September 12, 2007

  • நெடுமாறனின் உணவு அனுப்புவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது : தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் மற்ற சில அமைப்புக்களுடன் இணைந்து, யாழ்ப்பாண குடா நாட்டிற்கு மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தமிழகத்திலிருந்து திரட்டி, படகுகள் மூலம் அனுப்ப எடுத்த முயற்சி, இன்று தமிழகத்தில் தோல்வியில் முடிந்தது. நாகப்பட்டினத்திலிருந்து படகுகள் மூலம் புறப்பட நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சி, படகுகள் ஏதும் கிடைக்காததால் தோல்வியடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
    படகுகள் தமிழக காவல்துறையினரின் அச்சுறுத்தலால்தான் கிடைக்காமல் போய்விட்டன என்று இந்த முயற்சி எடுத்த அமைப்புகள் குற்றம் சாட்டின. இதற்கிடையே, இந்த தோல்வியடைந்த முயற்சிக்குப் பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதம் ஒன்றை தொடங்கிய நெடுமாறனை, போலிசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் நடந்த பரபரப்பான சம்பவங்களைத் தொகுத்து எமது செய்தியாளர் டி.என்.கோபாலன் வழங்கும் மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • ரஷ்யாவின் புதிய பிரதமர் : மாஸ்கோவில் நடந்த எதிர்பாராத ஒரு அரசியல் திருப்பத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின், இதுவரை அதிகம் அறியப்படாத ஒரு அதிகாரியை தனது புதிய பிரதமராக பிரேரித்துள்ளார்.
    மிக்கெயில் ப்ரெட்கொவ் அரசின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சற்று நேரத்துக்குப் பின்னர், புட்டின், நிதித்துறைக் குற்றங்கள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கும், விக்டொர் ஸுப்கோவை இந்தப்பதவிக்கு தனது தேர்வாக அறிவித்தார்
  • சுமத்திரா தீவில் பூகம்பம் : இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவின் கடற்கரைக்கு அப்பால் இன்று இடம்பெற்ற வலுவான நிலநடுக்கம் காரணமாக பல நகரங்களிலும் பட்டினங்களிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பீதியுற்ற மக்கள் பலர் கட்டிடங்களை விட்டு வீதிக்கு ஓடிவந்தனர்
  • ஜப்பானிய பிரதமரின் பதவி விலகல் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன : ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே அவர்கள் திடீரென பதவி விலகியது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
    நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றவுள்ள பணிகளை அறிவித்த ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அவர், இந்தக் காலகட்டத்தில் பதவி விலகியது பொறுப்பற்றது என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறினர்
  • தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட 12 பாகிஸ்தான் சிப்பாய்கள் :
    பாகிஸ்தானின் வடமேற்குப்பிரதேசத்தில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்புற சோதனைச்சாவடி ஒன்றின் மீது தாலிபன் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பன்னிரண்டு பாகிஸ்தான் இராணுவ சிப்பாய்களை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்

No comments: