November 28, 2007

உச்ச நீதிமன்றத்தில் ஹிந்தி

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு : இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தி மொழியில் தீர்ப்பு வழங்கலாம் என்று அலுவலக மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.
இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமையன்று மக்களவையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உறுப்பினர்களின் கூச்சல், குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் இருபது நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக உறுப்பினர்களின் ஆவேசமான எதிர்ப்புக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மொழிப் பிரச்சினையில் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்தார். தமிழக உறுப்பினர்களின் கோரிக்கையை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றங்களில் ஹிந்தி மொழி அவசியம் என்று பாஜகவின் மல்கோத்ரா, ஐக்கிய ஜனதா தளத்தின் பிரபுநாத் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ்தாஸ் குப்தா உள்ளிட்டோர் வலியுறுத்தினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தப் பிரச்சினை தொடர்பாக மனுக்கொடுத்தார்கள்.

No comments: