April 24, 2007

சங்கர் - சவூதி

“நாம மனசு வச்சா நடக்குமுங்க”

மனசு என்பது என்ன?
அது எங்கே இருக்கிறது?
எப்படி இருக்கிறது?

அது வாழ்க்கையில் வெற்றிக்கான வழியைக்காட்டுமா?

மனம்தான் வாழ்வின் நிர்ணய சக்தி. நம் இன்ப துன்பங்களின் கர்ப்பப்பை. வெற்றி தோல்விகளின் விளைநிலம். மனம்தான் வாழ்க்கைப் போராட்டத்துக்கான போர்க்கருவிகளின் பட்டறை, பாசறை, பள்ளியறையும்கூட. வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனம்தான் செதுக்குகிறது. வாழ்வா - சாவா? புகழா - இகழா? வெற்றியா - தோல்வியா? இவையெல்லாம் நம் கையில் இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வாழ்வில் எண்ணத்தின் உயரம் நம் உள்ளத்தின் உயரம். உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதைக் கடவுளாலும் தடுக்க முடியாது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு - குறள்

தந்தையின் உடலில் ஓர் உயிர் அணுவாக இருந்த நாம், தாயின் கர்ப்பப்பை நோக்கி பிரயாணம் செய்து, நம்மோடு கூட வந்த லட்சக்கணக்கான உயிர் அணுக்களை ஜெயித்து தாயின் கருவில், சினைமுட்டையில் கலந்தோம். ஓடி ஓடித் தாயின் கருவில் இடம் பிடித்த நாம், ஓடி ஓடிப் பூமித்தாயின் மடியில் இடம்பிடிக்க வேண்டியதும் அவசியம்தானே! இந்த உலக வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம்தான்! ஓடுவது நமது இயல்பு. ஜெயிப்பது நமது இயற்கை. ஓடத்தயங்குபவர்களை உலகம் வாரிச்சுருட்டி வெளியில் தள்ளிவிடும். இந்த உலகம் இயங்கவேண்டிய கர்மபூமி. இயங்காமல் இருக்க எவருக்கும் உரிமையில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் கடுமையாக ஓடி ஓடி உழைத்து மேலே வரவேண்டியதுள்ளது. மேலே வந்துவிட்டோமே என்று உழைப்பை நிறுத்திவிட்டால் கண்டிப்பாக விபத்து நேரிடும். உழைப்பே உணவு, உழைப்பே ஓய்வு, உழைப்பே உயிர். எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். சாகிறவரை வாழவேண்டாமா? அதற்காக வாழ்வில் உழைப்பை விடமுடியுமா? இந்த வாழ்க்கை வளையத்துக்குள், சுழற்சிக்குள் புகுந்து விளையாடி எதிர் நீச்சல் போடவேண்டும்.

வாழ்க்கையில் ஜெயிக்க கடவுளின் கருணை இயல்பானது. ஆனால் மனித முயற்சி, கடும் உழைப்புதான் ஜெயத்தை நிர்ணயிக்கிறது. பஞ்சபூதங்களும் நமது பாதுகாவலர்கள்தான். அவற்றைக்கண்டு சோர்வடைய வேண்டாம். மனதைக் கவிழ்த்து வைத்திருப்பவர்களுக்கு, கடவுளின் அருள் ஒருபோதும் கிடைப்பதில்லை. கவிழ்த்து வைத்த பாத்திரத்தில் தண்ணீரைச் சேமிக்க முடியுமா? திறந்த மனத்தோடு பிரபஞ்சத்தோடு தொடர்புகொண்டால் பஞ்சபூதங்களும் நமக்குச் சாதகமானவைகளே!

நமக்கு எதிரான எண்ணங்களைத் தவிர்த்து, எதிர்ப்பனவற்றைக்கூட சாதகமாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிதான். இப்படி இருந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இல்லாத ஒன்றைக் காரணம் காட்டி தோல்வியை நியாயப் படுத்தவேண்டாம். எதுவும் நம்மை தோற்கடிக்கக் கூடாது என்ற வைராக்யம் இருந்துவிட்டால் பாதகமான குறைகள், சாதகமான நிறைகள் ஆகிவிடும். நம்முடைய குறைகள் 1. மாற்றக்கூடியது. 2. மாற்ற முடியாதது. மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாகக் கருதாமல் அவற்றை மூலதனமாக்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதனால் வெற்றி உறுதியாகிறது. எல்லோரையும் மாற்றவேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே! என்று மன அமைதி இழக்கிறோம். ஆனால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் மாறியிருக்கிறோமா? வலிமை வாய்ந்த இரும்பத்தூணை வெளியிலிருந்து எதுவும் வீழ்த்துவதில்லை. அதனுள் உருவாகும் ஷஷதுருதான் தூணை சாய்த்து விடுகிறது.

நம்மிடம் இருக்கும் நல்லதும், கெட்டதும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. மனிதன் தன்னைத்தானே பார்க்கிறபோது வேகம் குறைகிறது. விவேகம் பிறக்கிறது. வாழ்வில் உயர உங்களை நீங்களே உற்றுப்பாருங்கள். தன்னையே தான் உற்றுப்பார்க்கும் முயற்சி சுயவிமர்சனத்தால் வெற்றிபெறும்.

நம்மை உயர்த்த, நம்மைக் கவனிக்க நேரமில்லை என்றால், நம்மீது நமக்கு அக்கறை இல்லையா? அவ்வளவு அலட்சியமா? நம்மீது நமக்கு ஈடுபாடு இருந்தால் நம்மை உயர்த்த எப்படியாவது நேரத்தை ஒதுக்குவோம். அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி அமைதியான பிச்சைக்காரன்வரை 24 மணிநேரம்தான் இருக்கிறது. நிற்கவே இடமில்லாத டவுன்பஸ்ஸில் கண்டக்டர் திரும்பத் திரும்ப போய் வர இடம் கிடைக்கிறதே எப்படி? நம்மை மாற்றியமைப்பது மிக முக்கியமான, அவசியமான அவசர வேலை என்றால் அதற்கான நேரம் கிடைத்துவிடும்.

மனசுக்கு இயல்பான இன்ப நாட்டம் உண்டு. கஷ்டத்தை அது விரும்பாது. இன்பம் விழையும் இயல்பு. எது இன்பம் எனத் தோன்றுகிறதோ அதையே திரும்பத் திரும்பச் செய்யத் தோன்றும். புதிய புதிய வரவுகளை அது தேடுவதேயில்லை. குழந்தைப்பருவம் தொடங்கி சாகிறவரை இந்த இன்பம் விழையும் இயல்பை யாரும் விடமாட்டோம். வளர வளர நாம் செயல்களை மாற்றியிருப்போம். செயல்களை மாற்றியிருப்பதால் வளர்ந்து விட்டோம் எனத் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் வளர்வதே இல்லை.

இன்பம் விழையும் மன இயல்பு துன்பத்தில்தான் முடிகிறது. இடையிடையே விளம்பரங்கள் இல்லாமல் எப்படி டி.வி. சீரியல் பார்க்கமுடியாதோ அது போலத்தான் க~;டங்கள் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறைக்கு வராது. சோதனையும், வேதனையும் இல்லாமல் சாதனை பிறக்கவே முடியாது. பிரச்சினையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. நாம் பிறப்பதற்கு முன்பும் பிரச்சினைகள் இருந்தன. நம் மரணத்திற்குப் பின்பும் அவை இருக்கப் போகின்றன. நாம்தான் இடையில் வந்து இடையில் போகிறோம். நமக்குப் பிரச்சினைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நாம் அவசியம் தேவை. எனவே அவற்றை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நமது பிரச்சினைகளின் அகல ஆழம் தெரிந்தவர்கள் நாம்தான். நாம் மட்டுமே உறுதியான முடிவை எடுக்கமுடியும். அதனைத் தீர்க்கமுடியும். கனமான பறவைகளை அதன் லேசான இறக்கைகள்தான் மேலே தூக்குகின்றன.

நமது பிரச்சினைகளுக்கு பிறருடைய கருத்துக்களைக் கேட்கலாம். பரிசீலனை செய்யலாம். அவைபற்றி ஆலோசனைகூட செய்யலாம். ஆனால் அவைதான் தீர்ப்பு என்று முடிவெடுக்கக்கூடாது. பேண்ட் முதல் பெண்டாட்டிவரை நண்பர்களின் அபிப்ராயப்படி தேர்ந்தெடுக்கும் ஆண்கள் தோற்றுப்போவது நிச்சயம். புடவை முதல் புரு~ன் வரை தோழிகளிடம் யோசனை கேட்கும் பெண்கள் நிம்மதியாக வாழமுடியாது. எல்லோரையும் ஓர் எல்லையில் நிறுத்தவும். எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை. ஆரோக்யமாக இருக்கிற நாம் ஏன் பிறரைச் சார்ந்திருக்கவேண்டும்? இந்த மன ஊனம் சகிக்க முடியாதது. பிறரைச் சார்ந்து வாழ்வது என்கிற ஊன்றுகோலை உதறி எறிய வேண்டும். இல்லையென்றால் மந்திர தந்திர மதவாதிகள், குட்டிச்சாமியார்கள், ராசிபலன் பார்ப்பவர்கள் நம்மை வசப்படுத்தி நிரந்தர ஊனமாக்கி விடுவார்களென்பது நிச்சயம்.

வாழ்க்கை விசித்திரமானது. நாம் தயாரித்து வைத்துள்ள பதில்களுக்கேற்ப வாழ்வில் கேள்விகள் பிறப்பதில்லை. எல்லா கேள்விகளுக்கும் யாராவது பதில் சொல்லமாட்டார்களா? என்று தடுமாற வேண்டாம். பிறரது அபிப்ராயங்களால் பாதிக்கப்படக்கூடாது. நாம்தான் விடைகாணவேண்டும். அதுதான் உண்மையான தன்னம்பிக்கை.

“தன்னைத் தன்னாலே உயர்த்திக்கொள்க!
தன்னை இழிவுறுத்தலாகாது! தானே தனக்குப் பகை!
தானே தனக்கு நண்பன்!
- பகவத் கீதை

நாம் பரபரப்புடனும், அவசரத்துடனும், கவலையுடனும் எதைத் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. கிடைத்தாலும் கிடைத்தது தெரியாது. தெரிந்தாலும் ருசிக்காது. எண்ணங்களே வாழ்வை உருவாக்குகின்றன. எண்ணங்களை நம் மனம்தான் உருவாக்குகிறது. எனவே மனம் நம் வசம் இருக்கவேண்டும்.

"வாழ்க்கை ஒரு உற்சவம்,
அதனைக்கொண்டாட வேண்டும்"
என்பார் ஓஷோ
ஆனந்தமாக இருக்கவேண்டும். கண்களில் கனவுகளையும், மனசில் ஆனந்தத்தையும் நிரப்பினால் "வானம் வசப்படும்"
‘வெற்றி நிச்சயம்’ நம்மைத்தேடி வரும்,
மொத்தத்துல இது எல்லாமே................


“நாம மனசு வச்சா நடக்குமுங்க”

ஆக்கம் - சங்கர் (க.சங்கரநாராயணன் : சவூதி அரேபியா)

3 comments:

Bala said...

nice.

Lawyersundar said...

Very Interesting Site.Good Efforts.

Lawyersundar said...

Very Interesting Site.Good Efforts.
highly Appreciable. Boon to Tamil Readers All Over The world.