June 29, 2008

"எல்லாம் பதவி சுகம்தான்" - தோலுரிக்கிறார் அன்னாடங்காச்சி

பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போவது சுகமா...? பல்லக்கில் ஏறிப்போவது சுகமா...? என்னப்பா கேள்வி இது? ஏறிப்போவதுதான் சுகம். திராவிடக் கட்சிகளுக்கு இரண்டுமேசுகம்தான்... எப்படி? மத்திய அரசாங்கத்தின் ஓட்டைப்பல்லக்கைத் தூக்கிக்கொண்டுசுகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்களே!
எல்லாம் பதவி சுகம்தான். மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் 'எங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்லக்கு சவாரி. சுகமான சவாரி. யார் வேண்டுமானாலும்சுமக்கலாம். ஏறிக்கொள்ள இடமில்லை. சுமக்கிறவர்களுக்கு சுமக்கிற சுகம் மட்டுமே. சண்டித்தனம் செய்தால் 'டூ' பணக்காரன் பொன்னை எடுக்கணும்னா பாட்டாளியோட கடப்பாரைதானே வேண்டியிருக்கு? பாராட்டு மொழிகளுக்கு அகலத் திறந்துகொள்ளும் செவிகள் குற்றச்சாட்டுகளுக்குஅடைத்துபோய்விடுகிறது. கொள்ளுக்கு வாயைத்திறக்கும் குதிரை கடிவாளத்திற்கு இறுக மூடிக்கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது. வேலைக்குப்போகவேண்டுமென்று அவசியமில்லை. சுகமாக சாவடியில் படுத்து தூங்கலாம். விளைவு. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே குளங்களில் மராமத்து நடந்திருக்கிறது. நீர் நிலைகள் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. விதையுடன் நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் இந்த ஆண்டு உணவுக்கு உத்திரவாதம் தெரிகிறது. இந்த சந்தோஷத்தை தூக்கிச் சாப்பிட்டுவிடும் ஒருபிரச்சினை முளைத்திருக்கிறது. உரத்தட்டுப்பாடு. இது செயற்கையான தட்டுப்பாடு. அரசியல்வாதிகள்தான் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். டிஏபி உரத்தின் மானிய விலை ரூ 486. ஆனால் கிடைக்கவில்லை. தனியாரிடம் ரூ 700-க்கு தாராளமாக கிடைக்கிறது. அரசுபத்தாயிரம் கோடி ரூபாய் உர மானியம் கொடுக்கிறது. கிராம அளவில் உள்ள உரவியாபாரிகளும் கந்து வட்டிக்காரர்களும் மானிய விலையில் விற்கப்படும் உரத்தைவிவசாயிகளின் பெயரில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடிப்பதாகசெய்திகள். கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள்பெரும்பாலும் நெல்மண்டி அதிபர்களாகவோ, உர வியாபாரிகளாகவோ இருப்பார்கள். இவர்கள்விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்போது கடனுக்கான வட்டியை கழித்துக்கொண்டு மீதிக்குஉரங்களைக்கொடுத்து விடுவார்கள். அறுவடை நேரத்தில் கடனுக்கு ஈடான தொகையை நெல்லாகவாங்கிக்கொள்வார்கள். ஒவ்வொரு பரிமாற்றத்திலும் லாபம் பார்ப்பார்கள். இதில் ஈடுபடும் தனிநபர்கள் எல்லோருமே அரசியல்வாதிகளாகஇருப்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய விசயம். மத்தியிலோ மாநிலத்திலோ எந்தக்கூட்டணி முறிந்தாலும் இவர்களின் கூட்டணி மட்டும் முறிந்துபோகாது.
விவசாயிகளின் பெயரில் உரங்களை வாங்கி பதுக்கும் துணிவு அரசியல் தொடர்பினால் ஏற்பட்டுவிடுகிறது. தமிழக அரசு விரைவாக செயல்படவேண்டும்.

அன்னாடங்காச்சி எழுதிக்கொண்டிருக்கும்போது வீட்டிற்குள்பேச்சுக்குரல் கேட்டது. அவரது மனைவிக்கும் விருந்தாளியாக வந்த நாத்தனாருக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

"காலைலே ஆறு மணிக்குபோயிடும்."
"அடக்கடவுளே! அப்புறம் எப்பவரும்?"
"எட்டு மணிக்குவந்திடும்."
"சரிதான்.ரெண்டுமணிநேரம்தானே?"
"ம்ஹும்..அப்புறம் மறுபடியும்பத்துமணிக்கு போயிட்டு..."
".....போயிட்டு..."
"பன்னிரண்டு மணிக்குவந்திடும்"
"பாழாப்போச்சு...போ..."
"மறுபடியும் நாலுமணிக்கு போயிட்டுஆறுமணிக்கு வந்திடும்."
"அப்புறம் ராத்திரி எட்டுமணிக்குபோயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வந்திடும்."
"இது தேவலையே... எங்க ஊர்ல எப்போநிறுத்துவான் எப்போ விடுவான் என்கிற கணக்கெல்லாம் இல்லே. நின்னுபோன கரண்டு திரும்பிவந்தாத்தான் நிச்சயம்"

"ஏங்க...தமிழ்நாட்டிலே கரண்டு பிரச்சினை இப்படி இருக்கறப்போநீங்க அதெ கவனிக்காம சிடி போட்டுக்கேட்கப்போய் ஜனங்க கவனமெல்லாம் அதிலேபோயிட்டுதுங்க"

"அடுத்த வருடமாவது கரண்டு பிரச்சினெயெ தீர்க்கப்பாருங்க."
"கரண்டு பிரச்சினையில தலை உருளற மாதிரி உரப்பிரச்சினையிலேயும் தலை உருளாம பாத்துக்குங்க!"

- அன்னாடங்காச்சி

நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை

பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.

நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்கவேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை.

ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் பலர் இருந்து விட்டனர்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.

இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், "நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார்.

June 24, 2008

அன்னாடங்காச்சி!

"அடியே! உன்னோட குடும்பம் நடத்த என்னாலெ ஆகாது. நான் சந்நியாசம் போறேன். வாசலில் சொம்பு இருக்கிறது பார்! எவனாவது லவட்டிக்கொண்டு போய்விடப்போகிறான். சொம்பை எடுத்து உள்ளே வெச்சுக்கோ!"
ஐக்கியமுன்னணி அரசோடு இனிமேல் குடும்பம் நடத்த முடியாதென்று முடிவெடுத்துவிட்ட இடதுசாரிகளுக்கு மதவாதிகள் ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்கிற கவலை. இந்தியா அமெரிக்காவிடம் அடகு போய்விடக் கூடாதே என்கிற தேசபக்தியாக இருக்கலாம். அல்லது அரசு கவிழ்ந்து போனால் தேர்தல் வரும். 'தேர்தலை சந்திக்கவேண்டுமே' என்ற பயமாகவும் இருக்கலாம். இப்போது தேர்தலை சந்திப்பதுபோல பயங்கரம் ஆளும் கட்சிகளுக்கு வேறு வேண்டியதில்லை.விலைவாசி ஏறிப்போய் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் வந்தால் கோஷங்களுக்கு பதில் சொல்ல திமுக-வால் கூட முடியாது. காங்கிரஸ் எந்த மூலை!

'பக்தவச்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று திமுக நாற்பது வருடங்களுக்கு முன்னால் கேட்டது. அன்றைக்கு வீழ்ந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றுவரை எழுந்துகூட பார்க்கவில்லை.
'பானா சீனா அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி!' என்று பிஜேபியும் அதிமுகவும் பிய்த்து எடுத்து விடுவார்கள். விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டில் ஒரு 'சென்ஸிட்டிவ்' பிரச்சினை. ஒருபுறம் இப்போது தேர்தல் வராமல் இருக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். 'நீங்க கொஞ்சம் சொல்லுங்க' என்று சென்னைக்கு கூட வந்திருக்கிறார்கள். மறுபுறம் நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க என்ன செய்யணுமோ அதையெல்லாம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தைப்பூட்டும் வேலை இது. விலைவாசி ஏற்றம் 5.5 சதவீதமாக இருந்தபோதே வட்டி விகிதத்தை அதிகமாக்குங்கப்பா..

அத்தியாவசியப் பொருட்களின் மீது யூக வணிகத்தை தடை செய்யுங்கப்பா...என்ற கூக்குரல் இந்தியா முழுவதும் கேட்டது. நிதியமைச்சருக்கு மட்டும் அந்தக்குரல் கேட்கவில்லை.
வட்டியை ஏத்துங்கப்பா...பதுக்கல்காரனும், ஆன்லைன் வியாபாரியும் வியாபாரத்துக்கு பணம் கிடைக்காமல் விலகிப்போய்விடுவான் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னார்கள். அந்தக்குரலும் அரசுக்கு கேட்கவில்லை. பொருளாதாரம் இப்படியாகிப்போனது ஒருபுறமிருக்க மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணிக்கட்சிகள் குலுக்கிப்போட்ட சோழிகளைப்போல சிதறிக்கொண்டிருக்கின்றன.

மாயாவதி சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'டாட்டா'

முலாயம் சோனியாவைப் பார்த்து கையசைக்கிறார். இதற்கு அர்த்தம் 'ஹலோ'

நம்மூரிலும் சில 'டாட்டா' க்கள். 'பை...பை' கள்.

'ஹலோ' இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அன்னாடங்காச்சி இதையெல்லாம் படித்துவிட்டு வெறும் சிரிப்பை உதிர்க்கிறார். "சரிதான் போப்பா. எல்லாரும் ஒரே தொழிலில் இருக்கிறவங்க. நீரடிச்சு நீர் விலகாதுப்பா. அப்படியே விலகினாலும் இமயமலைக்கா போகப்போறாங்க. அம்புவிட்ட அர்ச்சுனனும், நெஞ்சுகாட்டி நின்ன துரியோதனனும் பங்காளிங்கதானே! எல்லாம் பேசித்தீத்துக்குவாங்க! அரசியல் செய்யுறவங்க பங்காளியாவும் உறவு முறையாவும் இருக்கறதுதானே நல்லது!

பாம்பின் கால் பாம்புக்குத்தானே தெரியும்! நீ வேணும்னா பாரு! எல்லாம் ஒண்ணா கூடிக்குவாங்க!

ஒருத்தர் சிரிச்சுக்கிட்டே சொல்லுவார் 'நாங்க ரெட்டக்குழல் துப்பாக்கி... தெரியுமில்லே'...!"

மக்கள் டிவி மீது வழக்கு

ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு மக்கள் டி.வி. மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
மக்கள் தொலைக்காட்சியில் புஷ்பராஜ், பாஸ்கரன், மாரியப்பன், ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளனர். இந்த டி.வி.யில் கடந்த அக்டோபர் மாதம் முதல் என்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்படுகிறது. நானும், முன்னாள் கலெக்டரும் சேர்ந்து அரசு நிலத்தை பினாமி பெயரில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை வடநெமிலியில் எனக்கு நிலம் கிடையாது. நான் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. எங்களது நன்மதிப்பை களங்கப்படுத்தும் நோக்கில் தவறாக செய்தியை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தொலைக்காட்சியும், தொகுப்பாளர்களும் சேர்ந்து எனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். உண்மைக்கு புறம்பான என் தொடர்பான செய்தியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த மனுவை விசாரித்தார். இதுபற்றி பதில் தருமாறு மக்கள் டி.வி.க்கு நோட்டீசு அனுப்பும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (ஜுலை) 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

June 19, 2008

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் சட்ட விரோதச் சொத்து : கலைஞர்

அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களில் சிலர், பல்வேறு ஆவணங்களைச் சட்டத்திற்கெதிரான வழிகள் மூலம் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாகத் தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இவைகளைப் பரிசீலித்து, இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இவ்வுரிமைகளைத் துய்க்க வழி இல்லை என்பதை காவல் துறையும், மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்திட வேண்டும் என கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாநாட்டுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் திரிபாதி வரவேற்றார்.

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், மற்றும் அமைச்சர்கள், டி.ஜி.பி. ஜெயின், சென்னை போலீஸ் கமிஷனர் சேகர், அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள். ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக அமல்படுத்துவது அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது :- ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கியிருக்கிறது. இப்படி நம்மை, பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்குக் காரணம், அதனை முறையாக, சரியாக, செம்மையாக நிறைவேற்றி வரும் அரசு அதிகாரிகளான நீங்களும்தான்.

பெரும் திட்டங்களில் ஒவ்வொரு துறையும் தனித்தனியாகச் செயல்படாமல், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இத்திட்டங்கள் தாமதப்படாமல், விரைந்து நிறைவேறி மக்களுக்கு நன்மைபயக்கும். இந்த ஒருங்கிணைக்கும் பொறுப்பை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் நடைபெறும் பெரும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி, தேவைப்பட்டால் அரசுடன் தொடர்பு கொண்டு தடைகளை விரைவில் தீர்த்து வைத்து முன்னேற்றம் காண வேண்டும். தீர்க்க முடியாத சிக்கல்கள் என நீங்கள் கருதும் பட்சத்தில், எந்த நேரத்திலும் என்னையே நேரடியாகத் தொடர்பு கொண்டு தகுந்த அறிவுரைகளைப் பெறுவதற்கும் தயங்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு செம்மையாகப் பேணப்பட்டு தமிழகம் அமைதியின் தொட்டிலாகத் திகழ்கிறது என அனைவரும் பாராட்டுகின்றனர்.

இப்பாராட்டு மேலும் பொலிவுபெற வேண்டுமெனில், கடுங்குற்றம் புரிவோர், கூலிப்படையாகிக் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர், பொதுமக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் ஆகியோரின் போக்கிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட காவல் துறையினர் காலதாமதமின்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். சில சமூக விரோதிகள், நாடு போற்றும் தலைவர்களின் சிலைகளை அவ்வப்போது சேதப்படுத்தியும் சிதைத்தும் தேவையற்ற சட்டம் ஒழுங்குப்பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். பொதுமக்களின் அமைதியான வாழ்விற்கு எதிராக, இவ்வாறு செயல்படுபவர்களை இனங்கண்டு, விரைவாகவும் உடனடியாகவும் செயல்பட்டு, அவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களைத் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றிக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், சாலை விபத்துகளைக் குறைக்கவும், விபத்துகள் நேராவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுத்திடச் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொது மக்களைக் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்திட வேண்டும். மேலும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காலதாமதமோ அலைக்கழித்தலோகூடாது. இந்த அறிவுரைகளின்படி, காவல்துறை பொதுமக்களின் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டும். சொத்துத் தகராறு, விலை மதிப்பு உயர்ந்துவரும் நில பேரங்கள், நிலமாற்றம் போன்ற உரிமையியல் வழக்குகளிலும், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும் காவல்துறையினர் எக்காரணம் கொண்டும் ஈடுபடவே கூடாது.

மனித உரிமைகள் எவ்வகையிலும் மீறப்படாமல் காவல் துறையினர் தம்முடைய பணிகளைச் செம்மையாகச் செய்திட வேண்டும். ஒவ்வொருவரும் கடமை உணர்வுடனும், மனித நேய உணர்வுடனும் செயல்பட வேண்டும்.

வகுப்பு வாதமும் சாதிய உணர்வும் தமிழ் மண்ணிலிருந்து வேரோடு ஒழிக்கப்படவேண்டும். பிரச்சினை ஏற்படும் போது தொடர்புடைய அனைவரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது, நல்லிணக்கத்தை நிரந்தரமாக உருவாக்கும். வேலையில்லாத் திண்டாட்டம், போதிய கல்வித் தகுதியின்மை ஆகிய காரணங்களால், தடுமாறும் குணம் உடைய, எளிதில் வயப்படத்தக்க இளைஞர்களையும், பழங்குடி மக்களையும் குறி வைத்து மக்களாட்சியில் நம்பிக்கையில்லாத சில தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தமிழ் நாட்டில் வேரூன்ற வைத்து அமைதியைக் குலைக்க முயல்வதாகத் தெரிகிறது. இத்தகைய தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற எவ்வகையிலும் இடம் கொடுத்திடாமல், காவல்துறை இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவிவரும் இனக்கலவரம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் நிலை தொடர்கிறது. 31.5.2008 அன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டிலுள்ள 117 இலங்கை அகதிகள் முகாம்களில் 73 ஆயிரத்து 433 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
.
இலங்கைத் தமிழர்களிடம் நாம் பரிவு காட்டும் அதே வேளையில், அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதில் காவல் துறை மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இலங்கைக் கடற்பகுதியை ஒட்டிய வடக்குக் கடல் எல்லையான மன்னார் வளைகுடா, பாக் நீரிணையிலிருந்து திரிகோணமலை வரை உள்ள பகுதி ராணுவம் சார்ந்த பிரச்சினைக்குரிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மீனவர்களிடையே அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். படகுகளில் செல்லும் மீனவர்கள் அனைவரும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி. தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும். கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.

June 18, 2008

தசாவதாரம் - திரை விமர்சனம்

தமிழ்த் திரையுலகின் தரத்தை உலக அளவில் உயர்த்தி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக (ஏன் அதற்கே சவால்விடும் அளவிற்கு) தொழில்நுட்ப பிரமாண்டத்தை மூன்று மணிநேரத்தில் நம் நரம்புகளில் ஊடுருவச் செய்கிறது தசாவதாரம். கமலின் கனவுக் கதையை நிஜத்தில் நமக்கு பத்து பாத்திரங்கள் மூலம் கத்துவாரியாக பின்னப்பட்ட (ஹாலிவுட்டில் ஹேடொமன் பாணி) திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும் ரவிக்குமாருக்கும், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் நூறு சபாஷ்.
நடிப்பு : கமலஹாசன், அசின், மல்லிகா செராவத், ஜெயப்ரதா, நாகேஷ், நெபோலியன், சந்தான பாரதி
இயக்கம் :
கே.எஸ்.ரவிக்குமார்
இசை : ஹிமேஷ் ரேஷமியா
தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன்

சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் கருணாநிதி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமர்ந்திருக்க, விஞ்ஞானியான கோவிந்த ராஜு (கமல்) நேரு ஸ்டேடியத்தில் அலைகடலென கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தில் சக்திவாய்ந்த ஒரு சிலையைப் பற்றி பேசுகிறார். உடனே நம்மை பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். ரங்கனாதரின் சிலையை அகற்ற வந்த சிவ பக்தனான ராஜா குலோதுங்க சோழனின் (நெப்போலியன்) படை வீரர்களுடன் சண்டையிடுகிறார் ரங்கராஜன் நம்பி(கமல்). ராஜா "சிவாய நமஹ" என ஓத ஆணையிட்டும் கூற மறுத்த நம்பி "ஓம் நமோ நாராயணா" எனக் கூற சிலையோடு ஜலசமாதி அடைகிறார். நெப்போலியன் மற்றும் கமல் பரிவாரத்திடையே நடக்கும் உரையாடல் நேராக நம் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை. முற்காலத்தில் இருந்த சைவ-வைஷ்ணவ பிரச்சனையின் வேகத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளார்கள்.

மறுபடியும் 21-ஆம் நூற்றாண்டு : கோவிந்த் அமெரிக்காவில் மனித குலத்தையே அழிக்கும் சக்திவாய்ந்த கதிர்வீச்சு உயிரியல் சம்பந்தபட்ட யுத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஓர் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்பை (ரசாயன ஆயுதம்) அவரது பாஸ் மூலம் தவறாக பயன்படுத்த நேரிடும் அச்சத்தில் மனித குலத்தைக் காப்பாற்ற கமலின் போராட்டம் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் ஆரம்பித்து இந்தியாவில் சுனாமியில் முடிகிறது. இதற்குள் நடைபெறும் சம்பவங்களில் ஒன்பது விதமான கதாபாத்திரங்களும் நம்மை பிரமிக்க வைக்கிறது. (இதற்கு மேல் கதை கூற வேணாம்! வெள்ளித் திரையில் பார்க்க)

கமல் என்னும் உன்னதக் கலைஞனின் உயிர்நாடி சினிமா மட்டுமே என்பதை மறுபடியும் நமக்கு உணர்த்தியிருக்கிறது இப்படம். பத்து அவதாரங்களிலும் நடை, உடை, பாவனையில் வாழ்ந்து காட்டுகிறார் கமல். பத்து பாத்திரங்களில் இந்திய ரா-சிபிஐ அதிகாரி பலராம் நாயுடு அனைத்து கைத்தட்டல்களையும் வாங்கிச் செல்கிறார். அதிக மேக்கப் இல்லாமல் தெலுங்கு பேசும் இவரது நகைச்சுவையில் தியேட்டரே சிரிக்கிறது. அடுத்து நெல்லைத் தமிழ்ப் பேசும் பூவராகவனும், ஜப்பானிய மார்சியல் ஆர்ட் கும்பூ கமலும் ரசிகர்களின் மனதில் பதிந்துவிடுகிறார்கள். வயதான பாட்டியும் சரி, ஜார்ஜ் புஷ் கதாப்பாத்திரமும் இனி உருவாகப்போகும் மேக்கப்மேன்களுக்கு ஒரு பாடம். நாத்திக கமலின் வாதம் அவ்வளவாக எடுபடவில்லை.

அசினுக்கு இரு வேடம். ஆனால் நம் மனதில் நிற்பதோ பிராமண பெண் பாத்திரம்தான். ஜெயப்பரதாவும், அதிகம் சர்ச்சைக்கு உள்ளான மல்லிகா ஷெராவத்தும் படத்தில் வந்து போகிறார்கள். கிராபிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட சுனாமியும், சக்திவாய்ந்த சிலையும் படம் முழுக்க நம்முடன் உலாவருகின்றன. ரீ-ரெகார்டிங்கில் தேவிபிரசாதும், காலை மட்டும் பாடலில் ஹிமேஷும் ஜொலிக்கிறார்கள். ரவிவர்மாவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

இவ்வளவு இருந்தும் இடைவேளைக்குப் பிறகு திருப்புமுனைகள் ஏதும் இல்லாமல் படத்தில் தோய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இவ்வளவு பெரிய தொழில்நுட்ப பிரமாண்டம் அன்றாடம் வேலை செய்யும் கடைநிலை ரசிகர்களிடமும், மாஸ் ஆடியன்ஸ்-முதல் சீட் ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறி?

தசாவதாரம் : தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்

June 14, 2008

பாமரனின் 'பஞ்ச்' பதில்கள் - 3 : நேர்முகம் - "அதிகாலை" நவின்-அசோக்

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்" - கவிஞர் சுகிர்தராணி

கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"

என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்

"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"

என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.

வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம்.உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார். அவருடைய பேட்டி ஒலி வடிவில்... http://www.adhikaalai.com/index.php?/en/அதிகாலை-ஸ்பெஷல்/அதிகாலை-ஸ்பெஷல்/பெண்களுக்கு-விடுதலை-கொடுக்காத-தலித்-கட்சிகள்

தந்தையர் தினம்! - ஆல்பர்ட்

அந்த தினம் இந்த தினம் என்று ஆயிரம் தின‌ங்க‌ள் இருக்குது. ஆனாலும் இந்த‌ இய‌ந்திர‌ம‌ய‌மான‌ உல‌க‌த்தில் ஒவ்வொரு தின‌த்துக்குப் பின்னும் ஒவ்வொரு நிஜ‌ங்க‌ள் நிழ‌லாக‌த் திகழ்வ‌தையும் ம‌றுத்துவிட‌ முடியாது. சீர்காழியின் ஒரு பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து. பாட‌ல் முழுவ‌துமாக‌ நினைவிற்கு வர‌வில்லையென்றாலும் சில‌வ‌ரிக‌ளைச் சொல்லுவ‌து இங்கு பொருத்த‌ம் என‌ நினைக்கிறேன்.

"ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிர‌ம் இருக்குது சுப‌தின‌ம்! லாட்ட‌ரிச் சீட்டில் ல‌ட்ச‌ம் விழுந்தால் அது கிடைத்த‌வ‌ருக்கே சுப‌தின‌ம்..." இப்ப‌டியாக‌ப் போகும் அந்த‌ப் பாட‌ல். பாட‌ல் உண‌ர்த்துவ‌திலிருந்து ஒன்றை நாம் நிச்ச‌ய‌மாக‌ அறிந்துகொள்ள‌ இய‌லும்.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை, என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ ம‌க‌ன்க‌ள் இருக்கும்வ‌ரை அந்த‌த் த‌ந்தைய‌ர்க‌ளுக்கு என்றும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; மகனின்,மகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு சுபதினம்?

முதியோர் இல்ல‌ம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மரும‌கள் என்ன‌ சொல்வாளோ? இல்லைம‌ரும‌க‌ள் பேச்சைக்கேட்டு ம‌க‌ன் என்ன‌ சொல்வானோ என்று கால்வ‌யிற்றையும் அரைவ‌யிற்றையும் நிர‌ப்பிக்கொண்டு திண்ணையே க‌தி என்றிருக்கும் த‌ந்தைமார்க‌ளுக்கு வ‌ருட‌த்தில் இந்த‌ ஒருநாளாவ‌து சுப‌தின‌மாக‌ இருக்க‌ட்டுமே,என்றால் "த‌ந்தைய‌ர் தின‌ம்" இருந்துவிட்டுப் போக‌ட்டுமே!

அன்னையர் தினம் வரும், பின்னே..... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்? தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/தந்தையர்-தினம்-ஆல்பர்ட்