும் வெள்ளையம்மா நன்றாக விவசாயம் செய்து வருகிறாள் என்ற மன நிம்மதியோடு சுப்ரமணி கண்ணை மூடிவிட்டான்.

காலம் யாருக்காகவும் காத்திராமல் உருண்டோடியது.

'ஆத்தா.... வெள்ளையம்மா, வெள்ளையம்மா!' - இது புதிதாக பணியில் சோ்ந்திருக்கும் தபால்காரரின் மகன்.

'ஆரு? தவால்காரத் தம்பியா? இந்தா.. வாரேன்' எனத் தள்ளாடி எழுவதற்கு முன், 'இதுல ஒரு கைரேகை வைய்யிங்க' என்று தபால்காரர் அந்தக் குடிசைக்குள் நுழைந்து, பணத்தை வெள்ளையம்மாவிடம் கொடுத்து விட்டு, கைரேகையைப் பெற்றுக்கொண்டு, அன்பளிப்பு பணம் எதுவும் வாங்காமல் செல்கிறார். தனக்குச் சொந்தமாக நிலமிருந்தாலும், வெள்ளையம்மாவுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஆண் வாரிசு இல்லையென்பதால் அவளுக்கு முதியோர் உதவித்தொகைக்குப் பரிந்துரை செய்திருந்தார் ஊர்த்தலைவர்.

வாங்கிய பணத்தை ஆணியில் மாட்டப்பட்டிருக்கும் சுப்ரமணி உபயோகித்த, பழநியாண்டவர் பைக்குள் வைக்கிறாள். நடுங்கும் கைகளால், தன் முந்தானையை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொள்கிறாள் வெள்ளையம்மா. அடைமழை பெய்து கொண்டிருக்கிறது.

- ஆகஸ்ட் 2007 - ல் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “தென்றல்” இதழில் பிரசுரமானது. 


http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3390