August 26, 2007

மக்கள் பார்வைக்கு வந்த நடிகர் சிவகுமாரின் கைவண்ணங்கள்!

ஒரு கலைஞன், உருவாகி புகழ் பெற்ற பின்னர் தனது ஆரம்பகாலப் படைப்புகளைத் திருப்பிப் பார்த்தால், அதிலும் ஒரு வியப்பு இருக்கும். அந்த படைப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பது அதை விட அதிசயமானது தான். திரைப்படத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சிவகுமார், தற்போது சின்னத்திரைகளில் உலா வருகிறார். சிவகுமார் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஓவியராகவும் இருந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இளம் வயதில் அவர் வரைந்த ஓவியங்கள் (25 முதல் 30 ஆண்டுகளுக்கு முந்தியவை) கோவையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவற்றில் சில ஓவியங்கள் வித்தியாசமானவை. வியப்பானவை. இந்த ஓவியங்களை சிவகுமாரே விளக்கிச் சொன்னபோது, அதில் உள்ள உள் அர்த்தம் வியப்புக்குரியதாக இருந்தது. அழும் குழந்தையின் முகக் கோணல்கள், கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர்த் துளி, சளிமூக்கு எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ள ஓவியம் தான் அழும் குழந்தையின் ஓவியம். கண நேரத்தில் மாறிப் போகும் குழந்தையின் உதடுகள் மற்றும் கண்ணீர்த் துளிகளை வரைவது எளிதானதல்ல. நான் வரைந்துள்ள ஓவியங்களில் கற்பனை எதுவும் இல்லை. எல்லாமே யதார்த்தமானவை. இங்கு இடம் பெற்றுள்ள அழும் குழந்தையின் ஓவியம் கூட கற்பனையில் இல்லை. அழும் சிறுவனை நேரில் கண்டு வரைந்தவையே. இதே போன்று, நீளமில்லாத சிறு சிறு கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஓவியம் தான் காந்தியின் படம். மகாத்மா காந்தி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது அவரது உருவம் எப்படி இருக்கும் என்பதையும், அவர் கூர்ந்து கவனித்திருப்பதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் பதிவு தான் இந்த பென்சில் ஒவியம். ஒரு உருவத்தை உருவாக்கத் தொடர்ச்சியான கோடு போட வேண்டும். ஆனால் இந்த ஓவியத்தில் அப்படி இல்லை. வெறும் கோடுகளே அவரது உருவத்தைச் சொல்லும். ஆங்காங்கே முகத் தோலில் ஏற்பட்டுள்ள மடிப்பு, மூக்குக் கண்ணாடியின் நிழல், மற்றும் புடைக்கும் நரம்புகள் கூட இந்த ஓவியத்தில் தெரியும். ஓவியத்தை நேரில் காண்போர் இதை உணரமுடியும். மேலும், சிறிது தூரத்தில் இருந்து பார்த்தால், படத்தின் தத்ரூபம் தெரியும். இதே போன்ற ஓவியம் தான் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணணின் ஓவியம். அவரது சிரிப்பழகை விவரிக்கிறது இந்த ஓவியம். சிரிக்கும்போது முகத்தில் ஏற்படும் வளைவு நெளிவுகள் அனைத்தும் கோடுகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தின் சிறப்பு. முகவமைப்பை வைத்தே அவர் சைவமா அசைவமா என்பதைக் கூட முடிவு செய்து விடலாம் என்றார் சிவகுமார்.
தனது ஓவியங்களை பெரும் கண்காட்சிகளுக்கு அனுப்பிய போது, இந்த ஓவியங்கள் பழங்காலத்து "இல்லஸ்ட்ரேட்டட்" வகையைச் சேர்ந்தவை என புறக்கணிக்கப்பட்டு விட்டன. நவீன ஓவியங்கள்தான் போட்டிக்குத் தகுந்தவை என வருத்தப்படுகிறார் சிவகுமார். சிவகுமார் ஒரு நடிகனாக மட்டுமல்ல, தனது சுயசரிதையை எழுதியதன் மூலம் எழுத்தாளராக, ஒவியராக உருவாகி ஒரு முழுமையான கலைஞனாகத் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

No comments: