March 31, 2008

"இலங்கையை இரண்டாகப் பிரித்தால் என்ன தவறு?" - சத்யராஜ் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கும், கம்பன் கழகத்துக்கும் மட்டுமே கதவு திறந்த கோவை நானி கலை அரங்கம் (மணி மேல் நிலைப் பள்ளி), முதல் முறையாக கறுப்புச் சிந்தனையாளர்களுக்கு கதவு திறந்தது.

அது - எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழா, பெரியார் படத்தில் நடித்து அழியாப் புகழ் தேடிக்கொண்ட சத்ய்ராஜுக்கு பாராட்டு விழா, எம்.ஆர். ராதாவைப் பற்றிய பத்திரிகையாளர் மணா எழுதிய நூல் அறிமுக விழா.... இப்படி கோவை – ‘நாய் வால் திரைப்ப்ட இயக்கம்’ நடத்திய முப்பெரும் விழா.
எல்லாக் கூட்டங்களிலும் நக்கலோடு பேசி முடிக்கும் எழுத்தாளர் பாமரன் இந்த மேடையில், 'எம்.ஆர். ராதாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகள் அல்ல. இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் நாம்தான் அவரின் உண்மையான வாரிசுகள்.

என் தோழர்களாய் இருக்கும் என் தம்பிககிட்டே நான் வைச்சிருக்கிற ஒரே வேண்டுகோள்; நான் செத்துட்டா என்னோட உடம்பை நீங்க கைப்பத்திடணும்; எனக்கு எந்த மதச் சடங்கையும் யாரும் நடத்திடக் கூடாது. என் கொள்கை என்னோட சாவிலேயும் நிலைச்சு நிக்கணும்'.... கூட்டத்தை கண் கலங்க வைத்தார் பாமரன். விழாவுக்கு தன் 3 வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி சென்னையிலிருந்து வந்திருந்தார் தோழர் தியாகு. அவரும், எம்.ஆர். ராதாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தது, அவருடன் ஏற்பட்ட நட்பு, அவரின் சமரசமற்ற வாழ்க்கை முறை இப்படி நிறையப் பேசினார். முடிந்தால் தமிழ் சினிமாவின் நாய் வாலை நிமிர்த்த பார்க்கணும். இல்லைனா வெட்டிடணும். அதிர வைத்தார் 'அழித்தொழித்தல்' தோழர் தியாகு.

'காலத்தின் கலைஞன் எம்.ஆர்.ராதா' என்ற புத்தகத்தை எழுதிய ‘புதிய பார்வை’ - இதழின் இணை ஆசிரியர் மணாவின் ஏற்புரையில், எம்.ஆர். ராதா பற்றிய தகவல் திரட்டுவதற்காக அவர் பட்ட அளப்பரிய உழைப்பின் உண்மை தெரிந்தது. எம்.ஆர். ராதா குடும்பத்தைச் சேர்ந்த இன்றையப் பிரபலங்கள் இதற்கு துளிகூட ஒத்துழைப்பு தரவில்லையாம். எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர். ராதாவை ஏன் இவ்வளவு தூக்கிப் பிடிச்சு ஒரு புத்தகம் எழுதணும்னு ம.நடராஜனுக்கும் (சசிகலா), மணாவுக்கும் ஏகப்பட்ட மிரட்டல் வந்ததாம் ஒரு தரப்பிடமிருந்து.

அடுத்து மைக்கை ரொம்ப உயரத்துக்கு நிமிர்த்தி பேச வந்தார் சத்யராஜ்; தனக்கே உரிய லொள்ளுப் பேச்சில் பெரியாரின் சிந்தனைகளை அள்ளி வீசினார். மெதுவாக ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குள் நுழைந்தார். அரங்கம் அதிரும் அளவுக்கு கை தட்டல்கள். ஒன்றாக இருந்த சோவியத் யூனியன் இன்றைக்கு ஏராளமான நாடுகளாய்ப் பிரிந்து இருக்கும்போது இலங்கைத் தீவு இரண்டாகப் பிரிந்தால் என்ன தவறு? என்ற சத்யராஜின் கேள்வியில் அர்த்தம் இருந்தது.

ஆனால் இனிமேல் ஏனோ, தானோ படங்களில் எல்லாம் சத்யராஜ் தலைகாட்டக் கூடாது என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாய் இருந்தது. பொறுப்பைச் சுமப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த விழாவுக்காக எந்த அதிபர்களிடமும், ஆலை உரிமையாளர்களிடமும் நிதி சேகரிப்பு நடத்தவில்லையாம். எல்லாம் உணர்வுப்பூர்வமான சகதோழர்களின் 50-ம், 100-தானாம். பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறது விழாக் குழு.

'எழுத்தும், சிந்தனையும் எனக்கு சம்பாதிச்சு தந்தது.... ஏராளமான தம்பிகளின் நட்பைத்தான் என்று சொல்லும் எழுத்தாளர் பாமரனின் அலைச்சல் மிக்க உழைப்பும், அவரைச் சுற்றி எப்பொழுதும் இருக்கும் அவரின் தோழர்களின் வியர்வையும் விழாவின் வெற்றியில் வெளிச்சம் காட்டியது.

சமூக அக்கறை உள்ள மனிதர்கள் காலமாகிவிட்டாலும், அவர்களை நினைத்துப் பார்க்க ஒரு கூட்டம் இருக்கும் வரை மனித இனம் பாராட்டுக்குரிய ஒன்றுதான். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=875&Itemid=163

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" - கவிஞர் கனிமொழி

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" என்று கவிஞர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 9 நாட்களுக்கு கலை இலக்கிய திருவிழா சென்னையில் தொடங்கியது. கவிஞர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி இதைத் தொடங்கி வைத்தார். தி.நகர் வாணி மஹாலில் இந்த திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று, திராவிட இயக்கப் படைப்பாளிகளில் சிலர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கிப் பேசினார். மேலும் முனைவர் வீ.அரசு, ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ந.முருகேச பாண்டியன், பேரா. சுப.வீரபாண்டியன் ஆகியோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கலை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இன்று தொடங்கி 9 நாட்களாக நடைபெற உள்ள இந்தக் கலை இலக்கியத் திருவிழா வெறும் திராவிட இயக்கத்தின் சிறப்புக்களை மட்டும் பகிர்ந்துகொண்டு பாராட்டுவதற்கு அல்ல. தோழர் ஜீவா முதல் சிதம்பர தில்லையம்பல ஓதுவார் வரை இங்கே சிறப்பிக்கப்பட உள்ளனர்.

கனிமொழி
திராவிட எழுத்துக்கள் இலக்கியம் இல்லை என்று தொடர் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று இப்பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மேடை முதல் நாடு வரை பெண்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அது திராவிடம் தந்த வெற்றி. கல்வி, சமூக நீதி. சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை இவை எல்லாம் திராவிடத்தால் மட்டுமே நமக்கு சாத்தியமானவை. அதேபோல் இன்றைய சூழ்நிலையில் போராட்ட உணர்வு இங்கே தேவை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டது; என்று ஒருவித போலி பிரசாரத்தை எல்லா ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? இன்னும் நம்முடைய போராட்டத்தின் தேவை என்ன என்பது நமக்குத் தெரியும். ராமர் பாலம் பிரச்சினை. அதற்கு மதச் சாயம் பூசப்படுகிறது. அதன் உருவகமாக தலைவர் கலைஞர் ஆக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் ஆக்கப் பூர்வமான வளர்ச்சியையும், உற்பத்தியையும் தடுக்கும் வகையில் ஒரு தரப்பு நடத்திவரும் சதி இது. ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த சென்னை ஒரு பெரிய நகரமாக ஆனதற்கு என்ன காரணம்? இங்கு உருவாக்கப்பட்ட துறைமுகம்தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என சகல துறைகளிலும் தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திட்டம்தான் சேது பாலத் திட்டம். ஆனால் அதை ராமர் எனும் பெயரை வைத்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை இங்கே நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என நம்பும் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் திராவிட இயக்க கருத்துக்களை நாம் மறு வாசிப்பு செய்ய வேண்டும். பாதை மறந்து விட்டால் நம் பயணத்தின் இலக்கு நமக்குத் தெரியாது. தொடர்ச்சியாக நாம் ஒதுக்கி வைக்கப்பப்டுவோம். தில்லையம்பலத் தீட்டுக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தேவதாசிப் பெண் கட்டிய கோவிலான திருவையாறில் தமிழில் பாடக்கூடாது என்ற நிலை இருந்தது. அப்படிப் பாடினால அந்த இடத்தை தண்ணீர் வைத்துக் கழுவிவிட்டு தீட்டு கழித்த சம்பவம் இங்கே நடந்திருக்கிறது. அதை உடைத்துக் காட்டிய பெருமை திமுகவைத்தான் சாரும். இதனைக் கண்டித்து முரசொலியில் தலைவர் கலைஞர் எழுதிய 'தீட்டாயிடுத்து' என்ற தலையங்கம் பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=913&Itemid=164

March 18, 2008

"சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" அதிகாலை.காம்

வணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் www.adhikaalai.com எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது. உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது செய்தியாளர்கள் உள்ளனர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள்.
சமூகத்தின் சகலமும் ஒலி-ஒளி வடிவில் இடம் பெறும். இதுவரை நம் ஊடகங்களால் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளும், சம்பவங்களும் உயிரோட்டத்துடன் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். சமூகத்தின் பன்முகத்தன்மைகளும் அசலாய் காட்டப்படும். கண்ணியாமான எழுத்துக்கள் கெளரவிக்கப்படும். சாராம்சம் நிறைந்த சச்சரவுகளுக்கு மட்டுமே சரிசம இருக்கைகள் கொடுக்கப்படும். விடை தேடும் பிரச்சினைகளுக்கான விவாதங்கள் முன் நிறுத்தப்படும்.

உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட்... இப்படி பலவும் இங்கே ஆழமுடன் இடம்பெறும்.
சுருங்கச் சொல்வதாயின் "சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" சராசரி மனிதருக்கும் எட்டும் வகையில் எடுத்து வைக்கப்படும். எமது தளத்துக்கான ஆலோசனைகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் எமது பயணத்தில் தோள் கொடுக்க விரும்பும் அன்பு நெஞ்சங்களையும் அரவணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
ஆசிரியர் குழு
அதிகாலை.காம்
www.adhikaalai.com

editor@adhikaalai.com
"அதிகாலை" தமிழ் இணைய இதழ் பற்றி திண்ணையில் வந்த அறிவிப்பு...http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803132&format=html

March 04, 2008

'எழுத்துலக பிரம்மா' சுஜாதா

எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.
ஜெயகாந்தன்: ஜெயகாந்தன் பேசுகையில், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் சுஜாதா. அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது எழுத்துக்களை நான் வெகுவாக ரசித்தவன். தமிழில் வசீகரமான ஒரு எழுத்து நடையை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பல மரபுகளை மீறிய துணிச்சல்காரர் என்றார்.

மனுஷ்யபுத்திரன்: சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது. அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.
கமல்: நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சுஜாதா முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மேலும் அதிக பாரத்தை அவருக்குக் கொடுத்தவன் நான். எனக்கு அவர் எழுதிக் கொடுத்து, ஆனால் சினிமாவாக எடுக்காத கதைகள் இன்னமும் எவ்வளவோ என் வீட்டில் உள்ளன. எனது மருதநாயகம் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் சுஜாதா. டைட்டிலில் திரைக்கதை சுஜாதா-கமல் என நான் எழுதிக் கொடுத்தேன். உடனே அந்த காகிதத்தை வாங்கிய சுஜாதா, அவரது பெயரை அடித்துவிட்டதோடு, உங்க பெயரே இருக்கட்டும் என்றார் பெருந்தன்மையோடு. அவருடன் இணைந்துதான் மீண்டும் அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் போய்விட்டார். இப்போது மருதநாயகம் படத்தை எடுத்தால் நான் மட்டுமே அதிகம் எழுத வேண்டியிருக்கும். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் அவர். தமிழுக்காக இப்படி ஒரு விழா எடுப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திக் காட்டும் ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். சுஜாதா அதிகம் காதலித்தது தமிழைத்தான். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற வார்த்தையில் அதிக நிஜமிருக்கிறது என்றார் கமல்.

சிவகுமார்: நடிகர் சிவகுமார் பேசுகையில், சுஜாதாவின் தீவிர ரசிகன் நான். அவரது நூல்களை ஒரு லைப்ரரியாகவே சேமித்து வைத்திருக்கிறேன். அந்த மேதையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்னமும் எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாடக உலகுக்கு அவர் செய்தவை ஏராளம். அவர் மறுபிறவி எடுக்க வேண்டும், மீண்டும் சுஜாதாவாகவே நம்முடன் வாழவேண்டும் என பேராசைப்படுகிறேன் என்றார்.

வைரமுத்து: வைரமுத்து பேசுகையி்ல், மரபுகளை உடைத்த மாமேதை சுஜாதா. வாழ்க்கை தராத மலர்ச்சியை அவருக்கு மரணம் தந்தது. அவரது உடலை நான் கண்டபோது, அதில் உறைந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் ஒரு கடல். பொதுவாக, தமிழர்கள் செத்தபிறகுதான் சிங்காரித்து அழகு பார்ப்பார்கள். அப்படியில்லாமல், இனியாவது வாழும்போதே வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய இலக்கியத்தையும், மேல்நாட்டு இலக்கியத்தையும் கலந்து சுஜாதாயிஸம் என்ற புது இலக்கியமே படைத்தவர் அந்த மேதை. எனக்குத் தெரிந்து எந்த எழுத்தாளரையுமே அவர் புறம் பேசியதில்லை. உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள், அடுத்தவர் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள் என்பார் எப்போதும். தமிழும் அதன் வீச்சும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். உண்மை, இது வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

கனிமொழி: கவிஞர் கனிமொழி எம்.பி., பேசுகையில், அடுத்த எழுத்தாளர்களைக் குறைசொல்வது சுஜாதாவுக்குப் பிடிக்காத விஷயம். தன்னை மோசமாக விமர்சித்த எழுத்தாளர் ஒருவரின் கவிதையை என்னிடம் காட்டி, 'தமிழின் மிகச்சிறந்த ஹைக்கூ இது' என்று பாராட்டிய பெருமகன் அவர். அவரைப் போன்ற ஆளுமை படைத்த எழுத்தாளரை பார்க்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரை இழந்த சோகம் என் ஆயுள் வரை தீராது என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, மதன், கணையாழி கஸ்தூரிரங்கன், விகடன் ஆசிரியர் அசோகன், ஓவியர் ஜெயராஜ், சிவசங்கரி, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பெண்டாமீடியா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலரும் சுஜாதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் உருவப்படத்தை சுஜாதாவின் மகன்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத்திடம் வழங்கினார் கமல்ஹாசன். புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


* இந்த விழா பற்றிய முழு ஒலி-ஒளி தொகுப்பு www.adhikaalai.com அதிகாலை.காம் இணையதளத்தில் விரைவில் இடம்பெறும்.

March 01, 2008

"ஹாலிவுட் டு கோலிவுட்" ஒரு தமிழ் இளைஞனின் கனவுப் பயணம்

ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனர்; பிறகு இணை இயக்குனர்; அதன்பின் கதை சொல்லி உருக வைத்து ஒரு அப்பாவி தயாரிப்பாளரை பணத்தை கொட்ட சம்மதிக்க வைத்தால் போதும். அவர் இயக்குனர். இவர் தயாரிப்பாளர். அதுதான் படம். இதுதான் தமிழ்த்திரை உலக ரசிகர்களுக்கு கிடைத்து வரும் பொக்கிசம்(?).
இப்படி நம் திரை உலகம் விபத்துக்களின் வேடந்தாங்கலாகிவிட்டது. (ஒரு சிலரைத் தவிர). ஆனால்... சினிமா..சினிமா..சினிமா.. உலகத் தரத்துக்கு இணையான ஒரு தமிழ் சினிமா என்ற வெறியுடன் அமெரிக்காவில் கற்று, அங்குள்ள ஜாம்பவான்களிடம் நிறையப் பெற்று, ஒரு பெரிய அங்கீகாரத்துடன் நம் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார் அருண் வைத்தியநாதன் எனும் தமிழ் இளைஞர்.

அருண் வைத்திய நாதன்... குறும்பட இயக்குனர்கள் வரிசையில் முன்னிலை வகிப்பவர். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை இலட்சியக் கனவாக வைத்திருக்கும் சாப்ட்வேர் படித்த இளைஞன். பிறந்தது சிதம்பரம். இப்பொழுது வசிப்பது அமெரிக்கா. தொழில், கணினி மென்பொருள் துறை. ஆனால் மனதுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு....தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்வதுதான். இவர் ஒரு நல்ல இலக்கியவாதியும் கூட. நம் தமிழ் தொலைக்காட்சிகளிலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவம் பெற்றவர். இதற்கு சாட்சியாக நிற்பவை இவர் கை வண்ணத்தில் உருவாக்கிய சில குறும்படங்கள். குறும்படங்களிலேயே வெளி நாட்டவரின் கவனத்தை நிறையப் பெற்றிருக்கிறார். அமெரிக்க தேசத்துக்கு பிழைப்புத் தேடிப் போனாலும் அவருக்குள் இருக்கும் சினிமா தாகம் அவரை விட்டுப் போவதாக இல்லை. நியூயார்க் திரைப்படக் கல்லூரி ஒன்றில் தயாரிப்புபற்றி கற்றுக் கொண்டார். அங்கேயே The Noose எனும் குறும் படத்தை இயக்கினார். ஏராளமான பாராட்டுக்கள். கூடுதல் உற்சாகம் பெற்றார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=697&Itemid=164