மயிலாடுதுறை கல்லூரியின் மர்மக் கருத்தரங்கம். ‘அதிகாலை’ - நிருபர் குழுவின் அதிரடித் தகவல்கள்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை ( மாயவரம் ) அ.வ.அ. தன்னாட்சி கல்லூரி சமீபத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு செலவு செய்பவதற்காக மத்திய அரசின் செம்மொழித் திட்ட நிதியிலிருந்து பெருந்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகைவரவழைக்கப்பட்ட பேராளர்களுக்கும், நிகழ்வுக்கும் பயன்படுத்தப்பட்டதா? என்றால்.... அது பெரிய மர்மமாகவே இருக்கிறது. அது பற்றி நம் ‘அதிகாலை’-க்கு கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கின. தமிழக முதல்வரை தலைவராகக் கொண்ட துறையில் துணிச்சலாக இப்படி நடக்குமா? என்று நமக்கு சிறிது சந்தேகம். ஆனால் தொடர்ந்து கிடைத்த தகவல், நம் அதிகாலை நிருபர்களை முடுக்கிவிட்டு உண்மை என்ன என்று கருத்தரங்க பேராளர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு அலசோ...அலசு... என்று அலச வைத்தது.
ஆதியிலிருந்து:-
இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் - மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி உதவியில் “உலகப் பண்பாட்டிற்கு தமிழ் பக்தி இலக்கியங்கள், இயக்கங்களின் பங்களிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்” ஒன்றை மயிலாடுதுறையில் உள்ள அ.வ.அ.கல்லூரி தன்னாட்சி நடத்த விரும்பியது. அதற்கு அக்கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் திட்டமிட்டார்.-
வெளிநாட்டிலிருந்து வரும் பேராளர்களுக்கு அமெரிக்க டாலரில் ஒரு வழிப்பயணச்செலவு தரப்படும் என்று சிலருக்கும், சிலருக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பிவைக்கிறோம் என்றும் மனம்போன போக்கில் இணைய மடலாடற்குழுமம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த அறிவிப்பைப் பார்த்து சிலர் கூட வெட்டியாய் கூட்டம் கூடிவிடப்போகிறது என்று காமெண்ட் அடித்துச் சிரித்திருக்கிறார்கள்.
திடீரென்று பேரா. நெடு- விற்கு ஒரு ஆலோசனை தோன்றியிருக்கிறது. வெளிநாட்டுக் கூட்டம் போதாது. உள்நாட்டிலிருந்தும் கனிசமான கூட்டம் சேர்த்தால்தான் செம்மொழித் திட்ட நிறுவனம் அளிக்கும் இலட்சங்களை சுலபமாக "சுவாஹா" செய்ய முடியும் என்று தோன்ற தனியார், அரசு கல்லூரி தமிழ்த்துறைக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்பி தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்குத் தூண்டில் போட்டார். "நெடு"வின் உள்நோக்கம் புரியாத தமிழ்த்துறைப் பேராசிரிய மீன்கள் வசமாக தூண்டிலில் விழ உற்சாகம் கொப்புளிக்க சில திட்டங்களைத் தீட்டீனார் "நெடு!"
பன்னாட்டுக் கருத்தரங்கத்தை எப்படிச் சிறப்பாக நடத்துவது? பேராளர்கள் அளிக்கும் கட்டுரைகளை எப்படித் தொகுத்து புத்தகமாக்குவது? அமர்வுகளை எப்படி நடத்தினால் சிறப்பாக நடத்தமுடியும். ஒரு அமர்வில் ஒரு கட்டுரையாளருக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால் அது சிறப்பாக அமையும்! பேராளர்களைத் தங்க வைக்க என்ன ஏற்பாடு?
இத்தனை பேராளர்களுக்கு ஒருவர் வீதம் நியமித்து வருகின்ற பேராளர்களை எந்தச் சிரமும் இல்லாமல் கவனித்துக்கொள்ள ஒரு குழு, அந்தக்குழுவை வழி நடத்த இருவர் குழு! வெளிநாட்டிலிருந்து இலட்ச இலட்சமாய் செலவழித்து இதறகாகவே வருபவர்களை எப்படி எதிர்கொள்வது?
அவர்களுடைய அமர்வு சிறக்க அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால் சிறப்பாக அமையும்? இந்த அமர்வைக் கவனிக்க ஒரு குழு! இப்படியெல்லாம் நெடுஞ்செழியன் ஒவ்வொரு விசயத்தையும் உன்னிப்பாய் நெடுஞ்செழியன் திட்டமிட்டிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு!
அவர் திட்டமிட்டதெல்லாம், கிடைக்கும் நிதியை பேராளர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு கல்லூரி நிர்வாக நெல்லுக்குப் போக புல்லான தனக்கும் பாய்ச்சிக்கொள்ளவே மிக நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறார். பேராளர்களுக்கு அவ்வப்போது அதிர்ச்சிவைத்தியம் கொடுப்பது, பாவம் தனிமனிசனாய் எப்படி அல்லல் பட்டு இந்தக் கருத்தரங்கை நடத்துகிறார் என்ற ரீதியிலான எண்ணத்தை ஏற்படுத்தி சாமர்த்தியமாய் அவர் காய்களை நகர்த்தியது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
எதிர்பார்த்தபடி வெளிநாட்டிலிருந்து ஓரிருவர் தவிர எவரும் இசைவு தெரிவிக்காத நிலையில்,கடந்தவருடம் அக்டோபர் மாதம் மீண்டும் இணையத்தில் "வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஒரு வழி விமானச் செலவும் விதிகளின்படி நாட்படியும் வழங்கப்படும். தங்குமிட வசதியும் செய்து தரப்படும்.
தங்களின் ஒருவழி விமானச் செலவை இந்திய ரூபாயில் அல்லது அமெரிக்க டாலரில் தெரிவிக்கவும். கருத்தரங்கம் முடிந்து ஒருநாள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்படும்" என்று வெளிநாட்டுப்பேராளர்களுக்கு வலை வீசுகிறார்.
ஒருவழி விமானச் செலவு, நாட்படி, தங்குமிட வசதி என்றெல்லாம் சொல்லிக் கூவி அழைக்கிறார். இதை எந்த அடிப்படையில் யாருடைய உத்திரவாதத்தின் பேரில் அறிவித்தார்? இன்றுவரை இதற்கான விளக்கம் கிடையாது!?
இந்த அறிவிப்பைக்கேட்டு சிலர் தமிழார்வத்தில் சிங்கப்பூரிலிருந்து மட்டும் அதிகபட்சமாகவும், இலங்கை, அமெரிக்கா, மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து விண்ணப்பித்தனர். ஆயிற்று.. பேராளர்கள் கண்ணும் கருத்துமாய், "உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இயக்கம் / இலக்கியங்களின் பங்களிப்பு" என்று தலைப்புக் கொடுத்திருந்ததால் அவரவர் கட்டுரைகள் தயாரிப்பதில் கர்ம சிரத்தையாய் ஈடுபட்டு அனுப்பத் துவங்கினர்.
இப்போது நெடுஞ்செழியனுக்கு புதுச் சிக்கல் உருவாகிவிட்டது. சிக்கல் ஒன்று, "அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வானவில், பூமிவில் என்று தங்களுக்குத் தெரிந்த எழுத்துருவில் கட்டுரைகளை கத்தையாக கணினியில் அனுப்பிவைத்தனர். பாவம் நெடுஞ்செழியன், கணினியைத் திறந்துபார்த்தார். தமிழ் மொழியில்தானே கட்டுரை கேட்டோம் ஆளாளுக்கு கற்கால மொழியிலும் பிற்கால மொழியிலும் எழுதி கண்ணாமூச்சி காட்டியிருக்கிறார்களே என்று நொந்து போனார்! பேராளர்களுக்கு, "நீங்கள் யூனிகோடில் மட்டுமே எழுதி அனுப்பவேண்டும் என்று அவசர அவசரமாய் எல்லோருக்கும் தகவல் அனுப்பினார்.
அடுத்த சிக்கல் கட்டுரை அளவீடு!
பேராளர்கள் எல்லோரையும் கட்டுரை எழுதச் சொல்லி அழைப்புவிடுத்தவர், கட்டுரை இத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும் என்ற வரையறை செய்யத் தவறியது, பேராளர்கள், அவரவர்கள் ஒரு புத்தகமே போடுமளவுக்கு கட்டுரைகளை அனுப்பத் துவங்கினர்.
ஒவ்வொருவர் அனுப்பும் பக்கங்களைப் பார்த்தால் வால்யூம் வால்யூமாக தொகுத்தால் ஒரு பக்தி நூலகமே வைக்கலாம் போல வந்து குவிந்ததும், செம்மொழி திட்டத்திடம் இதையெல்லாம் பதிப்பிக்க தனியாத்தான் நிதி வாங்கவேண்டும் என்று காமெண்ட் அடித்திருக்கிறார். நேரம் இருந்திருந்தால் இதற்கும் செம்மொழி நிறுவனத்திடம் தனியாக நிதி கேட்டிருப்பாரோ என்னவோ!? பேராளர்கள் உழைப்பைப் பற்றி அணுவளவும் கவலையில்லாத நெடுஞ்செழியன், "கட்டுரையின் சுருக்கம் ஒரு 5 பக்கங்களுக்குள் இருக்குமாறு அனுப்பவும்" என்று ஒரு சுற்றறிக்கையை சனவரி இறுதியில் நிதானமாக அனுப்பினார்.
இதைப்பார்த்த பேராளர்கள் "அடக்கடவுளே" என்று அலறி அவர்களாகவே புலம்பி அரற்றிக்கொண்டார்கள். எப்படி இத்தனை பக்கங்களைச் சுருக்கி 5 பக்கங்களுக்குள் சொல்வது என்று கேட்ட பேராளர்களை, "சொல்றதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைங்க" என்று தொல்காப்பிய அட்வைஸ் கொடுத்து மேலும் திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
வெளிநாட்டுப் பேராளர்களை உடனடியாக கடவுச்சீட்டு அனுப்புக, தன் விபரக்குறிப்பை அனுப்புக..என்றும் விசாவுக்கு இதெல்லாம் வேண்டும் அனுப்புக, உங்களை வரவேற்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்று துரிதமாக வேலை நடப்பது போலக் காட்டிக்கொண்டார்.
பேராளர்கள் குறித்த வேலைகள் நடப்பதற்குப் பதிலாக கருத்தரங்கம் பெயரைச் சாக்குவைத்து, கல்லூரிக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு பல்வேறு பல்கலைக் கழக துணைவேந்தர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ, கவிக்கோ அப்துல்ரகுமான் இப்படியானவர்களை துவக்கவிழாவிற்கும், நிறைவு விழாவிற்கும் அழைப்பதில் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலுமே தன் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டிருக்கிறார், நெடுஞ்செழியன் என்பதை அவருடன் இருந்தவர்களே நமக்கு ஊர்ஜிதப்படுத்தினர்.
“டிசம்பர் 30.1207-ல் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயங்கி வரும் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தினர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, வெளிநாட்டு பேராளர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள விமான பயணக் கட்டணம் வழங்கிட வேண்டுமென்றால் பேராளர்களின் தன் விபரக்குறிப்பை எதிர்வரும் ஜனவரி 1-ம் நாளுக்குள் அன்புகூர்ந்து அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 4-ம் நாள் அனைத்து விரவங்களுடன் தில்லியில் உள்ள அயல்நாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றிட வேண்டும். நிதிக்கும் ஒப்புதல் பெறவேண்டும் என்பது முக்கிய தேவையாக உள்ளது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றால் பயணத்தொகை தேவையில்லை என்பதை மின்னஞ்சல் வழி தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். கருத்தரங்க செலவுகளைத் திட்டமிட்டு மத்திய அரசிடம் பெறவேண்டியுள்ளது. தங்களின் அன்பான ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகிறேன்" என்று இரண்டே நாள் இடைவெளியில் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
சன 27-ம் தேதி ஒரு அறிக்கை அனுப்புகிறார். 2-ம் தேதி அனுப்பிய வெளிநாட்டுப்பேராளர்களுக்கு செம்மொழி மத்திய அயலுறவுத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. மற்றவர்களுக்கு விமானக்கட்டணம் தர இயலாது என்று அறிவித்துவிட்டது, என்று. இடைப்பட்ட காலகட்டத்தில் கருத்தரங்கம் குறித்தோ, கட்டுரை என்னாயிற்று என்றோ, என்ன ஏற்பாடுகள் என்றோ எந்தத் தகவல் தொடர்பும் பேராளர்களோடு கொண்டிருக்கவில்லை.
தொடர்புகொண்ட பேராளர்களிடமோ நான் தினந்தோறும் நள்ளிரவு தாண்டியே தூங்கப்போகிறேன். எப்படியாவது இந்தக் கருத்தரங்கை நல்லவிதமாக முடித்தால் போதும் என்று சரியா தூங்காமச் சாப்பிடமா அலையிறேன்" என்று ரீல்விட்டிருக்கிறார்.
ஏன் ரீல் விடுகிறார் என்பதற்கும் நம்மிடம் ஒரு பேராளர் காட்டிய தகவல்தான் காரணம்!
உரிய காலத்தில் "நெடு" விற்கு அனுப்பிவைத்தும் 20ம்தேதியே உங்களுக்கு மத்திய அயலுறவுத்துறை மறுத்துவிட்டது என்ற தகவல் அது! அயலுறவுத் துறைக்கு தமிழ் செம்மொழிப்பிரிவுத் தலைவர் முக்காலமும் உணர்ந்த முனிவரோ!அது தான் நெடுஞ்செழியன்!
இன்னுமொரு சூப்பர் ஆதாரம்.
சனவரி 13-ல் திருச்சி அருகேயுள்ள சொந்த ஊரான கீழக் கல்கண்டார்கோட்டைக்கு குடும்பத்தோடு ஜாலியாகப் போய்விட்டார். 18-ம் தேதி திரும்பிவந்து,19ம்தேதி," மார்ச்சு திங்களில் நடைபெறவிருக்கும் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் பங்களிப்பு என்னும் பன்னாட்டு கருத்தரங்கில் தாங்கள் கலந்துகொள்வதற்கான விமான கட்டணம் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தால் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. கல்விசார் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயணக் கட்டணம் வழங்க இயலும் என்று கூறிவிட்டார்கள். கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து தாங்கள்தான் இனி முடிவு செய்யவேண்டும்" என்று வெளிநாட்டுப்பேராளர்கள் மூவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
தமிழ்ச் செம்மொழித் திட்டத்தால் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் நன்கு கவனிக்கவேண்டும். ஒருவருக்கு மத்திய அயலுறவுத்துறை மறுத்து விட்டதாகச் சொல்லுகிறார்.. இன்னொருவருக்கு தமிழ் செம்மொழித் திட்டத்தால் மறுக்கப்பட்டுள்ளது என்கிறார்.
சிங்கப்பூர் தேசியபல்கலைக்கழகப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு விமானடிக்கெட் வாங்கியனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ‘கடைசிவரை புறப்பட ஏற்பாடுகள் செய்து டிக்கெட் கைக்கு வராததால் நான் மாநாட்டுக்கு வரப்போவதில்லை’ என்றே தெரிவித்திருக்கிறார்.
நமக்குப் புரியாதது இவருக்கு மட்டும் எப்படி விமான டிக்கெட் வாங்கித் தருகிறேன் என்று நெடுஞ்செழியன் எந்த அயலுறவுத்துறை ஒப்புதலோடு சொன்னார் என்பது புரியவில்லை! ஏனிந்த முரண்பாடுகள்?
நம் கேள்வி இதுதான்.
தமிழ் செம்மொழி திட்டமே நிராகரிக்கிறது என்றால் அதை ஏன் முதலிலேயே,"கல்விசார் ஆசிரியர்களுக்கு" மட்டுமே விமானக் கட்டணம் என்று தெளிவாகச் சொல்லவில்லை?
தமிழ் செம்மொழி திட்டம் தெளிவாகச் சொல்லி நெடுஞ்செழியன் வெளிநாட்டுப் பேராளர்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டாரா?இந்த ஏமாத்து,பம்மாத்து வேலையில் தொடர்புள்ளது நெடுஞ்செழியன் மட்டும்தானா?அல்லது செம்மொழித்திட்ட அலுவலர்களுக்கும் இதில் பங்கிருக்கிறதா?
இதில் வெளிநாட்டுப் பேராளர் ஒருவர் தமிழ் செம்மொழிதிட்ட அலுவலகத்தையே தொடர்புகொண்டு கேட்டதற்கு மத்திய அயலுறவுத்துறை என்று கைகாட்டியிருக்கிறார்கள்! ஆக ஒரு கூட்டுக்கொள்ளை மவுனமாக அரங்கேறியிருக்கிறதா?
இதில் மிகவும் நொந்து நூடுல்ஸாகிப்போனவர் சிங்கப்பூர் முன்னாள் ஒலி 96.8ன் தலைவர்!பேராளர்களை சன 27ம்தேதி, "நீங்கள் அனுப்பிய ஆய்வுச் சுருக்கம் ஏற்கப்பட்டுவிட்டது. முழுக்கட்டுரையையும் பிப்.5ம்தேதிக்குள் கருத்தரங்கிற்கு குறுகிய காலமே இருப்பதால் ஆய்வுக்கோவை அச்சடிக்க வேண்டும்." முழுக்கட்டுரையையும் உடனே அனுப்பிவையுங்கள் என்று சுற்றறிக்கை நெடுஞ்செழியன் அனுப்புகிறார்.
இந்த ஆய்வுக்கோவை அச்சடிக்கப்படவும் இல்லை பேராளர்களுக்கு வழங்கப்படவும் இல்லை. இதைப்பற்றி பேராளர்கள் கேட்டதற்கு அச்சடிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. கருத்தரங்கம் முடியும் முன் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிடும் என்று கடைசிவரை கண்ணில் காட்டவே இல்லை! ஆனால் ஆய்வுக்கோவை அச்சடிக்கப்பட்டதாக அச்சாபீஸ் பில்கள் எல்லாம் செட்டில் செய்யபப்ட்டிருக்கின்றன, செம்மொழி அலுவலகத்தால்!
தங்குமிட வசதியில் கோல்மால்!
உங்களுக்கு தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தாஜ் ரெசிடென்சி ஹோட்டலில் என்று அந்த லாட்ஜ் போன் நம்பர், (தாஜ் ரெசிடென்சி செல்போன் எண்கள்- 98423 52009 மற்றும் 98423 61702)மின்னஞ்சல் என்று அனுப்பி 5 - ம்தேதி மாலையிலிருந்து வெளிநாட்டுப்பேராளர்கள் தங்குவதற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கும் வெளிநாட்டுப்பேராளர்களை இங்கிருந்து கருத்தரங்கம் நடக்கும் கல்லூரிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அமர்க்களமாய் தகவல் அனுப்பியதை நம்பி ஏமாந்த வெளிநாட்டுப்பேராளர்களின் கொடுமை அந்தோ பரிதாபம்!
அமெரிக்கப் பேராளர் ஆல்பர்ட் தங்குமிடத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மின்னஞ்சல் அனுப்பி பதிலே இல்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டால் ராங்க் நம்பர்! வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த பேராளர், சென்னையிலிருந்து தாஜ் லாட்ஜ் தொடர்பு எண்ணை தொடர்புகொண்டு இயலாமல் போகவே, நெடுஞ்செழியனை செல் போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
வெகு நேரம் பிசி என்றும், பின்னர் சுவிட்ச் ஆஃப்பும் செய்யப்பட்டுள்ளது என்றும் கேட்டு நொந்து சரி நேரில் போய்விடுவோம் என்று திருச்சிவழியாக ரயிலில் போனால் மாயவரம் போகவே 9 மணியாகிவிடும். அதனால் ஒரு வாடகைக்காரில் மயிலாடுதுறைக்கு அதிகாலை 4 மணிக்குச் சென்று விசாரித்து லாட்ஜ் முன்பு இறங்கி காரை அனுப்பிவிட்டு லாட்ஜுக்குள் அப்பாடா என்று நுழைந்திருக்கிறார்.
அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களை எழுப்பி கல்லூரி கருத்தரங்கிற்கு வந்திருக்கிறேன். ரூம் போட்டிருக்கிறார்களா? என்று விசாரிக்க அந்தச் சிறுவர்கள் மலங்க மலங்க விழித்திருக்கிறார்கள். தூக்கக் கலக்கத்திலிருப்பார்கள் போலிருக்கிறது என்று மெல்ல விசாரித்தவருக்கு தூக்கிவாரிப்போட்டிருக்கிறது.
‘லாட்ஜ் வேலை நடக்கிறது. அடுத்த மாசமதான் லாட்ஜ் திறப்பாங்க’- என்று சொல்ல வந்த வெளிநாட்டுப்பேராளர் மயக்கம் போட்டுவிழாத குறையாக இது தாஜ் ரெசிடென்சிதானே என்று கேட்க இது தாஜ்தாங்க. இப்ப யாருக்கும் வாடகைக்கு விடறது இல்ல என்றதும் சிரமப்பட்டு அந்தவழியாக வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்துப்போய் வேறு ஒரு லாட்ஜுக்குப் போயிருக்கிறார்.
முதல் சகுனமே சரியில்லையே என்று 750-ரூபாய் குளிர்சாதன அறை எடுத்து உள்ளே போனால் ஏசி ஓடாமல், துண்டு கூட இல்லாமல் நாலாவது மாடியில் அறை கொடுத்திருக்கின்றனர். விதியே என்று காலையில் நெடுஞ்செழியனிடம் சொல்லி வேறு நல்ல லாட்ஜ் பார்க்கவேண்டியதுதான், என்று இருந்திருக்கிறார். கடைசிவரை அதிலேயே இருந்து வெம்பி, வதங்கி நொந்து திரும்பிய அவலம் அந்த அமெரிக்கப் பேராளருக்கு!
இந்தக் கருத்தரங்கில் இன்னொரு மிகப் பெரிய ஜோக் என்ன தெரியுமா சார் என்றாசார். நம் தமிழகப்பேராளர்களுள் ஒருவர். சொல்லுங்கள் என்றோம். நெடுஞ்செழியன் சார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். பேராளர்கள் அனைவருக்கும் தாஜ்விடுதியில் தங்கும் விடுதி வசதி 5.3.08 மாலை 6மணியிலிருந்து 8.3.08 மாலை 6-மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேராளர்கள் தவிர்த்து உடன் வருவோர்க்கு எந்த வசதியும் செய்து தரப்படமாட்டாது. என்றிருந்ததுதான்.
சரி கருத்தரங்கம் எப்படி நடந்தது என்று மற்றொரு பேராளரிடம் கேட்க, "அந்தச் சோகத்தை ஏங் கேக்குறீங்க? என்று அவர் புலம்பித் தள்ளியதிலிருந்து நாம் சேகரித்தது.
6- ம்தேதி பேராளர் பதிவு என்று இருக்குமே என்று பார்த்தால் ஒரு பன்னீர் சொம்போடு மூன்று கல்லூரி மாணவிகளை நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக வந்து நலன் விசாரித்து அவரவர்களாக உட்கார்ந்து கொண்டிருக்க விழா எந்த பங்சுவாலிட்டியும் இல்லாமல் சாவகாசமாக 11.45க்கு துவங்க ஒரு பழைய நோட்டில் ஒருவர் ஸார், ஒங்க பேர், ஊர இதுல எழுதுங்க ஸார் என்று வாங்கியிருக்கிறார்.
அப்புறம்தான் தெரிந்தது. அதுதான் பேராளார் பதிவேடு என்று! செம்மொழித் திட்டம் தலைவர் இராமசாமியே வரவில்லை. அவர் சார்பாக கோதண்டராமன் என்று ஒருவர் நோக்கவுரை என்று துணைவேந்தர்கள் அவர்கள், இவர்கள் என்று கதாகாலட்சேபம் நடத்தி முடிக்க பிற்பகல் 1.30-மணிக்கு மேலாகிவிட்டது. எதோ கொஞ்சம் உருப்படியாகப் பேசியது பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராசுவும், முனைவர் தொ.பரமசிவமும்தான்!
கருத்தரங்க சோகம்
எல்லாம் சாப்பாட்டுக்கு கலைந்து முதல் கருத்தரங்க அமர்வுக்குப் போனால் வெளிநாட்டுப் பேராளர் ஒருவர் அங்கிருந்தவரிடம் அழமாட்டாத குறையாகச் சொல்லியிருக்கிறார்.அவர் மலேசியாவிலிருந்து வந்த மலேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர்.சபாபதி வேணுகோபால். கருத்தரங்க அமர்வுகள் எதிலுமே அவர் பெயர் இல்லை என்பதுதான் அவரது புகார் என்று சொல்லி நம்மிடம் கருத்தரங்க அமர்வுப் பட்டியலைக் காண்பித்தார். அதில் அவர் பெயர் இல்லை!
வெளிநாட்டிலிருந்து வந்ததே மொத்தம் 7 பேராளர்கள்தான்!
அதிலும் ஒருவர் கருத்தரங்க அமர்வுப்பட்டியலில் பெயரே இல்லை என்றால் எப்படி? என்ன லட்சணமாய் திட்டம் தீட்டி கருத்தரங்கம் நடந்திருக்கும் பாருங்கள்!" என்றார் புகார் சொன்ன பேராளர்!
ஒரு கருத்தரங்கம் வேலாயுதம் அரங்கில் மற்றொன்று கருத்தரங்க அறையிலும் என்றிருந்திருக்கிறது. அந்தக் கருத்தரங்கம் ஒரு மாடியில்!
யாருக்கும் தெரியவில்லை. வழிகாட்டவும் ஒருவரும் இல்லை. பேராளர்கள் மாணவர்களிடம் இந்தக் கருத்தரங்கம் எங்கேயிருக்கு என்று பேராளர்களே பரிதாபமாக விசாரித்து அன்னநடை போட்டு போயிருக்கிறார்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால் 2.00 மணிக்கு அமர்வு. மணியோ 2:30. பேராளர்கள் வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். என்ன என்று பார்த்தால் கருத்தரங்க அறை பூட்டிக் கிடந்ததுதான் காரணம்.
அங்கிருந்த பேராசிரியர் ஒருவரிடம் கேட்க அவர் ஒருவரைக் கைகாட்டி அவர் வந்து திறந்தால் அந்த அறையைக்கூட்டி சுத்தப்படுத்தியே ஒரு மாமங்கமிருக்கும் போலிருக்கிறது. மைக் வேலை செய்யவில்லை. ஏசி வேலை செய்யவில்லை.
அப்போதுதான் நெடுஞ்செழியன் எங்கிருந்தோ வந்து அட, எங்கப்பா அந்தாளு? என்று விரட்டிக்கொண்டிருந்தார். இந்தக் களேபரத்தில் பேசவேண்டிய பேராளர்கள் உருப்புடாப்புல என்று எழுந்து நடையைக் கட்டினர். அந்த அம்ர்வுக்கு சம்பந்தம் இல்லாத டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர். கோவிந்தசாமி ராஜகோபாலை தலைமை ஏற்கவைத்து தடாலடியாக அவசரப் பேச்சாளர் பட்டியல் தயாரித்து அமர்வை ஆரம்பிக்கும்போது மணி மூன்று!
அதன் பிறகு அந்த அறையில் நடக்கவேண்டிய அமர்வுகள் எதுவுமே நடக்கவில்லை என்று அவ்வளவு சோகம் சொட்டச் சொட்டச் சொன்னார் தமிழகப் பேராளர் நம்மிடம்!
கருத்தரங்கின் 2-வது நாள் குறித்து நமக்கு கிடைத்த தகவல் அதைவிடக்கொடுமையாக இருந்தது. இரண்டு இடத்தில் நடக்கவேண்டிய அமர்வுக்கு பேராளர்கள் இல்லாததால் வேலாயுதம் அரங்கில் ஒரே அமர்வாக நடத்தி சரித்திரம் படைத்தார்கள். நேர ஒழுங்கு, கருத்தரங்க விதிமுறைகள் காற்றில் படபடக்க ஒலிவாங்கியைப் பிடித்துக்கொண்டு யார்யாரோ தொண்டைகிழியப் பேசினார்கள். இதில் பேச வேண்டிய சிங்கப்பூர் பேராளர்கள் பேச அழைக்கப்படாமலே அமர்ந்திருந்தது பரிதாபம்!
யாரோ ஒருவர் வெளிநாட்டுப்பேராளர்கள் எல்லாம் நாளைக்கு ஒரே அமர்வில் என்று அவர்களிடம்வந்து சொன்னபோதுதான் சிறு முறுவலைப் பார்க்க முடிந்ததாம்!
3 நாள் கருத்தரங்கம் முடிந்து பிற்பாடு அழைத்துச் செல்லப்படவேண்டிய ஆன்மீகச் சுற்றுலாவை 2-ம்நாள் பிற்பகல் என்று அதிலும் ஒரு புரட்சி செய்து கருத்தரங்க அமர்வைக் கேலிக்குரியதாக்கினார்கள்.
கலந்துகொண்ட கருத்தரங்கப் பேராளர்களுக்கு சான்றிதழ் வழங்க அச்சடித்து வந்திருந்த சான்றிதழில் தமிழ் செம்மொழித் திட்டப்பிரிவிலிருந்து வந்திருந்த கோதண்டராமன் கையெழுத்துப்போடமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார். காரணம் சான்றிதழில் கையெழுத்துப்போட வேண்டிய இராமசாமி வராததால், அவருடைய பிடிவாதத்துக்காக மீண்டும் புதிதாக சான்றிதழ்களில் கோதண்டராமன் பெயர் அச்சடித்து வந்தபிறகே கையெழுத்துப்போட்டிருக்கிறார்.
எப்படியெல்லாம் செம்மொழி பணம் வாரி இறைக்கப்பட்டது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்றார் பேராளர்.
3- வதுநாள் வெளிநாட்டுப்பேராளர்களிடம் இது உங்களுக்கான அமர்வு என்று சொல்லிவிட்டு தமிழக பேராளர்களை அழைத்து, பேசமுடியாமல் போன துறைத் தலைவர்கள் ஆவர்த்தனம் செய்ய வெளிநாட்டுப்பேராளர்களோ வெளியே சொல்லமுடியாத அவஸ்தையில் நெளிந்து கொண்டிருக்க கொரியாவிலிருந்து வந்த பேராளர் கண்ணன், அவர் வாய்ப்புக்காக முன்வரிசையில் காத்திருந்திருக்கிறார்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று ஒருவழியாக வெளிநாட்டுப்பேராளர்கள் பேச அழைக்கப்பட்டனர். இருந்தாலும் கண்ணன் அழைக்கப்பட்டபோது மணி 12 ஆகிவிட மனிதர் 2 மணிநேரத்துக்கு பவர்பாயிண்ட்டில் தயாரித்து வந்ததை சுருக்கமாக முடிச்சுக்குங்க என்று மூன்று முறை துண்டுச்சீட்டு அனுப்ப மனிதர் நொந்து போய் முடித்திருக்கிறார்.
அமெரிக்கப்பேராளர் பேச ஒலிவாங்கி முன் வந்தபோது மதியம் 1:15. நெடுஞ்செழியன் ஓடிப்போய் அவர் காதில் கிசுகிசுக்க, 'தான் அமெரிக்காவை விட்டு கிளம்ப 2-நாள் இருக்கும்போது ஏற்பட்ட கார் விபத்தைக்கூட பொருட்படுத்தாமல் தமிழுக்காக சொந்தச் செலவில் இங்கு பேச வந்தேன். பத்து நிமிடத்தில் முடிக்கச் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லி, அவர் தயாரித்து வந்திருந்த பவர் பாயிண்ட் மேடைக்கு கீழிருக்க, யாரோ மனம்போனபடி இயக்க பசி நேரத்தில் யாரையும் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ தன் உரையைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
பேராளர்களுக்கு சான்றிதழ் அளிப்பதை, பொன்னாடை போர்த்துவதைக்கூட திட்டமிடாமல் அந்தக் கல்லூரியின் செயலரையோ, இல்லை முக்கிய விருந்தினரைவிட்டோ, கொடுக்காமல் யார் யாரையோ கொடுக்கச் சொல்லிவிட்டு நிறைவு விழாவில் கொடுத்ததை வாங்கி திரும்ப உள்ளூர் எம்.எல்.ஏவை விட்டு கொடுக்க வைத்திருக்கிறார்கள்! இதெல்லாம் திட்டமிடாததின் எதிரொலியாகவே பட்டது நமக்கு!
தமிழுக்காக உயிர் கொடுப்பவர்; பொருள் கொடுப்பவர் என்று வானளாவப் புகழப்பட்ட மயிலாடுதுறை அ.வ.அ. தன்னாட்சி கல்லூரி நிறுவனங்கள் செயலர் பெயரில் மட்டுமே தமிழ்த்திரு. கொண்ட கருத்தரங்கப் புரவலர் செந்தில்வேல் துவக்கவிழாவில் தலைகாட்டியதோடு சரி.ஒரு பெயருக்காகவாவது இந்தியா, தமிழகம், வெளிநாடுகளில் இருந்து வந்த பேராளர்களைச் சந்திக்கவோ, ஒரு புன்னகை சிந்தக்கூட நேரமில்லாமல் தலைமறைவாய் இருந்த காரணம் யாதோ? கடைசிவரை கருத்தரங்கப் பக்கமே தலைகாட்டவில்லை!
இந்த மூன்று நாள் கருத்தரங்கில் துவக்கவிழா, நிறைவு விழா, ஆன்மீகச் சுற்றுலா விருந்தினர்களை வரவேற்க கலைநிகழ்ச்சி என்று இரண்டுநாட்களை ஒப்பேற்றிவிட்டு கருத்தரங்க அமர்வை என்ன நோக்கத்திற்காக நடத்தினார்களோ அந்த நோக்கம் எதுவுமே நிறைவேறாமல் முடிந்திருக்கிறது இந்தக் கருத்தரங்கம். ஆனால், கருத்தரங்கம் முடிந்த சூட்டோடு பேராளர்களுக்கு நெடுஞ்செழியன் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். பன்னாட்டுக் கருத்தரங்கம் வெற்றி என்று! யாருக்கு வெற்றி?
கருத்தரங்கில் ஏமாற்றம் அடைந்து திரும்பிய பேராளப் பேராசிரியர்கள் நெடுஞ்செழியனுக்கு தங்கள் வேதனைகளை, புலம்பல்களை தெரிவித்து எழுதியிருகின்றனர்.
இது பற்றி அவரிடம் ‘அதிகாலை’ தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "இது எல்லாவற்றுக்கும் நான் மட்டும் காரணம் இல்லை. இது ஒரு நிறுவனம். இதற்கென்று சில வழிகாட்டு முறைகள் உள்ளன. அதன்படிதான் செய்தேன். கருத்தரங்கு பற்றி வீடியோ பதிவு வைத்திருக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார் நெடுஞ்செழியன்.
இதில் கலந்து கொண்ட மற்றொரு பேராளரான மறவன் புலவு சச்சிதானந்தத்திடம் பேசினோம். அவரோ, " என்னிடம் நான் வாசித்த கட்டுரை இருக்கிறது வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற விசயங்கள் எல்லாம் பேசுவதற்கு நேரமில்லை. எனக்குப் பணிச்சுமை அதிகம்" என்று கச்சிதமாய் சொல்லி முடித்தார்.
தமிழ் செம்மொழித் திட்ட அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்லூரி விருந்தினர் விடுதியைக் கொடுத்து அவர்களை கடைசிவரை "நன்கு விசேடமாகக் கவனித்து" மனம் கோணாமல் அனுப்பிவைத்திருக்கிறார் நெடுஞ்செழியன்.
எல்லாம் சரி. இதில் தமிழ் செம்மொழித்திட்டம் அளித்த நிதியை கல்லூரிக் கணக்குக்கு மாற்றியது எப்படி எங்களுக்குப் புரியவில்லையே என்று நெடுஞ்செழியனுக்கு நெருக்கமாகக் காட்டிக்கொள்ளும் ஒருவரை மெல்லக் கிளறியபோது, "அட போங்க சார்..! நாங்க வாழைப்பழத்தைக் கொடுத்து சாப்பிடுங்க என்றுதான் சொல்ல முடியும். என்று வில்லன் வீரப்பா சிரிப்பு சிரித்துவிட்டு நம் காதில் மெல்லக் கிசுகிசுத்தார்.
"சார் பேராளர்களுக்கு பிரபல ஓட்டல்ல இருந்தா சாப்பாடு போட்டாங்க? கல்லூரி ஹாஸ்ட்டல்ல சாப்பாடு போட்டாங்க. பேராளர்களுக்கு, விருந்தினர்களுக்கு சாப்பாடு மூன்று நாளைக்கு, மூன்று வேளைக்கு ஒட்டுமொத்தமா ஒரு அமவுண்ட்! சரி அவங்க சாப்பாடு போட்டதுக்குத்தானே காசு வாங்கியிருக்காங்க, இதிலென்ன தப்பு" என்றோம், நாம். அட என்னாங்க விபரம் புரியாத ஆளா இருக்கீங்க, "சாப்புட்டவங்க கம்மி கணக்குக் காட்டி வாங்கியது அதிகம்! இதுல பலபேர் காலைல ஓட்டல்ல வெளியிலயே சாப்பிட்டவங்க. அவங்க கணக்கும் இங்க என்று கண்சிமிட்டினார்.
ஆன்மீகச் சுற்றுலாவுக்கு கல்லூரி பேருந்தை ஓட்டிவிட்டு பேராளர்கள் சுற்றுலாச்செலவு, அவர்களுக்கு டீ, காபி, டிபன் செலவு என்று ஒரு வரவு! பலபேராளர்களுக்கு தங்குமிடச் செலவு செய்யாமலேயே செய்ததாகச் செலவு, பலபேராளர்களின் பயணப்படி அவர்கள் கைக்குப் போகமலே இவர் பைக்குள் போனது, விழாமேடை அலங்கரிப்பு, வரவேற்பு,பொன்னாடை, பரிசுகள் வாங்கியது இப்படி எத்தனை வகை உண்டோ அத்தனையிலும் "இவருக்கும்" கல்லூரி நிர்வாகத்துக்குமே தமிழ் செம்மொழி நிதி மறைமுகமாகச் சேர்ந்துவிட்டதாகத் தெரிகிறதுது.
இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்று நாம் திகைத்துப்போனோம்!
துவக்கவிழாவிலும் நிறைவு விழாவிலும் நெடுஞ்செழியன் பேராளர்களைப் பற்றிச் சொன்ன நேரத்தைவிட விருந்தினர்களைப் புகழ்வதிலும், கோரிக்கை வைப்பதிலும் பெரும் நேரத்தை எடுத்துக்கொண்டார். இந்தச் சடங்குத்தனமான துவக்க, நிறைவு விழாக்கள் இப்படிப்பட்ட கருத்தரங்கிற்கு தேவையா? இவையெல்லாம் நம்மிடம் புலம்பிய பேராளர்களின் வேதனைக் குரல்கள்!
நம் கேள்வி இதுதான்!
கல்லூரிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி எந்த ஏற்பாடும் செய்யாமல் இப்படி ஒரு கருத்தரங்கு அதுவும் பன்னாட்டுக் கருத்தரங்கு என்று எப்படி நடத்த முடிந்தது? நிதி நல்கியவர்களுக்கும் இதில் அக்கறை இல்லையா? இது யாருடைய தவறு? செம்மொழித் திட்டம் நிதி வழங்க ஒப்புக்கொண்டபோதே சில விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் கொடுத்திருக்கும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் சொல்லத் தவறியதா?
இல்லை நெடுஞ்செழியன் தன் மனம்போன போக்கில் பேராளர்களுக்கு அறிக்கை அனுப்பிவிட்டாரா?இல்லை சக பேராசிரியர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிப் புழுங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்செழியனின் " பதவி உயர்வுக்காக" மட்டுமே பல பேராளர்களின் நேரத்தையும் உழைப்பையும் உறிஞ்சி ஏனோதானோவென்று நடத்தப்பட்ட கருத்தரங்கா?
எப்படி இருந்தாலும், யார் இந்தத் தவறைச் செய்திருந்தாலும் அது இமாலயத் தவறு என்பதால் தவறிய இருசாராரின் பேரிலும் நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் எழாவண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
இன்றைக்கு இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கருத்தரங்கு நடத்திய செயலர் நெடுஞ்செழியனிடமிருந்தும், இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட தலைவரிடமிருந்தும் பெற்ற நிதியை எப்படிச் செலவு செய்தீர்கள் என்ற விபரமும் கோரிப்பெற்றால் பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். (அதற்கான முயற்சியில் அதிகாலை.காம் ஈடுபட உள்ளது)
இந்தக் கருத்தரங்கால் ஒருவர், இருவர் இல்லை. பலபேரின் வயிற்றெரிச்சலுக்கும் சாபத்துக்கும் கல்லூரி நிர்வாகமும், (நெடுஞ்செழியனும்) தமிழ் செம்மொழி திட்டத்தினரும் ஆளாகியுள்ளனர். தமிழக முதல்வர் இது விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதோடு எதிர்காலத்தில் தெளிவான ஒழுங்குமுறைகளும், விதிமுறைகளும் கடைப்பிடிக்க ஆவன செய்வார் என்று நம்புவோம்!