March 31, 2008

"இலங்கையை இரண்டாகப் பிரித்தால் என்ன தவறு?" - சத்யராஜ் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கும், கம்பன் கழகத்துக்கும் மட்டுமே கதவு திறந்த கோவை நானி கலை அரங்கம் (மணி மேல் நிலைப் பள்ளி), முதல் முறையாக கறுப்புச் சிந்தனையாளர்களுக்கு கதவு திறந்தது.

அது - எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழா, பெரியார் படத்தில் நடித்து அழியாப் புகழ் தேடிக்கொண்ட சத்ய்ராஜுக்கு பாராட்டு விழா, எம்.ஆர். ராதாவைப் பற்றிய பத்திரிகையாளர் மணா எழுதிய நூல் அறிமுக விழா.... இப்படி கோவை – ‘நாய் வால் திரைப்ப்ட இயக்கம்’ நடத்திய முப்பெரும் விழா.
எல்லாக் கூட்டங்களிலும் நக்கலோடு பேசி முடிக்கும் எழுத்தாளர் பாமரன் இந்த மேடையில், 'எம்.ஆர். ராதாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகள் அல்ல. இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் நாம்தான் அவரின் உண்மையான வாரிசுகள்.

என் தோழர்களாய் இருக்கும் என் தம்பிககிட்டே நான் வைச்சிருக்கிற ஒரே வேண்டுகோள்; நான் செத்துட்டா என்னோட உடம்பை நீங்க கைப்பத்திடணும்; எனக்கு எந்த மதச் சடங்கையும் யாரும் நடத்திடக் கூடாது. என் கொள்கை என்னோட சாவிலேயும் நிலைச்சு நிக்கணும்'.... கூட்டத்தை கண் கலங்க வைத்தார் பாமரன். விழாவுக்கு தன் 3 வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி சென்னையிலிருந்து வந்திருந்தார் தோழர் தியாகு. அவரும், எம்.ஆர். ராதாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தது, அவருடன் ஏற்பட்ட நட்பு, அவரின் சமரசமற்ற வாழ்க்கை முறை இப்படி நிறையப் பேசினார். முடிந்தால் தமிழ் சினிமாவின் நாய் வாலை நிமிர்த்த பார்க்கணும். இல்லைனா வெட்டிடணும். அதிர வைத்தார் 'அழித்தொழித்தல்' தோழர் தியாகு.

'காலத்தின் கலைஞன் எம்.ஆர்.ராதா' என்ற புத்தகத்தை எழுதிய ‘புதிய பார்வை’ - இதழின் இணை ஆசிரியர் மணாவின் ஏற்புரையில், எம்.ஆர். ராதா பற்றிய தகவல் திரட்டுவதற்காக அவர் பட்ட அளப்பரிய உழைப்பின் உண்மை தெரிந்தது. எம்.ஆர். ராதா குடும்பத்தைச் சேர்ந்த இன்றையப் பிரபலங்கள் இதற்கு துளிகூட ஒத்துழைப்பு தரவில்லையாம். எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர். ராதாவை ஏன் இவ்வளவு தூக்கிப் பிடிச்சு ஒரு புத்தகம் எழுதணும்னு ம.நடராஜனுக்கும் (சசிகலா), மணாவுக்கும் ஏகப்பட்ட மிரட்டல் வந்ததாம் ஒரு தரப்பிடமிருந்து.

அடுத்து மைக்கை ரொம்ப உயரத்துக்கு நிமிர்த்தி பேச வந்தார் சத்யராஜ்; தனக்கே உரிய லொள்ளுப் பேச்சில் பெரியாரின் சிந்தனைகளை அள்ளி வீசினார். மெதுவாக ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குள் நுழைந்தார். அரங்கம் அதிரும் அளவுக்கு கை தட்டல்கள். ஒன்றாக இருந்த சோவியத் யூனியன் இன்றைக்கு ஏராளமான நாடுகளாய்ப் பிரிந்து இருக்கும்போது இலங்கைத் தீவு இரண்டாகப் பிரிந்தால் என்ன தவறு? என்ற சத்யராஜின் கேள்வியில் அர்த்தம் இருந்தது.

ஆனால் இனிமேல் ஏனோ, தானோ படங்களில் எல்லாம் சத்யராஜ் தலைகாட்டக் கூடாது என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாய் இருந்தது. பொறுப்பைச் சுமப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த விழாவுக்காக எந்த அதிபர்களிடமும், ஆலை உரிமையாளர்களிடமும் நிதி சேகரிப்பு நடத்தவில்லையாம். எல்லாம் உணர்வுப்பூர்வமான சகதோழர்களின் 50-ம், 100-தானாம். பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறது விழாக் குழு.

'எழுத்தும், சிந்தனையும் எனக்கு சம்பாதிச்சு தந்தது.... ஏராளமான தம்பிகளின் நட்பைத்தான் என்று சொல்லும் எழுத்தாளர் பாமரனின் அலைச்சல் மிக்க உழைப்பும், அவரைச் சுற்றி எப்பொழுதும் இருக்கும் அவரின் தோழர்களின் வியர்வையும் விழாவின் வெற்றியில் வெளிச்சம் காட்டியது.

சமூக அக்கறை உள்ள மனிதர்கள் காலமாகிவிட்டாலும், அவர்களை நினைத்துப் பார்க்க ஒரு கூட்டம் இருக்கும் வரை மனித இனம் பாராட்டுக்குரிய ஒன்றுதான். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=875&Itemid=163

1 comment:

Saravana said...

அச்சச்சோ இப்படி எல்லாம் பெசப்படாது, கருப்பு எம்சியார் விசய காந்தி சொன்னாரு அது அவங்க விசியம், அவங்க விசயத்துல நாமா மூக்கை நுழைக்க கூடாது அப்படீன்னு.

முதலீல் இங்க சம்பாதிக்க வழி பார்த்து கொள்ளாம் அப்படித்தானுங்கோ